Pages

Tuesday, July 14, 2020

புறநானூறு-263: வண்டு மேம்படூஉம்

Image may contain: one or more people, sky and outdoor



ஊருக்கு அவன் தலைவன். அறத்திலும் மறத்திலும் சிறந்தவன் அப்பொழுதெல்லாம் தலைவனாக இருக்க முடிந்தது. ஊரையும், சான்றோர் பலரையும் சிறப்பாக பேணி, புரந்து, காத்து வந்ததால் அவன் தலைவன். முல்லை நிலத்து ஊர் என்றால் காடுகள் சுற்றியிருக்கத்தானே செய்யும்!




மேளம், தவில், உடுக்கு, பறை உள்ளிட்ட முழவுக்கருவிகளில் பறை மட்டும் ஒரு வகையில் மாறுபடும். பறைக்கு ஒருபக்கம் மட்டுமே கண் இருக்கும். மறுபக்கம் வெற்றாக இருக்கும். பெரிய களிற்றின், அதாவது பெரிய ஆண் யானை, தனது பாதத்தைப் பதித்தால் வட்டம் வருமே, அதுதான் அந்தப்பறையின் அளவு. "பெருங் களிற்று அடியில் தோன்றும் ஒருகண் இரும் பறை" என்று இந்தப்பாடலாசிரியர் பறைக்கு அளவு கூறுவது வியக்கத்தக்கது.

அந்த ஒரு கண் பறையை, ஏந்திக்கொண்டு ஒருவன், காட்டுவழியே தலைவனைக் காண நடந்து வருகிறான். அவன் பாணனாக இருக்கக்கூடும். இரவலன் அவன். இரவலன் என்றால் இரந்துண்ண வருபவன் என்பது மட்டும் பொருளல்ல. ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைக் கொள்பவனும் இரவலனே. காட்டு வழியே வருவதால், விலங்குகளை பறையை முழக்கி விரட்டுவதற்காக, பாதுகாப்பிற்காக அதை ஏந்தி வருகிறான்.

ஊரை நோக்கி அவன் வருகையில்ம் பசுமையிழ்ந்த அந்தக்காட்டின் பாதையில், ஊரை விட்டு வெளிப்போகும் சான்றோராகிய இந்தப் பாடலின் ஆசிரியர் வருகிறார். இருவரும் சந்திக்கிறார்.

பாணன் கேட்கிறான்; "தலைவன் இருக்கிறானா? பார்க்கப் போகிறேன்"

சான்றோர் சற்றே தயங்குகிறார். பின்பு கூறுகிறார்:

சின்னாள் முன்னர், ஊரின் கால்நடைகளை எல்லாம் அயலூரார் வெட்சிப்போர் செய்து கவர்ந்து போயினர். மக்களின் கவலை தீர்க்க, இழப்பை நீக்க, தலைவன் கரந்தைப் படை திரட்டி ஆநிரை மீட்கச் சென்றான். கடுமையாக போரிட்டு ஆனிரையை (பசு உள்ளிட்ட கால்நடைகள்) மீட்டும் விட்டது படை. மீட்ட ஆனிரையை ஓட்டிக்கொண்டு வருகையில், வெட்சிப்படையினர் மீண்டும் திரண்டு வந்து கடுமையாக தாக்கினர்.

ஆனிரையைக் காக்கும்பொருட்டு கூடவந்த மறவர்களை முன்னால் ஆனிரையை ஓட்டிச் செல்லவைத்து, அவர்களுக்கெல்லாம் காவலாய் தலைவன் மட்டும் வெட்சிப்படையோடு போரிட்டான்.

கடுமையான போர். அவன்மேல் விழுந்த அம்புமழையில் மூழ்கினான்.
ஆயினும் பகைவரால் அவனைத்தாண்டி மீண்டும் ஆனிரையை கைப்பற்ற முடியவில்லை. வீரரொடு ஆனிரை மீண்டு ஊர் சேர்ந்தது. தலைவன் மட்டும் போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தான்.

ஊரே துயரத்தில் மூழ்கியிருக்கிறது.

இன்றுதான், அவன் நினைவாக நடுகல் ஊன்றி, அதற்கு இறகுகள் சூட்டி, அவன் பெயர் பொறித்து, சான்றோரொடு ஊர்கூடி அவனை வழிபட்டு மரியாதை செய்துவிட்டு எனது ஊருக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்.

பாணனின் முகம் துயர் பட்டது.

கவனித்த சான்றோன், இதைக்கேட்ட பின்னும் நீ அவ்வூரைச் சென்று சேர்வாய் எனில், தலைவனுக்காய் சமைத்த நடுகல்லை வழிபடாமல் இருக்காதே. அவனை வழிபட்டால் இம்மண்ணில் வண்டு மேம்படும்!

சான்றோர் அறிவுரை கூறியதும் இருவரும் தம்வழியே சென்றனர்.

அது என்ன வண்டு மேம்படும்?

நடுகல்லாக நிற்கின்ற தலைவனை வழிபட்டால், இம்மண்ணில் மழை பெய்யும். மழைபெய்தால், பசுமை இழந்த இம்மண்ணில் செடி கொடி மரங்கள் துளிர்க்கும். துளிர்த்தவையெல்லாம் பூக்கும். மகரந்தங்களை தேனீக்கள் சேர்த்து வைக்கும். காடுகள் பசுமையாகி காய்க்கும், கனியும். மண்ணில் பூச்சி புழுக்கள் உயிர்பெறும். பயிர் வளம் செழிக்கும். பறவைகள் பெருகும். உணவுச்சங்கலி உயிர் பெறும். மக்களின் பசி தீரும்.

பூச்சி, புழு, தேனீ, வண்டு, பறவைகள் யாவையும் இங்கே வண்டு என்ற ஒற்றைச்சொல்லில் அடைபெற்றன. இவை மேம்படும் என்றால் நிலம் செழித்தது என்று பொருள்.

அட, இதைத்தானே நம்மாழ்வார் என்ற நமது கண்முன் வாழ்ந்த சான்றோரும் கூறினார்.

இரசாயன நஞ்சான உரம், பூச்சிக்கொல்லி, வளர்ச்சி ஊக்கி, உச்ச நஞ்சான களைக்கொல்லி என்ற இவற்றை மண்ணில் கொட்டியதால், மண் செத்தது. மண் செத்தது என்றால் நன்மை செய்யும் வண்டு, பூச்சி புழுக்கள் செத்தன என்று பொருள். பூச்சி புழுக்கள் செத்தன என்றால் காய், கனிகள் செத்தன என்று பொருள். காய், கனிகள் செத்தன என்றால் பறவைகள் செத்தன என்று பொருள். பறவைகள் செத்தன என்றால் உணவுச்சங்கிலி அறுந்தது என்று பொருள்.

நம்மாழ்வார் 30 ஆண்டுகளாக இந்த மண் முழுக்க அலைந்து திரிந்து சொன்னது எல்லாம், "வண்டு மேம்படூஉம்" என்று, 2000-2500 ஆண்டுக்கு முன்பே வாழ்ந்த தமிழ்க்குமுகத்தின், இயற்கை சார்ந்த வாழ்வியல் சிந்தனை மரபுதானே!

இப்பொழுது நம்மாழ்வாரின் இந்த விழியத்தை கேட்டுப்பாருங்கள்.

https://m.youtube.com/watch?v=xehvMPJfQ30

இந்தச் சான்றோரான நம்மாழ்வார்தான் சங்கச்சான்றோரா, அல்லது அந்தச் சான்றோர்தான் இந்த நம்மாழ்வாரா? வேறுபாடு தெரியவில்லை.

இந்த மண்ணின் இயற்கையை, சூழலை, வேளாண்மையைப் பேணுகின்ற தொன்மையான சிந்தனை மரபு, அறிவர் மரபு துளிகூட அற்றுப்போகவில்லை அல்லவா?

ஆனால் செயல் மரபு?

புறம்-263: பாடலாசிரியர்: தெரியவில்லை
திணை: கரந்தை, துறை: கையறுநிலை
மூலம்:
"பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே."

சீர்பிரித்து:
பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது
வண்டுமேம் படூஉம் இவ் அறநிலை ஆறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

பொருள்:
"பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒரு கண் இரும் பறை" = பெரிய ஆண் யானையின் பாதச்சுவடளவுள்ள வட்டத்தை/கண்ணை உடைய பறை.
"இரவல சேறியாயின்" = இரவலனே, மேலும் நீ அவ்வூர் சென்று சேர்வாயெனில்
"தொழாதனை கழிதல் ஓம்புமதி" = தொழாமையைக் கழிதலை ஓம்புவாயாக (தொழுவாய் என்று சொன்னது).
"திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து" = ஆனிரை கொள்ளை போக, அதனை மீட்டு வந்து.
"கல்லா விளையர் நீங்க நீங்கான்" = கூட வந்த போர்மறவர் நீங்கினும் தான் பின்னால் நின்று நீங்காமல் நின்று போரிட்டான்.
"வில் உமிழ் கடுங்கணை மூழ்க" = விற்கள் உமிழ்ந்த எண்ணற்ற அம்புகளில் மூழ்கினான்.
"கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே" = இன்று நடுகல்லாய் நிற்கும் தலைவன், போர்க்களத்திலே, பாய்ந்து வரும் வெள்ளம் போல வந்த பகையை தனியொருவனாய் அடைத்து நின்றான். வெற்றிக்கு காரணமானான்.

பாடலாசிரியரின் பெயரை அறியமுடியவில்லை என்றால், பாட்டின் ஓரிரு சொற்களைச் சேர்த்து பாடலாசிரியரின் பெயர்க்குறிப்பாக சொல்வர். என்னால், அப்படியொரு குறிப்பை இப்பாட்டுக்கு காணமுடியவில்லை.

வண்டு மேம்பாட்டினர் என்று சொன்னால் பொருத்தம்தானே!

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: