Pages

Thursday, July 22, 2004

கூரையைப் பிய்க்கும் குரங்குகள்!..

அஞ்சலி செலுத்த அலுக்காத குமுகாயம்! (சமுதாயம்).

அஞ்சலி செலுத்துவதைப் பெருமையாகக் கொள்ளும் குமுகாயம்!

அஞ்சலி செலுத்திவிட்டால் பொதுநலப்பணி ஆற்றிவிட்டதாகக் கருதும் குமுகாயம்!

அஞ்சலி செலுத்துவதற்கென்றே காத்துக் கிடக்கும் குமுகாயம்!

அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை ஆசையுடன் பயன்படுத்திக் கொள்ளும் குமுகாயம்!

அஞ்சலி ஒன்றை மீண்டும் செய்த குமுகாயம் சற்றே களைத்துப் போய்க்கொண்டு இருக்கிறது!

அஞ்சலிகள் இன்னும் சில நாள்கள் நீடிக்கக் கூடும்!

அஞ்சலிகளுக்குப் பஞ்சமில்லா இந்நாட்டில்,

அஞ்சலி செலுத்தப் படவேண்டியவை அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும்!

அஞ்சலி முடிந்ததும் அடுத்த அஞ்சலிக்கு குமுகாயம் தயாராகிவிடும்!

'அஞ்சலிக்கும் அஞ்சலிக்கும் இடைவெளி அஞ்சலிகளே! '

அஞ்சலிகளுக்கு மட்டும் இந்நாட்டில் தடையே கிடையாது!

நீண்ட காலத்திற்குப் பின் அல்ல!

எண்ணிப் பார்த்தால் நினைவுகளில்

அண்மைய காலத்திய கோரச் சாவுகள் எத்தனையோ

நினைவுக்கு வருகின்றன.

நித்தம் ஒரு காரணம்! ஏடுகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும்

அஞ்சலி செலுத்துவதில் ஆனந்தமோ ஆனந்தம்.

இயற்கையின் அழகை வருணிப்பது போல

அந்தக் கொடுமைகளை வருணிக்கிறார்கள்! ஒருமுறையல்ல,

மணிக்கொருமுறை தொலைக்காட்சியும், நாளுக்கொருமுறை ஏடுகளும்!

கேட்டால் பத்திரிக்கை தருமம் என்று சொல்லக்கூடும்!

ஆனால் சொல்லக்கூடிய சேதிகளில் ஏதேனும் புதிது உண்டா என்றால்

இல்லவே இல்லை.

ஒரே ஒரு ஆங்கில ஏடு மட்டும்

இப்படிப் படமும் எழுத்தும் போடுவதற்காக வருந்தியிருந்தது.

வேறுவழியில்லாமல் இந்தக் கொடுமையை இப்படி நாங்கள்

போடுகிறோம் என்று எழுதியிருந்ததில் ஒரு முதிர்வும் வேதனையும்

தெரியத்தான் செய்தது.

சேதிகள் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை.

ஆனால் பல ஏடுகள் அவற்றை எழுதிய முறைகள் அருவருப்பைத் தந்தன.

எழுத்தாளர்கள் பலரும் கொஞ்ச நாள்களுக்கு

இந்தத் தீவிபத்தைப் பற்றி நிறைய எழுதக் கூடும்.

சிறுகதை பெருகதை ஆளர்களுக்கும், திகில் கதை எழுதுவோருக்கும்

நல்ல வரும்படி உண்டு சில நாள்களில்!

கவிஞர்கள் ?

ஓ..இதுவும் ஒரு கவிதைக் காலம்!

சில வெகுசன ஏடுகள், தமிழகத்தின் பெருமை

சொல்லும் ஏடுகள், அந்தப் பள்ளியில்

ஏதாவது கிசுகிசு கிட்டுமா ? கவர்ச்சிக் காட்சிகள் கிடைக்குமா

என்று கூட தேடி அலையக்கூடும்!!

திடாரென்று சட்டங்கள் பாய்கின்றன.

சில பேர்கள் பதுங்குகிறார்கள்!

சிலர் பதுங்குவதாலேயே பலர் பாய்கிறார்கள்!

நகைப்புதான் வருகிறது!

'தாளாளரைக் கைது செய்!

ஆசிரியர்களுக்குப் பார் ஒன்றுமே ஆகவில்லை! ' என்ற குரல்கள்.

அவர்களும் போய் இருந்தால் அவர்களுக்கும் சேர்த்து அஞ்சலி

செய்திருப்பார்கள்! அவ்வளவுதான்!!

இந்தச் சினங்கள் ஒரு அரசியல்வாதியின் கள்ள அணைப்பில்

அணைந்து போய்விடும் சினங்கள்!

அந்தச் சினங்களில் கூட நேர்மை இல்லை! அல்லது,

'சினப்படக் கூடத் தெரியவில்லை '.

எதன்மேல் எல்லாம் சினம் பாருங்கள்!

அந்தப் பள்ளியின் தாளாளர் மேல் சினம்!

அங்கே பாடம் சொல்லிக் கொடுத்த

வாத்தியார்கள் மேல் சினம்!

உண்மையில் இந்நாட்டில் பாடமே சொல்லித்தரத் தெரியாத

வக்கற்ற வாத்தியார்கள்தான் முக்கால்வாசிக்கும் மேல்;

வேற எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றால் வாத்தியார்

வேலைக்கு வருபவர்கள்தான் அதிகம்.

அப்படிப்பார்த்தால் அந்தப் பள்ளி வாத்தியார்களிலும்

வக்கற்ற வாத்தியார்கள்தான் மிகையாக இருந்திருப்பர்.

அந்த வக்கற்ற வாத்தியார்கள் மேல் சினம்!

அரசாங்கத்திற்கு, கல்வி, பள்ளி மற்றும் நிர்வாகம் தொடர்புடைய

அதிகாரிகள் மேல் பொத்துக் கொண்டு வந்தது சினம்!

அந்தச் சினத்திற்கு இலக்கு சில வகையற்ற அதிகாரிகள்; அவ்வளவுதான்!

மிஞ்சிப் போனால் 100 கி.மீ தொலைவிற்கு

இடமாற்றம் செய்யப் படுவர்.

அப்புறம் எதன்மேல் சினம் ?

அங்கே சமையல் செய்யப் போன சமையல் காரர் அல்லது

சமையல் கார அம்மையாரின் மேல் சினம்!

இப்ப சாகவா நாளைக்கு சாகவா என்று அரசு மருத்துவமனையே

அல்லாடுகையில் திடாரென்று திரண்டு வந்த சாவுகளைக்

கவனிக்க முடியாததால் மருத்துவமனையின் மேல் சினம்.

அப்புறம் ?

இடவேண்டியவர்கள் இட்டார்கள்!

சுடவேண்டியவர்கள் மேலும் சுட்டார்கள்!

ஊரிலே இழவு என்றால் தப்புக்குப் பிடிக்குமாம் சனி!

அதுபோல, அத்தனைப் பிணங்களையும் எரிக்க முடியவில்லை/ஆளில்லை

என்று சுடுகாட்டு வெட்டியானின் மேல் சினம்!

சரி சினம் இன்னும் அடங்கவில்லையே என்ன செய்வது ?

பிடி அந்த அரசியல்வாதிகளை!

திட்டித் தீர்க்கலாம் வாருங்கள் என்று ஒரு படை.

அரசியல்வாதிகள் இந்த ஒரு முறை மட்டும் யாரும் யாரையும்

குறை சொல்லிக் கொள்ள வில்லை. (ஆயினும் சில ஏடுகள் அந்தத் திரித்து விடும்

திருப்பணியை செய்தன) அடடா, என்ன ஒரு நல்ல மனம் என்று

எண்ணத் தோன்றுகிறதா ? அதுதான் இல்லை.

55 ஆண்டுகளில்,

பெருங்காலம் இந்தியாவை ஆண்ட பேராயக்கட்சிக்கும்,

இடையில் ஒரு 5/6 ஆண்டுகள் ஆண்ட அழுக்கு மூட்டைகளுக்கும்,

தமிழகத்தில் ஆண்ட பேராய (காங்கிரசு),

திராவிட (திமுக), எந்தக் கணக்கிலும் சேராத அ.தி.மு.க என்ற

எல்லா கட்சிகளுக்கும், இந்தச் சாவில் சம பங்கு உண்டு என்பதால்

யாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவில்லை.

அந்தப் பள்ளியின் வயதும் 50 ஆண்டுகளாம்! புகழ் பெற்ற பள்ளியாம்.

இன்னும் பாருங்கள் வேடிக்கையை. கும்பணிகள் தங்கள்

வணிகத்திற்கு ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள். அதில்

தங்கள் வருத்தத்தை வடிவான வார்த்தைகளில் கொட்டி,

அஞ்சலியை செலுத்தி, வாசகனை கவர்வதில் முனைப்பு

காட்டுகிறார்கள்.

இன்னும் சில சினங்கள் உண்டு!

ஊர்வலங்கள் நடக்கின்றன!

அதிலே 'தீயே உனக்கு இரக்கம் இல்லையா ? '

என்று ஒரு வாசகம்.

தீயிடம் சினம் கொள்கின்றனர்! தீயிற்கு இரக்கம் வேண்டுமாம்!

அப்புறம் பாருங்கள்! சினம் அதிகமாகி அதிகமாகி

கடைசியில் 'எல்லாத்துக்கும் காரணம் இந்தக் கூரைகள்தான் '

என்று கூரையைப் பிரித்து எறிய ஆரம்பித்து விட்டார்கள்!

குரங்குகள்தான் சினம் வந்தால் கூரையில் ஏறி பிய்த்து எறியும்.

அப்படிப் பட்ட குரங்குத்தனம்தான் தற்போது கூரைகளைப்

பிய்த்து எறிந்து கொண்டிருக்கிறதே தவிர,

திட்டமிட்ட மதியின் செயல்பாடாய் இது தெரியவில்லை.

சரி - கூரையைப் பிய்த்தாகிவிட்டது. மின் கோளாறால்

தீ விபத்து ஏற்பட்டால் மின்சாரம் முழுவதையும் பிய்த்து விடுவார்களா ?

நான் ஒன்றும் கூரைகளுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை.

தங்கள் சினத்தை காட்டத் தெரியாத,

தங்கள் சினத்திற்கு வடிகால் இல்லாத

இந்தக் குமுகாயம் எதன் மேல் எல்லாம் சினம் கொள்கிறது

என்று சொல்லத்தான்! இந்தக் கூரைகளைப் பிய்த்துப் போடுவதோடு

தன் சினத்தை முடித்துக் கொண்டு அடுத்த வேலையில் தங்களை

மறந்துவிடுவார்களே, அதை எண்ணித்தான் எனது சினமெல்லாம்.

40000 பள்ளிக்கூடங்கள் இருக்கும் தமிழ் நாட்டில்,

கல்வித்தலங்கள் கழிவறைகள் போல் இருக்கின்றன.

இதை மிகக் குறைவான செலவுகளில் சிறப்பான

தலங்களாக மாற்ற முடியும். ஆனால், அதைச் செய்யப் போவது யார் ?

அரசாங்கம் ? எத்தனை அதிகாரிகளிடம் நேர்மையிருக்கிறது ?

அரசியல் வாதிகள் ? காவல் துறையினர் ? சட்டம் ? நீதி ? எல்லாமே பழுது.

அப்படியென்றால் பொது மக்கள் ஞாயமானவர்களா ?

தமக்கு சாதகம் என்றால் எந்த அரசியல் வாதிக்கும்,

அதிகாரிக்கும் தர வேண்டியதை தரத் தயாராக இருப்பவர்கள்தான்

பெரும்பாலான மக்கள். ஞாயமானவர்கள் என்று எப்படிச் சொல்லமுடியும் ?

போபால் விசவாயு விபத்தில் பாதிக்கப் பட்ட 5+ இலக்கம்

மக்களுக்கு நிவாரணத்தொகை 20 ஆண்டுகள் கழித்துக் கிடைக்கிறது.

அதுவும் எவ்வளவு என்றால் ஒரு ஆளுக்கு குத்து மதிப்பாய 30 ஆயிரம் உரூவாய்.

இந்த 30 ஆயிரம் உரூவாய் என்பது ஒரு இந்தியப் பிச்சைக்காரன்

இரண்டு வருடங்களில் சம்பாதித்து சேமித்து விடக் கூடிய காசு.

இதற்காக இவர்கள் காத்திருந்தது 20 வருடங்கள்.

இவர்களது சினத்தின் விலை 30 ஆயிரம் உரூவாய்.

அதாவது 650 அமெரிக்க வெள்ளி!

3 வருடங்களாக காவிரியில் தண்ணீர் வரவில்லை.

பொதுமக்கள் பலே கில்லாடிகள்.

பழியைத் தூக்கி செயலலிதா மேலும் கருணாநிதி மேலும்

போட்டு விட்டு தங்கள் பிழைப்பைப் பார்ப்பார்கள்.

கருணாநிதி, செயலலிதா ஒரு புறம் இருக்கட்டும்.

திங்க சோறில்லாமல் 3 வருடம் சரவல் பட்டும்

விவசாயிக்கு இன்னும் சினமே வரவில்லைங்க!

காவிரியை நம்பி வாழும் ஏறத்தாழ 1 கோடி பேர்களில்

வெறும் 1 இலக்கம் பேருக்குக் கூட சினம் வரவில்லை!

சினம் வந்து காவிரிக்கரையில் அணிவகுத்து

போராட்டத்திற்கு செல்லத் தோன்றவில்லை!

எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம்

கேட்கவும் வேண்டாம், கேட்கப் படவும் வேண்டாம்

என்று பொறுப்பற்று வாழும்போது கொடுக்கப் பட வேண்டிய விலை

மிகப் பெரிதாகத்தான் இருக்கும்.

தஞ்சை இராச இராசன் கோயிலில் பெருந் தீவிபத்து

நடந்தது 97/98 ஆம் ஆண்டு வாக்கில். அது நம் நினைவை

விட்டு அகன்று விட்டது. அங்கேயும் கூரைதான் எரிந்தது.

அங்கேயும் தப்பிக்க இடமில்லாமலே பலர் மாண்டனர்.

ஈராண்டுகளுக்கு முன்னர் திருவரங்கத்திலே திருமணக்

கூடத்திலே பல பேர் மாண்டனர். அங்கேயும் கூரை எரிந்தது.

காரணம் மின்கசிவு என்றார்கள்.

தற்போது கல்விக் கூடத்திலே கூரை எரிந்து பலர் மாண்டிருக்கின்றனர்.

வாழ்க்கைத் தரமும், நுகர்வோர் தரமும் சீரழிந்து

கிடக்கிறது. ஏன் எதற்கு என்று வாயெடுத்து கேட்கத் தெரியாத

மக்கள் கொண்ட குமுகாயம். உரிமையைக் கேட்பது அநாகரிகமாகக்

கருதும் குமுகாயமாக ஆகி முழு அடிமைகளாக ஆகப் போகின்ற

குமுகாயமாக இது தெரிகிறது.

செய்தித்தாள்களை எடுத்தால் காவல் துறையினரின் ஒழுக்கக்

கேடுகள்தான் தினச் சேதிகளாக வந்து கொண்டுள்ளன.

பண்ணையாருக்குச் சினம் வந்தால் பண்ணையாள்களின் குடிசைகளை

கொளுத்தி விடுவார். பெரிய ஆலை அல்லது நிறுவனம் கட்ட வேண்டுமானால்

அங்கிருப்பவரை காலி செய்ய குடிசைகளை கொளுத்தி விடுவார்கள்.

இங்கே எங்கேயும் கொளுத்திக் கொள்ளவில்லை என்றால்,

இருக்கவே இருக்கிறது மதச் சண்டைகள். மதம் கொண்டு

கூரைகளை மட்டுமல்ல, கோபுரங்களையும் கொளுத்தி அல்லது

இடித்து விடக் கூடிய சக்தி தீராத மத வெறிக்கு உண்டு.

அது சற்று ஓய்ந்தால், சாதி வெறி பற்றிக் கொள்ளும்.

அப்போது எரியும் கூரைகளிற்குக் கூட சாதி உண்டு!

அய்யோ எரிகிறதே என்றால் இன்றைக்கு அதை அணைக்கக் கூட

தண்ணீர் இல்லை தமிழகத்தில்.

அரசு, அரசியல், சட்டம், காவல், நீதி, கல்வி, வேலை, உணவு,

மருத்துவம், சாலை, வணிகம், என்று எல்லா நிலைகளிலும்,

துறைகளிலும் ஒழுக்கமும் நாணயமும் கெட்டுப் போய் கிடக்கிறதென்றால்

அதற்கு வெறும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் மட்டும்

காரணமாகி விட முடியாது.

ஒட்டு மொத்த குமுகாயமும் தன்னைத் தானே

ஏய்த்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே இந்தத் தீவிபத்தில் பொதுமக்களிடம் மற்றும் அரசுகளிடம்

இன்று வெளியாகி இருக்கும் அஞ்சலிகளும் சினங்களும் வெறும் சம்பிரதாயங்கள்.

இந்த அஞ்சலிகளை வெளியிட்டிருக்கும் பலர்

கூட அரசையும் பொதுமக்களையும் ஏதோ ஒரு வகையில்

ஏமாற்றி இருப்பார்கள் என்று நம்புவது கடினமல்ல.

ஏற்றத்தாழ்வுகள் பெருகும் போது தன் நலம் பெருகிப் போகிறது.

தன் நலம் பெருகும் போது கடமைகள் காணாமற்போகும்.

கடமை தவறும் போது நேர்மையும் தவறித்தான் போகும்.

நேர்மை தவறும் போது சினம் அவிந்துதான் போகும்.

சினம் அவிந்து போன குமுகாயம் சீரழிந்துதான் போகும்.

அந்தச் சீரழிவின் ஒரு துளிதான் கும்பகோண விபத்து.

இன்று கும்பகோணத்தில் சரவல்!

நாளை எந்தக் கோணத்தில் சரவலோ ?

ஆகையால்,

அஞ்சலி செலுத்துவோரும் அழுகாச்சி வந்தோரும்

அதை நிறுத்திக் கொள்வது நேர்மை.

அதைவிட நேர்மை, அவசர அவசரமாக நடவடிக்கைகள்

எடுப்பதும், சந்தடி சாக்கில் ஆலோசனைகள் கூறுவதையும்

தவிர்த்தல். இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்

என்று பேசுவதில் சுகம் காணாமல் இருத்தல் நன்று.

மாறாக ஒவ்வொருவரும் தீராத சினம் கொள்ள வேண்டும்!

அச்சினத்தில் உறுதி வேண்டும். அந்த உறுதியுடன் மதி சேரவேண்டும்.

அந்த உறுதி வேண்டுமானால், மனதில் உரோசம் வேண்டும்.

செயக் கூடாதவற்றைச் செய்யாமல் இருக்க வைராக்கியம் வேண்டும்.

அது ஒரு ஒழுக்கப் புரட்சிக்கு அடிகோலும்.

அது வருங்காலத்துக்குப் பயன்படும்.

அதைவிட்டு விட்டு 500 உரூவாய் 600 உரூவாய்

சம்பளத்துக்கெல்லாம் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களை,

சமையல்காரர்களை போய்த் துரத்திக் கொண்டிருப்பது

கோழைத்தனம் மட்டுமல்ல பம்மாத்து.

அன்புடன்

நாக.இளங்கோவன்

nelan@rediffmail.com

திண்ணையில் எழுதியது

Saturday, March 20, 2004

தரிசானாலும் தாயெனக்கு!

(சந்தவசந்தக் கவியரங்கில் எழுதியது)
"தாலாட்டு"

கையேந்தி நின்றதில்லை காசேதும் பெற்றதில்லை
கைகூப்பி வந்தவரை கைதூக்கி விட்டமண்ணே!
உன்வயிற்றில் விளைகின்ற ஒப்பற்ற முத்தையெலாம்
என்குதிரில் கொட்டிவைத்த என்வயலே புவித்தாயே!

கதிரறுத்துக் கட்டையிலே, கீழிறைந்த நெல்பொறுக்கி,
குதித்தாடிக் கூத்தாடிக் கூட்டுக்குள் போகையிலே,
கண்ணாலே கண்டதெலாம் பொன்னான நெல்மணியே;
உன்னாலே நான்வளர்ந்தேன், ஓய்வெடுப்பாய் என்நிலமே! (1)

சாமிகிட்டப் போகையிலும் போட்டதில்லை காலணியை;
பூமியுன்னைத் தொடுங்காலும் போட்டதில்லை காலணியை;
உனைப்பணிந்து ஊன்றிவைத்த ஒவ்வோரு நாத்துக்கும்
உனைமறந்து ஊட்டுவியே உகப்பான எம்பாட்டால்;

கணியுலகில் கழனிக்குக் கழிநீரும் கிட்டவில்லை
குனிந்திங்கு கூவுகின்ற குள்ளரோட பூமியிலே!;
ஊழ்பிடித்த உலகத்தின் ஓலங்கள் உறங்கும்வரை
யாழ்இசைப்பேன் ஓய்வெடுப்பாய், என்மடியில் கண்வளர்வாய்! (2)

அடித்துக் குவித்தகளம் ஆதவனின் கண்பட்டு
வெடித்து வாய்பிளந்து வீணாகப் போகுதென்று,
தாய்வீட்டுச் சீதனமாய்த் தந்தனுப்ப நெல்லின்றி
வாய்விட்டு அழுகிறியே, வாடிவிட்ட என்கழனி!;

ஆடியிலே காவேரி ஓடிவந்து சேர்ந்திட்டால்
அய்ப்பசிக்கே கதிரறுத்துக் களமெல்லாம் குவித்திடுவேன்;
நாலாறு மாசமாக நாதியின்றிப் போனதாயே,
ஓராறும் போகட்டும், ஊங்காமல் கண்ணுறங்கு! (3)

ஏர்முகத்தைத் தான்சுமந்து ஏராலே கோதிவிட்டு
வேர்ஓடும் பாதையெல்லாம் காற்றோட வைத்தகாளை
போய்முடிஞ்ச அறுப்புக்குப் போரடிச்ச கையோடு
போய்ச்சேர்ந்த இடம்தேடி பதைபதைச்சுத் தேடுறியே!

கோதிவிட்ட காளையிங்கே மேயுதற்கும் வாராமல்
சேதியின்றி சென்றதனை சொல்லிநீ அழுகிறியோ ?
உழவனுக்கு வறுமையின்னா காளைகளும் நெல்லாகும்;
அழவேண்டாம் கண்ணுறங்கு, அப்படியே என்மடியில்! (4)

வெள்ளாமை இல்லாமல், வெண்சோறும் இல்லாமல்
பொல்லாத பூமியிலே போக்கிடமும் இல்லாதார்,
இல்லாத உனைத்தேடி ஈட்டியதோ எலிக்கறிதான்!
சொல்லேதும் ஆடாமல் சோகமுறும் என்தாயே!;

பரப்பைச் சொல்லுகிற, பாதையெலாம் பச்சைநிற
வரப்பை வகுந்துவிட்டு வாய்க்காலை மூடிவிட
பாதையை மறந்துவிட்ட பித்தாயிப் பெண்போலே
கோதை தவிக்கிறியே, கொஞ்சமெனுங் கண்ணுறங்கு! (5)

தண்ணீரே கிடைக்காமல் தரிசாகிப் போனதினால்
கண்ணீரும் காய்ஞ்சுவிட்ட கழனியம்மை உனக்காக,
கனகவிச யனைத்தான் கட்டியிங்கு வந்ததைப்போல்
கங்கையவள் கைபிடிச்சுக் கரகரன்னு இழுத்துவாரேன்;

ஈசனிடம் கேட்டிருக்கேன் ஈசுவரி பார்த்திருந்தா;
ஆசையுடன் முடியவிழ்த்து அனுப்பிடுவான் தென்னாடு;
கண்ணுறங்கு அதுவரைக்கும், கண்ணுறங்கு என்மடியில்;
உன்கனவில் நான்வருவேன் கங்கையுடன் கைபின்னி!. (6)

அன்புடன்
நாக.இளங்கோவன்
மார்ச்-2004

Thursday, January 15, 2004

நிலமகளே!

(எண்சீர் விருத்தம்)

கட்டிஉறும் கரியடுக்கிக் கடுநெய்யைத் தேக்கிவைத்துக்
கண்ணேதும் காணாமல் மண்போட்டு அதைமறைத்து
முட்டிமோதி மேலேற முடியாமல் நின்வயிற்றில்
முடங்குதற்குக் கல்லாலே காவலிட்ட நிலமகளே!;
கொட்டிஉள்ளே கிடப்பதெலாம் கொடுநஞ்சென் றறியாமல்
கொடும்ஆசை தலைக்கேறக் கும்மாளம் போட்டபடி
வெட்டிவெட்டி அள்ளிவந்து வகைவகையாய்ப் பிரித்தெடுத்து
வெளியெல்லாம் அதைஎரித்து கரிகரியாய்க் கரித்துவிட்டோம்!

கன்னமிட்டுத் தங்கத்தைக் கவர்ந்துபோகு கள்வர்போல்
கல்நெய்யில் கண்வைத்துக் கைவைக்கக் காத்திருந்து,
நன்னலங்கள் யாவிருந்தும் நாணயத்தை ஒளித்துவிட்டு
நடுவுநிலை பிறழ்ந்திங்கு நகுதற்கே பொருளான
தன்னலத்தில் ஊறிவிட்ட தடித்தபல நாடுகளோ
தனதில்லா ஊர்களிலும் தன்கொடியை நடுவதெலாம்
நின்வயிற்றில் தீராமல் நெடுநாளாய் ஊறுகின்ற
நிலநெய்யை தான்கொண்டு நீள்நிலத்தை வெருட்டுதற்காம்!

கரிஅள்ளி நெய்அள்ளி வாயுவையும் தான்அள்ளி
கணக்கில்லா வண்டிகளை நிலமெங்கும் நீந்தவிட்டோம்!
கறிதின்ன, காளையெல்லாம் கொன்றுவிட்டு, உழவுஏரைக்
கல்நெய்யால் உயிரூட்டிக் கழனிதனை உழுகின்றோம்!
தறிகெட்டு ஓடிஓடித் தரணியிலே உழைத்தாலும்
தளராத வாழ்வினையே தழுவாது நிற்கின்றோம்!
வெறிகொண்டு, நாம்வாழ விரைவுமிகக் கூட்டுகையில்
வெறுஞ்செருக்கை வெள்ளமென வீதிஉலா விடுகின்றோம்!

வடித்தெடுத்த நெய்யெல்லாம் வண்ணவண்ணப் புகையாகி
வையகத்தைத் தனக்குள்ளே முடிந்துவைத்த வேதனையில்,
மடிதிறந்த மண்மாதா மூச்சுவிட முடியாமல்
மண்வாரி தூற்றுதியோ மங்காத சினத்தோடு ?
கொடியசைந்து, கூடவரும் குளிர்தென்றல் வழியின்றி
குழைத்துவரும் தூசியையும் கூடவே புகையையும்;
குடிபிழைக்கப் பொழிகின்ற மாமழையும் இந்நாளில்
கொடும்மாசு கண்டஞ்சி அண்டுதில்லை இம்மண்ணை!

மாட்டுவண்டி பூட்டிஅதை மைல்தொலைவு ஓட்டிப்போய்
மாசில்லா வயல்வெளியில் பயிரோடும் பச்சையோடும்
ஈட்டுகின்ற செயலிலெலாம் கால்நடையின் கூட்டுவைத்து
ஏச்சறியா பறவைகளின் ஏற்றமிகு நட்புகொண்டு
பாட்டுநல்ல ஆட்டுடனே பந்தமுடன் கும்மிகொட்டி
பாழான தூசுதள்ளி தூயஇடம் நானொதுங்கி
வாட்டுகின்ற பேரிரைச்சல் பேராசை போக்கிவிட்டு
வாழுகின்ற பெருவாழ்வு வேண்டுகிறேன்; அருள்தாயே!

மனையாட்டி மக்களுடன் நீர்வாங்கி நான்குடிக்க
மாசத்தில் காற்பவுனை செலவாகச் செய்கின்றேன்!
எனைநம்பி வருகின்ற எம்பசு,ப றவைகட்கும்
ஏருழுவும் காளைகட்கும் என்னபவுன் ஆகும்பார்!
அனைத்திற்கும் என்கணக்கில் ஆகுசெலவு ஓர்பவுனாம்;
ஆகட்டும்; காணிபயிர் தான்குடிக்கக் கணக்கைப்பார்!
நினைவேண்டி நிற்கின்றேன்; நீள்நிலத்தில் எந்நாளும்
நீரெல்லாம் பரிஎன்று நிலைத்திடவே நீதியிடு!

(வெண்பா)

ஞாலத்தின் செல்வமெலாம் தான்கொள்ளப் பூமாந்தர்
கோளத்தின் மேனியெலாம் மாசுபூச - காலத்தின்
கோலமெனக் காற்றும் குடிநீரும் காசுஆகி,
சீலமின்றி வாழும் உலகு.

குறிப்பு:- பரி = free = இலவயம் (நன்றி: முனைவர் இராம.கி)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Thursday, January 08, 2004

பொங்கலோ பொங்கல்....!

மூத்தகுடியின் முன்னோர்கள் ஆக்கிவைத்த பண்டிகைக் காலம்

இந்த பொங்கல் திருக்காலம். மனித வாழ்க்கை, அடிப்படையான அல்லது

அதிகப்படியான தேவைகளை அடைய அன்றாடம் ஏதொ ஒருமுறையில்

இயங்கிக் கொண்டே இருக்கிறது. இல்லவிழாக்கள் சுற்றம் சூழ

நடைபெறும்போது அங்கே மனநிறைவும் உறவும் வளர்கிறது.

திருமணங்கள், பிறந்தநாள்கள் போன்றவை அவை.

அதேபோல் ஊர்விழாக்கள் ஊராரை இணைத்து ஒருப்படுத்துகின்றன; பெரும்பாலும் ஊர்விழாக்கள் அனைவருக்கும் பொதுவான தெய்வ விழாக்களாக அமைகின்றன. தெய்வவழிபாடு, அதை ஒட்டிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போன்றவற்றில் அனைவரும் கலந்து கொண்டு இன்பம் துய்ப்பது ஊர்மக்கள் அனைவருக்கும் மனமகிழ்வையும் புத்துணர்வையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது.

இல்லங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து ஒரு பெரும் சமுதாயமாக

ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன. இந்த விழாக்கள்

சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப் பூர்வமாகவும்,

உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.

இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான்

பொங்கல் பண்டிகைக்காலம். எத்தனைப் பொங்கல் காலத்தை இதுவரை இந்தத் தமிழ்க்குடி பார்த்திருக்குமோ! எண்ணி வியக்கிறேன் !

'மேழிச் செல்வம் கோழைபடாது ' என்ற கொள்கையே இத்தமிழ்ச்

சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது. அரசன் மகனை வாழ்த்தவந்த ஒளவையார் 'இளவரசே வாழ்க பல்லாண்டு! ' என்று வாழ்த்தவில்லை! அரசே உன் 'வரப்பு உயர்க '! என்று வாழ்த்தினார். காரணத்தை ஒளவையார் இவ்வாறு கூறுகிறார்.

வரப்புயர நீருயரும்!

நீருயர நெல்லுயரும்!

நெல்லுயுர குடியுயரும்!

குடியுயர கோனுயர்வான்!.

'செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே '

என்கிறார் கம்பர். 'உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி ' என்கிறார் வள்ளுவர். ஆக இந்த வேளாண்மையே (விவசாயம்) அனைத்தையும் ஆக்குகிறது, அசைக்கிறது. மனித ஆசைகள் இயந்திர ஓசைகளை உருவாக்கிய காலத்து முன் வேளாண்மை மட்டுமே சமுதாய நகர்வுகளுக்கு அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும்.

வேளாண்மை அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. அனைவரின் பங்கும் ஏதோ ஒருவகையில் இதற்கு இருக்கிறது.

பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்

திருக்காலமாக இருப்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று; எவ்வளவு அறிவார்ந்த, பெருமை படத்தக்க விழா அது!

அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற

முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில்

இருந்த தைமாத ஆரம்பம், விழாக்காலமாக விதிக்கப் பட்டது எத்தனை

அறிவார்ந்த பொருத்தமான செயல் என்று எண்ணி வியக்கிறேன்.

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு

என்று ஒரு தொடர் விழாவே பொங்கல் விழா.

போகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப் படுகிறது.

இதுநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும் ' நாளாகக் கருதப்

படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும்

நாளாகக் கருதப்படுகிறது.

ஆனால் இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

1) கவிஞர் கண்ணதாசன், தன் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தில்,

'போகிப் பண்டிகை ' என்பது போகிகளின் ( சுகபோகிகளின் ) பண்டிகை

என்று எழுதியிருக்கிறார். அதை முதலாளித் திருவிழா என்று

குறிப்பதாகப் படுகிறது. அப்படியென்றால் வீட்டுப்பொங்கல், மாட்டுப்பொங்கல் போன்றவையெல்லாம் தொழிலாளிப் பொங்கல் என்றாகிவிடுகிறது. ஒருவேளை அவர் சொல்வதில் உண்மை யிருந்திருந்தால் அவர் 'போகிப்பண்டிகை ' யின் சிறப்புக்களும் பாடப்பட்டிருக்கும்.

( பணக்காரன் பண்டிகையென்றால் அதற்குப் பகட்டும்

அதிகமிருந்திருக்காதோ ? ) பொங்கல் நாளுக்கு இருக்கும் சிறப்பு

போகிக்கு இருந்ததில்லை. ஆகவே கண்ணதாசனின் கூற்று சரியன்று.

2) மற்றொரு கருத்து என்னவென்றால், இடையில் தமிழை அழிக்க வந்த ஆதிக்க சக்திகள், தமிழருக்கு 'பழையன கழித்தல் ' என்ற மந்திரம் போட்டு 'போகி ' அன்று 'பழைய ஓலைச் சுவடிகளை ' யும் சேர்த்து எரித்து அழிக்கச் செய்திருக்கிறார்கள். தமிழ் நிறைய அழிந்தது இதனால் என்று அறிஞர் பலர் கருதுகின்றனர். ஆடிப்பெருக்கில் ஆற்றில் வீசியும், போகியன்று தீயில் பொசுக்கியும் அழிந்த தமிழ் நூல்கள் பல. அதோடு சமணத்திற்கு எதிராக வைதீக மதம் நடத்திய போராட்டத்தில் சமண நூல்கள் பெரும்பாண்மையும்

அழிக்கப் பட்டன. போகி என்ற பண்டிகையை இப்படி தமிழ் வரலாற்றை

அழிக்க பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், போகி என்பதன் கொண்டாட்டம் இதுவாக இருக்கவே முடியாது.

3) போகி என்றால் 'இந்திரன் ' என்று ஒரு அர்த்தம் உண்டு. இந்திரனுக்கு வணக்கம் செய்வது போகிப் பண்டிகை. தமிழர் வழக்கப்படி இந்திரன் என்பவன் மேகங்களை இயக்குபவன். மேகங்களே வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பொழிகின்றன. மேலும் ஐந்திணைகளில் ஒன்றான மருதநிலத்திற்கு ( வயலும் வயல் சார்ந்த இடமும் ) உரிய கருப்பொருள் இந்திரன் என்ற தெய்வம். ஆகவே போகி என்பது இந்திரன் பண்டிகை என்றால் அதுப் பொருத்தமானதுதான்.

ஆனால், இந்திரனுக்குத்தான் இந்திரவிழா என்று சித்திரை மாதத்தில்

கொண்டாடுவது பழந்தமிழர் மரபாயிற்றே! அப்புறம் ஏன் இந்திரனை போகியன்று கொண்டாட வேண்டும் ? என்று எண்ணினால் அது இந்திர வணக்கமாகக் கூட இருக்க முடியாது. (இந்த இந்திரன், தேவர் கோமானாக,

மாங்குடி மைனர் கணக்கில், புராணப் பெண்களைச் சுற்றி அலையும் இந்திரன் அல்ல. அவன், தமிழரின் மருத நிலக் கருப்பொருள்)

ஆதலால், கொண்டாடப் படும் நாள் அக்கால வழக்கப்படி வருடத்தின்

கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி. கடந்த வருடத்திற்கு ?நன்றி சொல்லும் நாள் ? போகிப்பண்டிகை.

தற்போது கூட ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான திசம்பர்-31 முக்கியமான கொண்டாட்ட நாள் என்பது எண்ணத்தக்கது.

இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல் ' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.

முதல் நாள் வைகறையில், வாசல் நிலையில் பொங்கல் நிகழ்ந்து, விழா,

நிலை தாண்டி இல்லம் நுழைகிறது. இரண்டாம் நாள் வீட்டுப் பொங்கல்.

காலைக்கதிரவன் முன், புத்தாடை போர்த்தி, பொன்னகை பூட்டி, தலைவன்,

மக்கள், சுற்றத்தார் சூழ்ந்து நிற்க தலைவிப் பொங்கச் சோறு சமைக்க,

அவரின் மகள் அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருப்பார்.

கதிரவனுக்குப் பொறுமை போதாதாகையால் சற்று வெப்பத்தை

அதிகரிப்பான்! அந்த அவசரம் புரிந்தோ என்னவோ, புதுப்பானையில்

பொங்கும் சோறு!

தலைவியின் உள்ளத்திலே பதைபதைப்பு இருக்கும். பொங்கச் சோறு பொங்கிவருவது உகந்த திசையில் வரவேண்டுமாம். (இலேசாக ஒரு அடுப்புக்கல்லை அதற்கு வசதியாக ஆரம்பத்திலேயே சற்று அமுக்கி வைத்து விடுவார்களாம் சிலர் ;-) )

அத்திசையில் பொங்கல் பொங்கி வழியும் போது தலைவியின் உள்ளம் பூரிக்கும்; இந்த இரண்டு மனநிலையும் முகபாவமும் ஒரு நொடியில் நிகழ்வுறும். சுற்றியுள்ள அனைவரும் 'பொங்கலோ பொங்கல் ' என்று போற்றி, மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து சூரியனை மங்கலப் பொருள்கள் துணையொடு வணங்கிடுவர். இல்லுறை தெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்கிடுவர்.

சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், ஐவகை அல்லது எழுவகை அல்லது ஒன்பது வகைக் காய்கள் கொண்ட கறி செய்வர். வெண்சோறும் உண்டு; பழங்களும் இனிப்புகளும் மேலும் உணவிற்கு சுவை கூட்டும்.

உணவிற்கு முன்னர் தலைவனும் தலைவியும் தங்கள் மகளுக்கும் மருமகப்பிள்ளைக்கும் பொங்கல் சீர் அளித்து மகிழ்வர்.

குடும்பம், சுற்றம் முழுவதும் அமர்ந்து உணவுண்ணும் போது உண்டாகும்

குதூகலமானது 'மனிதவாழ்க்கையின் மையம் பேசும் '.

பிறகென்ன, கரும்பைக் கணக்காக தந்தையோ தமையனோ வெட்டிக் கொடுக்க குழந்தைகளும் பெரியவர்களும் சுவைத்து மகிழ்தல் பேரின்பமாகும்.

இந்நாளை, வயல்கள், மாடுகள் இல்லாதவர்களும் கொண்டாடுகிறார்கள்.

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகர்க்கு ' என்ற வள்ளுவம் தமிழரிடத்து

என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை

விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள்.

மாடுகள், வயல்கள் உள்ளவர்கள் மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கலன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

வண்டியிழுக்க, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று

எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி செய்வது மாடு; காளைமாடு.

காலைமாலை சுவைதரும் பால்தருவன பசுமாடு;

இவை அனைத்தும் அன்று குளித்து, கொம்புகளை சீவிக்கொள்ளும்.

கொம்புகளில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும்; அன்று மட்டும்

மாடுகளுக்கு அடி விழாது. எருமைமாடுகளும், ஆடுகளும் கூட

கொம்புகளில் வண்ணம் பூசிக் கொள்ளும்.

பொங்கல் செய்து, பொங்கலை ஒருவர் எடுத்துக் கொண்டு,

வாழைப்பழங்களை ஒருவர் எடுத்துக் கொண்டு, ஒருவர் மணி அடித்துக்

கொண்டு ( சில இடங்களில் சங்கு ஊதுகிறார்கள் ), மாட்டின் அருகே

சென்று அதன் வாயைத் திறந்து சோற்றையும் பழத்தையும் ஊட்டி விடுகிறார்கள்.

பொங்கலோ பொங்கல் என்ற உற்சாகக் குரல்களும் கேட்கும்.

நான்காம் நாள் 'காணும் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது '.

காணும் பொங்கலன்று குடும்பம், சுற்றம் சேர்ந்து சோறு கட்டிக் கொண்டு

வண்டி ஏறி, கடற்கரையோரம் அல்லது பிற இடங்களுக்கு சுற்றுலா

போல் செல்கிறார்கள். இதைப் பெரும்பாலும் தமிழக வடமாவட்டங்களில்

காணலாம். குறிப்பாக சென்னையில் மெரீனா கடற்கரையும், சென்னை

சாலைகளும் மக்களால் நிறையும்.

அய்ந்தாம் நாள், தென்பகுதிகளில் 'மஞ்சு விரட்டு ' என்ற வீரவிளையாட்டு நிகழ்கிறது. இதில் பெண்ணும், பொன்னும் பெறுவாரும் உண்டு; குடல்சரிந்து மண்ணுக்குள் போவோரும் உண்டு. கிராமங்களில் அன்றைய தினம் சிறியவர்களை வெளியே போகக் கூடாது, மாடுகள் திசை தப்பி வரும் என்று எச்சரிப்பார்கள். நிறைய மாடுகள் பிடிபடாமல் திசைமாறி ஓடி வரும்.

பொங்கல் முடிந்து பணிக்குத் திரும்ப ஆரம்பிப்பர் தமிழர். வேலை செய்ய

ஆரம்பிக்கு முன் பொங்கல் நிகழ்ச்சிகளைப் பறிமாறிக் கொள்வர்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த காதலியரும்

காதலரும் மணம் புரிவர்.

வாழ்க தமிழர்;

வளர்க பொங்கல்.

திண்ணையில் எழுதியது்