Pages

Tuesday, July 14, 2020

புறநானூறு-243 - இளமை நிலையாமை

Image may contain: one or more people



நான் சிறுவனாக இருந்த அந்த இளமைக்காலம் மிக இனிமையானது. மண்ணெடுத்து நீர்சேர்த்து திண்ணியதாய்க் குழைத்து அழகழகான பெண் பொம்மைகள் செய்வேன். ஓடிப்போய் பூக்கொய்து, தொடுத்த சரமாயும், தனிப்பூவாயும் பாவைக்கு சூடி அழகு பார்ப்பேன். பாவையின் அழகு என்னை ஈர்க்கும். அது என்னோடு பேசியதும் புன்னகைத்ததும் எனக்கு மட்டுமே புரியும்.

நீராட, கூட்டமாகப் போவோம். எனது தோழச் சிறுமிகள் என்னோடு கைகோர்த்து, குளிர்ச்சியான குளத்தில் ஆடிய காலத்தில் எங்களுக்கு பால் வேறுபாடே தெரியாது. அன்பும் களிப்பும் மிகுந்து, தூய நீரைப்போல தூய்மையா யிருந்தது. அந்தச் சிறுமிகள் என்னைத் தழுவிய போது தழுவி, அவர்களோடு போட்ட ஆட்டமும் பாட்டமும், கத்தலும், கூவலும், தண்ணீரில் வீழ்ந்த போது ஒருவரோடு ஒருவர் வீழ்ந்து எழுந்த பூரிப்பும் அளவிட முடியாதது.

குளத்தங்கரையில் பழைய மருத மரம். அதன் கிளைகளில் ஒன்று குளத்து நீரை காதலித்தோ என்னவோ, குறுக்கே நீரை நோக்கி தாழ்ந்து நீண்டு திரண்டு கிடக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கள்ளத்தையே கல்லாத, அறியாத என்னொத்த அந்தச் சிறுவர்களுடன், அதில் ஏறி நடந்து ஆழமான இடத்திலே, பார்ப்பவர்கள் வியப்பாரென்று எண்ணி, தண்ணீர் தெறித்துச் சிதறுமாறு, பொத்தென்று குதித்து அடிச்சென்று மண்ணள்ளி வந்து மேலே காட்டும் போது அடைந்த களிப்பிற்கு இணையாய் ஒன்றைச் சொல்ல முடியவில்லை.

கள்ளமிலா நட்பும், மகிழ்ச்சியும், கல்வி கற்றிராத அந்த இளமையின் இயற்கை எனக்குத் தந்த கொடை; அஃது வாழ்வில் என்றைக்கும் திரும்பியதே இல்லை. தலைப்பகுதியில் அழகிய வேலைப்பாடு செய்த நீண்ட தண்டை ஊன்றி நடுங்கிக்கொண்டே நடக்கின்ற இந்த முதுமையில், அவ்வப்போது இருமல் வருகிறது. சிறிதே பேச முடிகின்றது. எனது முதுமையைக் கண்டு நானே இரங்குகிறேன். ஆயினும் அவரின் கண்களில் துயரம் இல்லை.

இளமை நிலையாமையை இளமையில் அறிந்தவர் யார்?

புறநானூறு-243, பாடியவர் பெயரில்லை.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.

முதுமையின் இயலாமையில் சங்கப்புலவர் ஒருவர் பாடிய பாடல் இஃது. நிலையாமைத் தத்துவத்தை உணர்ந்த, உதிர்த்த புறநானூற்றுப் பாடல்வரிகள் இவை. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை என்ற நிலையாமை தத்துவத்தை திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களிலே தேடும் நமக்கு புறப்பாடலிலும் படிக்க முடிவது ஆதித் தமிழுலகின் தத்துவ வாழ்விற்குச் சான்று. பொதுவியல் திணையில், கையறு நிலை துறைப்பாட்டு.

பாடியவர் பெயர் கிட்டவில்லை ஆதலால், இப்பாடலாசிரியரை, அவரின் பாடல்வரியில் உள்ள சொற்றொடரை வைத்து "தொடித்தலை விழுத்தண்டினார்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

பொருள்:
திணிமணல் செய்வுறு பாவை = மண்ணில் செய்யும் பாவை/பொம்மை
கொய்பூ = கொய்து வந்த மலர்கள்
தைஇ = தைத்து, கோர்த்து, தொடுத்து
தண்கயம் = குளிர்ச்சியான நீர் நிறைந்த குளம்
தழுவுவழித் தழீஇ = தழுவும்போது தழுவி
தூங்குவழித் தூங்கி = ஆடும்போது ஆடி
மறையெனல் அறியா = மறைத்துப் பேசுதல் அறியாத
மாயமில் ஆயம் = கள்ளமில்லாத சிறுவர் குழாம்
திரையகம் பிதிர = நீர் பிதுக்கிச் சிதறுவது
குட்டம் = நீரில் ஆழமான இடம்
தொடித்தலை விழுத்தண்டு = வளைந்து அழகிய வேலைப்பாடுகளை தலைப்பகுதியில் கொண்ட ஊன்றி நடக்கும் தண்டு/கோல்
மூதாளர் = முதியவர், அகவை முதிர்ந்தவர்

அன்புடன்
நாக.இளங்கோவன்

==============================================

No comments: