Pages

Friday, February 26, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

தமிழ் நெடுங்கணக்கின் எழுத்து வடிவங்களை,
குறிப்பாக இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்
எழுத்துக்களின் வடிவங்களை மாற்ற வேண்டும்
என்ற முன்வைப்புக்கள் 2000மாம் ஆண்டில் இருந்து
இணையத்தில் காணப்படுகின்றன.

தமிழ் இணைய மாநாடு என்று உத்தமம் அமைப்பு
(http://infitt.org) கடந்த பல வருடங்களாக
நடத்தி வருகின்ற மாநாடுகள், எழுத்துச் சீர்திருத்தச்
சார்பு கொண்ட பொருண்மை அல்லது கருத்தியல்
கொண்ட கட்டுரைகள் பலவற்றைப் படைக்க வாய்ப்பு
ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம், இந்தக் கருத்தியல்
தமிழ் இணைய உலகில் அறியப்பட்டது.

தமிழ் இணைய மாநாடுகளில் படைக்கப் பட்ட
எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புக் கட்டுரைகளுள்
குறிப்பிடத்தக்கன இவை:

கி.பி 2000:

1. பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி,
2. முனைவர் கொடுமுடி சண்முகன்,
3. திரு.வீ.கே.ஏரம்பமூர்த்தி,
4. திரு.ச.ஆ.கோபாலமூர்த்தி ஆகிய நால்வரின் கட்டுரைகளும்
(http://infitt.org/ti2000/papers/paperlist.pdf)
எழுத்துச் சீர்மையை முன்வைக்கின்றன.

கி.பி 2002:
திரு.சின்னத்துரை சிறீவாசு ஆக்கிய சீர்மை
முன்வைப்புக் கட்டுரை
(http://www.infitt.org/ti2002/papers/70SRIVAS.PDF)

கி.பி 2003:

1. பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களின்
மற்றுமொரு கட்டுரை:
http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf

2. முனைவர் கொடுமுடி சண்முகன் அவர்களின் முன்வைப்பு:
http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf

3. திரு.சின்னத்துரை சிறீவாசு அவர்களின் கட்டுரை:
http://www.infitt.org/ti2003/papers/56_ssrivas.pdf

சீர்மையை முன்வைக்கும் இக்கட்டுரைகளைக்
கடந்த 2009ன் சூலை ஆகத்து மாதங்களில் ஆய்வு
செய்தபோது எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புகளில்
இருக்கின்ற "மறுக்கப்பட்ட பார்வைகள்" அணிவகுத்து
நிற்பது புலனாயின.

எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புகளில் இருக்கும்
மறுக்கப்பட்ட பார்வைகளையும், இம்முன்வைப்புகள்
செயலாக்கப்பட்டால் தமிழ்மொழி சந்திக்கக்கூடிய
பேரழிவினையும் இயன்றவரை அளவிட்டு, தொகுக்க
அஃது "எழுத்துச் சீர்மையின் மறுபக்கங்கள்" என்ற
கட்டுரையாய் ஆகியது.

கடந்த 19-செபுதெம்பர்-2009 அன்று, திருச்சிராப்பள்ளி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்,
"தமிழ் மேம்பாடு, கற்பித்தலில் எளிமை, சீர்மை, விரைவு"
என்ற தலைப்பில், பாரதிதாசன் பல்கலைக்கழகமும்,
தமிழ் இணையப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய
கருத்தரங்கில் பங்குகொண்டு இக்கட்டுரையை அங்கு
படைக்க வாய்ப்பமைந்தது.

அங்கு பேராசிரியர்களும், துணைவேந்தர்களும்,
மாணவர்களும் இருந்த மன்றத்தில்
தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தம் செய்யவேண்டும்
என்ற கருத்தினை மீள்பார்வை பார்க்கச் செய்வதாய்
இக்கட்டுரை அமைந்தது.

அந்தக் கட்டுரையை இங்கே அப்படியே பதிகிறேன்.
தமிழ் இணைய உலகினர்க்கு எழுத்துச் சீர்திருத்தம்
பற்றிய கருத்தியலை மீள்பார்வை பார்க்கவும்
மறுக்கவும் இது உதவுமாயின் பெரிதும் மகிழ்வேன்.

இக்கட்டுரை தொடர்பதிவாக,
சிலபகுதிகளாகத் தொடரும்.

இது தொடர்பில் படிக்க வேண்டிய பிறரின் கட்டுரைகள்:

திரு.பெரி.சந்திரசேகரன் அவர்களின் கட்டுரை
http://perichandra.wordpress.com/2010/01/05/tamil-script-reform-its-vacuity-next-to-the-chinese-script/

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கட்டுரை:
http://muelangovan.blogspot.com/2010/01/blog-post_31.html

பேராசிரியர் செல்வா அவர்களின் கட்டுரை:
http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html

இனி கட்டுரை அடுத்த பகுதியில்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

7 comments:

செல்வா said...

செம்மையான தொடக்கம் இள்ங்கோவன்! தொடருங்கள். இல்லாத சிக்கல்களைத் தலை மீது ஏற்றிக்கொண்டு இப்படி எல்லாம் எழுத வேண்டியிருப்பதே மிகுந்த வேதனை அளிக்கின்றது. மற்றவர்கள் சொன்னால் எனக்கு வியப்பில்லை, ஆனால் நான் மதிக்கும் வா.செ.கு அவர்களே இப்படிச் செய்கின்றார்களே என்று வருந்துகிறேன். அறிவியல் கண்ணோட்டத்தில் முன்சாய்வின்றி கருத்தாடினால் சீர்திருத்தம் ஏதும் வேண்டாம் என்னும் கருத்துகளையாவது முன்வைக்க இயலும். என் வலைப்பதிவில் உள்ளதையும் இங்கு குறிப்பிடுகின்றேன்.
http://tamilveli.blogspot.com/

சுப.நற்குணன்,மலேசியா. said...

வணக்கம் ஐயா.

எழுத்துச் சீர்மை குறித்த தங்களின் ஆய்வுப் பார்வையை அறிய கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

எழுத்துச் சீர்மை குறித்து புதிய சிந்தனைகளைப் பதிவு செய்வீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.

நல்ல வெளிப்பாடு;
நல்ல தொடக்கம்;
நல்ல கட்டுரை!

தொடருங்கள் ஐயா.

nayanan said...

// செல்வா said...
செம்மையான தொடக்கம் இள்ங்கோவன்! தொடருங்கள். இல்லாத சிக்கல்களைத் தலை மீது ஏற்றிக்கொண்டு இப்படி எல்லாம் எழுத வேண்டியிருப்பதே மிகுந்த வேதனை அளிக்கின்றது. மற்றவர்கள் சொன்னால் எனக்கு வியப்பில்லை, ஆனால் நான் மதிக்கும் வா.செ.கு அவர்களே இப்படிச் செய்கின்றார்களே என்று வருந்துகிறேன்
//

அன்பின் பேராசிரியர் செல்வா
வணக்கம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தாங்கள் குறிப்பிட்டதைப் போல பேராசிரியர் முனைவர் வா.செ.கு அவர்கள் மிக நல்ல தமிழறிஞர்.

நான் வியக்கும் அறிஞர்களில் அவரும் ஒருவர். அதொடு அவரின் திறன்கள் மிக உயர்ந்தவை.

நான்கு பல்கலைக்கழகங்களுக்குத் தலைமையேற்றவர். அரும்பணி அயராது ஆற்றி வரும் வா.செ.கு
அவர்கள் சிறந்த பண்பாளரும் கூட.

அவரைத் தமிழ் கூறு நல்லுலகம்,
துணைவேந்தருக்கெல்லாம் துணைவேந்தர் என்று உளச்சுத்தியோடு
புகழ்வதை நன்கு கேட்டிருக்கிறேன்.

அத்தகையார், இந்தத் திருத்தத்தை ஏற்பட்டுத்த விழைகிறார் என்பது கண்டு நானும் வருந்துகிறேன்.

தேவையில்லாத எழுத்து மாற்றத்தை ஏற்படுத்த முனைதலால் இப்படி எல்லாம் எழுதிக் காலத்தை இழக்க வேண்டியிருக்கிறதே என்று
கலங்குகிறேன்.

ஆயினும், சிறந்த அறிஞர்களுள்
ஒருவரான வா.செ.கு அவர்கள்
தன் நிலைப்பாட்டை மீள்பார்வை
செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு
இருக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

அன்பின் திரு.நற்குணன் அவர்களே,
வணக்கம்.

தங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன். மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

அகமத்கனி said...

அன்பரீர்,

நானும் கடந்த 2ஆண்டுகளாக - அதிலும் உன்னிப்பாக 6மாதங்களாக வலைப்பதிவுகளை பார்வையிட்டுவருகிறேன். எழுத்துச் சீர்மை எதிர்ப்பாளர்களின் கற்பனை மீமிகையாகவே உள்ளது...

எழுத்துச் சீர்மை நடமுறைக்கு வந்தால், தமிழுக்கு நெருக்கடி.. தீங்கு..அழிவு.. என்பவர்கள், ஏன், அதனால் விளையும் பயன்களை பட்டியலிட மறுக்கிறார்கள்? குணம் நாட வேண்டாமா? குற்றம் நாடினால் போதுமா? 1700களில் வீரமாமுனிவர் அறிமுகப்படுத்திய சீரமைப்பும், 1978-இல் தமிழக அரசு நடைமுறைப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தமும் தமிழுக்கு எந்த அளவு தீங்கிழைத்தது? 70களில் மலையாளத்தில் கொணர்ந்த சீரமைப்பு அந்த மொழியைத் துடைத்தெறிந்துவிட்டதா?

வா.செ.கு. போன்ற சில கல்வியாளர்கள் மட்டுமல்ல; மட்டுமல்ல எம்மைப் போன்ற பலநூற்றுவர் கால்நூற்றாண்டாகவே எழுத்துச் சீர்மை குறித்த எதிர்பார்ப்புடன் உள்ளோம்.

இதன் தொடர்ச்சியாகவே எழுதுச் சீர்மை பரப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய சொடுக்குக:www.tamilscriptreform.org. நன்றி / அகமத்கனி. எழுத்துச் சீர்மை பரப்பகம், 252, காமராசர் சாலை, திருப்பூர்-4. feedback@tamilscriptreform.org & scriptreform@gmail.com

Anonymous said...

அன்புடையீர்,

எழுத்துச் சீர்மை வந்தால் தமிழுக்கு நெருக்கடி..தீங்கு..அழிவு என்பவர்கள், 1700களில் வீரமாமுனிவரும் 1978-ல் தமிழக அரசும் செய்த சீர்திருத்தங்களால் தமிழ் எந்த அளவுக்கு சீரழிந்தது என்பதை பட்டியிலிட வேண்டுகிறேன்.

அண்டையில் 70களில் மலையாளத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுத்துச் சீர்மையால் மலையாளம் துடைத்தெறியப்பட்டுவிட்டதா?

ஆட்சித்துறையில் - கல்வித்துறையில் 100சதம் தமிழ்மயம் நிகழவில்லையே என்ற ஆதங்கம் வேறு. அதற்காக எழுத்துச் சீர்மை முயற்சிகளை பிணை வைப்பது நேரிய அணுகுமுறை ஆகாது...

மேலதிக விளக்கம்/விவரங்களுக்கு எழுத்துச் சீர்மை ஆர்வலர்களின் இணையத்தளத்தை சொடுக்குக: www.tamilscriptreform.org
நன்றி / அகமத்கனி. எழுத்துச் சீர்மை பரப்பகம், 252, காமராசர் சாலை, திருப்பூர்-4.feedback@tamilscriptreform.org, scriptreform@gmail.com.

nayanan said...

அகமத்கனி அவர்களே,

சீர்மை குறித்து ஒரு வலைத்தளம் ஒன்று நீங்கள் அமைத்திருப்பதை வரவேற்கிறேன். பயன் இல்லாத மலட்டுச் சீர்திருத்தம் தேவையில்லை என்று தமிழ் மக்கள் புரிந்துகொள்ள உங்கள் வலைத்தளம் உதவும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்