ஒருங்குறிச் சேர்த்தியத்தில் https://www.unicode.org/L2/L2020/20119-two-telugu-letters.pdf என்ற இந்தச்சுட்டியில், தமிழின் ற,ழ எழுத்துகளை தெலுங்கில் சேர்க்கக் கோரும் திரு.வினோதுராசனின் முன்னீட்டைக் (proposal) காணலாம். தமிழ் ஒருங்குறியைப் பற்றிய விதயம் என்பதால், தமிழிணைய கல்விக்கழகத்தின் ஒருங்குறி வல்லுநர் குழு 08-மே-2020 அன்று கூட்டப்பட்டு, மேற்கண்ட முன்னீடு ஆராயப்பட்டு, இம்முயற்சியை மறுக்க வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றின் சுருக்கமும், விளக்கமும் தொகுக்கப்பட்டு, ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பப்பட்டடது. அந்த ஆவணத்தின் செய்திகளை தமிழில் வழங்குவது இக்கட்டுரையின் நோக்கம்.
சுருக்கம், பரிந்துரை:
1) தமிழ் ற, ழ எழுத்துகளை
தெலுங்கு ஒருங்குறியில் குறியேற்றம் செய்யக்கூடாது. மாறாக, ScriptExtensions.txt என்ற நுட்பத்
தீர்வு இருக்கிறது. அவ்வழியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2)
தெலுங்கு ఱ-கரத்திற்கும் (ற-கரம் u+0C31) தமிழ் ற-கரத்திற்கும் ஒரே ஒலிப்புதான். இரண்டுக்கும் ஒலிப்பு/உச்சரிப்பு வேறுபாடு
இருக்கிறது என்று சொல்லி, தமிழ் எழுத்து ற-வை தெலுங்குக்குள் குறியேற்றம் கோருவது அடிப்படை
பிழையாகும். தெலுங்கு கல்வெட்டுகளில் வேற்றுவடிவங்கள் காணப்பட்டாலும், அவை ஒரே ஒலியனின்
கீற்றுவேறிகளாக (graphic variants) அல்லது மாற்றொலிகளாக (allophones) கொளல் வேண்டும்.
3) “ற்ற” என்ற உச்சரிப்பு
தமிழர்களிடையேயே வேறுபடும். ஈழத்தமிழர்கள் நேர்த்தியாகவும், தமிழ்நாட்டுத் தமிழர்கள்
சற்று பிசகி, “ட்ர/ற” என்று அழுத்தியும் உச்சரிப்பது வழக்கு; இதை மொழியியலார் ஒலியன் ஒட்டு (phoneme joint) என்பர். பிசகிய “ட்ர/ற”
ஒலிப்பே “ற்ற்”-வின் ஒலிப்பு என்று கருதி,
அதற்காக தெலுங்கில் கொண்டுபோய் தமிழ்-றவை சேர்க்க வேண்டும் என்பது திரு.வினோதுராசனின்
தமிழ் அறியாமையும் தவறும் ஆகும். ஆகவே அவர் வைத்துள்ள முன்னீட்டின் ஆதாரம் பிழையானதாகிறது.
4) இந்தியா பலமொழிகள் புழங்கும்
பெரியநாடு. இந்திய மொழிகளுக்குள் பல ஒட்டுறவுகள் உண்டு. ஒவ்வொரு மொழியிலும் அண்டை மொழியின்
எழுத்துகளைக் கொண்ட சாதாரண எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்ட உரைகள்/இலக்கியங்கள் உண்டு.
இப்படியான மிகச்சிறிய தேவைக்கெல்லாம் ஒருமொழியின் எழுத்துகளைக் கொண்டுபோய் இன்னொரு
மொழியின் ஒருங்குறி நெடுங்கணக்கில் சேர்த்தால், நாளடைவில், இந்திய மொழிகளுக்கான ஒருங்குறி
கட்டமைப்பு சிதைந்துவிடும்.
விளக்கம்:
தெலுங்கு ற, ழ வரலாறு
தெலுங்கிலும் கன்னடத்திலும் ழ-கர எழுத்தே துவக்கத்தில் கிடையாது.
முதன்முதலில் பொ.பி 5 ஆம் நூற்றாண்டில், சாலங்காயனரின் கல்வெட்டில்தான் தெலுங்கு ழ-கர
எழுத்து வடிவம் தென்பட்டது. சாலங்காயனர்கள், தென்னிந்திய பல்லவப் பேரரசை ஒட்டி, நட்பு
நாடாக, சிற்றரசாக இருந்து வந்தனர். தெலுங்கும் கன்னடமும் பொ.பி 5 ஆம் நூற்றாண்டில்
ஒரே எழுத்துகளைப் பயன்படுத்தி வந்தன என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்நிலையில், தெலுங்கு ழ-கரமானது, கீழைச்சாளுக்கிய வேங்கி
நாட்டரசனும், பேரரசன் இராசராச சோழனின் பெயரனுமான இராசராச நரேந்திரன் ஆட்சிக்காலமான
பொ.பி 11 ஆம் நூற்றாண்டுவரை தெலுங்குக் கல்வெட்டுகளில் இடம்பெற்றது. அந்தக் காலகட்டமானது,
சோழர், மேலை கீழைச் சாளுக்கியர், பல்லவர் அரசுகளுக்கிடையே மிக அதிகமான தொடர்பாடல்கள்
இருந்த காலமாகும். சோழர்களில், பேரரசுச் சோழர்கள் தமிழ் பேசுவோராகவும், இரேநாட்டுச்
சோழர்கள் தமிழ், தெலுங்கு என்ற இரட்டை மொழி பேசுவோராகவும் இருந்தனர். இந்தத் தொடர்பாடல்களே
தெலுங்கு மொழியில் ழ-கரப் பயன்பாட்டுக்குக் காரணமாயிருந்தன. ஆனால், தெலுங்கு-கன்னடப்
பகுதிகளில் அவர்கள் பயன்படுத்திய வரிவடிவமும், தமிழ்ப் பகுதிகளில் இருந்த வரிவடிவமும்
வெவ்வேறாகவே இருந்தன.
தெலுங்கு ற-கரத்தைப் பொறுத்தவரையில், தெலுங்கு-கன்னடப் பகுதிகளில்
பொ.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் புழக்கத்தில் இருந்தது. ஆனால், தெலுங்குப் பகுதிகளில்
பொ.பி 18 ஆம் நூற்றாண்டில் றகரப்புழக்கம் அற்றுப்போனது. ற-கரம் புழங்கிய காலத்திலும்,
ஒலிப்பு ஒன்றாக இருந்தாலும், தெலுங்கு-கன்னடப் பகுதிகளில் வரிவடிவம் வேறாகவும், தமிழ்ப்பகுதியில்
வேறாகவும் இருந்தது வரலாறு.
தெலுங்கு ற-கர ழ-கர எழுத்துகள் கல்வெட்டில் காணப்பட்டாலும்
தெலுங்கு இலக்கியங்களில் இந்த எழுத்துகளின் பயன்பாடு இல்லை. தெலுங்கின் முதல் இலக்கண
நூல் உருவானதே பொ.பி 11 ஆம் நூற்றாண்டில்தான். தெலுங்கிற்கான இலக்கணம் எழுதப்பட்டது
தெலுங்கு மொழியிலன்று. மாறாக சமற்கிருதத்தில் எழுதப்பட்டது. தெலுங்கில், புகழ்பெற்ற,
“ஆந்திர மகாபாரதம்” என்ற நூலின் முதல் மண்டிலத்தையும் மூன்றாவது மண்டிலத்தையும் எழுதிய
ஆதிகவி நன்னய பட்டாரகரே தெலுங்கு இலக்கண நூலையும் சமற்கிருதத்தில் எழுதினார். பொ.பி
11 ஆம் நூற்றாண்டில் எழுந்த அந்த இலக்கண நூலான “ஆந்திர சப்த சிந்தாமணி” யில் தெலுங்கு
ற-கர, ழ-கரம் என்ற இரண்டு எழுத்துகளே இல்லை. இது தெலுங்கிற்கு ற-கர, ழ-கர எழுத்துகள்
/ ஒலிப்புகள் அயன்மையானவை என்பதையே காட்டுகிறது என்பர் அறிஞர்.
கன்னடத்தின் முதல் இலக்கண
நூலான “கருநாடக பாசை பூசனா”, பொ.பி 12 ஆம்
நூற்றாண்டில், சமற்கிருதத்தில் எழுதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
கன்னடத்திலும் ற-கர ழ-கரத்திற்கு தெலுங்கைப்போலவே முறையே
ಱ, ೞ என்ற குறியீடுகளைப் பயன்படுத்தினார்கள்.
அவை முறையே 12, 18ஆம் நூற்றாண்டில் அற்றுப்போன பின்னர் ರ, ಳ என்ற இவ் வரிவடிவங்கள்
கன்னடத்தில் புழங்கின.
தெலுங்கு இலக்கண நூலை யாத்த நன்னய பட்டாரகர், தெலுங்கு ஒலிப்புடன்
அயல்மொழி ஒலிப்புகளையும் கருத்தில் வைத்து, 36 தாய்மொழி (தெலுங்கு) எழுத்துகளையும்,
19 அயன்மொழி (சமற்கிருதம்) எழுத்துகளையும் கொண்ட எழுத்திலக்கணத்தை உருவாக்கினார். ஆனால்,
அந்த இலக்கண நூலிலேயே ழ, ற, ன என்ற மூன்று ஒலிப்புகளும்/எழுத்துகளும் இல்லை. ஆங்காங்கு
இவ் ஒலிப்புகள் தெலுங்கில் புழங்கியிருந்தாலும், தெலுங்கு அறிஞர்கள் சமற்கிருதத்திற்கு
முக்கியத்துவம் தரும்பொருட்டு இவ் எழுத்துகள் இலக்கண / இலக்கியங்களில் இல்லாததை பொருட்படுத்தவும்
இல்லை போலும்.
பேராசிரியர் பத்திரிராசு கிருட்டிணமூர்த்தி எழுதிய “The
Dravidian Languages” (Cambridge University Press. 2003, on page 81) நூலில், ற-கரத்தை ஏற்கும் அதே வேளையில் ழ-கரத்தை பொருட்படுத்த-வில்லை என்பது
கவனிக்கத்தக்கது.
தெலுங்கு
ஒருங்குறியின் வரலாறு
மேற்சொன்ன தெலுங்கு எழுத்துகளின் வரலாற்றின் அடிப்படையில்,
தெலுங்கு வரிவடிவத்தில் இருந்த ற-கர ழ-கரங்கள், கல்வெட்டு ஆவணங்களைப் படிக்க ஏதுவாக,
தெலுங்கு ஒருங்குறியில் இடம்பெற வேண்டியது தேவையானது. ஆனாலும், தெலுங்கு இலக்கணத்திலேயே
இல்லாததாலோ, அல்லது மக்கள் புழக்கத்தில் அதிகம் இல்லாததாலோ, தெலுங்கு வரிவடிவ ழ-கர
எழுத்து மீண்டும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது. தெலுங்கு வரிவடிவ ற-கர (ఱ RRA) எழுத்து மட்டுமே
1991ல், உலகில் ஒருங்குறியின் முதல் வேற்றம் (version 1.0) வெளியானபோது, தெலுங்கு ஒருங்குறி
நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது.
அதன்பின், ஏறத்தாழ 21 ஆண்டுகள் கழித்து, 2012ல்தான் தெலுங்கு
வரிவடிவ ழ-கரம் (ఴ LLLA) சேர்க்கப்பட வேண்டும் என்ற முன்னீடு அனுப்பப்பட்டது. இந்த முன்னீட்டை (L2/12-015)
அனுப்பியவர்களுள் ஒருவர்தான் திரு.வினோதுராசன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், தெலுங்கு வரிவடிவ ற-கரத்தைப் (ఱ RRA) போன்றே மெல்லிய வேறுபாட்டுடன் ஒரு எழுத்து வடிவம் கல்வெட்டில் காணப்பட்டது
. இதன் ஒலிப்பு இன்னெதென்றே அறியாத நிலையில், அதை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாத
நிலையில் தெலுங்கு-RRRA என்று பெயர் கொடுத்து அதையும் ஒருங்குறியில் சேர்க்க முன்னீடு
(L2/12-016) அனுப்பி, அதுவும் தெலுங்கு நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது. அதிலும் திரு.வினோதுராசனின்
பங்கு உண்டு. ஒருங்குறி அட்டவனையில் “TELUGU LETTER RRRA - letter for an
alveolar consonant whose exact phonetic
value is not known” என்று குறிப்பிட்டு, அஃதாவது RRRA ( ) என்ற இந்த எழுத்தை எப்படி
ஒலிப்பது என்று தெரியவில்லை என்றே குறிப்பிட்டு தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதை “மூன்று” என்ற சொல்லில் வரும் ற-கர ஒலிப்புக்கு இணையாகக் கருதலாம் என்று முன்னீட்டில்
சொன்னாலும் குறியேற்ற அட்டவனையில் ஒலிப்பில்லா குறியீடாகவே இருக்கிறது.
இந்தக்குறியீடான (RRRA), தெலுங்கில் ஏற்கனவே
இருக்கும் ఱ RRA-கரத்தின் கீற்று வேறுபாடுதான் என்று தொல்லியல் அறிஞர் கூறுகின்றார். இக்
குறியீட்டை தக்க தொல்லியல் அறிஞர்களிடம் கலந்தாலோசித்திருந்தால், குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும்
என்பது அறிஞர் கருத்து. ஆகவே தெலுங்கின் ఱ RRA , RRRA ஆகிய இரண்டும் தெலுங்கு ற-கரத்தின் கீற்று வேறுபாடுதானே (glyphical difference) தவிர,
அவற்றிற்கு எந்த ஒலிப்பு வேறுபாடும் கிடையாது (phonological difference).
தமிழில் மூன்று,
முற்றம், முறை என்ற மூன்று சொற்களில் வரும் ற-கரம், இருக்கும் இடத்திற்கேற்ப ஒலிப்பு
மாற்றம் கொண்டிருக்கும் என்றாலும், அது ஒரே ஒலியன்தான். “மூன்று”-வில் வரும் ற-கரம்
சற்றே அதிரொலியாக (voiced) ஒலிக்கும்; “முற்றம்”-ல்
வருவது சிறிது ஊதொலி (aspirate) ஆகவும், “முறை”-யில் சிறிது உரசொலி (fricative) ஆகவும்
வரும். இவையாவும் ஒரே ஒலியனின் வெவ்வெறு சிறுமாறுபாடுகளே; தனி ஒலியனோ எழுத்தோ அல்ல.
இதே ஒலிப்பு முறைதான் தெலுங்கிலும்.
ஆகையால், ஒவ்வொரு ஒலிப்புக்கும் ஒரு R எழுத்தை உருவாக்குவது
அடிப்படைத்தவறாகும். கல்வெட்டுகளிலோ பிற ஆவணங்களிலோ கீற்று வேறுபாடு இருந்தாலும், அது
ஒரே ஒலியனின் கீற்றுவேறி (graphic variant) என்றே கருதவேண்டும். அப்படியே கீற்றுவேறியைக்
குறிப்பிட வேண்டுமாயினும் எழுத்துரு நுட்பத்தின் வழி தேடுவதே சரியாகும். அந்த வகையில், தெலுங்கு-RRRA குறியீட்டிற்கு
0C5A குறியெண்ணை தந்ததற்குப் பதிலாக, தெலுங்கு ற-கரத்தின் (RRA) கீற்றுவேறியாகக் கருதியிருக்க
வேண்டும் என்றே தற்போதைய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஒருங்குறிச் சேர்த்தியத்தின் கோட்பாடு, அடிப்படையில், கீற்றை
(glyph) குறியேற்றம் செய்வதுதான். எழுத்தை அல்ல. இவ்வாறு ஒவ்வொரு கீற்றையும் வெவ்வெறு
எழுத்தாகக் கருதி குறியேற்றம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
2012ல் ஆந்திர அரசின் சார்பாக, AP Society for Knowledge
Networks என்ற நிறுவனம், தெலுங்கு ழ-கரத்தை (ఴ LLLA
u+0C34) தெலுங்கு நெடுங்கணக்கில் சேர்ப்பதை வரவேற்று, பாராட்டியதோடு, ஏற்கனவே இதனை
செய்திருக்க வேண்டும் என்றும், இனி தெலுங்கு ழ-கரத்தைக் குறிப்பிட தமிழ் எழுத்துகளையோ,
மீக்குறிகளையோ (diacritics) பயன்படுத்தத் தேவையில்லை என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தது.
(பார்க்க: https://www.unicode.org/L2/L2012/12076-llla-approval.pdf ). தெலுங்கு வரிவடிவில் ழ-கரத்தை தெலுங்கில் சேர்ப்பதற்கு
இந்திய அரசும் ஆதரவளித்தது. (பார்க்க: https://www.unicode.org/L2/L2012/12079-india-input.txt
). தெலுங்கு நெடுங்கணக்கில்
தாய்வரிவடிவ எழுத்துகளே (native characters) தேவை என்றும் அயல்மொழியின் எழுத்துகள்
தேவையில்லை என்ற ஆந்திர அரசின் அறிவுரையை, தமிழின் ற,ழ எழுத்துகளை தெலுங்கில் சேர்க்கக்கோரும்
(L2/12-119) திரு.வினோதுராசன் தவறவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
மேலும்,
2019ல், L2/19-401 என்ற முன்னீட்டின் வழியே உயிர்மெய்களுக்கு அடிப்புள்ளி (நுத்தா/nukta)
இடும் தேவையொன்றும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களின்
மொழித்தேவைக்காக உருவாக்கப்படும் நுத்தா எழுத்தைப்பற்றி நாம் கூற ஏதுமில்லை என்ற போதிலும்,
அந்த அடிப்புள்ளியிட்ட இன்னொரு தெலுங்கு ழ-கர
எழுத்தும் ( ) குறியேற்றம் பெறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தும் (
தெலுங்கில் ழ-கர
பயன்பாடு குறைந்தது மூன்று வரிவடிவங்களில் காணப்படுகின்றன. 1) பழைய வரிவடிவமான ఴ ( u+0C34) 2) L2/19-401 வழியே
முன்னிடப்பட்ட அடிப்புள்ளியிட்ட வரிவடிவம் ( u+0C3C à u+0C33) 3) பிற்கால கல்வெட்டுகளில் காணப்படும்
ర வரிவடிவம் (u+0C32 u+0C30).
இம்மூன்று வரிவடிவங்கள் தெலுங்கில் ழ-கரமாக பயன்படுகின்றன.
இது போதாது என்று மேலும் தமிழின் வரிவடிவமான ழ வை அப்படியே தெலுங்கு எழுத்தாக தெலுங்கு
நெடுங்கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை
புதிராகவும் ஏற்க முடியாததாகவும் உள்ளது. முறையாக, பழமையான ఴ என்ற வரிவடிவத்தை புழக்கத்தில் கொண்டுவந்திருக்க வேண்டும். மக்களின் பயன்பாடு
பெருகப்பெருகத்தான் ஒரு எழுத்து நிலைக்க முடியும். கல்வெட்டுக்கு ஒரு ழ-கரம், இறைப்பாடல்களுக்கு
ஒரு ழ-கரம், இலக்கியத்துக்கு ஒரு ழ-கரம், மற்ற உரைகளுக்கு ஒரு ழ-கரம் என்றா ஒரு மொழியில்
எழுத்துகளை உருவாக்குவார்கள்?
திரு.வினோதுராசனின்
ஆவணத்திற்காட்டப்பட்ட தமிழ்த் திருப்பாவையின் பாடல்கள் தெலுங்கில் சிலரால் எழுத்துப்
பெயர்க்கப்பட்டு (Transliterated) தமிழெழுத்தான ற-கர ழகரத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பயன்படுத்தி எழுதப்பட்டவை. இதை அப்படியே தெலுங்கு வைணவர்கள் எழுத, படிக்க வேண்டுமானால்,
இருவிதமான எழுத்துருக்களைப் பயன்படுத்தி எளிதாகச் செய்யலாம். காட்டாக, தமிழில், பழையவேண்டுமானால், அதற்கென தனி
எழுத்துருவை நாம் பயன்படுத்துகிறோம். திரு.வினோதுராசனே அப்படியொரு எழுத்துருச் செயலியை
உருவாக்கியவர். அது போல, தெலுங்கு எழுத்துகளுக்கிடையே தமிழ் எழுத்து வரவேண்டுமானால்,
அதை எழுத்துரு மாற்றும் நுட்பத்தில் எளிதாகச் செய்யமுடியும். அப்படியான நுட்பத்தீர்வினையே
நாம் பரிந்துரைக்கிறோம்; குறியேற்றம் தீர்வல்ல.
இன்னொரு தீர்வாக, தெலுங்கு எழுத்துரு ஆக்குநர் தமிழ் அட்டவனையில்
இருந்து ழ வை எடுத்து, அதற்கு உயிர்க்குறியீடுகளை இட்டு தெலுங்கு எழுத்துருவில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எழுத்துப் பெயர்ப்புக்குள்ளான தமிழ் எழுத்துகளைக் கலந்த இலக்கியங்களை, இறைப்பாடல்களை
நன்றாக எழுத படிக்க முடியும். எளிதான இந்த நுட்பியல் தீர்வுகளை நாம் மறுக்கவில்லை.
ஆனால், தமிழின் எழுத்தை தெலுங்கின் எழுத்தாகவே ஒருங்குறி நெடுங்கணக்கில் நிலையாக குறியேற்றம்
செய்வதைத்தான் மறுக்கிறோம்.
தெலுங்கு ற-கரமான ఱ (u+0C31), ஒலிப்பில், அப்படியே தமிழ் ற-கரத்திற்கு இணையானது.
சிறிதும் வேறுபாடில்லை. அப்படியிருக்க, தெலுங்கில் “ற்ற” என்ற எழுத்தாட்சியின் ஒலிப்பும்
உச்சரிப்பும், தெலுங்கு ற-கரமான ఱ வை பயன்படுத்தினால், தமிழ்-“ற்ற” வில் இருந்து மாறுபடும்
என்பது மிகத்தவறான பார்வை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் “ற்ற”-வை சற்று அழுத்தி, “ட்ர/ட்ற”
என்று ஒலிப்பார்கள். இதனை தவறான ஒலிப்பு வழக்கு என்பர் அறிஞர். ஆனால், ஈழத் தமிழர்கள்
நேர்த்தியாக “ற்ற” என்றே ஒலிப்பார்கள். ஒலியளவி மூலம் ஒலிப்பை அளந்தால் இந்த வேறுபாடு
நன்கு புலனாகும். (இந்த வழக்கு வேறுபாட்டை மொழியியலில் ஒலிப்பிணை (phoneme joint) என்று
கூறுவார்கள்). “ற்ற”-வின் ஒலிப்பு தமிழர்களின் வழக்கிலேயே வேறுபட்டு இருக்கிறது. அதனால்,
தமிழர்கள் “ற்ற”-வை “ட்ர/ட்ற/ என ஒலிப்பது (தவறாக) போல தெலுங்கர்கள் “ற்ற”-வை ஒலிக்கவே,
தெலுங்கு நெடுங்கணக்கில் தமிழ் வரிவடிவமான ற-வை சேர்க்க வேண்டும் என்பது தவறும் அறியாமையும்
ஏரணமற்றதுமாகும்.
இது குறித்து எங்களில் சிலர், தெலுங்கு அறிஞர்களுடன் உரையாடிய
போது, அப்படியே “ற்ற”-வின் தவறான ஒலிப்பான
“ட்ர/ட்ற”-வே வேண்டும் என்றால், தெலுங்கின்(ட்ற,
u+0C1F u+0C31) என்ற தாய்வரிவடிவத்தை பயன்படுத்தலாமே, எதற்காக அயல்மொழியான தமிழின்
ற-வை தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்று வினா எழுப்புகிறார்கள். ஒருங்குறிச் சேர்த்தியமும்,
திரு.வினோதுராசனும் தெலுங்கு அறிஞர்களைத் தவிர்க்காமல், இதுகுறித்து கலந்து ஆலோசிப்பது
தேவையானதாகும்.
திரு.வினோதுராசன்,
தனது முன்னீட்டில் (L2/20-119), தெலுங்கில் எழுத்துப்பெயர்ப்பான (Transliterated
Telugu), தமிழின் திருப்பாவைப் பாடலொன்றை மேற்கோள் காட்டி, தமிழ்-ற, ழ இவற்றை தெலுங்கில்
சேர்க்க வேண்டும் என்கிறார். அந்த எடுத்துக்காட்டை படத்தில் காண்க.
ஆண்டாளின்
தமிழ்ப்பாட்டை, யார் இப்படி தெலுங்கில் எழுத்துகளைப்
பெயர்த்து எழுதினார் என்று தெரியவில்லை. அதில்
தமிழ் ற-கரம் ழ-கரம் தென்படுவதைக் காண்க. இதே பாட்டை, இன்னொருவர் எப்படி தெலுங்கில்
எழுதியிருக்கிறார் என்று கீழே உள்ள படத்தில் காண்க. (சான்று: https://www.youtube.com/watch?v=9ZGHDeEy_9I ). இதில் சிவப்பு வட்டமிட்ட எழுத்துகளில்
முற்றிலும் மாறுபட்ட தெலுங்கு “ற்ற”-வை காணமுடிகிறது.
இப்படி,
தாய்வரிவடிவத்தில் எழுத்துகள் இருக்கும்போது, அயல்மொழியான தமிழில் இருக்கும் எழுத்துகளை
தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்பது தேவையற்றது.
மேலும்,
அடிப்படைக் குறியீட்டைப் பற்றிய புரிதல் இல்லாமல், ஆளுக்கு ஆள் தெலுங்கில் (அல்லது
பிறமொழிகளில்) வெவ்வேறு விதமாக எழுதிவரும் எழுத்துப்பெயர்ப்புகளுக்கெல்லாம் குறியேற்றம்
வேண்டும் என்று சொன்னால், குறியேற்றம் கேள்விக்குறியாகும் என்பதில் ஐயமில்லை.
தெலுங்கில் ற-கர பயன்பாடு 4 முறைகளில் ஏற்கனவே காணப்படுகின்றன. 1) பழைய வரிவடிவமான ఱ (RRA, u+0C31) 2)(RRRA u+0C5A) என்ற ఱ-வின் கீற்றுவேறி 3) “ற்ற”-வை “ட்ற” என்று ஒலிப்பதற்காக பயன்பாட்டில் ஏற்கனவே இருக்கும்என்ற வரிவடிவம் 4) இன்னொரு “ட்ற” வரிவடிவமான (ட்ற, u+0C1F u+0C31). இப்படி 4 வகையான தாய்வரிவடிவமான ற-கரப் பயன்பாடுகளை வைத்துக்கொண்டு, தமிழ் ற-வையும் தெலுங்கில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதில் ஏரணமோ, தேவையோ இல்லை அல்லவா?
மேலே
காட்டிய சான்றும், பிற செய்திகளும், ஏன் தமிழ்-ற,ழ எழுத்துகளை தெலுங்கு நெடுங்கணக்கில்
சேர்க்கக்கூடாது என்பதை விளக்குகின்றன. தமிழ் எழுத்துகளைக் கலந்த தெலுங்கு எழுத்துப்பெயர்ப்பில்
பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மை ஆனாலும், அதற்கு, எழுத்துரு நுட்பவழி எளிதாக,
தீர்வை அமைத்துக் கொள்ளமுடியும். ஆதலால் தமிழ்-ற,ழ எழுத்துகளை தெலுங்கு எழுத்துகளாகக்
குறியேற்றம் செய்ய வேண்டியதில்லை. மாறாக, தெலுங்கு ஒருங்குறி அட்டவனையில் காலியாக உள்ள
இடங்களை வேறு தெலுங்கு எழுத்துகளைச் சேர்க்க முயலவேண்டும்.
முன்னீட்டை
அனுப்பிய திரு.வினோதுராசனே, அவரின் முன்னீட்டில், ScriptExtensions.txt என்ற ஒருங்குறி
உத்தியின்படி தமிழெழுத்துகளை பயன்படுத்த முடியும் என்று சொல்லியிருக்கிறார். ஆகையால்,
அதனை இற்றித்து (update), கூடவே எழுத்துரு வழங்கிகளில் (rendering engine) தக்க மாற்றங்கள்
செய்து, இது போன்ற பாடல்கள்/உரைகளை தெலுங்கில் பயன்படுத்த முன்வரவேண்டும். குறியேற்றத்தை
கைவிடவேண்டும்.
மேலும்,
இந்தத் தேவையானது குறைவான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. (மேலே காட்டிய இரண்டு படங்களில்
இருந்து ஒரே பாட்டை வெவ்வேறு எழுத்துகளில் படிக்கும் போக்கினை காட்டினோம்). அவர்களுக்காக
தனியே எழுத்துரு செய்துகொள்வது எளிது. அதொடு, இந்தச் சிறிய பயன்பாட்டுக்காக, தெலுங்கு
எழுத்துரு ஆக்குநர், பொதுப்பயன்பாட்டில் இருக்கும் தெலுங்கு எழுத்துருக்களை மாற்றம்
செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆகவே,
தமிழின் தாய்வரிவடிவ எழுத்துகளை, தெலுங்கில் கொண்டு போய் ஒருங்குறியில் குறியேற்றம்
செய்யக்கூடாது. மாறாக, மேலே விளக்கியிருக்கும் நுட்பவரிதியான தீர்வுகளை கைக்கொள்ள வேண்டும்.
தொடர்புடைய பிற சான்றுகள்:
வல்லுநர் குழுவில் பங்குபெற்றவர்கள்: 1) பேராசிரியர்.பொன்னவைக்கோ 2) முனைவர் கிருட்டிணன் இராமசாமி (இராம.கி), 3) நாக.இளங்கோவன் 4) முனைவர் சு.இராசவேலு 5) முனைவர் சிரீரமணசர்மா 6) முனைவர் சேம்சு அந்தோணி.
……நிறைவு……
……நிறைவு……
No comments:
Post a Comment