Pages

Thursday, October 05, 2006

மரபுகள் சமைக்க! (வெண்பா)

(சவுதித் தமிழர்களின் எழுத்துக்கூடம் என்ற மடற்குழுவில் நடைபெறும்
வெண்பாப் பட்டறையில் எழுதியது)


வெண்பா வரையும் கவிஞ, நிறைநண்ப!
அன்பால் வரைவன் சுவைத்தனனாய்;-புண்போல்ஆம்
தென்பால் வரைவில் மொழிக்கூட்டம்; முள்விலக்கி
தண்பா வரைதல் தலை!
(1)
மரபைச் சமைக்கவிஞ உந்தம் கவிதைச்
சரமென் மனத்தே மயக்கி - விரவி
விரல்களை ஈர்ப்பதேன்? நும்முயல்வே! மேல்நில்
தரஞ்சேர் தமிழே படை!
(2)
படிபடி பாரதி பாடிப் படிநீ
படிபடி பாரதி தாசன்! - படிக்கின்
படிப்படி ஏறிடும் சொல்லும் பொருளும்;
படித்தவர் சூக்குமம் கேள்!
(3)
திரிதிரி கோல்களைத் தூக்கித் திரிநீ
திரிதிரி பாக்களை யாப்புள் - கிரிபோல்
திரிதிரி தேனன கீதம் மறையே
திரிதிரி நுட்பமும் உள்!
(4)
நிகண்டொன்றை கையோடே நீகொள்வாய் அன்றேல்
அகராதி அக்குள் செருகி - புகழ்தக்க
மேகலையோ கம்பமோ ஒன்றில் நிலைத்திட
வேகமிகப் பாடுவாய் காண்!
(5)
மங்கையுடன் கூட்டத்தை மெய்மறந்தே யாத்திடவள்
அங்கையின் ஓர்வரியும் ஓர்பாட்டாம்! - நங்கையின்
கொங்கையும் நற்கொசுவம் உச்சிமயிர் ஒவ்வொன்றும்
உங்கவியில் ஏங்கிட வை!
(6)
ஆடவனின் தோள்வலியை ஆள்வலியைத் தீட்டுபெண்ணே!
கூடவரச் சாகசமேன் கேளுபெண்ணே! - வேடன்ஆய்
ஊடலையும் போக்குவித்த போகத்தை வார்க்கையிலுன்
வாடலையும் தேடலையும் சேர்!
(7)
குத்தாட்டம் போட்டாலும் கும்மாளம் போட்டாலும்
வித்தாகப் பாட்டில் தமிழேவை; - ஒத்திடுமோ
கொத்துக்குள் ஆங்கிலமும் ஆர்மொழியும்? அக்கூட்டை
பித்தமென்றே சொல்வர் நினை!
(8)
அரபிக் கவிதை, உருதுக் கதைகள்,
பரதேயப் பட்டாங்கும் செய்தமிழில் - ஊரர்
தரம்மேவு ஆக்கம் தலையிற் சுமந்தே
வரவேணும் தென்பாண்டி ஊர்!
(9)
கட்டுக்குள் கட்டுதலே கட்டல்ல! கட்டாக்கால்
கட்டிலிலே கட்டுதல்தான் கிட்டாதே! - கட்டுப்போல்,
கட்டிடுகக் கட்டிப்பொன் கொட்டுநிகர் கெட்டிப்பா;
கட்டினவர் கண்டார் சுகம்!
(10)

குறிப்பு: கிரி = மலை, அங்கை = உள்ளங்கை, பரதேயம் - பல/அயல நாடுகள்
பட்டாங்கு = சாத்திரம்/இயல்பு

அன்புடன்
நாக.இளங்கோவன்
01/அக்/06

கதிரவனே கலங்குகின்றேன்! (உரைவீச்சு)

கதிரவனே கலங்குகின்றேன்! (உரைவீச்சு!)


கதிரவனே!

என் மண்ணில் நீ தோன்றியபோதெல்லாம் தொழுத என் கரங்கள்,
அயல் மண்ணிலும் நீ தோன்றும் போது திகைத்து நிற்கின்றன!

தையிலே பொங்கலிட்டு நன்றியைத்தான் செய்து வைத்தேனே!
நன்றி மறந்துவிட்டு நாடு தோறும் கதிர்வீசும் கதிரவனே,
அயல் மண்ணைத் தொட்டதனால் நீயும் எனக்கு அயலவனே!

மேகத்தைக் காவலிட்டு காணாமல் போகிறாயோ? இல்லை
இருளை நீ ஏவி விட்டு இல்லாமல் போகிறாயோ?
நிலவை நீ நீந்தவிட்டு நில்லாமல் போகிறாயோ?
விண்மீன்கள் கண்சிமிட்டி சொல்வதெல்லாம் இதுதானோ?

வேரிலே நீரோடு, நிமிர்ந்துன்னை போற்றிடுமென்
பயிர்களும் உன்னைப் பழித்திடும் பகைவன் என்றே!

ஓடையிலே ஆடி முடித்து என் காதலிதன்
மேனியெல்லாம் பொன்னால் பூட்டிக் கொள்ளும் வரை
உன்முகம் விடியாமுகமாக இருக்கட்டும்! பொல்லாதவன் நீ!

கண்டு கொண்டேன் உன் செய்கை கடல் தாண்டி வந்ததுமே!,
ஓடிப்போ விழிக்காதே என் முகத்தில்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
கன்சாசு சிட்டி (அ.கூ.நா)
நவம்பர் 2000
(பழைய தொகுப்பில் இருந்து)