Pages

Sunday, July 05, 2015

பின்ன சின்ன ஒருங்குறி - துறையறிஞர் கூட்டம் 4/7/15

பின்ன சின்ன ஒருங்குறி முன்னீட்டை ஆய்வு செய்யும் கல்வெட்டு, சுவடிகள், வரலாறு, பழங்கணிதம், நாணயம் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள் ஆய்வறிஞர்களின் கூட்டம் நேற்று 4/7 அன்று சென்னைப்பல்கலையில் நடந்தது. புகழ்பெற்ற அறிஞர்கள் இத்தனைபேரை ஒருங்கே பார்த்ததிலும்,அவர்களோடு கூட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு அமைந்ததையும் பெருமையாகக்கருதுவேன்.

55 குறியீடுகளை ஆய்வு செய்த இவ்வறிஞர்கள், அவற்றில் 18ஐ மட்டுமே நேரடியாக சரி என்று ஏற்பு வழங்கினர். சுமார் 15-17 குறியீடுகளை "பிழை" என்று சொல்லி தள்ளுபடி செய்தனர். மீதம் உள்ள குறியீடுகளுக்கு வடிவமாற்றம் அல்லது விளக்க மாற்றம் பரிந்துரைத்துள்ளனர். கடந்த மே மாதம் ஒருங்குறியில் சேர்க்கப்படவிருந்த 55 குறியீடுகளில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியபோது, அதனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு இவ்வாய்வுக்கு வழிவகுத்தது. தமிழக அரசு இப்படிச் செய்திருக்காவிடில் கிட்டத்தட்ட 60-67% குறியீடுகள் தவறானவையாக ஒருங்குறியிற்சேர்ந்திருக்கும். 67% பிழைகள், அல்லது தவறுகள், அல்லது குறைகள் உள்ள ஒரு முன்னீட்டைத் தாங்கிப்பிடித்து, அவற்றைச் சுட்டிக்காட்டியமைக்காக எம்மை ஏளனம் செய்தவர்களும் இன்று அவற்றை ஏற்றுக்கொண்டது எமக்கு மனநிறைவான ஒன்றாகும்.

தொல்லியல் துறையின் புகழ்பெற்ற அறிஞர்களான முனைவர் நடனகாசிநாதன், முனைவர்.எசு.இராசகோபால், முனைவர் சு.இராசவேலு, முனைவர் விசய வேணுகோபால், முனைவர் பத்மாவதி அம்மையார், முனைவர் மார்க்சிய காந்தி, முனைவர் கலா சீதர், முனைவர் பாலாசி, முனைவர் கு.வெங்கடாசலம், முனைவர் சாந்தலிங்கம், முனைவர் தமிழப்பன், உள்ளிட்ட பல தொல்பொருள் அறிஞர்களோடு, பேரா.பொன்னவைக்கோ, முனைவர் இராம.கி, முனைவர் இர.வாசுதேவன், திரு.மணிவண்ணன், திரு.சேம்சு உள்ளிட்ட பலரோடும் நடந்த இக்கூட்டம் மிகச்சீரிய பணியை செய்திருக்கிறது.
 
இதற்காக தமிழக அரசுக்கும், தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கும், சென்னைப்பல்கலைக்கழகத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
 
கடந்த வருடம் செப்தெம்பர் மாதம் தொடங்கி 7/8 குறைகளைச் சுட்டிக்காட்டி குறைபாடுகளின் தன்மைகளை வெளியிட்டிருந்தேன். ஆனால் திரு. மணிவண்ணன் உள்ளிட்ட சிலரும் உத்தமம் அமைப்பும் அவற்றை ஏற்றுக்கொள்ளவேயில்லை. ஆனால், இன்று மணிவண்ணன் அவர்களே முன்னின்று ஏற்றுகொள்ளும் வகையில் அறிஞர்கூட்ட முடிவுகள் அமைந்தன.
 
 
 
 
 
 
அன்புடன்
நாக.இளங்கோவன்
 

Wednesday, July 01, 2015

மணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள் – ஆசிரியர் இரவிக்குமார்

மணற்கேணி இதாழாசிரியர் திரு.இரவிக்குமாரின் வேண்டுகோள்.
===================================================

வணக்கம்


மணற்கேணி இருமாத இதழ் துவக்கப்பட்டு  ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.இதுவரை 29 இதழ்கள்  வெளிவந்துள்ளன.

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது .

சங்க இலக்கியச் சிறப்பிதழ்; பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறப்பிதழ், வங்க இலக்கியச் சிறப்பிதழ், பாகிஸ்தான் இலக்கியச் சிறப்பிதழ்; தமிழும் சமஸ்கிருதமும்; செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழ் எனப் பல்வேறு சிறப்பிதழ்களை சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு தமிழ் ஆய்வுகளின் தரத்தை உயர்த்துவதற்கு உதவிவரும் மணற்கேணி கடந்த இரு இதழ்களாக பெண் எழுத்துகள் சிறப்பிதழாக பெண் இலக்கியவாதிகளையும் பெண் வரலாற்று அறிஞர்களையும் விரிவாக அறிமுகம் செய்துவருகிறது. 


கிரந்த யூனிகோடு பிரச்சனை; பொருந்தல் அகழ்வாய்வின் முக்கியத்துவம் முதலானவற்றை தமிழ்ச் சிந்தனை உலகின் கவனத்துக்கு மணற்கேணி எடுத்துச் சென்றது.

கவிஞர் சேரன், எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா,பா.அகிலன்,அனார்,லதா, லறீனா அப்துல் ஹக்  முதலானோரின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டும், சிவா சின்னப்பொடியின் தன்வரலாற்றுத் தொடரை வெளியிட்டும் ஈழம் குறித்து கவனத்தை ஈர்த்து வருகிறது. எம்.ஏ.நுஃமான் குறித்த சிறப்பிதழையும் கி.பி.அரவிந்தனின் நினைவைப் போற்றும் விதமாக சிறப்பிதழையும் வெளியிட்டிருக்கிறது.

பெண்களின் படைப்புகளுக்கான வெளியை விரிவுபடுத்தும் நோக்கோடு மணற்கேணியின் இணையாசிரியர் தேன்மொழியின் ஒருங்கிணைப்பில் ‘ஆயம்’ என்ற பகுதியில் அயல்நாடுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நேர்காணலை வெளியிட்டுவருகிறது. ஆங்கிலத்தில் வெளியான நேர்காணல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதே தமிழ்ச் சிற்றிதழ்களின் வழக்கம். ஆனால் மணற்கேணியில் வெளியான பாகிஸ்தான் எழுத்தாளர் செஹ்பா சர்வாரின் நேர்காணலின் ஆங்கில வடிவத்தை இந்தியாவின் முன்னணி நாளேடுகளில் ஒன்றான ’தி இந்து’ தனது ’லிட்டரரி ரெவ்யூ’ பகுதியில் அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று வெளியிட்டது.
இது தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் பெருமைப்படத்தக்கதொரு நிகழ்வாகும்.

திரு.இ.அண்ணாமலை, திருமதி.வீ.எஸ்.ராஜம், பேராசிரியர் செ.வை.சண்முகம், பேராசிரியர் கி.நாச்சிமுத்து, முனைவர் விஜயவேணுகோபால், எம்.ஏ.நுஃமான், பேராசிரியர் ராஜ்கௌதமன்,பேராசிரியர் வீ.அரசு,பேராசிரியர் க.பஞ்சாங்கம், பேராசிரியர் பெ.மாதையன்,பேராசிரியர் கார்த்திகேயன், பேராசிரியர் இரா.கோதண்டராமன், பேராசிரியர் அ.ராமசாமி  உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும்,கவிஞர் ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி,தேன்மொழி, ஆசை,இமையம் உள்ளிட்ட படைப்பாளிகளும் மணற்கேணியில் தொடர்ந்து பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.


மொழிபெயர்ப்புகளின் வாயிலாக இதுவரை தமிழில் அறியப்படாதிருந்த எடுவர்டோ கலியானோ, எலியா கனெட்டி, பியர் பூர்தியூ, பர்ட்டன் ஸ்டெய்ன், ரணஜித் குஹா முதலானோரின் சிந்தனைகளையும்; எதுமோன் ழாபேஸ், நிக்கனோர் பர்ரா, எதெல்பர்ட் மில்லர், அஃபூவா கூப்பர் உள்ளிட்டோரின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியது மணற்கேணி.


தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ செய்யவேண்டிய இந்தப் பணியை மணற்கேணி செய்துவருகிறது. ஆனால், மணற்கேணி இதழுக்கு சந்தாசெலுத்தி வாங்குவதற்குக்கூட இந்த நிறுவனங்கள் முன்வருவதில்லை. இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களின் விளம்பர உதவி இல்லாமல், இலக்கியத்தின் மீதும் தமிழ் ஆய்வுகளின்மீதும்  மதிப்புகொண்ட நண்பர்களின் ஆதரவை மட்டுமே நம்பி மணற்கேணி நடத்தப்படுகிறது.

மணற்கேணி இதழின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்தால், இது தொடர்ந்து சிறப்பாக வெளிவரவேண்டுமென நீங்கள் விரும்பினால்


மணற்கேணி புரவலர் :
மணற்கேணியின் புரவலராவதற்கு நீங்கள் ரூ. ஐந்தாயிரம் செலுத்தவேண்டும். உங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ் அனுப்பிவைக்கப்படுவதோடு மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்படும் நூல்கள் யாவும் விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


மணற்கேணி குழாம் :

மணற்கேணி குழாமில் சேர நீங்கள் ரூ.மூவாயிரம் செலுத்தவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ் அனுப்பப்படுவதோடு மணற்கேணி பதிப்பக வெளியீடுகள் விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


ஊருணி :

இந்தத் திட்டத்தின்மூலம் நீங்கள் நூலகங்களுக்கோ, பள்ளிகளுக்கோ, படிப்பகங்களுக்கோ அல்லது நீங்கள் விரும்பும் ஒரு நபருக்கோ மணற்கேணியைப் பரிசளிக்கலாம். ரூ.ஆயிரம் செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு இதழ் அனுப்பப்படும்.


ஆண்டு சந்தா:

ரூ.420/- செலுத்தி சந்தாதாரர் ஆகிறவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இதழ் எமது சொந்த செலவில் அனுப்பப்படும்.


தொகையைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் நீங்கள் நேரடியாகவே செலுத்திவிடலாம் :

Manarkeni Publication

Overdraft account : 960114000000398
Syndicate Bank, Pondicherry Branch , IFSC Code : SYNB0009601
 
 


 

Thursday, May 21, 2015

தமிழுக்குச் சமயம்செய்யும் கொடை - ஒருமறுபார்வை:

தமிழ்நாட்டில் ஒரு மாயை இருக்கிறது. தமிழில்
ஒரு நூல் எழுதிவிட்டால் அது தமிழுக்குச்செய்த
கொடையாகவும் தொண்டாகவும் மாறிவிடுகிறது.
அதையே "இன்னமதம்" தமிழுக்குச்செய்த கொடை
என்று சொல்ல எந்த மதத்துக்காரரும் வெட்கப்படுவதில்லை.

காட்டாண்டியாக ஒலிக்கத் தொடங்கியதில் இருந்து
தமிழ் முளைத்துத் தழைத்தது. அதனை இன்றைக்கு
தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் தான் தமிழுக்குச்
செய்யும் கொடையாகவும் தன்சமயம் தமிழுக்குச்செய்த
செய்கின்ற கொடையாகவும் கருதிக்கொள்வது
வெட்கக்கேடான செயல்.

தமிழனாய்ப்பிறந்து, தமிழைக்கற்று, தமிழில்
எழுதினால் அது தமிழுக்குச்செய்த
கொடையாகிவிடுமா? தமிழ் என்ற ஒன்று
ஒவ்வொருவரிடம் பிச்சைப்பாத்திரத்தை
ஏந்தி நிற்கிறதா என்ன?

ஆங்கிலத்தில் நூலெழுதும் ஒவ்வொருவரும்
இப்படித்தான் ஆங்கிலத்திற்கு இன்னார் அல்லது
இன்ன மதம் செய்த கொடை என்கிறாரா? இந்தியர்கள்
பலபேர் ஆங்கிலத்தில் நுட்பநூல்கள் எழுதியுள்ளனர்.
உடனே அவற்றையெல்லாம் இந்தியர்கள் ஆங்கிலத்திற்குத்
தந்த கொடை என்கிறார்களா?

சமயவரலாற்றை எடுத்துக்கொண்டால்,
செயினம், பௌத்தம், வைதீகம், கிறித்தவம், இசலாம்
என்ற ஐந்து சமயங்களுமே வெளிநாட்டில் இருந்து
வந்தவையே. ஆரியத்தின் திசை வடக்கு என்றால்,
இவை அனைத்துமே ஆரியசமயங்கள்தான்.
(திராவிடத்தின் கண்ணுக்கு வைதீகம் மட்டுமே
ஆரியமாகத்தெரியும். அது தனிக்கதை)
இவற்றைப்பின்பற்றியவர் யாவருமே
தமிழர்கள்தான். அப்படி, தமிழரால்
எழுதப்படுகின்ற நூல், எப்படி அவர் சார்ந்த
சமயம் தமிழுக்குச் செய்த கொடையாக
மாறிவிடும் என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு மதம் இங்கே வருகிறதாம்.
அதைச் சிலர் பின்பற்றுகிறார்களாம்.
உடனே அம்மதம் தமிழுக்கு கொடை செய்கிறதாம்.
கொஞ்சமாவது ஏரணம் வேண்டாமா?
என்னைப்பொறுத்தவரை இதுவொரு பித்துக்குளி
சிந்தனை என்பேன். இந்தப்பித்துக்குளிப்போக்கைத்
தொடக்கியவர்களும் நாடு போற்றும் அறிஞர்கள்தான்.
இவர்கள் எழுத்து வள்ளலாக இருக்கலாம் -
ஆனால் தமிழ்மொழியை பிச்சைப்பாத்திரத்தோடு
நிற்கவைத்தவர்கள். இந்தச்சிந்தனைப்போக்கு மாறவேண்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, February 10, 2015

தோழர் சீமானுக்குப் பாராட்டு மடல்

முருகவேலொடு வீரத்தமிழர் முன்னணி என்ற இயக்கத்தைத்
தொடங்கியிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டில்
தமிழ்த்தேசியச் சித்தாந்தம் தோற்றுத் தோற்றுத் துவண்டு போனதற்கு
முக்கிய காரணம், தமிழியத்தைத் தமிழ்நாட்டிற் தேடாமல், உலகில் இருக்கும்
மார்க்சியம், நாத்திகம், திராவிடம் உள்ளிட்ட பல இயங்களை
தோளிற் தூக்கிக் கொண்டு தமிழ்நாடு திரிந்ததுதான்.

தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று பேசுவோரெல்லாம் பின்பற்றுவது
தமிழ்நாட்டிற்குப் புறத்தே இருந்து வந்த "இயங்களைத்தான்".
வைதீகத்தை எதிர்க்கிறேன் என்ற பேரில் இந்தியாவிலும் உலகத்திலும்
உள்ள எல்லா இயங்களுக்கும் காவடி தூக்கியவன் தமிழன் ஒருவனே.

உங்களையும் வீரமுன்னணியையும் கேலிபேசியிருக்கும் சுப.வீ
உள்ளிட்ட சிலரின் உளறலைப் பொருட்படுத்திவிடாதீர்கள்.
கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடப் பீடை தமிழகத்தின்
மானம், வீரம், கல்வி என்ற மூன்றையும் நாசமாக்கிவிட்டது.
1965ல் மொழிகாக்க தன்னிச்சையாய் திரண்ட தமிழ்க்குமுகம்
முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்த்ததே அதற்குச் சான்று.

எந்த ஒரு அரசியல் தலைவரும், அவர் இறைநம்பிக்கை
உள்ளவராயினும் தமிழ்க்கடவுளரைப் பொதுவில் பேசுவதற்கே
கூச்சப்படுகின்ற நிலையை ஏற்படுத்தியது திராவிட ஊழ்.
கடவுள் என்று வரும்போதெல்லாம் பொதுவாழ்வில் ஒரு
தாழ்வுமனப்பான்மை உண்டாகிப்போனது திராவிடம்
திட்டமிட்டுத் தீட்டிய நயவஞ்சகம்.

மனைவியை அருளாசி வாங்க கோயிலுக்கும், மடங்களுக்கும்
அனுப்பிவிட்டு, திராவிடத் தலைவர்கள் பேசிய மேடைநாத்திகத்தில்
மெய்மறந்தவர் சுப.வீ என்பதால், அவர் உங்கள் துணைவியார் பற்றி
அப்படித்தான் பேசுவார் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல.

இருண்ட காலம் எனப்பட்ட வந்தேறி வடுகக் களப்பிரர் காலத்தின்
மிச்சம்தான் இந்தத் திராவிடக் காலம் என்பதை அடிக்கடி
நான் எடுத்துச் சொன்னதுண்டு. தமிழியத்தை, தமிழரின்
தொன்மையான அற்றுவிகத்தை (ஆசீவகம்) துடைத்தெறிந்தது
களப்பிரர் காலமே. களப்பிரர் காலக் கொடுமைகளினாலும்
அவர்கள் பின்பற்றிய தமிழ் மண்ணுக்கு ஒவ்வா சமயக் கொள்கையினாலும்,
செங்குட்டுவன் காலத்திற்குப் பின்னும் இருந்த தூய தமிழை
சமற்கிருதக் கலப்பைச் செய்து தமிழ் மொழியை நாசமாக்கியவர்களில்
முகன்மையானவர்கள் களப்பிரர்களே; இன்று ஆங்கிலத்தை வைத்து
திராவிடம் தமிழை அழிப்பது போல.

இந்த நிலையில் இருந்து தமிழ் மொழியை மீட்டு,
மறுமலர்ச்சியடையச் செய்தவர்கள் பக்தி இயக்கத்தினர்தான்.
ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பக்தி இயக்கத்திற்கு
வித்திட்டிருக்காவிடில் தமிழ் என்றோ சேர, சோழ, பாண்டிய
நாடுகளை விட்டுப் போயிருக்கும். அன்று தமிழகத்தில்
தோன்றிய பக்தி என்கிற தூயதமிழ் இயக்கம் தோற்றிய வீரமும், மானமும்தான்
பிற்காலச் சோழப்பேரரசை உருவாக்கியது.  அதேபோல இன்று நீங்கள்
தோற்றியிருக்கும் வீரத்தமிழர்  முன்னணியும் நல்லதொரு
தமிழகத்தை உருவாக்கட்டும். சோழர் அரசு உள்ளிட்ட யாவற்றையும்
திராவிடம் கேலிக்குள்ளாக்கி நம்மை இத்தனை நாள்
மயக்கத்தில் வைத்திருந்தது.

சம்பந்தரும், அப்பரும் தூயதமிழை மீட்டபோது,
தமிழியத்தை மீட்டபோது களப்பிரம் ஒருவரை
தீவைத்து எரிக்கப் பார்த்தது; இன்னொருவரை
சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப் போட்டது.
இறுதியில் தமிழியம்தான் வென்றது.
அதேபோல தமிழியத்தை மீட்க நினைப்போருக்கெல்லாம்
தீரா இடர்களையும் அடக்குமுறையையும் திராவிடம்
தொடர்ந்து தந்து கொண்டிருப்பது, அதே களப்பிரக் கலாச்சாரமாகும்.
தமிழையும் தமிழரையும் காக்க வந்த பரம்பொருள் தான்தானென
பரப்புரை செய்த திராவிடம், தமிழைக் கோயிலுக்கு
உள்ளே அனுமதிக்கவேயில்லை இன்றுவரை.

பழனி பற்றி சுப.வீ கிண்டலடிக்கிறார். அதேநேரத்தில்
"அவர்களைத்தான் திருமலை நாயக்கர் காலத்திலேயே
தளவாய் ராமப்பைய்யர் துரத்தி விட்டாரே!" என்று
சுப.வீ சொல்லும்போது நமக்கு இரண்டு விதயங்களைத் தெளிவாக்கி
விடுகிறார் அவரை அறியாமலேயே.
ஒன்று: பழனியின் சன்னதியில் இருந்த தமிழைத் துரத்தியடித்தவர்
வடுகரான திருமலை நாயக்கர். வடுகக் களப்பிரத்தின் பிற்காலத்
தொடர்ச்சிதான் நாயக்கர் ஆட்சி. மற்றொன்று: கோயில்களில் இருந்து,
திருமலை நாயக்கர் துரத்தியடித்த தமிழை,
கடந்த 50 ஆண்டு திராவிட அரசியல் கோயிலுக்குள் கொண்டு போகவே
இல்லை என்பது.  திராவிட அரசியல், அதே வடுகக் களப்பிரத்தின்
தொடர்ச்சி என்பதால் வெளியே வைதீகத்தைத் திட்டிக்கொண்டு,
அதேவேளையில் தமிழ் வளராமல் பார்த்துக்கொண்டது வரலாறு.

அம்பேத்கரின் பண்பாட்டுப் புரட்சியின் தேவை பற்றிய கருத்து
நல்ல கருத்து. பண்பாடு தமிழ்க்குமுகத்தை இணைக்கிற சங்கிலி.
கோயிலைப் பிடித்தவரெல்லாம் ஆட்சியைப் பிடித்த வரலாறு,
7ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் இருக்கிறது. பண்பாட்டுப்
புரட்சி என்பது அந்த 6-7-8 ஆம் நூற்றாண்டினைத் திரும்பிப்
பார்க்காமல் தமிழ்நாட்டில் உருவாக முடியாது. சுப.வீக்கு
இதெல்லாம் புரியவே புரியாது. அவரை, திருச்செந்தூர்
கோயிலுக்கு அழைத்துப் போய், கடலில் நீராட்டி, நாழிக்கிணற்றில்
குளிக்க வைத்து காலை 5.30க்கு முருகன் சன்னதியில் உட்கார
வையுங்கள். மொட்டையெல்லாம் போடத் தேவையில்லை.
அப்போது சுப.வீக்குப் புரியும் கடந்த 50 ஆண்டுகாலத்தில் எந்த மொழி
சன்னதியில் புழங்குகிறது என்றும், தமிழ் மொழி சன்னதிக்கு
வெளியே நின்று எப்படி அவமானப் படுகிறதென்றும் புரியும்.
தமிழ்க்கடவுளான முருகனுக்கு முன்னால் தமிழ் மந்திரங்கள்
ஓதப்படுவதில்லை திருச்செந்தூரில். ஒருவர் சன்னதிக்குப்
புறத்தே நின்று மறைந்து கொண்டு பாடுவார். நேராகப் பாடினால்
தீட்டு. வெறும் பார்ப்பன ஏச்சில் காலம் தள்ளிவிட்ட சுப.வீக்கு
வடுகப் பார்ப்பனீயத்திற்கும், தமிழ்ப் பார்ப்பனர்க்கும் வேறுபாடு
காணமுடியாது. அதை அறிஞர் குணாவிடம் இருந்து அவர்
கற்றுக் கொள்ளவும் தலைப்படமாட்டார். பாவாணர், குணா
போன்றவர்களையெல்லாம் தூற்றியதுதான் திராவிட வரலாறு.

கடந்த 50 ஆண்டுகளில், மிக மிகத் தேவையான பண்பாட்டுப்
புரட்சியை, தமிழன் இதுநாள்வரை நாணப்பட்ட பண்பாட்டுப் புரட்சியைத்
தயங்காமல் கையில் எடுத்திருக்கிறீர்கள். "நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணதுவாக" என்று மாணிக்கவாசகர் சொல்லுவார். இதற்காக
உங்களை மனமாரப் பாராட்டுவதோடு, இந்த முயற்சியைக் கையில்
எடுக்காமல் வேறு எவருமினி தமிழ் அரசியல் நடத்த முடியாது
என்ற நிலையும் தமிழகத்தில் உருவாக வேண்டும்.

உங்களது துணைவியாரின் தத்துவத்தை அரசியலாக்கிவிட்டீர்கள்
என்று சுப.வீ கிண்டலடிப்பது போல வேறு பலரும் செய்யக்கூடும்.
ஆனால், அவர்களுக்குச் சொல்லுங்கள், "பக்தி இயக்கம் என்ற பெயரில்
உருவான வீர இயக்கம்தான் தமிழகத்தைப் பல்லாண்டு காலம் காத்தது
என்றும், அந்த இயக்கத்தை உருவாக்கியவர்கள் சம்பந்தர் என்ற குழந்தையும்,
அப்பர் என்ற வீரத்துறவியும்தான் காரணம் என்றாலும், அவர்களுக்குத்
தூண்டுதலாக, ஆதரவாக இருந்தவர்கள் வணக்கத்துக்குரிய
பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார், அப்பரின் அக்கையாரான
திலகவதி அம்மையார் என்ற இரண்டு பெண்ணரசிகள்தான்.
அவர்களுக்கு முன்னால் இவர்கள் பேசும்
பகுத்தறிவும், மூடநம்பிக்கையும் பிழைப்பு அரசியலே தவிர
தமிழர்க்கான அரசியலாக இருக்க முடியாது.

இவற்றொடு, முருகனை முன்னிறுத்திவிட்டதால் பிள்ளையாரை
மறுக்க வேண்டும் என்று எண்ணத் தேவையில்லை. வாதாபியில்
இருந்து ஓர் ஆனைமுகன் வந்தார் என்பது உண்மையே ஆயினும்,
ஆனை என்பது தமிழர்களின் தொன்மையான தெய்வ வடிவம்.
அற்றுவிகத்தின் சின்னமே ஆனைதான். இன்றைக்கும் அதன்
தொடர்ச்சி தமிழகத்தில் உள்ளது. சில கோயில்களில் கொடிமரத்திற்குப்
பின்னால் நந்தி அல்லது மயில் இருக்கும் இடத்தில் ஆனையும் இருக்கின்றது.
நீங்கள் மணப்பாறை வழியே போகும்போது மணப்பாறை நல்லாண்டவர்
கோயிலில் இதனைக் காணமுடியும். சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதத்தை
ஆனைமுகன் என்று சொல்வர் அறிஞர். ஆனைமுகன் பற்றிய ஆய்வு
திராவிட அறிவுலகத்தில் மங்கிக் கிடக்கிறது. அதனால் அவசரப்பட்டு
ஆனையைத் தள்ளிவிடவேண்டாம். ஆய்வு செய்ய காலம் இருக்கிறது.
இன்றைக்கு, மிகத் தொன்மமான கருப்பண்ண சாமிக்கும் சமற்கிருத

மூலமந்திரமும், கருப்பண்ணர் காயத்திரி மந்திரமும் திரிக்கப்பட்டு
சமற்கிருதமயமாக்கல் நடைபெறுகிறது. பார்க்க https://www.facebook.com/photo.php?
fbid=10153064671917612&set=pcb.10153064720867612&type=1&theater
தமிழ்நாடு 50 ஆண்டுகாலமாக "எங்களுக்கு மதமில்லை சமயமில்லை யாதும் ஊர்
யாவரும் கேளிர் என்று உளறிக்கொண்டு"  கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து
இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தபோது அதன் கோவணம் வெளியே
தெரிந்ததைக் கவனிக்கவில்லை. அதுவே பல தமிழ் இழப்புகளுக்குக் காரணம்.
வீரத்தமிழர்முன்னணி விரைந்து கோயிலில் தமிழைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்.
அங்கில்லாத தமிழ் எங்கும் வளராது. மீண்டும் உங்களுக்கும் உங்கள் அமைப்பினர்க்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்







Tuesday, January 20, 2015

மாதொருபாகன் - கவுண்டருக்கு எனது கண்டனங்கள்!

பெண்ணியம் ஆணியம் என்று கட்சி கட்டமுடியாமல்
எழுந்த புதினம் என்பதால் ஆண் பெண் சமனைக் குறிக்கும்
சிவவடிவான மாதொருபாகன் என்ற பெயரைச் சூட்டினாரோ
"பெருமாள் முருகன் கவுண்டர்" என்று எண்ணத் தோன்றியது
அப்புதினத்தைப் படித்து முடித்தபோதில்.

மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற ஔவையார்,
அதிலும் கூன் குருடு செவிடு பேடு என்ற நான்கு உடல்
ஊனங்களின்றிப் பிறத்தல் அரிது என்று சொன்ன போது,
மானிட வாழ்க்கைக்கு இந்நான்கு ஊனங்களும் சற்று
கடினமாக, சரவலாக இருந்ததை, இருப்பதைப் புரிந்து
கொள்ளமுடிகிறது. பேடு என்றால் பேடிமை;
அதாவது பால் பேதித்த பெண்மை (திருநங்கை என்ற
 தற்போதைய வழக்கு). ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவான மலடு (வறடு/வறடி/வறடன் என்பார் பெ.மு)
என்ற தன்மையை மானிட வாழ்க்கையின் இன்னலாகச் சான்றோர்
கொண்டதில்லை.

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்குமுகத்தில்,
மணமாகிய ஓரிரு மாதங்களில் இருந்து காலம் முழுவதும்
குமுகத்தின் ஒவ்வொரு மூலையிலும் படும் வேதனைகளை,
சொல்லடிகளை, எதிர்கொள்ளும் ஆணவங்களை,
அவமானங்களை மாதொருபாகன் பதியவைத்திருக்கிறது.
ஆணும் பெண்ணும் (காளி, பொன்னா)  சமமாகப் படும்
துன்பங்களை, ஏச்சுகளை ஆங்காங்கு நடைமுறை
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கேட்டிருந்தாலும்
ஒரே மூச்சில் படிக்கும்போது "குழந்தை குட்டி பெற்ற குமுகம்
இத்தனைக் கொடியதா? என்றெண்ண வைப்பதோடு,

"நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
 ......நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
 பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
 ......புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
 காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
 ......கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
 ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
 ......அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே..."


என்ற பட்டினத்தாரின் பாடலை நினைவுக்குக் கொண்டுவந்து,
"இந்தக் குரங்குகளுக்குத்தான் எத்தனை ஆணவம்!"
என்றும் எண்ண வைத்துவிடுகிறது.

பிள்ளைப்பேறின்றி, பல வருடங்கள், ஆணின் பாதியில்
பெண்ணும், பெண்ணின் பாதியிலே ஆணுமாய்
இனிய காதல் வாழ்க்கை வாழ்ந்த காளியும் பொன்னாவும்
பட்டினத்தார் சொன்ன குரங்குகளின் இறுக்கத்தினால்,
பொன்னா உறுதி தளர்ந்து, கணவனின் பேச்சைக் கேட்காமல்
திருவிழாச் சந்தையில் காணாக்களவு வழி
விந்துதானம் பெறப் போய்விடுகிறாள்.
அவர்களின் காதல் வாழ்க்கை சிதறிவிடுகிறது.
காதல் வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கிறார் பெ.மு. அதை
எண்ணும்போது அவர்களின் சிதறல் வலிக்கவே செய்கிறது.
மணமாகி குழந்தை குட்டிகளோடு வாழ்ந்தாலும்,
 "அன்பிலாப் பெண்டிர் கையில் உண்பதே உலகில்
எல்லாவற்றிலும் கொடியது" என்ற ஔவையாரின்
சொல்லுக்குள் வாழ்பவர் எத்தனையோ பேரிருக்க,
அருமையான காதல் வாழ்க்கையை, குமுகத்தின்
அழுக்குகளால் சிதறடிக்கிறார்கள் பொன்னாவின் தாய்,
தந்தை, அண்ணன், மாமியார் (அதாவது காளியின் அம்மா).
பொன்னாவை காணாக்களவுவழிப் போக சொல்லித்தந்தோடு
மட்டுமன்றி, காளியின் தாயார் ஆசியோடு, பொன்னாவின்
தந்தை வண்டி ஓட்ட, தாய் துணைக்கு வர, அண்ணணோ
மாப்பிள்ளை காளிக்குத் தெரியாமல் அவனைச் சமாளிக்க,
திருவிழா இருட்டுக்குள் மறைந்துவிடுகிறாள்
காளியுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்த பொன்னா.

இதுதான் கதை. இதற்குத்தான் இத்தனை எதிர்ப்பா?  கதையில்
எங்கும் அருத்தநாரீசரை இழுக்கு செய்யவில்லை. பெருமாள் முருகனின்
சொந்த சாதியான கவுண்டர்களை ஏதும் இழுக்கு செய்யவில்லை.

ஊருக்கு இழுக்கு என்று சொல்வதெல்லாம் மறைமுகக்
குற்றச்சாட்டுகளாகவே தெரிகின்றன. ஏனெனில், ஊர், மலை,
மலைக்கோயில், அதன் பிரிவாக இருக்கும் வறடிகல்,
பாவாத்தா என்ற வனதெய்வம், அந்த வனதெய்வம் இட்ட குலசாபம்
போன்றவற்றையெல்லாம் சொல்லவேண்டுமானால்
ஊர்ப்பெயரைச் சொல்லாமல் எந்த எழுத்தாளனாலும்
எழுதவே முடியாது.

காணாக்களவு பற்றிப் பேசிய போதே அவளின் கண்களில்,
திருவிழாவில் பிள்ளை வரம் கொடுக்க அலையும்
எல்லாச் சாதி சாமிகளும் வந்து போகின்றனர்.
எல்லாச் சாதி சாமிகளும் அலைகிறார்கள் என்றால்
எல்லாச் சாதிப் பெண்களும் தேடுகிறார்கள்
என்றுதான் பொருள். அதற்கு ஏன் கவுண்டர் சாதி கோவித்துக்
கொள்ள வேண்டும்?

சாதிப்பெயரைப் போடமலிருந்திருக்கலாம் என்றால்,
கதையில், கவுண்டர் தொடங்கி, பார்ப்பார், செட்டியார்,
பறையர், சாணார், சக்கிலியர், சாயபு, வெள்ளைக்காரன்
என்று பலரும், பல குடும்பங்களும் வந்து போகிறார்கள்.
கதையில் கவுண்டரான காளி, பறையர்களோடு
பறையாட்டம் ஆடுவான். குறிப்பாக கோயிற்பறையாட்டத்தில்
வல்லவனாகச் சொல்லப்படுவான். பறையாட்டம் என்பது தமிழர்களின்
பொதுவான தொன்மையான கலை என்பதற்கு இதுவும் ஒரு காட்டு. காளியின்
சிற்றப்பனாக வருபவர், திருமணம் செய்துகொள்ளாதவர்.
அவருக்குச் சமைத்துப் போடுபவன் சக்கிலிய
வகுப்புப் பையன். அதற்காக சிற்றப்பா பலராலும்
இகழப்பட்டதைக் கதை சொல்கிறது. சாணார் வகுப்பான
மண்டையனின் பிள்ளையைத் தத்துக் கேட்கிறான் காளி.
அவனும் தருகிறேன் என்று சொல்வான்;
ஆனால் மண்டையன் மனைவி மறுத்துவிடுவாள்.

காணாக்களவுக்குப் பொன்னா போனதாக வருவதால்
சாதியம் பற்றிக் கொண்டது என்று சொல்லுமளவுக்குக்
கதையில் ஏதும் சாதி இகழ்ச்சி இல்லவே இல்லை.

திருச்செங்கோட்டு கவுண்டர்கள் மட்டும் கதை
படிக்கத் தெரியாதவர்களா என்ன? அவர்களுக்கும் கதை
புரிந்திருக்கவே கூடும். ஆனால், பெ.முவே ஒரு செவ்வியில்
சொன்னதுபோல வேறு எதற்கோ பெ.மு வைப்
பிடிக்காதவர்கள், இதனை மட்டும் வெளியில் காரணமாக வைத்துத்
தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று எண்ண
இடமிருக்கிறது.

அது, சிலரின் சொந்தப் பகையாக இருக்கலாம்.

மற்றபடி, இக்கதைக்கு ஆதரவும், எதிர்ப்பும்,
ஆதரிப்பது போன்ற எதிர்ப்பும் இணையத்தில்
உலாவியதெல்லாம் ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள்
யாரும் சட்டென களத்திற்கு வராதது
"சாதி வாக்கு வங்கிக்காக மட்டுமே". திரைப்படங்களில்
எல்லாம் முடிந்ததும் காவற்துறை வருவது போல
மு.க.சாலின் வந்தார். சரி அவராவது
வந்தாரே என்று எடுத்துக் கொள்வது தகும்.

எதிர்க்கிறேன் பேர்வழி, என்று எத்தனையோ
பேர் எழுதினார்கள். அவர்கள் கதையை ஆழ்ந்து
படித்தால் அதில் சாதி, மத இகழ்வுகளுக்கு
இடமில்லை என்பதைப் புரிந்து கொள்வர். ஆனால்,
என்னை வியப்படைய வைத்ததெல்லாம்,
சில தமிழ்ப்பற்றாளர்களின் "ஆரிய திராவிட" எதிர்ப்புதான்.
"இது ஆரியக் கொள்கை, அதோடு இது திராவிடர்களின்
சதி - ஆபாசம் " என்று போட்டார்களே போடு;
அவர்களெல்லாம் இந்த நூலை வருணிக்கு முன்
கொஞ்சம் மாந்தவியலையும் படிக்கவேணும்
என்றுதான் சொல்லுவேன்.

ஆரியத்தையும் திராவிடத்தையும் கிடுக்க
ஆயிரம் இருக்கையில் இதெல்லாம்
ஆரியக் கொள்கை அது இது என்றால்
இவர்களின் ஆரிய திராவிட அறிவை
நகைக்க மட்டுமே முடியும்.

தற்காலப் புதினங்கள் என்றாலே எனக்கு  அலுப்பும்
சலிப்பும் இயல்பாகவே அமைந்துவிட்டதால் நான்
இழப்பது சில இருக்கலாம்.  அதற்கு நான் வருந்தியதில்லை.
ஆனால், எப்பவாவது இதுமாதிரி படிக்கும் போதெல்லாம்
வழக்கு மொழியென்ற பெயரில், எழுத்துப் பிழை,
ஒற்றுப்பிழையோடு கெட்டவார்த்தைகளை அப்படி
அப்படியே எழுதியிருப்பதைப் பார்க்கும் போது
அருவெறுப்பே மிகுகிறது. புதினம் என்றால்,
தற்கால இலக்கியப் பதிவு என்றால்,
கீழ்த்தரமான உரையாடல்களையும், ஏசல்களையும்,
கேலிகளையும் அப்படியே
அதே சொற்களால்தான் எழுதவேண்டுமா?
ஆண் எழுத்தாளரும் பெண் எழுத்தாளரும்
இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு
கெட்டவார்த்தைக் களஞ்சியத்தை
எதிர்காலத்திற்குத் தேக்கி வைக்கிறார்கள் போல.

இடக்கரடக்கல் என்பதைக்
கொஞ்சம் கூடவா பின்பற்றக்கூடாது?

எனக்குப் பிடிக்காத இந்த "இழக்கிய" எழுத்து முறையை,
பெருமாள் முருகன் கவுண்டரும் வைத்துள்ளார்.
அதனால் அதற்கு மட்டும் கவுண்டருக்கு எனது கண்டனங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, November 11, 2014

ஒருங்குறிக் கேடுகள் - 1


ஒருங்குறிக் கேடுகள் ஒன்றல்ல - இரண்டல்ல. பல.
அவற்றிலொன்று இந்த வரிசைச் சிக்கல்.


அன்றைய ஒருங்குறிப் புலவர்களின் ஒழுக்கமற்ற, நெறிமுறையற்ற
செயற்பாடுகளால் விளைந்த பல கேடுகளில் இது முக்கியமான ஒன்று.

கதை, கவிதை, மொக்கை போன்றவற்றை இணையத்தில் எழுதுவதற்கு
இது எந்தவிதத்திலும் தடையாக இருக்காது. ஆனால், கணிநிரல்கள்
உருவாக்கும் ஒவ்வொருவரும் இந்தக் குறைபாட்டைக் கடந்துதான்
புதுக்குகள் செய்ய முடியும். அங்கங்கு சில சுற்றுவழிகளைப் போட்டுத்தான்
அவர்கள் செய்வார்கள். அதிலும், தமிழ் நிரலியர் பலபேர் எங்கே இந்தக் குறைபாட்டைச் சொன்னால், இதற்குச் சுற்றுவழி எழுதத் தெரியவில்லை
என்று யாரும் நினைத்துவிடுவார்களோ என்று எண்ணி வெளியே சொல்லுவதுகூடக் கிடையாது :-) அவ்வளவு தொழிலியச் சுத்தம் :-))

இதனால், விளையும் கேடுகளைப் பார்க்கவேண்டுமானால் விக்கிப்பீடியா போன்ற பெருஞ்செயலிகளிலேயே காணலாம். விக்கிப்பீடியாவின் பகுப்பு வரிசையை அதன் செயலி எப்படிப் போடுகிறது என்று காண்பது தகும்.
https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_ta&pagefrom=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D#mw-pages

(இதுபோன்ற குறைபாடுகளை நிரல்மாற்றம் செய்யமுடியுமெனில் செய்து வெளியிட நண்பர் இரவிசங்கர் போன்றவர்கள் முயற்சி செய்யவேண்டும், இல்லாவிடில், இதுவே தமிழ் எழுத்து வரிசையாக நிலைத்துவிடக்கூடும்.
அல்லது, இச்சிக்கலை விக்கியின் மேலகத்திற்கு வலுவாக எடுத்துச் சொல்லி,
மாற்றச் சொல்லவேண்டும். அது ஒருங்குறிக் குற்றங்களை பன்னாட்டு மன்றங்களில் எடுத்துரைக்க உதவியாக இருக்கும்.)

பத்தாண்டுகளின் முன்பு ஒருங்குறிப் புலவர்கள், குறியேற்றச் சிக்கல்களின்போது கட்டுப்பாடுகளை, நெறிமுறைகளை வகுத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயற்பட்டதன் வெளிப்பாடு இன்று நன்கு
தெரிகிறது. இன்றைய ஒருங்குறிப் புலவர்களும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள். இன்றைய பின்ன சின்ன விதயத்திலும் அடிப்படை மீள்பார்வை கூடச் செய்யாமல், அதற்கான அரசு வழிமுறைகளைச் செய்யாமல், எதிர்காலச் சூழல்களைக் கருத்தில் கொள்ளாமல், தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகமும்  ஒருங்குறியைப் பேணுதற்கு எந்த நெறிகளையும், மீள்பார்வை முறைகளையும், தகுதியான குழுக்களையும் உருவாக்கவில்லை. 55 குறியீடுகளை குறியேற்றம் செய்யும் முயற்சியை வெறும் 4 மணி நேர ஆரவாரத்தோடு முடித்துக் கொண்டது த,இ.க.

அன்புடன்
நாக.இளங்கோவன்


Sunday, September 21, 2014

இந்திரா பார்த்தசாரதியின் 'சிலப்பதிகாரச் சிக்கல்கள்' கட்டுரை - ஒரு பார்வை

சிலப்பதிகாரச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி
கருத்துரை - நாக.இளங்கோவன்
வெளியீடு - மணற்கேணி ஆய்விதழ் (மே-சூன் 2014)

இந்திரா பார்த்தசாரதி அவர்களின் “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற கட்டுரையை 2001ல் படித்ததன் பின்னர், “சிலப்பதிகாரச்  சிக்கல்கள்” என்ற அவரின்  கட்டுரை, பகிர்தலில் படிக்கக் கிட்டியது. சுமார் 12 ஆண்டுகள் கழித்து அவரின் சிலப்பதிகாரக் கட்டுரையைப் படிக்கும்போது, அதில் பரந்து கிடக்கும் அவரின் சிந்தனைப் பரிமாணங்கள் என்னைப் போன்ற சிலப்பதிகார வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற அந்தக் கட்டுரைக்கு அப்போது நான் எழுதியிருந்த கருத்துகள், மறுப்புகளுக்கு இந்திரா பார்த்தசாரதி அவர்களிடம் இருந்து மிகப்பண்பாடுடைய மறுமொழிகளும், ஏற்பும் அஞ்சலில் வந்தன. அவரின் அந்தப் பண்பாடும், சிலப்பதிகாரத்தைப் போற்றுகின்ற சிந்தனையும், பகிர்வில் வந்த இந்தக் கட்டுரையின்பால் கருத்துரை எழுத ஆர்வத்தைத் தூண்டின.

இக்கட்டுரை வெளிப்படுத்தும் உரத்த சிந்தனைகள் அகலத்திலும் ஆழத்திலும் எண்ணிக்கையிலும் மிகுந்துள்ளன என்பேன். இச்சிந்தனைகளில் சிலபலவற்றைத் தமிழகச் சிலப்பதிகார ஆய்வு உலகம் சிந்தித்தும் வருகையில், ஆசிரியர் இ.பா அவர்களும் மிகச் செழுமையான வினாக்களாக அவற்றை எழுப்புவது வரவேற்புக்குள்ளாகிறது.

“சிலப்பதிகாரம் சமற்கிருதத்திலிருந்து இறக்குமதியான காவியக் கதையன்று” என்ற ஆசிரியரின் அழுத்தமான சிந்தனை, 2012ல் தமிழ்த் தொல்லியற்றுறையின் மேனாள் இயக்குநர் திரு.நாகசாமி, “வடமொழியின் பஞ்சதந்திரக் கதைகளை மூலமாகக் கொண்டது சிலப்பதிகாரம்” என்று கூறியதை அடிப்படையிலேயே மறுக்கிறது. ஆசிரியரைப் போன்றே, அக்கருத்தியலை ஆதாரங்களை அடுக்கி மறுத்தது, “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற முனைவர் இராம.கியின் கட்டுரை.(http://valavu.blogspot.in/2013/02/1.html).

“பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சிலப்பதிகாரம் பிரபலமாக இருந்திருக்கவில்லை –அதற்கு அதன் சமணச் சார்வு காரணமாக இருந்திருக்கூடும்” – என்ற இ.பாவின் கருத்து ஆழச்சிந்திக்க வைக்கிறது. 18-19 நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கக்கூடிய “கோவலன் கதை” என்ற நாட்டுப்புறக் கதைப்பாடலில் உள்ள செய்திகள், சிலப்பதிகாரப் பெருவழக்குத் தமிழ்நாட்டில் மிக நெடுங்காலமாக இருந்திருக்க வேண்டும் என்றே கருத வைக்கிறது. (கோவலன் கதை – சுவடிப்பதிப்பு – முனைவர் சூ.நிர்மலாதேவி – உ.த.ஆ.நி பதிப்பு). கரிகாலன் கல்லணை கட்ட மாசாத்தன் நிதி அளித்தது, பாண்டிய நாட்டில் கொடுங்கோலாட்சி நடந்தது, மாதே(த)வி கோவலனைக் கொல்ல ஆற்றில் தள்ளியது, சிவச்சார்புக்காக சொக்கர்-மீனாட்சியை முன்னிலைப் படுத்தியது போன்ற செய்திகளை அதிற்காணமுடிகிறது. “தென்னவன் மகள் கண்ணகி” என்று சிலம்பு சொல்வதை, பாண்டிமாதேவியின் ஆற்றில் விடப்பட்ட மகள் கண்ணகி என்று “கோவலன் கதை” என்ற இந்த நாட்டுப்புறக் கதை சொல்கிறது. இதுபோல, கோவலன் கர்ணகி என்ற நாட்டுப்புறக் கதையும் காணத்தக்கது. இக்கதைகளின் தன்மைகளைப் பார்க்கும் போது, செவ்விலக்கியமாக இளங்கோவடிகள் தோற்றிய சிலப்பதிகாரம், கூத்துக்கலையாக, தமிழ்நாட்டின் உள்வழக்குகளில் பலவாகத் திரிந்து நெடுங்காலம் இருந்திருக்கும் வாய்ப்பை எடுத்துச் சொல்வதாகவே இருக்கிறது. (இதனை இ.பா அவர்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.)

சிலப்பதிகார ஆசிரியர் பெயர் பற்றிய கட்டுரை ஆசிரியரின் வினாக்கள் மிக அவசியமானவை. “ஏன் இடமுலையைத் திருகி எறிகிறாள்?” என்று வினவி, சிவனின் இடப்பக்கத்துறை பெண்மையோ என்று ஐயுறும் ஆசிரியரிடம் இருந்து, “வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று பெருமாளையும் தாயாரையும் வைணவர்கள் வணங்குவது பற்றிய சிந்தனையையும் நான் எதிர்பார்ப்பேன். இடப்பக்கம் உள்ள இதயத்தின் குமுறலை, அனலை ஆற்றும்பொருட்டு, பொதுவாகவே வலப்பக்க/வலக்கர எழுச்சி கொண்ட தமிழர்களின் இயல்பான செயற்பாடு இடமுலையைத் திருகியது என்ற கருத்து (சிலம்பு மடல்-27 http://nayanam.blogspot.in/2000/06/27.html ) எனக்கு இருக்கும் போதிலும், வள்ளுவம் சொல்லும் உவமமான “முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று” என்பதை ஆழ்ந்து நோக்கவும் சொல்கிறது.

“பத்தினி வழிபாடு, சீற்றமடைந்த பெண்ணைத் தெய்வமாக்குதல்” பற்றிய ஆசிரியரின் சிந்தனை, விரிவாக விரும்பும் எனது மற்றொரு எதிர்பார்ப்பாகும். சிலப்பதிகாரத்தின் காலம் என்ன? என்ற வினா எனக்குப் பிடித்த முக்கிய வினாவாகும்.  சிலம்பின் காலம் 9ஆம் நூற்றாண்டில் இருந்து 2ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டு, தற்போது 2ஆம் நூற்றாண்டு என பலராலும் கருதப்படுகிறது. இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், சிலம்பின் காலத்தை தமிழக, இலங்கை வரலாறுகளை மட்டும் வைத்து அதை 2ஆம் நூற்றாண்டு என்று சொல்கையில், தமிழகத்திற்கு வடக்கே சென்று, சாதவாகன்னர்(நூற்றுவர் கன்னர்) அரசியல், மகத ஆட்சி, தக்கணப்பாதை என்ற அடிப்படைகளை ஆழமாக வைத்து “கி.மு75 என்பதே சிலப்பதிகாரத்தின் காலம்” என்று சொல்லும் “சிலம்பின் காலம்” என்ற முனைவர் இராம.கியின் நூல் இன்று பலரால் கருதப்படுகிறது. “கனகவிசயர்” என்பது கனகன் விசயன் என்ற இருவரல்ல – கனகவிசயன் என்ற ஒருவரே என்று அந்நூல் நிறுவுவது கவனிக்கத்தக்கது. இதற்கு நேர் மாறாக, முனைவர் செ.கோவிந்தன் அவர்களின் “சிலம்பின்  காலம்” என்ற நூல், காலத்தை 9ஆம் நூற்றாண்டையும் கடந்து கி.பி11ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளிவிடுகிறது. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழப்பேரரசு சேரநாட்டை அழித்ததால் மனம் நொந்த இளங்கோ, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பேகனையும் அவன் மனைவியையும் வைத்துக் காவியத்தை உருவாக்கினார் என்று சொல்கிறார் செ.கோ. அதோடு, செங்குட்டுவன் இளங்கோவின் தம்பி என்கிறார் செ.கோ. இதிலிருந்து சிலப்பதிகார ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும் கருதுகோள்களும், ஆதாரங்களும் நுண்ணியமாக, வலுவாக இருக்கும்போது, அதன் காலம் கி.பி2ஆம் நூற்றாண்டை முந்திச் செல்வதும், வலுவற்ற கருதுகோள்களும் ஆதாரங்களும் சிலம்பின் காலத்தை மிகப் பிந்தியதாக்குவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, ஆசிரியர் இ.பா அவர்களின் விரிவான காலக்கணிப்பிற்கு அவர் எடுத்துக் கொள்ளும் கருதுகோள்களும் ஆதாரங்களும் தமிழக எல்லையைக் கடந்தும் செல்ல வேண்டுமே என்பதும் எனது எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

பிற்சேர்க்கைகள் பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் கருதுகோள்களும் வாசகர்களையும் ஆய்வாளர்களையும் ஈர்ப்பதாக அமைகிறது. பதிகமும், வரந்தருகாதையும் பிற்சேர்க்கை என்றாலும், அவை கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து ஆய்வுக்குட்பட்டே வருகின்றன. இளங்கோவடிகள் எப்படிச் சமணராகக் கருதப்படுகிறார் என்ற வியப்பு எனக்கு உண்டு. மிக அவசர அவசரமாக அவருக்கு மொட்டை போட்டு சிலையாகவும் மெரீனா கடற்கரையில் வைத்துவிட்டார்களோ என்று நான் எண்ணுவதுண்டு. 

குணவாயிற்கோட்டம் என்பது சமணக் கோயில்; அங்கு இளங்கோஅரசு துறந்தார் என்ற உரைக்காரர்களின் கருத்தே நிலைத்துவிட்டது போல. குடநாட்டுக்குக் கிழக்குக் கோட்டையாக, அரணாக, வாயிலாக இருந்ததுதான் குணவாயிற்கோட்டம். சேரத்தின் மையநாடான குடநாட்டுக்குத் தெற்கெல்லையாக கோட்டயமும், கிழக்கெல்லயாக குணவாய்க்கோட்டமும், வடக்கெல்லையாக கோட்டக்கல்லும், மேற்கெல்லையாக கடற்கரையும் இருந்திருக்கின்றன; கோட்டம்=கோட்டை/அரண் என்ற பொருளில் அரணவாயிலாக  இருந்திருக்கின்றன என்பது எனது கருத்து. குணவாயிற் கோட்டத்தை குணவாயிற்கோயிலாகக் கொண்டால், கோட்டக்கல்லை கோயிற்கல்லாகவும், கோட்டயத்தைக் கோயிலையம் என்றும் கொள்வார்களா? ஆகவே, இளங்கோ சமணத்திற்கு வலிந்து தள்ளப்பட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. 

ஆசிரியர் இ.பா அவர்களும் இளங்கோ சமணர்தானா என்று ஐயுறுவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கோட்டம், இளங்கோவின் சமணம், பிற்சேர்க்கைகள் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னப்படுவது இந்தக் கோட்டம்=கோயில் என்ற கருதுகோளினாற்றான். அதொடு, அரசு துறப்பு என்பது, அரசைத் துறந்து துறவியானார் என்று ஏன் கொள்ளப்படவேண்டும்? இமயவரம்பனின் மகனான இளங்கோ, கிழக்கு வாசலின் மாதண்டநாயகனாக இருந்திருக்கிறான். பின்னர் அண்ணன் பட்டத்துக்கு வர அப்பணியை அண்ணணிடம் ஒப்படைத்திருக்கிறான் என்று கருத இடம் இருக்கிறது என்று நான் சொல்வேன்.

இன்னும் நிறைய கருத்துகளை, வினாக்களை உரக்கவே எழுப்புகிறார் ஆசிரியர். அவை மேலும் வாசகர்களுக்குத் தூண்டலாக அமைவது சிறப்பு. மேலும் எழுதினால் நீளும் என்பதால்,  ஒரு கருத்தோடு இக்கருத்துரையை நிறைவு செய்கிறேன். மதுரைக்காண்டம் முடிந்தவுடன் காவியத்தின் தன்மை, உணர்வு நெறி வெகுவாக மாறுவதை வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகிறது என்ற ஆசிரியரின் கருத்தோடு ஐயத்தோடு எனக்கு முழு ஒப்புமை உண்டு. ஆசிரியர் கூறுவது போல, சிலம்பு நாடகம் மதுரையோடு முடிகிறதோ என்ற ஐயம் தோன்றினாலும், சேர அரசியலை, நாட்டை முன்னிலைப்படுத்தும் முகமாக வஞ்சிக்காண்டம் காவியத்தில் முதலில் தோன்றி அதற்குப் பின்புலமாக புகாரும், மதுரையும் வைக்கப்பட்டதோ(as flash back) என்ற சிந்தனை எனக்குண்டு. ஆசிரியர் இக்கட்டுரையில் எழுப்பியிருக்கும் வினாக்களை ஐயங்களை விரிவாக விளக்குமுகமாக நூல் இயற்றினால் அந்நூலில் அதிக ஆவலோடு நான் எதிர்பார்க்கும் கருத்து இதுவாகவே இருக்கும். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கருத்துகள், ஆய்வுகள் நூலாக மலர வாழ்த்துகள்.

அன்புடன்

நாக.இளங்கோவன்