Pages

Sunday, May 05, 2002

கண்ணகி கோயில் - மடல் 4 - வழிபாடு

காலையில் 8 மணிக்கெல்லாம் கண்ணகி கோட்டத்தை அடைந்து
தென்வாயில் வழியாக உள்ளே நுழைவதற்கு முன் கம்பத்திலும்,
நடைபாதையிலும் நிறையவே பயமுறுத்தியிருந்தனர். கேரளக் காவலர்கள்
இருக்கும்போது படம் பிடித்தால் படச்சுருள் போய் விடும்;
சமயத்தில் கருவியும் போய்விடும் என்று நிறைய
பழைய கதைகளைச் சொல்லியிருந்தனர்.

முதல்நாள் இரவு ஒரு நண்பர், ஒரு பொட்டலம் உப்பைக்
கொண்டு வந்து கொடுத்தார். எதற்கு என்ற போது, அப்பகுதியில்
அட்டைகளின் தொல்லை இருந்திருக்கிறது; அவ்வட்டைகள் இரத்தத்தை
உறிஞ்ச ஆரம்பித்தால் மரக்காக் குருதி போய்விடும் என்று சொல்லி, அதைக்
கைகளால் பிடுங்கமுடியாது; உப்புத்தூளைத் தூவினால்தான் ஆளை விடும்
என்று சொல்லிக் கொடுத்தார். அதோடு பாதைகளின் கடுமை பற்றி சற்று
மிகைப் படுத்தியே சொல்லியிருக்க நிறைய முன்சிந்தனைகளோடுதான்
செல்ல முடிந்தது.

காலையில் விரைவில் சென்று விட்டதால், கூட்டம் நிறைய சேர்ந்திருக்கவில்லை.

உள்ளிருந்த கோயில்களில் சிலர் மட்டுமே
வரிசையில் நிற்க, அதிகாலை வந்தது நல்லதாகப் போய்விட்டது
என்று நினைத்து முதலில் சிவன் கோயில் மண்டபத்தில் உள் நுழைந்தேன்.
சிறு கருவறை. மிகக் குறைந்த விளக்கு வெளிச்சம். இருப்பினும்
வழிபட்டு விட்டு , இதைப் படம் பிடிக்கவேண்டுமே என்று கேட்க
எடுத்துக்கொள்ளுங்கள் என்று தள்ளி நின்றார் பூசாரி.
நிழற்படம் எடுத்தபின் தொடர்படம் எடுக்க அச்சம் வந்து விட்டது; கருவி
போனால் என்னாவது என்று!

விரைவில் வெளிவந்து அடுத்ததாகக் கண்ணகி கோயிலில் வரிசையில்
நின்றேன். அந்நேரத்தில் சிறு வரிசைதான். விரைவில் கண்ணகி சிலையைப்
பார்க்க முடிந்தது. வழிபாட்டை என் போக்கில் செய்து விட்டு, முக்கியமாக
நோட்டம் விடுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன்.

தமிழ்க் கோயிலில், வாழ்ந்து நிறைவடைந்த தமிழச்சியின் கோயிலில்
கன்னடப் பூசாரி சமக்கிருதத்தில் மந்திரம் ஓதி பூசாரி சந்தனத்தை முதலில் கொடுக்க அதை நெற்றியில் அணிந்து நிமிரும் முன்னர், தன் வலது கையின் கணையாழி விரலில் திருநீறைத் தொட்டு என் நெற்றியில் பூசினார் அந்தப் பூசாரி.

எனக்குப் பூசத் தெரியாதா? அடுத்தவர் விரல் நம்மேல் படுவதா என்ற சினம் வந்தது உண்மை. ஒரு முனகலுடன் முறைத்துவிட்டு குங்குமத்தை நானே எடுத்துக் கொள்ளச் செல்ல, புரிந்து கொண்ட பூசாரி என்னைத் தடுத்து என் கையில் குங்குமத்தைக் கொடுத்தார்.

அவர் அருகில் ஒரு தமிழர் அமர்ந்து தனியே திருநீறு குங்குமம் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருக்க, படம் பிடிக்க வேண்டும் என்று கேட்க,
சீக்கிரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, சம்மணம் போட்டு
உட்கார்ந்து நிழற்படம் எடுத்தேன். பின்னர் மின்னல் வேகத்தில் தொடர்படக்
கருவியைச் சொடுக்கி கண்ணகி சிலையையும் கருவறையையும்
தொடர் படமாக எடுத்துக் கொண்டு, வந்த வேலையில் முக்கிய வேலை
முடிந்த மகிழ்ச்சியில் இடத்தைக் காலி செய்தேன்.

கண்ணகி சிலையைக் காண கோயிலுக்கு சென்ற எனக்கு
அங்கு ஒரு அதிர்ச்சியும் இருந்தது. கண்ணகி சிலை முழுவதும் இல்லை.
இடுப்புக்கு மேல் ஒடித்து விட்டார்கள்.
இடுப்புக்குக் கீழ் பகுதியை செவ்வாடையையும், மஞ்சளாடையையும் கட்டி,
பூமாலைகளைச் சூடி அழகு செய்திருந்தார்கள்.
முழுச் சிலையும் காணவியலாத வருத்தம் :-(

கோயிலுக்கு முன்னிருந்த சதுக்கத்தில் சமக்கிருத யாகம் நடந்து கொண்டிருந்தது.

காதைப் பொத்திக் கொண்டு அவ்விடம் நகர்ந்து ஏனைய
மண்டபங்கள் சிற்பங்கள் பார்க்கச் சென்று விட்டேன்.

ஒரு நேரத்தில் "காமாட்சியே போற்றி, மீனாட்சி போற்றி...ஈசுவரியே போற்றி.." என்ற தமிழ் மந்திரம் காதில் வந்து விழுந்தது. சிலம்பிலிருந்தே
எடுத்து ஓத நல்ல தமிழ் இருக்கையில், சமக்கிருத மந்திரமும், பிற மந்திரங்களும் ஏன் என்ற கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டே இருந்தன.

இது ஒரு புறமிருக்க, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் சார்பில்
நிகழ்ச்சி நிரல் வைத்திருந்தனர்.

அவர்களின் அன்றைய கண்ணகி வழிபாட்டு நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

பள்ளி உணர்த்தல் (காலை 5 - 5.30)
மலர் வழிபாடு
மங்கல இசை
பாற்குடம் எடுத்தல் (நிறைய பக்தர்கள் பாற்குடம் எடுத்தனர்)
மங்கல நாண் வழங்கல்
வளையல் அணிவிழா
இசை விருந்து (நாட்டுப் புறப் பாடல்கள்
- இதை நான் சரியாக கவனிக்கவில்லை )
அமுதசுரபி உணவு வழங்கல் (அவல் பிரசாதம்)
பொங்கல் வைத்தல்
(நிறைய பேர் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று
கூறியது என்னை வியக்க வைத்தது)
திருவிளக்கு வழிபாடு
பூமாரி விழா (பூப்பலி/மலர் அருச்சனை மாலை 5 - 6 மணி)

அதோடு நாள் முழுக்க அன்னதானம், நீர்மோர் வழங்கல் என்று அனைவருக்கும்
நடந்து கொண்டே இருந்தது.

நிகழ்ச்சி நிரலின் மலர் வழிபாடு, மங்கல நாண் வழங்கல், வளையல் அணியல்
போன்றவை சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு ஏற்றதாக சொல்லப்படுவனவாகவே அமைந்திருந்தது.

கண்ணகி வழிபாட்டை முறைப்படுத்திய செங்குட்டுவன்
கீழ்வருமாறு கூறுகிறான் சிலம்பில்.

"முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கஎன ஏவினன்...."
-சிலம்பு:நடுகல் காதை:230-234

கையோடு கொண்டு சென்ற சிலப்பதிகார நூல், ம.க.அறக்கட்டளையினரின்
நிகழ்ச்சி நிரலோடு ஒப்பிட்டுப் பார்க்க உதவியது. அங்கேயே அமர்ந்து
ஒப்பிட்டுப் பார்த்த போது எனக்கு மன நிறைவே!

நாள்தொறும் விழாச் செய்க என செங்குட்டுவன் சொன்னது மட்டும்
ஆண்டுக்கொடு முறை நடக்கிறதே என்ற வருத்தம் யாவருக்கும்
இருக்கத்தானே செய்யும்.

நேரம் ஆக ஆகக் கூட்டம் அலைமோதியது. கேரளர்களும் வந்து வழிபடும்
அந்த விழாவில் பெரும்பாலும் தமிழர்களே இருந்தனர். கடந்த வருடம் 25000 பேர் வந்தனராம். இந்த ஆண்டு
40000த்தைத் தாண்டும் என்று தமிழாதவன் கூறினார்.

கேரளப்பாதைவழியாயும், தமிழக நடைபாதை வழியாகவும் மக்கள்
அணிஅணியாய் கண்ணுக் கெட்டிய தொலைவில் வந்து கொண்டேயிருந்தனர்.

கோயில் வாசல்களில் நீண்ட வரிசை. நல்ல வேளை காலையில் விரைவில்
வந்து விட்டோ ம் என்று நினைத்துக் கொண்டேன். தமிழகக் காவற்துறையினர்
நிறைய பேர் கோவிலின் கிழக்குப் புறம் நிற்க, கோயிலின் மேற்குப் புறம்
கேரளக் காவற்துறையினர். பெண் காவலர்களும் அதிகம். காலை 8.30 மணி அளவில், மக்களைக் காட்டிலும் காவற்துறையினரே அதிகமாக இருந்தனர்.

பன்னீர் செல்வம் என்ற தமிழகக் காவற்துறை அதிகாரியைப் போய்ப் பார்த்து
படங்கள் எடுக்கலாமா என்று கேட்க அவர் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்
என்று சொல்ல, அவ்வளவுதான், நோக்கத்திற்கு கருவிகளைச் சுழற்றிக் கொண்டே இருந்தேன். கதிரவன் தொலைக்காட்சி, செயா தொலைக்காட்சி,
மேலும் இதழாளர்களும் வந்துவிட யாரோ ஒருவர் 'இவர் தினமலர் நிரூபர்;நான்
மதுரையில் பார்த்திருக்கேன்' என்று என் காதுபட என்னைப் பற்றிக் கிளப்பிவிட, நானும், அமுக்கினி என்பார்களே அதுபோல என் வேலையைப் பார்த்துக் கொண்டேயிருக்க நிறைய இளைஞர்கள் என்னைச் சுற்றி :-)

அமெரிக்கன் கல்லூரியில் தொல்பொருள் படித்த மாணவர் ஒருவர் நண்பரானார்.
இறுதி வரை என்னுடன் இருந்து மிகுந்த சிரமத்துடன் கல்வெட்டை அப்படியே
முடிந்தவரை/புரிந்தவரை வரிவரியாய் என் குறிப்பேட்டில் எழுதித்தந்தார்.

அறக்கட்டளை நண்பர் ஞானமும் நானும் அங்கு ஒரு குட்டி கூட்டமே போட்டு
கண்ணகி வரலாற்றை/சிலப்பதிகாரத்தை மக்களுக்கு சொன்னோம். நண்பர்
ஞானம் நல்ல வரலாற்று அறிவுடையவர். நீண்ட விளக்கங்கள் மற்றும் வழக்குச்
சேதிகளைக் கூறி கூட்டத்தைக் கவர்ந்து கொண்டிருந்தார்.

புகாரில் இருந்து ஒரு முதிய தமிழாசிரியர் வந்திருந்து அவரும் எங்களோடு
இணைந்து சிலம்பு பேசி இன்புற்றார். அவர் ஒரு நேரத்தில் தனியே பலரைக்
கூட்டி சிலம்புக் கதையை சொல்ல, நாங்கள் ஒரு புறம் சொல்ல
அறக்கட்டளைத் தலைவர் தமிழாதன் பலருடன் சிலம்பு பேச,
ஒரே வியப்பும் தமிழுமாய் பொழுது கடந்து கொண்டிருந்தது.

நண்பகல் வேளை கூட்டம் அலைமோதியது. அப்பொழுதுதான்
தமிழ் தேச முன்னனியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் வந்தார்.
எனக்கு ஏற்கனவே அறிமுகமான அவரோடு நிறைய கதைக்க முடிந்தது.
கண்ணகியும் இலக்கியப்பார்வையும் என்ற கையேடு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அவர்.

சிறந்த கையேடு என்ற சொல்லக்கூடிய நூல்.
அதுபற்றி தனியே எழுதலாம். சிறந்த பார்வை.

செயா தொலைக்காட்சியினர் தமிழாதவனை நேர்காணலுக்கு அழைக்க,
அவர் மணியரசனையும் அழைக்க, மணியரசன் என்னையும்
அழைத்துக் கொண்டு செல்ல, அப்படியே காலம் கழிந்து கொண்டு இருந்தது.

திடீரென்று ஒருவர் வந்து மணியரசனிடம் நூல் ஒன்றைக் கேட்டார்.
நீங்கள் யார் என்று கேட்டதற்கு கையில் இருந்த அட்டையைக் காட்டி
'மத்திய புலனாய்வுத் துறை' என்று சொன்னார்.

கும்பகோணத்தைச் சார்ந்த பாவேந்தரின் தமிழியக்க அமைப்பு சார்ந்தவர்களைச்
சந்தித்து பாவேந்தரையும், கண்ணகியையும் அளவளாவி மகிழ முடிந்தது.

சென்னையில் வீழ்த்தப்பட்ட சிலையால், மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்பட்டு, பலதரப்பட்டவர்கள் இந்த வருடம் கோயிலுக்கு
அதிகமாக வந்திருக்கிறார்கள் என்று தோழர் பெ.ம கருத்து தெரிவித்தபோது
தமிழாதவன் அதைச் சரியென்றார்.

அறக்கட்டளையினர் யாவரும் மஞ்சள் சட்டையும் பச்சை வேட்டியும்
அணிந்திருந்தனர். பலர் 40 நாள் நோன்பிருந்து நடந்து நேர்த்தி செய்ய
வந்திருந்தனர்.

தேனி, போடி, பெரிய குளம், ஆண்டிப்பட்டி, கம்பம், கூடலூர் போன்ற
பகுதிகளில் இருந்து பெருவாரியான மக்கள் வருடா வருடம் வருகிறார்கள்.
இந்த வருடமும் காவற்துறையின் கடுபிடிகளைத் திட்டிக் கொண்டே வந்தவர்கள், போனவருடத்திற்கு இவ்வருடக் கெடுபிடிகள் மிகக்குறைவே என்று சொன்னார்கள்.

கோயிலை விட்டு வெளியே வந்து இயற்கையை மற்றும் தேக்கடி நீர்த்தேக்கத்தைப் படம் எடுக்கலாம் என்று வந்தால், கேரளக் காவலர்கள்
தடுத்து விட்டார்கள். படங்கள் கோயிலுக்குள் மட்டும்தான் எடுக்க வேண்டும்!
அதுவும் வெளிப்பகுதிகளை கோயிலுக்குள் இருந்து எடுக்கக் கூடாது என்று
அறிவுறுத்தினர்! சரி சரி என்று தலையாட்டி விட்டு நகர்ந்தேன்.

மாலை 6 மணி வரை இருத்தல் எனக்கு இயலவில்லை என்பதால் பிற்பகலில்
புறப்பட்ட என்னை நண்பர் ஞானம் சாப்பிடாமல் விடமாட்டேன் என்று
அன்னதானச் சோற்றை அள்ளி எனக்கு ஒரு தட்டில் போட்டார்.
விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த எனக்க இதற்கு முன்
அன்னதானச் சோறு வாங்கி உண்ட பழைய நினைவொன்று நினைவுக்கு வர,
அது 23 ஆண்டுகளாகி விட்டதே என்று ஒரு கணக்கும் போட்டேன்.
கோயில்களில் நிகழும் அன்னதான நிகழ்ச்சியொன்றில், என் சொந்த ஊரில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் உண்டதற்குப் பின்னர் கண்ணகி கோயிலில்தான் கைநனைத்தேன். நீர்மோரையும் எனக்கு வழங்கி விடைதந்தபோது
அவர்களுக்கும் என்பால் நல்ல அன்பு உண்டாகியிருப்பதை உணரமுடிந்தது.

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு மெல்ல அசைபோட்டுக் கொண்டே
சீப்பியில் மலையில் இருந்து இறங்கினேன். நிறைய அலைச்சலால்
மிகவும் களைப்புற்று மெதுவே திண்டுக்கல்லிற்குப் பயணமானேன்; திருச்சி
செல்லும் வழியில் பெரியவர் திரு.ஞானவெட்டியானைச் சந்திப்பதற்கு!

அன்புடன்
நாக.இளங்கோவன்
05/மே/2002

No comments: