Pages

Saturday, November 24, 2012

மணற்கேணி நடத்திய 50 ஆண்டுகளின் தமிழ்த் தொல்லியல் வரலாற்று ஆய்வரங்கம்!


தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில்
ஒன்றான மணற்கேணி நேற்று (24-11-2012)
புதுச்சேரியில் நடத்திய ஆய்வரங்கத்தில் கலந்து
கொள்ளும் வாய்ப்பமைந்தது.

சுமார் 125-150 பேர் கலந்துகொண்ட நல்ல
அரங்கமாக அது அமைந்திருந்தது.

1952ல் திரு.டி.என்.இராமச்சந்திரன் அவர்களால் துவக்கப்பட்டு,
பின்னர் திரு.நாகசாமி, திரு.நடனகாசிநாதன், தற்போது
திருவாட்டி வசந்தி ஆகியோரின் தலைமைகளில்
தொடரும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின் பரப்பு,
ஆழம், சாதனைகள், சோதனைகள் என்ற பல்வேறு
கோணங்களை ஒரே நேரத்தில் அறியத்தரும் அரங்கமாக
சிறப்புற அமைந்திருந்தது.

கல்வெட்டாய்வு, நாணயவாய்வு, அகழ்வாய்வு என்ற
மூன்று ஆய்வுகளும் அரங்கில் முகன்மை பெற்று
இருந்தது மிகப்பயனாக இருந்தது.

ஏடுகளிலும், இதழ்களிலும் படித்திருந்த தொல்லியல்
கண்டுபிடிப்புகளை மேலும் ஆழமாக, அந்த
ஆய்வுகளைச் செய்த அறிஞர்களாலேயே
விளக்கப்பெறுமாறு அமைந்திருந்தது சிறப்பு.

கி.மு 2000 என்று கருதப்படுகிற, சிந்துவெளி எழுத்துகள்
தாங்கிய செம்பியன் கண்டியன் கல்வெட்டு,
கி.மு 1000 என்றளவில் மட்டும் பேசப்பட்டு,
ஆனால் கி.மு 2000ஐக்கும் முன்னால் செல்லும்
என்று எதிர்பார்க்கப்படுகிற ஆதிச்சநல்லூர்
அகழ்வாய்வுகள், கி.மு 490 காலத்திய
பொருந்தல் கல்வெட்டு, கி.மு 330க்கு சற்றும்
குறையாத ஆனால் வருங்கால ஆய்வுகளால்
இன்னும் முற்காலம் என்று சொல்ல
வாய்ப்பிருக்கிற கொடுமணல் அகழ்வாய்வு,
இரண்டு எழுத்துமுறைகளைக் (தமிழி+சிந்துவெளி)
கொண்ட கி.மு400-300 காலத்திய
திசமகரம (தென்னீழம்) கல்வெட்டு
ஆகியவற்றை உள்ளிட்ட நடனகாசிநாதனின்
பரத்தீடு (presentation) சிந்தைக்கு விருந்தாக இருந்தது.

தொன்மங்களாக அறியப்பட்டவற்றைப் பேணுகின்ற
பணியில் இந்திய அளவிலே உயர்நிலையில், உயர்ந்த
புகழுடன் விளங்கும் திரு.தயாளன், தாசுமகாலை
அரசியலிடம் இருந்தும் துரு, கிருமிகள் போன்றவற்றிடம்
இருந்தும் காப்பாற்றிய செய்திகளை மிக விளக்கமாகப்
பேசியதும், எல்லோரா ஓவியங்கள், சிற்பங்கள்
ஆகியவற்றைப் பேணுகின்ற, சிதைவில் இருந்து
காக்கின்ற முறைகளை படங்கள் வழியே விளக்கியதும்
நல்ல பாடமாக அமைந்தது. அவரிடம், சிதைந்து
கொண்டிருக்கும் சித்தன்னவாசலைக்
காக்க வேண்டும் என்ற வேண்டுகோளை
நிகழ்ச்சியை அமைத்த திரு.இரவிக்குமார் மேடையில்
வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அழகர்குளம், மாங்குடி தொல்லியல் ஆய்வுகளுடன்,
சுமார் 50-60 ஆண்டுகள் தொல்லியற்றுறை வரலாற்றினூடே
இருந்திருக்கின்ற சிக்கல்களைப் பற்றி விளக்கிய
திரு.வேதாச்சலம் நிறையவே சிந்திக்க வைத்தது.
கடிகைக்கோ என்று அறியப்பட்ட சொல்லில் இருந்து
விளைந்தது, இளையான்புத்தூர் பிரமதேயச் செப்பேடு சொல்வது
உள்ளிட்டவற்றை அவர் விளக்கிய போது, அதில் இருந்த
செய்திகள் "எல்லை அரசியல்", "உரிமை அரசியல்/போர்",
"ஆதிக்க அரசியல்" ஆகியவற்றை உணர்த்துவதாய்,
தொல்லியல் ஆய்வுகளின் பிறகோணங்களை விளக்குவதாய்
அமைந்தது.

மதுரையை அதிமுக்கிய தொன்மமாகக் கருதுகிற
தமிழகத்தில், "மதுரையில் தொல்லியல் ஆய்வுகள் செய்ய
இடமே இல்லை, அவ்விடங்கள் எல்லாம் மக்களால்
நிறைந்துவிட்டது" என்ற செய்தி அதிர்வை
ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.
வளர்ச்சி என்பது தொன்மங்களை மூடுகின்ற
சூழல் ஏற்பட்டிருப்பதையும், இது தொடரும்
என்பதால் தொன்மங்களின் முக்கியத்துவம்
காக்கப்படவேண்டிய அவசரத்தை
விளங்கிக் கொள்ள முடிந்தது.

தொல்லியல் ஆய்வுகள் முன்னேற்றங்களைக்
கண்டிருப்பினும், செய்திருப்பவை நூற்றில் ஒருபங்குதான்
என்றும், செய்யவேண்டியவை மலையன குவிந்துகிடக்கும்
காட்சிகளையும் விவரிப்பதாய் ஆய்வரங்கின் பல்வேறு
உரைகளும் உணர்த்தின.

கொடுமணல் அகாழய்வின் தலைவர் க.இராசன் அவர்களின்
ஆய்வுகளை அவர் உரையால் கேட்கும் வாய்ப்பு மகிழ்ச்சி
அளித்தது. கொடுமணல் பற்றி படித்திருந்தவர்களுக்கும்
அவரின் நேரடி உரை, இராசனின் அயராத உழைப்பையும்,
திறத்தையும் உணர்த்தியது. இதற்காக 15 ஆண்டுகள்
உழைத்திருக்கிறார். கொடுமணல் போன்று ஏறத்தாழ
3000 அகழாய்வு செய்ய வேண்டிய இடங்கள்
தமிழகத்தில் இருக்கின்றன என்பதை அவர் சொன்னபோது
தமிழகம் செயல்படவேண்டிய வேகம், திறன் கண்ணில்
ஆடியது.

"இலக்கியங்களுக்கும் தொல்லியற் செய்திகளுக்கும்
இருக்கவேண்டிய ஒருங்கிணைப்பு" பற்றி அவர்
பேசியது "அடிப்படையிலேயே இருக்க வேண்டிய
ஒன்று இன்னும் இல்லாதிருக்கிறதே" என்ற கவலை
ஏற்பட்டது.

கொடுமணல் அகழாய்வு அல்ல - அது தமிழ்நாட்டிற்குக்
கிடைத்த புதையல்.

வீ.செல்வக்குமார் அவர்களின் பழங்கற்கால ஆய்வுகள்
மற்றொரு பரிமாணத்தைக் காட்டின. தமிழகத்தில்
15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நிலை
பெற்று விட்டனர் என்று ஐயம் திரிபற நிறுவிய
அதிராம்பாக்க ஆய்வுகளில் இவரும் பங்கேற்று
ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவையாய் மனதை
ஈர்த்தன.

தொல்லியற் களப்பணிகளில் இன்றைக்கு
ஏற்பட்டிருக்கூடிய தொய்வு,
தொல்லியற்றுறையின் சுருங்கிவிட்ட நிலை,
தொன்மங்களைக் காப்பதில் தமிழ்க் குமுகத்திற்கு
இருக்கக்கூடிய அறிதல், ஆவணப்படுத்தலில்
சுணங்கிய நிலை, இழந்து போன தொல்பொருள்கள்,
களவு போன தொல்பொருள்கள், களவு போய்
கடினமாக உழைத்து மீட்டவைகளை தமிழகம்
பாதுகாக்கும் நிலை போன்றவற்றை
பரந்து பட்ட பார்வைகளில் திரு.விசய வேணுகோபால்
விளக்கிய விதமும் அது ஏற்படுத்திய சிந்தனைத்
தாக்கமும் முக முக்கியமானவை.

தொன்மங்களைப் பண்பாட்டுச் செல்வங்களாக
உலகம் போற்றிக்கொண்டிருப்பதை விளக்குவதாக
வீ.செல்வக்குமார் உரை அமைய, அப்படிக் கருதாமல்
தமிழகம் எவ்வளவு தள்ளியிருக்கிறது என்பதைச்
சொல்வதாய் விசயவேணுகோபாலின் உரை
அமைந்திருந்தது.

இவ்வறிஞர்களின் உரைகள் பல்வேறு செய்திகளைச்
சிந்திக்கக் கொடுக்குமாறு ஆய்வரங்கத்தினை
அமைத்திருந்த மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர்,
பல இலக்கிய நூல்களின் ஆசிரியர் திரு.இரவிக்குமார்,
தொன்மங்களைக் காக்கவேண்டிய அவசியத்தையும்
அதற்காகக் கடந்து செல்லவேண்டிய இடர்களையும்
உருவாக்க வேண்டிய கருத்தியக்கத்தையும்

இவ்வரங்கின் மூலம் மிக அமைதியாக,
தொழிலியத் (Professional) தன்மையுடன்
உணர்த்தியிருக்கிறார். இந்த முன்முயற்சிக்காக
இரவிக்குமார் மனதாரப் பாராட்டப்பட வேண்டியவர்.

இரவிக்குமாருக்கும், மணற்கேணி இதழுக்கும்,
இவ்வரங்கினைப் பயனுள்ளதாக அமைத்த
அறிஞர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்
உரித்தாகுக.

முனைவர் இராம.கி, பேரா.செல்வா,
கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு,
முனைவர் தமிழநம்பி, திரு.இராச சுகுமாரன்,
முனைவர் மு.இளங்கோவன், திரு.இரவிக்குமார்
உள்ளிட்டஇணையவழி நண்பர்கள், அறிஞர்கள்
பலரைச் சந்திக்கும் வாய்ப்பாக ஆய்வரங்கம்
இருந்தது கூடுதல் மகிழ்ச்சியாக எனக்கு
அமைந்தது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, September 21, 2012

மனநிறைவான "மென்தமிழ்" என்ற சொவ்வறை வெளியீடு!


1980களின் பிற்பகுதியில் மெல்லத் தலையைக் காட்டி,
90களின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியான
சொவ்வறைகள்/சொவ்வறைச் சேவைகள் சுமார் 3,4 கோடி
உரூவாய்கள் மட்டுமே. இன்று சுமார் 30,000 கோடிக்குச்
சேவைகள் ஏற்றுமதியாகின்றன. உள்ளூர்ப் பயன்பாடும்
இருக்கலாம்.

தமிழ்ச் சந்தை என்பது மிகக் குறுகிய வட்டத்தில், அளவில்
அன்றும் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

80களின் இறுதியில் வொர்டுசார், வொர்டுபெர்பெக்டு என்ற
எழுதிகள் புகழ்வாய்ந்தன. ஆங்கிலத்தில் மட்டும் எழுதமுடியும்.
இன்றும் சட்டத்துறையில் வொர்டுசார்/வொர்டுபெர்பெக்ட்
செயலிகளை விடாது வழக்குரைஞர்கள் பயன்படுத்துவது எனக்கு
வியப்பையே ஏற்படுத்துகிறது.

எழுதிகள் சந்தையை மைக்குரோசாவ்ட்டு நிறுவனம் மெல்ல
மெல்ல முழுதாக விழுங்கியது. இன்றுவரை அதன் அலுவப்
புதுக்குகள் உலகில் ஆட்சி செலுத்திவருகின்றன.

90/91/92 காலங்களில் மைக்குரோசாவ்ட்டுவின்
விண்டோசுடன் (3.0?) எம்மெசு வொர்டு செயலியைப்
பயன்படுத்தத் துவங்கியதாக என் நினவு. அப்போது
அதில் எழுத்துப் பிழை, இலக்கணத் திருத்திகள்
இணைக்கப் படவில்லை என்பதே எனது நினைவு.
விண்டோசு 95க்குப்பின்னர் அவ்வசதிகளைப்
பயன்படுத்திய நினைவு இருக்கிறது.

89-90ல் தொடங்கி 22 ஆண்டுகளாக எம்மெசு அலுவப்
புதுக்குகள் சக்கைபோடு போட்டுவருகின்றதென்றாலும்,
கவனிக்க வேண்டிய விதயம், அதுவும் உலக அரங்கில்
தத்தித் தத்தி, கட்டம் கட்டமாகவே வளர்ந்துள்ளது.

1971ல் ஆங்கில எழுத்துப்பிழை திருத்திகள்
கண்டுபிடிக்கப்பட்டுப் பெருஞ்சட்டக் கணிகளில்
பயனுக்கு வந்திருக்கின்றன. அந்தக் காலக்கட்டத்தில்
எழுத்துப் பிழை திருத்திகள் ஆங்கிலப் பயனர்களுக்கு
நம்பிக்கையளித்ததில்லை. ஏனெனில் மனிதக்
கண்ணுக்கு மிகச்சாதாரணமாகத்
தென்படும் பிழைகளைக் கூட ஆரம்பக்காலத்
திருத்திகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர் ஆய்வு, முயற்சி, உழைப்பு, வளர்ப்பு,
கணித்துறை வளர்ச்சி ஆகியவையே பிழை,
இலக்கணத் திருத்திகளை ஆங்கில உலகுக்கு
வ\ளர்த்துத் தந்திருக்கிறது.

இன்றைய மைக்ரோசாவ்ட்டு வொர்டுடன் பிற
புதுக்குகளிலும், ஆங்கிலப் பிழை திருத்திகள்
இருக்கின்றனவெனில், அவை 40க்கும் மேற்பட்ட
ஆண்டுகளின் தொடர் வளர்ப்பின் முதிர்ச்சியே
ஆகும்.

இதனை எண்ணிப் பார்க்கும்போது மென்தமிழ்
என்ற சொல்லெழுதியின் ஒற்றுப் பிழை,
சந்திப்பிழை, மொழிப்பிழை திருத்தியொடு,
எம்மெசு வொர்டுவில் உள்ள பல/அனைத்து
வசதிகளையும் முதல் மூச்சிலேயே பெற்றுள்ள
மென்தமிழ் என்ற செயலி மிகவும் பாராட்டப்பட
வேண்டிய ஒன்று. எனது தமிழ்ச் சிற்றறிவோடு
சிறிது நான் சோதித்துப் பார்த்தவரை எனக்கு இந்தத்
திருத்திகளில் பிழைகள் தென்படவில்லை.

20+ ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வரும்
கணித்துறை வெற்றுக் கூலிச்சேவைத் துறையாகவே
வளர்க்கப் பட்டிருக்கிறது. வளர்ந்துவிட்ட
பெருங்கணி நிறுவனங்களான இன்போசிசு,
அடாட்டா கன்சல்ட்டன்சி, எச்சிஎல்,
காக்னிசண்ட்டு, விப்ரோ போன்ற நிறுவனங்கள்கூட
தனது வருமானங்களை கூலி வேலைகளில் ஈட்டுகிறதே
தவிர அவற்றிடம் உலகளாவிய புதுக்குகள் பெயர்
சொல்லும் அளவிற்கு இல்லை.

இந்தக் கூலித்துறையை வைத்துத்தான் இந்தியா
ஒரு "கணி வல்லரசு" என்ற தேசியகீதங்கள்
பாடப்படுவதுண்டு.

படைக்கும் திறனற்ற நாடாக, படைப்புகளில்
கவனம் செலுத்தாத நாடாக, அப்படியே
படைத்தாலும் தேறாத புதுக்குகளைப் படைக்கின்ற
போக்கினையே இந்தியக் கணித்துறை பழக்கிக்
கொண்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு
சொவ்வறைப் புதுக்கு, உலகளாவிய வசதிகள்
கொண்டு தமிழில் வெளிவருகிறது என்பது
மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கது. இதைச்
சொல்லும் அதே வேளையில், இது போன்று,
திருத்திகள் இல்லாது இதற்கு முன் வெளிவந்த
பதமி போன்ற புதுக்குகளையும் அந்தப்
படைப்பு முயற்சிக்காக மனமாரப் பாராட்டவே
செய்கிறேன். கூலிச்சேவை என்பதை விட
படைப்பு என்பதே வலிமையின் சான்று.

மென்தமிழ் என்ற எழுதியில் சேர்க்கப்பட்டிருக்கும்
தமிழ்க்கூறுகள் தமிழ்க் கணிமை வரலாற்றில்
ஒரு மைல்கல்.

தமிழறிஞர்களும், கணிஞர்களும் ஒருங்கிணைந்தால்
இதனையொத்த சொவ்வறைகள் தமிழில் பல்கிப் பெருகும்.

பயனர் சந்தை என்று பார்க்கும்போது, தமிழக அரசு
நிறுவனங்கள், பதிப்புலகம், மிடையங்கள்/ஊடகங்கள்,
எழுத்துலகம் ஆகியவற்றிற்கு இது மிகப்பெரிதும் உதவி
செய்யும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் தமிழ்ப்பிழைகள்
மண்டிக்கிடக்கின்றன, விளம்பர உலகிலும் தமிழ்ப் பிழைகளே
பெரிதும் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இது
மிக உதவியாக இருக்கும்.

இது தில்லிக் கணியுலகமோ, ஆங்கிலக் கணியுலகமோ
செய்த படைத்து நமது தலையில் திணித்ததல்ல.
தமிழ்நாட்டொருவரின் தனித்தமிழ்ப்படைப்பு.
கூகுளோ, மைக்குரோசாவ்ட்டுவோ செய்து, தமிழ்
வளர்ந்துவிட்டது என்று நாம் பெசிக்கொள்ளுமுன்னர்
தமிழர் ஒருவரின் தமிழ்நாட்டுத் தமிழ்ப் படைப்பு
என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இதனைச் செய்தமைக்காக பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்
அவர்களையும் அவரின் கணிஞர்களையும்
பாராட்டிப் பெருமையடைகிறேன். எசாரெம் பல்கலைக்கழகம்
இதனை ஆதரித்து உலகத்தரம் வாய்ந்த வெளியீட்டு விழா
செய்திருந்தது மிக உகப்பாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது.

தமிழின் கணிநுட்பப் படைப்பான இது தமிழ்நாட்டுக்குள்

மட்டுமல்லாது, கூகிள், மைக்ரோசாவ்ட்டு, ஆரக்கிள்
போன்ற நிறுவனங்களுடனும், வடநாட்டு மொழிசார்
நிறுவனங்களுடனும் கூட்டுறவு கொண்டு மிக
அகண்ட தமிழ்ச் சந்தையை உருவாக்குதற்கும்
வழிகாட்டியாக அமைந்து, மிகப்பெரிய வெற்றிகளை
ஈட்டவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தமிழர்கள் தங்களுக்கும், குறிப்பாகத் தங்களின் பிள்ளைகளுக்கும் வாங்கவேண்டிய சொவ்வறை! http://www.lingsoftsolutions.com/ என்ற தளத்தில் இச்சொவ்வறை
இருக்கிறது.


அன்புடன்
நாக.இளங்கோவன்
























Friday, April 20, 2012

பாரதிதாசன் வாரம் 2012

பாரதிதாசன் நினைவுநாள் கவிதை


எங்கெங்குக் காணினும் துரோகமடா - தம்பி
திராவிடம் அதன் மூலமடா - இங்கு
மங்கும் அறிவிடை கோடிகளை - அந்த
நாயின் களியொடெடுத்து ஆடுதடா! - தமிழ்
நாட்டினில் நாலு திராவிடமும் - வந்து
தமிழரெனச் சொல்லக் கேட்டதுண்டோ? - எனில்
கன்னித் தமிழுக்கு இழிவெனலாம் - அவள்
வன்னியில் வெம்பியது அதனாலடா!


அன்புடன்
நாக.இளங்கோவன்
21/04/2012

திராவிடத்தால் அழிந்தோம்! இனியாவது மீள்வோம்.

Wednesday, November 16, 2011

கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி3

பகுதி-3 கூடங்குளமும் சேதுக்கால்வாயும்

நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு
முன்னர் சேதுக்கால்வாய் வெட்டி அதன்வழியே
கப்பல் போக்குவரத்தைப் பெருக்க அன்றைய
தமிழக அரசு முனைந்தது.

அதனை ஏற்றவர் உண்டு. ஏற்காதவரும் உண்டு.
ஏற்றவர்கள் தமிழ்நாட்டின் வளம் பெருகும் அதனாற்
செய்யலாம் என்றனர். எனக்குக் கூட ஆரம்பத்தில்
அத்திட்டத்தின்பால் ஈர்ப்பு இருந்தது; விரைவில் மறைந்தது.

ஏற்காதவர்களிடம் இரண்டு விதமான முக்கிய
காரணங்கள் இருந்தன. ஒன்று, ஈழத்திற்கும்
தமிழகத்திற்கும் குறுக்கே இராமர் கட்டியதாக
நம்பப்படுகிற பாலத்தின் ஒரு பகுதி,
இத்திட்டத்தினால் உடைபடும் என்பதால்,
சமய நம்பிக்கை அடிப்படையில் மறுப்பாளர்கள்
எழுந்தனர்.

இன்னொன்று, சுற்றுப்புறச் சூழல் கெட்டுப்
போய்விடும் என்றும், மீனவர்களின்
வாழ்வாதரம் கெடும் என்றும்,
அரணப் பாதுகாப்பு பெரிய சரவலாகி விடும்
என்றும் எழுந்தனர் பலர்.

சேதுக்கால்வாய்த் திட்டத்தினால், சூழற்சமன்
கெட்டுவிடும் என்று எழுந்தவர்கள்
என்ன சொன்னார்கள்?

அப்பகுதியில் வளரும் பவளக்கொடிகள்(Coral reef)
அழிந்து விடும்; அவை அழியலாமா? என்று
வருந்தினர்.

அரியவகை மீன்கள் அழிந்துவிடும்; அதொடு
மீன்வளம் அருகிக் குறைந்துவிடும். அது
மீனவர்களின் நலனைப் பாதிக்கும் என்று
கவலைப்பட்டனர்.

அங்கே வாழும் கடற்குதிரைகள் (Seahorses)
இல்லாமல் போய்விடும் என்றனர்.
குதிரைகளோடு கடற்பசுக்களும் காணாமற்
போய்விடும் என்று உருகினர்.

இவற்றொடு, இக்கால்வாய் வெட்டப்பட்டால்
இந்தியாவின் எதிரிக் கப்பல்கள் எளிதாக உள்ளே
வந்துவிடத் தோதாகும் என்றும், அதற்கு இடம்
கொடுக்கலாமா? தேசக்காவற்கு ஆபத்தான
விதயத்தை நாம் தொடலாமா? நமக்கு தேசப்பற்று
வேண்டாமா? என்று தேசியகீதம் பாடினர்.

சேதுக்கால்வாயை மறுத்துப் பேசிய அதே
வாய்கள் இன்று கூடங்குளத்தை ஆதரித்துப்
பேசுகின்றன என்பது அதிர்ச்சியான ஒன்றாகும்.

தற்போது கூடங்குளத்தில் அணு உலை
மறுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த உலை இயங்கினால் அப்பகுதியில்
உள்ள கடற்புறச் சூழல், கதிர்வீச்சு, பாதுகாப்பு
ஏற்பாடுகள், போக்குவரத்து
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
பாதிக்கப்பட்டு மீன்வளம் கெட்டு,
மீனவர் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும்
என்கின்றனர்.

சேதுக்கால்வாயால் மீன்வளம் கெட்டு
மீனவர் வாழ்வாதாரம் கெடும் என்றவர்கள்
கூடங்குளத்தால் மீனவர் வாழ்வாதாரம்
கெடும் என்பதை ஏன் ஏற்கமறுக்கிறார்கள்?

கூடங்குள, கல்பாக்கம் உலைகள்
எதிரிநாடுகளால் தாக்கப்படக்கூடும்
என்ற அச்சத்தில் அவற்றிற்கு அதிகப்படியான
அரணச் செலவும் காப்பு ஏற்பாடுகளும்
செய்யப்படுகின்றன.

சேதுக்கால்வாய் வெட்டினால் அது
எதிரிக்கப்பல்களை எளிதில் ஈர்க்கும்
என்று கவலைப்பட்டவர்கள், இவ்விரு
உலைகளும் எதிரிகளின் இலக்காக
ஆகிவிடுமே என்று ஏன் கவலைப்படுவதில்லை?
அப்படி இலக்கானால் எதிரியால்
மட்டுமல்லாமல் உலையாலும்
தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்களே என்று
ஏன் அவர்கள் கவலைப்படவில்லை?

பரந்து விரிந்த அரபிக்கடல், வங்கத்திலிருந்து
விரியும் வங்கக் கடல் எல்லைகள் கடந்த
இந்தியப் பெருங்கடல் வழியாகவெல்லாம்
எதிரிகள் வருவதை விட, இந்தச் சிறிய
கால்வாய் வழியாக வந்துவிட்டால் என்ன
செய்வது என்று கவலைப்பட்ட தேசப்பற்றாளர்கள்
கூடங்குள உலையின் அரண முக்கியத்துவத்தை
ஏன் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்கள்?

பவளப்பாறைகள், பவளக்கொடிகள் என்று
கடலுக்குள் இருக்கின்ற சூழலுக்கும் கண்ணீர்
விட்டவர்கள் கதிரியக்கத்தால் மக்களுக்கு
வழிவழியாகப் பெரும் நோய்கள் ஏற்படும்
என்பதை ஏன் காதுகொடுத்தும் கேட்பதில்லை?

கடலுக்குள் வாழும் பவள சாதிக்குப் பரிந்து
வந்தவர்கள், தமிழ் நாட்டில் வாழும்
மனித சாதிக்கு ஏன் பவளக் கண்களைக்
காட்டுகிறார்கள்?

கடல்மீன்களுக்கும் வருந்தியவர்களின்
நல்லிதயங்கள் மனித உயிர்கள் என்று
வரும்போது அதை விட அதிகமாகவல்லவா
வருந்தியிருக்க வேண்டும்?

கடற்குதிரைகள், கடற்பசுக்கள்
போன்றவற்றிற்கு உருகிய நெஞ்சங்கள்
கூடங்குள மக்களுக்கு மட்டும்
கல்லாக இறுகிப் போன காரணம் என்ன?

கடலடிச் சூழற்கும் வருந்தியவர்கள்
நிலத்தின் மேலும் வாழ்கின்ற மக்களை
நீண்டகாலமும் பாதிக்கக் கூடிய
அணுசக்தியை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ஆமை, நண்டு, நத்தை, மீன், பவளம்,
புழு, பூச்சிகளுக்கும் உருகியவர்களுக்கு,
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அவலங்களை
எண்ணி உருகமுடியவில்லை.

அப்படியென்றால் அவர்களின் மனதும்
நெஞ்சும் எந்திரப் பொறிதானா?
தேவைப்படும்போது பொத்தானை
அமுக்கினால் நெஞ்சு ஈரமாகி மாந்தநேயம்
பெற்று உருகுவார்கள் போல!

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, October 25, 2011

கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி2

கூடங்குள அணு உலை வேண்டாம் என்றால்
மின்சாரத்திற்கு மாற்று என்ன? என்ற கேள்வி
ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது இயற்கை.
அதே வேளையில் மாற்று பற்றி எழுதுபவர்கள்
எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல.

உயர்சக்தி துறையில் பணி புரியும் எல்லாப்
பொறிஞர்களும் அறிஞர்களும் அணு உலைகளுக்கு
மாற்று பற்றி மிகநன்றாஅறிவர்.
அவர்களால் மட்டுமே மிகத் துல்லியமாக, சிறப்பாக
மாற்றுக்களைக் கூறமுடியும்.

அப்துல் கலாமுக்கு அணுமின்னுக்கு மாற்று தெரியாதா?
கலாமைப் போன்ற புகழ்பெற்ற தமிழக அறிஞர்,
பொறிஞர் பலருண்டு. அவர்களுக்கெல்லாம் தெரியாததா?

அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை
நிறுவச் சொன்னால் அருமையான மாற்றுத்திட்டங்களைச்
செய்யக் கூடியவர்கள்.

ஆனால் அவர்களாலும் அவர்களைப் போன்றவர்களாலும்
கூடங்குளம் வேண்டாம் என்று சொல்லவே முடியாது.
அரசாங்கப் பணி செய்து கொண்டு அரசாங்கத்தின் அரசியல்
விருப்புகளுக்கு மாறாக ஞாயத்தையும் உண்மையையும்
குடியரசு நாட்டில் சொல்ல முடியாது.

அணு உலைக்கு மாற்றாகப் பலரும் கூறுவது,
மரபுசாரா மின்சக்தி உற்பத்தியையே. அது கதிரொளி,
காற்று, கழிவு, கடலலை போன்றவற்றைப் பயன்படுத்தி
உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றாலைகளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவிடம்
மிக நீண்ட கடற்கரை உள்ளது. அதில் தமிழகத்தின்
கடற்கரை நீளம்தான் மிக அதிகம் (1076 கி.மீ).
மண்டலம் மண்டலமாகப் பிரித்து அந்தந்த மண்டலத்திற்குத்
தேவையான மின்சாரத்தைச் சிறிய சிறிய காற்றாலைகளில்
பெற்றுக்கொள்ளலாம். தற்போது தமிழ்நாடு/இந்தியா முழுவதும்
மின்சாரத்தை அனுப்புவதால் உண்டாகும் வழிஇழப்பையும்
தவிர்க்கலாம்.

ஒரு மெகாவாட்டு மின்சாரம் தயாரிக்கும் முனையலுக்கு
ஆகும் செலவென்ன தெரியுமா? 5 கோடி உரூவாய்.
இது ஒன்றும் ஆதாரமில்லாத வெற்றுத் தரவல்ல.
தமிழக அரசாங்கத்தின் காற்றாலைத் திட்டத்திற்கான
ஆவணத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசாங்கத் தரவு.
(படிக்க வேண்டிய ஆவணம்)
http://www.tn.gov.in/citizen/teda.pdf

அப்படியென்றால், 2000 மெவா காற்றாலை
மின்சாரத்திற்கு ஆகக்கூடிய செலவு 10,000 கோடி
உரூவாய்.

கூடங்குளத்தில் 2000 மெவா அணு மின்சாரம் உற்பத்தி
செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் 1000 மெவா
அளவுக்கு மட்டுமே வேலை முடிந்திருக்கிறது.

அதற்குள் ஆகியிருக்கும் செலவு என்ன தெரியுமா?
யாருக்கும் தெரியாது. ஆனால், 2007ஆம்
ஆண்டுக்குள்ளாக 17,000 கோடி உரூவாய்
செலவாகிவிட்டது என்பது எல்லோருக்கும்
தெரியும்.

10,000 கோடி உரூவாயில் யாருக்கும் இன்னல்
இல்லாமல், ஒரே இடத்தில் என்று இல்லாமல்
பரவலாக அமைக்கக் கூடிய எளிமையான,
மாசுக்கேடு இல்லாத காற்றாலை மின்சாரத்தை
விட்டுவிட்டு, குறைந்தது 25,000 கோடி உரூவாய்
செலவாகக் கூடிய இன்னலும் இடரும் மிகுந்த
அணு உலைத் திட்டம் எதற்கு?

கடற்கரையில் மட்டும்தானா காற்று? தமிழ்நாட்டில்
மேற்கு, கிழக்கு மலைத்தொடர்கள் உள்ளன.
அதுவன்றி பல குன்றுகள் உள்ளன. இவையெல்லாம்
காற்றாலைக்கு மிகப் பொருத்தமான சூழல்கள்.

வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்றுகள்
என்றும் வளமையானவை காற்றாலைக்கு.

உள்ளூர் ஆதாரங்களைக் கணக்கில் கொன்டு
திட்டங்கள் செய்ய வேண்டும். கடனுக்குக்
கிடைக்கிறதே என்றும், பகட்டாக இருக்கிறதே என்றும்
வெளிநாட்டுக்கு ஓடி ஓடி இந்தியர்களின் பணம்
வீணடிக்கப் படுகிறது.

உலகிலேயே பெரிய காற்றாலை நிறுவனங்களில்
இந்தியாவின் சுசலான் நிறுவனமும் ஆகும்.
துவங்கி பன்னிரண்டாண்டு காலத்துக்குள் இந்தியா முழுதும்
5000 மெகாவாட்டு மின் உற்பத்தியை அவர்களின்
காற்றாலைகள் செய்கின்றன. கூடங்குளத்திலும்
ஒரு சுசலான் காற்றாலை உண்டு. உலகின்
ஆறாவது பெரிய காற்றாலை நிறுவனம் சுசலான்.
http://www.suzlon.com/images/Media_Center_News/185_SEL%20-%20SE%20Press%20Release%20%205%20GW%2024.9.2010.pdf

இந்தியா வருங்காலத்தில் 31,000 மெவா
உற்பத்தியை 30 அணு உலைகளைக் கொண்டு
செய்யவிருக்கிறது. 2,000 மெகாவாட்டுக்கே 25,000 கோடி
என்றால் இந்த 31,000மெகாவாட்டுக்கு எவ்வளவு
செலவு? எவ்வளவு காலம் பிடிக்கும் என்று
எண்ணிப் பார்க்க வேண்டாமா?

காற்றாலை நிறுவனங்களை மேலும்
வளர்த்துத் தேவையான மின்சாரத்தில்
கணிசமான பகுதியை காற்றாலைகளின்
மூலம் விரைவில் பெறலாமன்றோ?

காற்றாலை மட்டும் போதுமா? என்றால்
போதாதுதான். கதிரொளி, கழிவுகள் என்று
வேறும் வழிகள் எவ்வளவோ உண்டே!

அரசாங்கங்கள் மேலும் பொறுப்புடன்
செயல்பட்டால் எவ்வளவோ செய்யலாம்தான்.

இலவசங்களை வாரி வாரி வழங்கும்
அரசாங்கங்கள் அவைகளை எல்லாம்
கதிரொளியில் இயங்கும் அரவைகள்,
கதிரொளியில் இயங்கும் தொலைக்காட்சிகளாக
இலவசமாகக் கொடுக்கலாமே?

பள்ளிக்கூடத்திலும் பிள்ளைகளுக்கு காலை,
மதியம் என்று இரண்டு வேளை சோறுபோட்டு,
வீட்டுக்கும் இலவசமாக அரிசி கொடுக்கும் மடத்தனம்
இந்த நாட்டு அரசுகளுக்கு மட்டுமே உண்டு.

நன்கு சிந்தித்துப் பாருங்கள். இரண்டு பிள்ளைகள்
படிக்கிற 4 பேர் குடும்பம் என்றால், பிள்ளைகளுக்கு
இருவேளைச் சோறு பள்ளிக்கூடத்தில்.
அவர்களுக்கும் சேர்த்து வீட்டிற்குத் தேவைக்கு மேல்
இலவச அரிசி. தேவைக்கு மேலே உள்ள அரிசி
எங்கே போகும்?

பொருளாதார மேதைகள் ஆளும் நாட்டில் மட்டும்தான்
இந்தப் பொருளியல் கொள்கைகளுக்கு வாய்ப்பு உண்டு.

அரிசி இலவசம் கவர்ச்சியாக இல்லையென்றால்
கணி இலவசம்!

இப்படியெல்லாம் செய்வதற்குப் பதில்,
கதிரொளியில் இயங்கும் மின்விளக்குகள்,
மின்விசிறிகள் போன்றவற்றைப் பள்ளிப்
பிள்ளைகளுக்கு இலவசமாய்க் கொடுக்கலாமே?

மக்களுக்கு அந்தவகையில் மின்சாரம்
தரவேண்டிய கடப்பாடு குறைந்துவிடுகிறதல்லவா?

அணு உலைக்குக் கொட்டும் காசை
கதிரொளி மின்வளர்ப்பிற்குத் திருப்பலாமே?

குசராத்தில் சுடுகாட்டையே
கதிர்-மின்-சுடுகாடாக்கியிருக்கையில்
கதிர்-மின் ஆற்றலை எப்படியெல்லாம்
அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்
என்று எண்ணிப் பார்க்க நிறைய இருக்கிறதே!

வெளிநாட்டு நிறுவனங்கள் என்றால் கையைக்
கட்டி வாயைப் பொத்தி மின்சாரத்தைத்
தடையின்றி தரும் தமிழக இந்திய
அரசாங்கங்கள் காற்றாலை வழியாக,
பெரிய இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள்
அவரவர் மின்சாரத்தை அவரவர்
பார்த்துக் கொள்ளவேண்டும் என்று
சொல்லலாமே?

1000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும்
எந்த நிறுவனமாயினும் அவரவர் மின்சாரத்தை
அவரவரே தயாரித்துக் கொள்ள முடியுமே?

சிறிய நடுத்தர நிறுவனங்களை விட்டுவிட்டு
1000 கோடிக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு
மின்சாரத்தில் சிறு பகுதியை மட்டும்
கொடுத்து, பெரும் பகுதியை அவர்களையே
மரபுசாரா முறையில் தயாரித்துக் கொள்ளச்
செய்ய முடியுமே.

அதை விடுத்து அப்பாவி பொதுமக்களை
நாளைக்கு 6 மணி நேரம் மின்சாரத்தை இழந்து
வாடவைத்துத்தான் வல்லரசு ஆக முடியுமா?

பல்வேறு வகையானும் அறிவுக்கூர்மையுடன்
அரசாங்கங்கள் செயல்படாமல், மக்களை
வாட்டி வதைப்பதோடு அணு உலைகள்
போன்ற ஆபத்துகளையும் அருகே
குடியேற்றுவதில் ஞாயம் இல்லை!

ஒருங்கிணைந்த பன்முகத்திட்டத்தைச்
செய்யவேண்டுமேயன்றி, மக்களை
வாட்டி வதைத்து நாட்டை முன்னேற்றுவோம்
என்பது அரசுகளின் கையாலாகாத நிலையையே
காட்டுகிறது.

கடந்த 8/10 ஆண்டுகளாக அரசியலைக்
கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
ஒரு பாராளுமன்ற, சட்டமன்றக்
கூட்டத் தொடராவது அடிதடியில்லாமல்
அசிங்கமில்லாமல் நடந்திருக்கின்றனவா?

இவர்களா அணு உலைகள் போன்றவற்றை
முறையாகப் பாதுகாக்கத் தக்கவர்கள்?

போபாலில் சொந்த நாட்டு மக்களுக்குப் பெரும் சேதம்
விளைவித்த யூனியன் கார்பைடு நிறுவன முதலாளியை
தனிப் பறனையில் இரகசியமாகத் தப்ப வைத்த
அரசாங்கங்களா நீண்ட நாளைக்கு அணு உலையில்
பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் பக்கம் நிற்கும்?

அம்மக்களுக்கு நீதி கிடைக்க 24 ஆண்டுகள் ஆயின.
24 ஆண்டுகள் கழித்து கிடைத்த இழப்பீட்டுத் தொகையை விட
சிறு கோயில் வாசலில் பிச்சையெடுத்து வாழும் பிச்சைக்காரன்
பன்மடங்கு சம்பாதித்திருப்பான்.

மிகப் பெரிய அறிவியல் அறிஞர்களை
எல்லாம் சமாதான ஏற்பாட்டிற்கு அனுப்புகிறார்களாம்.

கலாம் உள்ளிட்ட எந்தப் பெரிய அரசுப் பணி செய்த
பொறிஞராயினும், அறிவியல் அறிஞராயினும்
"போபால் விசவாயு விதயத்தில் அரசாங்கம் நடந்து கொண்டது
சரியில்லை; அம்மக்களுக்கு 24 ஆண்டுகள் கழித்துக் கொடுக்கப்
பட்ட மிகச்சிறு பணம் ஞாயமற்றது", என்று அறிக்கை விடுக்க
துணிவு உடையவர்களா? அது போலச் செய்திருக்கிறார்களா?

கண்டுபிடிப்புகள், அல்லது கட்டி அமைத்தல் ஆகியவற்றை
மட்டும்தான் அரசாங்கப் பொறிஞர்கள் அறிஞர்கள் செய்ய முடியும்.
அதைத்தாண்டி குமுகத்தில் மக்களுக்கு இன்னல் ஏற்பட்டால்
இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பேசமாட்டார்கள்.
அதற்குத் துணிவும் அவர்களுக்குக் கிடையாது.
ஆழ்ந்த அனுதாபங்களைக் கூட உயர் அரசுப்பணியாளர்களால்
சொல்ல முடியாது.

அப்படியென்றால், மக்களின் மனநிலைக்கு
எதிராக இவர்கள் சமாதானம் சொன்னால்,
இவர்கள் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும்
மக்கள் ஏன் கேட்கவேண்டும்?

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, October 21, 2011

கூடங்குளத்தில் கூடாத உலை!

மின்தடையால் நான்கு வருடங்களாகத் தவித்துக்
கொண்டிருக்கும் அதே தமிழகம் மின்சார உற்பத்திக்காக
கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ள
கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்துக்
குரல் கொடுக்கிறது.

மின்விசிறி, மின்விளக்கின் பயனை கடந்த 60/70
ஆண்டுகளில் துய்த்திருக்கும் தமிழகம், அதனை
உற்பத்தி செய்யும் விதங்களைத் தற்போது
ஊன்றிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது என்பது
மிக நல்ல மாற்றம்.

பொறியியல், அறிவியல் வயப்பட்ட தமிழகம்
அதில் தனது வாழ்வாதாரங்களையும், தனது
சந்ததிகளையும் தொலைக்கக் கூடிய ஒன்றை,
அது எப்பேறுபட்ட அறிவியலாயினும்
தூக்கி எறியத் தயாராகியிருப்பது மிக நல்ல
மாற்றம்.

1986ல் உருசியாவின் செர்னோபில் அணு உலை
வெடித்து பேரழிவை ஏற்படுத்திய ஆகப்பெரிய
அறிவியலைக் கண்டு உலகமே நடுநடுங்கிக் கிடந்தாலும்,
அவசர அவசரமாக 1988ல், அதே உருசியாவிடம்
சென்று கூடங்குளத்தில் உருசியாவின் அணு உலையைக்
கட்ட இந்தியா ஒப்பந்தம் போட்டது.

அதுவும் 4% வட்டி கட்டுகிறோம், இரண்டரை பில்லியன்
வெள்ளி கடனுக்கு அதைக் கொடுங்கள் என்று
ஒரு கடன்கார ஒப்பந்தம் போட்டது இந்தியா.
அன்றைய நிலையில், உருசியாவுடன் இவ்வளவு பெரிய
ஒப்பந்தங்களைக் கண்ட அமெரிக்காவிற்குக்
கண்கள் சிவக்காமல் இருந்திருக்குமா? என்பது தனிக்கதை.

1986ல் வெடித்த உருசிய அணு உலை, உடனடியாகவும்,
கதிரியக்கத்தால் ஏற்பட்ட பல படு பயங்கர நோய்களாலும்,
1986 தொடங்கி 2004ஆம் ஆண்டு வரை மட்டும் 9,85,000
மக்களைக் கொன்றுள்ளது.

http://www.redfortyeight.com/2011/05/01/chernobyl-death-toll/
http://richardbrenneman.wordpress.com/2011/03/25/the-chernobyl-death-toll-1000000-not-4000/

இன்னும் செர்னோபில் அணு உலையால் தொடர்ந்து
கொண்டிருக்கும் சாவுகளையும், எதிர்காலத்தில்
தொடரக்கூடிய சாவுகளையும் கணக்கிடும் அறிஞர்களின்
கூற்றுகள் நடுங்க வைக்கின்றன.

அணுத்துறை அறிஞர்களும் இந்திய உருசிய அரசியல்வாதிகளும்,
"செர்னோபில் அணு உலையில் இருந்த குறைபாடுகளைக்
கண்டறிந்து கூடங்குளம் அணு உலையில் அவ்வாறு
ஏற்படாதவாறு செய்யப்பட்டு விட்டது" என்று சொல்வது,
"கூடங்குளம் அணு உலை ஒருவேளை வெடித்துச் சிதறினால்,
அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன்பின்
கட்டப்படும் அணு உலைகளைச் சரி செய்துவிடுவோம்"

என்று சொல்வதாகவே எடுத்துக் கொள்ளமுடிகிறதே தவிர
பெரிதாக அணு உலை நுட்பத்தின்பால் பற்று
ஏற்படுத்துவதாக இல்லை.

"எந்த ஆலையானாலும், எந்திரங்களானாலும்
ஆபத்துகள் நிறைந்தே இருக்கின்றன - அதற்காக
நாம் அணு உலையை விட்டுவிடவேண்டுமா? -
என்று சில அரசியல், அறிவியல் துறைகள்
பரப்புரை செய்தாலும், "ஒரு தடவை வெடித்தால் -
நூறு தலைமுறை சாவும்" என்ற உண்மையை
செர்னோபில் நிறுவியிருக்கையில்,
தமிழகத்தில் அணு உலை தேவையா என்று
எண்ணிப் பார்க்க வேண்டியது மனிதசாதியின்
கடமை அல்லவா?


"கட்டத் தொடங்கும் போது என்ன செய்தீர்கள்? -
இப்பொழுது வந்து எதிர்க்கிறீர்களே" என்று
கேட்கும் அரசியல் பீடங்களும், அறிவியல் பீடங்களும்
ஒன்றை எண்ணிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.

"கற்றலும் பட்டறிவு என்பதும் வாழ்வியலின்
தொடர் கல்வி" என்பதை அவர்கள் தங்கள்
வசதிக்காக மறந்து விடுகிறார்கள். தாங்கள்
செய்ததை ஞாயம் என்று நிறுவ இயற்கையையும்
சந்ததிகளையும் காவு கொடுக்கத் தயாராகிவிடுகிறார்கள்.

நாசகார அறிவியலோடு அரசியலும் சேர்ந்து
கொள்ளும்போது அது மாபெரும் அழிவு
சக்தியாக உருவெடுத்துவிடுகிறது. அதன் பற்கள்
நீண்டு வெளியே தெரிகின்றன.

இந்தச் சக்தியை கேள்வி கேட்க சாதாரண
மக்களுக்கு எந்தநாளும் துணிவு ஏற்படுவதில்லை
தமிழகத்தில்.

அரசியல்வாதிகளே, அறிவியல் அறிஞர்களே,
"எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும்
காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே
விதைக்கும் முன்னர், எம்மை
ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"

"இது இன்னது இது இத்தன்மையது
என்று எங்களுக்குக் கல்வியூட்டியபின்
கட்டினீர்களா?"


"நாங்களாகக் கற்ற கல்வி! எங்கள் கல்வி
உலகில் நடந்த பேரழிவுகளை அலசிப்
பார்க்கச் செய்திருக்கிறது". அதன்
அடிப்படையிலேதான் இந்த அணு உலைகளை
மறுக்கிறோம் - என்று கூடங்குளத்திலே
மக்கள் எழுந்து, நாசகார அறிவியலின்
முகத்திலே கரிபூச நிற்பதிலே ஒரு
பெரிய அறிவு எழுச்சியை காணமுடிகிறது.

ஆனால், அரசும் அறிவியலும் தமது
கல்வியால் ஆணவத்தையே பெற்றிருக்கின்றன.
அந்த ஆணவத்தை கோடிக் கணக்கான
மக்கள் முன்னர் கொடியேற்றி வைக்கின்றனர்.

1988லே துவங்கப்பட்ட கூடங்குளம் அணு உலை
இன்றைக்கு 23 ஆண்டுகளாகி பல்லயிரம் கோடிகளை
ஏப்பமிட்டுள்ளது. அரணவ இரகசியங்கள் போல,
இதன் செலவுகள் வெளியே சொல்லப்படுவதில்லை.
2007ஆம் ஆண்டு வரைக்கும் ஆன செலவு மட்டுமே
17,000 கோடி உரூவாய்.

உருசியாவின் நட்பிற்கு விலை கூடங்குளம்.
அமெரிக்காவின் நட்பிற்கு அதைப்போல
20 உலைகளுக்கான ஒப்பந்தங்களை
இந்தியா போட்டிருக்கிறது. நீண்ட காலம் எடுக்கும்
அணு உலைத் திட்டங்களுக்கு நீண்ட கால நோக்கில்
போடப்பட்டிருக்கும் பொக்கீடு (budget)
20 இலட்சம் கோடிகள். இவ்வளவிற்கும் பின்னர்
இதன் உழைப்பு காலம் வெறும் 25 ஆண்டுகள்தான்.

அதாவது, இன்றைய கூடங்குளத்திலே 2000 மெகாவாட்
மின்னுற்பத்திக்கு உலை கட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவொடு திட்டமிடப்பட்டுள்

20 இலட்சம் கோடிகள், 20,000 மெகாவாட்டிற்கு
திட்டமிடப்பட்டிருக்கிறது. ஓவ்வொரு ஆயிரம் மெகாவாட்
மின்னளவிற்கும் ஒரு இலட்சம் கோடிகள்
திட்டமிடப்பட்டிருக்கிறது.

அறிவியல் அறிஞர்கள் சிலர், அணு உலையை
மறுப்பவர்களை "சாணியுகத்துக் காரர்கள்" என்று
சொல்கிறார்கள். அந்தச் சாணியைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் எளிய
முறையை கிராமந் தோறும் நிறுவினால்
பல இலட்சம் கோடிகள் தேவையே இல்லை.

தமிழகத்திலே 17,000 கிராமங்கள் இருப்பதாகப்
புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும்
தேவையான அடிப்படை மின்சாரத்தை 20-30 கோடி உரூவாய்
செலவில் செய்துவிட முடியும். அதாவது இரண்டு
2ஞீ அலைக்கற்றைப் பணத்திலேயே மிக எளிதாகச்
செய்ய முடிந்த ஒன்று.

கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு
வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்களாம்
அப்போது. ஆனால், இது வரைக்கும் பத்தே பத்து
பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில்
வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்டத்தில்
முக்கிய பங்கு வகிக்கும் உதயகுமார் சொல்கிறார்.
அதுவும் உருசிய மொழி தெரிந்திருக்க வேண்டும்
என்று வேண்டுகோளோடு வந்த விளம்பரமாம்!

சாணியுகம் என்று தாழ்வாகக் கருதக் கூடாது.
அந்தச் சாணியை வைத்து கிராமந்தோறும்
மின்சாரம் தயாரித்தால் பல்லாயிரக்கணக்கான
பேருக்கு உண்மையிலேயே வேலை கிடைக்கும்
என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அணு உலைகளுக்கு ஆபத்து தானாகவும் வரும்;
இயற்கையின் சீற்றத்தாலும் வரும்.
அதாவது,
ஆபத்து வரும் என்றால் அது எப்படி வேண்டுமானாலும்
வரும் என்பதுதான் அணு உலைகளின் நிலையாமை.
உருசியாவின் செர்னோபில் விபத்து தானாக வந்தது.
சப்பானின் புகுசிமா விபத்து இயற்கை சீற்றத்தால் வந்தது.

"தானாக வந்த விபத்தா?
இப்போது சரி செய்து விட்டோம்!

பூகம்பத்தால் விபத்து வருமா?
இந்தப் பக்கம் பூகம்பமே வராதுங்க! "

இப்படித்தான் சொல்கிறார்கள் கூடங்குள உலை
ஆதரவாளர்கள்.

அணுத்துறையில் இந்தியாவிலும் கனடாவிலும்
பல்லாண்டு காலம் பணிபுரிந்த முதிர்ந்த தமிழ்
அறிஞர் திரு.சி.செயபாரதன் அவர்கள்
கூடங்குளம் உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி
குறிப்பிடுகையில் அது கடல்மட்டத்தில் இருந்து 25 அடி
உயரத்தில் முன்னேற்பாடாகச் செய்யப்பட்டிருக்கிறது
என்று சொல்கிறார்.

http://jayabarathan.wordpress.com/kudangulam-reactor-safety/

இது பாதுகாப்பாகத் தோன்றலாம். ஆனால், சப்பானில்
அண்மையில் வந்த பேரலை 50 அடி உயரத்திற்கு
எழுந்தது. 3 மீட்டரில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை
பொதுவாக சுனாமி அலைகள் எழும். ஆனால்,
சப்பான் அலை 14 மீட்டர் (50 அடி) உயர்ந்தது.

இதைவிட, சப்பானில் 1993ல் ஒக்கைடோவில்
அடித்த சுனாமிப் பேரலையின் உயரமான அலை
32 மீட்டர் (100 அடி) எழுந்துள்ளது.


கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளில்
ஆகப் பெரியது அலாசுகாவில் 1958ல் நிகழ்ந்தது.
அதன் உயரம் 524 மீட்டர் (1720 அடி) என
பதிவாகியிருக்கிறது.


http://geology.com/records/biggest-tsunami.shtml

இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் பேரலைகளின்
உயரத்தை முன்கூட்டி அளந்துவிட முடியாது. வந்தபின்
அளப்பதைத்தான் அறிவியல் செய்துவருகிறது.

அவ்வளவு ஏன்?

2004 சுனாமி பேரலைகளால் தமிழகமும் தமிழீமும்
பேரழிவைச் சந்தித்தன. அப்போது தமிழர் கடற்கரைகளில்
எழுந்த அலைகளின் உயரம் 10.4 மீட்டர் (35அடி).
அதன்பின்னர் கடற்கரைகள் அப்படியேதான் இருக்கின்றன.
மூழ்கிவிடவில்லை.

ஆனால், தமிழக வரலாற்றில்
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"

என்று சிலப்பதிகாரம் சொல்லவில்லையா?

சிலப்பதிகார வரிகள், ஒரு மலையையே கடல்
விழுங்கியிருப்பதைக் கூறுவது நாம் அறிந்ததுதானே?

சோழர் தலைநகரமாக ஒரு காலத்தில் விளங்கிய
பூம்புகார் கடலுக்குள் மூழ்கி முகவரி இழக்கவில்லையா?

மாமல்லபுரம் மூழ்கிக் கிடப்பதை நாம் கண்டு
கொன்டுதானே இருக்கிறோம்?

கேரளத்திலே வஞ்சி மாநகரம் கடலில்
மூழ்கிப் போகவில்லையா?

1970களில் தனுசுகோடி கடலால் மூழ்கிப் போனதை
மறந்துவிட்டோமா?

இப்படித் தமிழகத்தின் கடலோரம் இயற்கைச் சீற்றத்தினால்
குறுகிப் போய்க் கொண்டிருப்பதை வரலாற்றிலும்,
நம் காலத்திலும் கண்டிருந்தும், போன நூற்றாண்டில்
1720 அடி உயர சுனாமி அலையை அலாசுகாவில்
பார்த்திருந்தும், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமியின்
கொடுமையை நாம் பட்டிருந்தும், வெறும் 25 அடி உயரத்தில்,
கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம்
உலை பாதுகாப்பற்றது என்று மறுப்பதில்
தமிழ் மக்களிடம் என்ன குறையை யார் காண முடியும்?

அணு அறிஞர் செயபாரதன் கூறுவது போல, சில
பாதுகாப்புக் கருவிகளை கூடங்குள உலையில்
நிறுவியிருக்கலாம். ஆனால், கால காலமாக
கடற்கரையை மூழ்கடிக்கும் அலைகளைப் பார்த்து
வரும் தமிழகத்தின் முன் இந்த அணு உலைகள்,
"நிறுவப்பட்டிருக்கும் அணுகுண்டாகத்" தெரிவதில்
வியப்பென்ன?

மிக அதிகமாக அணு உலைகளை நிறுவிவரும்
சீன நாடு, புகுசிமா விபத்திற்குப் பின்னர்

தற்போது நிறுவத்தில் இருக்கும் 7 உலைகளை
தற்காலிகமாகவேனும் நிறுத்தியிருக்கிறது. உலகில்
பல்வேறு நாடுகளும் அணு மின் உலைகளை
மீளாய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

அணுத்துறை அறிஞராக சி.செயபாரதன்,
அணு உலையை ஆதரித்தாலும், அவருக்கும் இருக்கும்
அச்சத்தினால்தான் அவர் அணு உலைகளை
"நாட்டுக்குத் தேவையான தீங்குகள்" என்று வருணிக்கிறார்.

அவருக்கும் கூடங்குள மறுப்பாளர்களுக்கும் இருக்கின்ற
ஒரே வேறுபாடு "நாட்டுக்குத் தேவையற்ற தீங்கு" என்பது
மறுப்பாளர் கருத்தாகவும், "நாட்டுக்குத் தேவையான தீங்கு"
என்பது அணு அறிஞர் செயபாரதனொடு அவரைப் போன்ற
ஆதரவாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

ஆக, யாருமே இதனை "நல்லது" என்று சொல்லவில்லை.
மாறாக "தீங்கு" என்றே சொல்கிறார்கள்.

அமெரிக்காவில், 104 உலைகள் உள்ளன. 77% அமெரிக்க மக்கள்
1977ல் அணு உலை ஆதரவாளராக இருந்துள்ளனர் என்றும்
திரிமைல் விபத்து, செர்னோபில் விபத்து, புகுசிமா விபத்து
ஆகியவற்றிற்குப் பின்னர் அமெரிக்கர்களின் அணு உலை
ஆதரவு என்பது மிகக் குறைந்து 43% ஆகி விட்டது
என்று திரு.செயபாரதன் கூறுவது கவனிக்கத் தக்கது.

http://jayabarathan.wordpress.com/2011/10/18/nuclear-power-status-2011/

அது மட்டுமல்ல, அணு உலைகளையும் அணுவியலையும்
முழுமையாக ஆதரிக்கும் செயபாரதன் அவர்களே,
"இந்த அணு உலைகள் பூமிக்கடியிலே, பாதாளத்திலேதான்
கட்டப்படவேண்டும்; அதுவே சிறந்த பாதுகாப்பு" என்று
கூறுகிறார்.


http://jayabarathan.wordpress.com/2011/10/05/world-nuclear-power-status/

"கரணம் தப்பினால் மரணம்" என்ற அறிவியலின்
அணு உலைகளை தமிழத்தில் அமைப்பதை
முழுமையாக நிறுத்த வேண்டும்.

நமது கடற்கரைகள் வரலாற்றுக் காலந்தொட்டு
பேரலைகளுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும்
உட்பட்ட பகுதியாகும்.

இதை மறுத்து செய்யப்படும் கூடங்குள முயற்சி
தமிழ் மக்களின் வாழ்வுக்குப் பொருத்தப்படும்
"2000 மெகாவாட் அணுகுண்டன்றி வேறல்ல".

1977ல் அணு உலைகளை ஆதரித்த அமெரிக்கர்கள்
இன்று அதனைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.

1988ல் அணு உலையைப் பற்றிக் கவலை கொண்டிராத,
அல்லது அறியாதிருந்த தமிழர்கள் இன்று
மறுத்தெழுந்திருக்கிறார்கள்.

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" அன்றோ?

இப்பொழுது கட்டிவிட்டார்களே என்ன செய்யலாம்?

தமிழகம் நெற்களஞ்சியம்தானே!
தென்னைமர உயர அண்டாக்களையும்
கும்பாக்களையும் கட்டியிருக்கும் கூடங்குள அணு உலையை
உலகத்திலேயே ஆகப்பெரிய அரிசி ஆலையாக மாற்றலாம்.
அதைத்தவிர வேறேதும் செய்ய முடியுமா என்பதை
அப்துல்கலாம், செயபாரதன் போன்ற தமிழக அறிவியல்
அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுத்தலாம்.

அணு மின்சாரத்திற்கு மாற்று பற்றியும் பிறவற்றையும்
தொடர்ச்சியில் காணுவோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்








Sunday, July 31, 2011

கணேச கிளியம் - தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்

நூற்பெயர்: கணேச கிளியம்
வகை: இலக்கணம் - 23ஆம் நூற்றாண்டு
"தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்" பற்றியது,
நூலாசிரியர்: நாக.இளங்கோவன்
பதிப்பாசிரியர்: தமிழ்ப்பூட்டன் கு.கே.இராமநாத சேர்வை

நூற்குறிப்பு:


இந்நூல் 23 ஆம் நூற்றாண்டில் விளங்கிய உயர்ந்த
தமிழாராய்ச்சி மரபுகளைத் தொகுக்கும் தமிழாராய்ச்சி
மரபு இலக்கண நூலாம். மெல்ல மெல்ல உருவாகி
வந்த இந்தத் தமிழாராய்ச்சி மரபு கணேசபுலவர் என்ற
தொல்பெரும் புலவரால் பெரிதும் ஓம்பப்பட்டதாகும்.
அதனாலேயே இவ்விலக்கண நூல்
கணேச கிளியம் என்று பெயர்பெற்றிருக்கிறது.

"கணேச புலவர்க்கு ஒப்பாரும் மிக்காரும்
இப்புவியிற் காண்டலரிது" என்று
புகழப்பட்ட கணேச புலவர் அடங்கோட்டு
ஆசானிடம் தமிழ் பயின்றவர். எல்லாவற்றையும்
தப்புத் தப்பாய்ச் சொல்லி அடம்பிடிக்கும்
கலையைக் கசடறக் கற்றுத் தந்த அடங்கோட்டாசாற்குக்
கடமைப்பட்டுள்ளேன் என்று
கணேசகவியில் குறிப்பிட்டுள்ளமை காண்க.

கணேசபுலவர் 23ஆம் நூற்றாண்டில் உலகில்
விளங்கிய அத்தனை மொழிகளின்
இலக்கணங்களையும் இலக்கியங்களையும்
கற்றுத் துறைபோகிய ஒரே புலவர்
என்பதால் இவரை ஊழிப்புலவர் என்றும் வழங்குவர்.

இவரிடம் எந்த மொழி இலக்கிய/இலக்கணக்
கேள்வியைக் கேட்டாலும் இமைப்பொழுதில்
அதற்குத் துல்லியமான விடையையும் அந்த
மொழி வழங்கும் நாட்டைச்
சுற்றியுள்ள 30 நாடுகளின் இலக்கியச்
சான்றுகளையும் வழங்குவார் என்பதே
இவரின் திறத்தினைப் பறைசாற்றுகின்றது.

அஃதோடு ஒவ்வொரு நாட்டிலும் அலையும்
பேய்கள் அடுத்த நாட்டில் போய்ப்பேச முடியாமை
கண்டு இரங்கி அதற்கு ஏதுவாக பேய்மொழிச் செந்தரம்
ஏற்படுத்த அயராத் உழைத்தார் என்று சொல்வார்கள்.

இதற்குத் தோதாக அம்மொழி எழுத்துக்களுக்கெல்லாம்
சீர்திருத்தம் வேண்டி மொட்டை போட்டு
முக்காடிடும் முறையைக் கண்டுபிடித்ததால்
ஆவிஎழுத்தச்சன் என்றும் பெரியோர் புகழ்கின்றனர்.

மேலும் குறிப்புகள் பாகம்-2ல் காண்க.

பதிப்பாசிரியர் குறிப்பு:

காண்டற்கரிய இவ் இலக்கண நூலின்
முதற்பாகத்தைத் தமது கடுமையான
உழைப்பினாற்றேடி இத்தமிழ் உலகிற்கு
நல்கியவர் தமிழ்ப்பூட்டன் என்று
அன்போடு அழைக்கப்படும் கு.கே.இராமநாத சேர்வை
அவர்களாவார். இவர் 25ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
பேரறிஞர்களுள் ஒருவராவார்.
அப்பெருந்தகை காலமாகிவிட்டபின்
பாகம்-2 முதல் 27வரை எங்கிருக்கென்று
கவலைப் பட்டுத் தேடியே தமிழுலகம்
இளைத்துவிட்டது என்றால் மிகையல்ல.

நூலாசிரியர் குறிப்பு:

நாக.இளங்கோவன், 24 ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர் என்று ஒரு சாராரும், கணேசபுலவர்க்குச்
சமகாலத்தவர் என்று ஒரு சாராரும்
சொல்கின்றனர். எது எப்படியெனினும்
கணேசபுலவரும் நாக.இளங்கோவரும்
ஒருவருக்கொருவர் மாறாத அன்பு பூண்டவர்
என்பதை மட்டும் அவர்களின் பல்வேறு
மின்னஞ்சல்களில் காணக் கிடைக்கிறதென்கிறார்
அறிஞர் கெ.தோ.மீ. (மின்னஞ்சல்
என்ற சொல் "மினஞ்சா" என்ற
சமசுக்கிருதச் சொல்லில் இருந்து தமிழ் கெஞ்சி
வாங்கியது என்று தூய தமிழ்ப்புலவர்
கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது;
மினஞ்சா > மின்னஞ்சா > மின்னஞ்சல்).

இளங்கோவன், கணேசபுலவர் ஆகியோர்
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள
நகுளாச்சி என்ற பகுதியில் வாழ்ந்து
தமிழ்த் தொண்டாற்றியவர்கள் என்று ஒரு
சில பகுதிகளில் புராணக் கதை கட்டி
விடுவார்களுமுண்டு.

இளங்கோவன் என்ற பெயர் இ72ள43ங்108கோ99வ17ன்33
என்ற வடசொல்லில் இருந்து தமிழுக்குக்
கள்ளத்தோணியில் வந்திறங்கியது என்று
கணேசகிளிய மரபினர் மிகத்தெளிவாக
நிறுவியிருக்கின்றனர் என்பதே
இம்மரபின் புகழைச் சொல்லா நிற்கும். இந்த
நூலுக்கு உரை வகுக்க எந்த அறிஞராலும்
எந்தக் காலத்திலும் முடியவில்லை என்பதால் நூலாசிரியரின்
வழித்தோன்றலான ஆறாம் இ72ள43ங்108கோ99வ17ன்33
என்பவர் வேறுவழியின்றி எழுதியிருக்கின்றார் என்று
அறியமுடிகிறது. மேலும் குறிப்புகளை
பிற பாகங்களில் கண்டுகொள்க.

பாயிரம்:

இவ் இலக்கணத்தின் பெருமையறிந்த
தமிழறிஞர்கள் ஒட்டுமொத்தமாக
வாழ்த்தி பன்னூறு பாயிரம் தந்ததால்
எந்தப் பாயிரத்தை முன்னே வைப்பது
என்று குழம்பியும், இலக்கணத்தை விட
பாயிரங்கள் நீண்டுவிட்டதாலும்
அடக்கம் கருதி பாயிரத்தை ஆசிரியர்
நூலோடு சேர்க்கவில்லை என்றும் அறிக.

கடவுள் வாழ்த்து:

ஆங்கிலர் பார்க்கையில் அவர் சிலுவை போற்றி!
ஆதாயம் கிடைக்கையில் பிறையே போற்றி!
அம்மை பார்த்தால் அம்பாள் போற்றி!
அக்கைக் கண்டால் சிவனே போற்றி!
தெரியாவிட்டால் சமணன் போற்றி!
தெளிவைத் துறந்தால் புத்தன் போற்றி!
தேவைப் படுகையில் பெரியார் போற்றி!
தமிழைக் கெடுக்கெனின் பேயே போற்றி போற்றி!!

தந்திரம்-1 - கணேசகுடுக்கு


நூற்பா-1:
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
குடாக்குடு குடுகுடாக் குடகுட

உரை:

கணேசகிளிய மரபினர் தமிழ் ஆராய்ச்சிக்குள்
பாயும்போது தமிழர்களின் பின்யாம
இசைக்கருவியான குடுகுடுப்பையின் ஓசை இயல்பாக
எழும். "அது ஒன்றே போதும் இந்த ஆராய்ச்சிமரபு தெய்வத்தன்மை
வாய்ந்தது என்று சொல்வதற்கு" என்று பேரறிஞர் கொ.மு.செ
கூறியிருப்பது காணத்தக்கது.

ஈற்றுச் சீரான "குடகுட" என்று நூற்பாவில்
சொல்வது குடுகுடுப்பைக்காரர்
அன்றோ மறுநாளோ பகற்பொழுதில்
வீட்டுக்கு வந்து "கழிப்புக் கழித்தல்"
செய்வதையே குறிக்கிறது என்றும், அதன்படி
தமிழாராய்ச்சியில் தப்பித் தவறி யாரும்
"இது தமிழ்ச்சொல்" என்று சொல்லிவிட்டால்
அச்சொல்லுக்கும் அவருக்கும் கழிப்புக் கழிக்கும்
மரபையே இது குறிக்கிறதென்பதை நிறுவுகிறது என்று
சீலசிறீஆர்ப்பொலா கூறியிருப்பதை அனைவரும்
ஏற்றுக்கொள்கின்றனர். இதன் இலக்கணச் சிறப்பை,
ஈற்றடியில் மெல்ல மெல்ல மெலியும் டகரத்தில்
இருந்து அறிக.

தந்திரம்-2 - க'சிகாமணி

நூற்பா-2:

அள்ளி வீசுதலா யிரமாந் தலை
யாயிரம் வீசுதற் போல!

நூற்பா-3:

அள்ளி கிள்ளி உள்ளி நள்ளி!

உரை:

நூ-2ல் அள்ளி வீசுதல் என்பது யார் என்ன
எழுதுகிறார்கள் என்பது பற்றி
அக்கறை கொள்ளாமல், குறிப்பாக 247க்குட்பட்ட
தமிழைப் பற்றிப் பேசும்போது அதைத் தாண்டி
உலகில் இருக்கும் எல்லா எழுத்துக்களைப்
பற்றியும் ஆயிரம் மின்னஞ்சல்களுக்கு அள்ளி
வீசுவதாகும்.

கோட்டை மதிலில் அம்புகள் அள்ளி வீசுதற்கு
வைக்கப்பட்டிருக்கும் பொறிகளை ஆழ்ந்து கவனிக்க.
அத்தன்மையது ஈதென புலவர் கூறுவர். ஆயினும்,
வலைநாட்டு வெண்ணாப்புலவர் ஒரு நுண்ணிய
வேறுபாட்டைக் குறிப்பிடுவர்.

அஃதாவது, கோட்டை மதிற்சுவரில் இருந்து எறியப்படும்
பன்மை அம்புகள் கோட்டைக்குப் புறத்தே உள்ள
எதிரிகளைப் போய்ச் சேரும் எனவும்,
கிளியமரபினர் அள்ளி வீசும் அம்புகள் கோட்டைக்கு
உள்ளுக்கே அம்புகள்எய்தும் தன்மையன என்பதுதான்
அவ்வேறுபாடு என்று கூறுவர்.

தலையாயிரம் என்று சொன்னது தமிழுலகின்
மிகத் தொன்மமான ஆயிரந்
தலை வாங்கிய அபூர்வ சிகாமணி என்ற
கதையைக் குறிப்பதாகும். அப்படியான
வியக்கத் தக்க மரபுகளைக் கொண்ட கிளிய மரபு
தமிழாராய்ச்சியில் உயர்ந்தோங்கி நின்ற காலம்
23ஆம் நூற்றாண்டாகும். 23 என்றாலே அக்காலக்
கட்டத்தில் சிரிப்புக்குப் பெயர்போன திரைப்படங்கள்
ஓடின என்பது உள்ளுறை உவமமாக இந்நூற்பாவில்
தொக்கி நிற்கிறதென்பர் பெரும்புலவர்.

நூ-3 ஒரு சிறந்த சூத்திரம் என்று காகசாமி அவர்கள்,
நிலவில் தமிழ்க் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த
குறிப்பில் எழுதியிருக்கிறார். அஃதாவது, அள்ளி
என்ற சொல்லுக்கு நூ-2 விளக்கம் கூற, அப்படி
அள்ளி வீசும் அஞ்சல்களில் ஏதேனும் தமிழுக்கு
இனியது என்று கண்டால், கண்டமாத்திரம் கிள்ளி விட்டுப்
பின் எறிவது என்ற உயர்ந்த மரபை தமிழ்க்குலம் போற்றியது வியக்கத்தக்கதாகும்.

இங்கே கிள்ளி என்ற சொல்லாட்சியை
இலக்கண ஆசிரியர் உருது மொழியில்
இருந்து ஒத்திக்கு வாங்கி வந்து
பயன்படுத்தியிருக்கிறார் என்று நக்கீரர்
பரம்பரையில் வந்த அத்தனைப் புலவர்களும்
பண்ணோடு புகலுவதைக் கவனிக்க.

உள்ளி என்பது, இப்படி அள்ளி கிள்ளியவற்றை
உள்ளிடுதல் என்ற வினையைக்
குறிக்கிறது. நள்ளி என்பது இப்படிச் செய்ததால்தான்
தமிழ் ஆராய்ச்சியின் தரத்தை அழிவுக்குக் கொண்டு
செல்ல ஏதுவாக பல நட்புகளை இந்த மரபு ஈட்டித்
தந்ததை விவரிப்பதாக அமைகிறது. இந்தத் தந்திரத்தின்
பயனைக் குறிக்கும் சொல்லாக நள்ளி என்ற
சொல்லை அறிஞர் கருதுவர்.

இந்த "அள்ளி கிள்ளி"யை க'சிகாமணி
தந்திரத்தின் ஒரு உத்தியாக ஆசிரியர்
நாட்டியிருக்கிறார் என்று சிலரும்,
இல்லை இல்லை ஆசிரியர் இதனைத் தனியே
ஒரு தந்திரமாக வைத்தது நாளடைவில்
ஒரு தந்திரத்தின் உள் அமையுமாறு
ஆகிவிட்டது என்று சிலரும் ஆதாரங்
காட்டுதற் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

தந்திரம்-3: கணேசமெய்

நூற்பா-4:

மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய்
மெய் மெய்
பொய்

உரை:
ஒரு பொய்யை மெய் என்று சொல்வதற்கு
கணேசகிளிய மரபினர் கையாளும் தந்திரத்தை
எடுத்தியம்புமாறு இந்நூற்பா அமைந்திருக்கிறது.
இது நூற்பாவா சித்திரகவியா என்ற பட்டிமன்றம்
இன்னும் தமிழாராய்ச்சி உலகில் ஓய்ந்தபாடில்லை.

இதைச் சித்திரகவி என்போர் மெய் என்று 27 முறை
எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இது
தமிழ் சோதிட/வானியலில் சொல்லப்பட்டிருக்கும்
27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்று அறுதியிட்டுச்
சொல்வர்.

என்னையெனின், ஒரு பொய்யை
மெய் என்று சொல்ல 27 நட்சத்திரங்களையும்
சாட்சிக்கு அழைக்கும் மெய்யியல் சார்ந்த
தெய்வீக நூற்பா என்று எல்லாச் சமயப் புலவரும்
சமயக் குரவரும் ஒத்துக் கொண்டிருப்பதே இதன்
திறன் சொல்கின்றதறிக.

27 மெய் அடுக்கினது பொய்யை மெய்யாக்கப்
புனைய வேண்டிய அழுத்தங்களக் கோடிட்டுக்
காட்டலன்றி வேறியாதுமிலை என்று
சிலர் பகுத்தறிவின் துய்ப்போடு
இயம்புதலையும் ஒப்புநோக்கல் தகுமென்க.

ஆயினும், இந்த நூற்பாவை கலைமகள் திருநாளில்
வழிபட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்பவர்கள்
கிளியமரபினர் என்று ஒன்பான் விழாக்குறிப்பில்
காணப்படுவதையும் உற்றுநோக்குக.

நூற்பா-5:

எழுதற்க மெய் பொய் யுரேனசுக்கு!

உரை:
எந்தக் காலத்திலும் எப்படிப் பட்ட
இடர் நேரினும் மெய்யை எழுதாதீர்கள்.
பொய் என்றால் அதனை ஆவணமாகப்
புனைந்து புதன் தொடங்கி யுரேனசு
வரை எல்லாக் கோள்களுக்கும் அனுப்பி வைக்க.

மிக எளிமையான இந்த நூற்பாவை
தமிழாராய்ச்சி மரபினர் உயிரின் மேலாகப்
போற்றிக் கடைப்பிடித்தனர் என்பது வரலாறாய்
ஓங்கி நிற்கிறது.

யுரேனசு வரை பொய் ஆவணத்தைக்
கணேசகிளிய மரபினர் தமிழைத் தொலைக்க
ஆவணங்கள், கடிதங்கள் வழியே அனுப்பிய அந்தக் காலம்
தமிழின் பொற்காலம் மட்டுமல்ல தமிழாராய்ச்சி உலகம்
கொடிகட்டிப் பறந்த காலமாகும்.

அந்நாளை, தமிழர்கள் மறக்காமல் இருக்க
யு.மு, யு.பி (யுரேனசுக்கு முன், பின்) என்ற ஆண்டுக்
கணக்கைத் தொடங்கி இருப்பது தமிழாராய்ச்சி
மரபின் புகழைக் கூறா நிற்கும்.

தந்திரம்-4 - கணேசநகை

நூற்பா-6:

பொய்யில கேட்கின் பொய்யில கேட்டோய்
பொய்யில சொல்வான் முனைவன் அல்லன்
முனைவனுமாயின் தமிழினில் அல்லன்
தமிழினில் ஆயின் அவன் தமிழ் பொய்யேஎ!

உரை:

கணேசகிளிய மரபினரின் தமிழாராய்ச்சி
நேரத்தில் யாராவது வந்து "ஐயா, இது இப்படி
இருக்கலாங்களா" என்று சொன்னால்
"யாரது, நீ ஒரு முனைவரா?" என்று எள்ளி
நகையாட வேண்டும். அஃதாவது முனைவர்
பட்டம் பெற்றவரா? இல்லையெனில்
தள்ளிப்போ என்று சொல்லவேண்டும்.
இதுவே தமிழாராய்ச்சி தருமம் ஆகும்.

அப்படியும் ஆமாம் ஐயா நானும்
ஒரு முனைவன் என்று சொன்னால்
கானா நாட்டு பானா அறிஞர் என்ன
சொல்லியிருக்கிறார் தெரியுமா?
என்று கேட்பார்கள். தெரியும் ஐயா
என்று சொன்னால் - ஏ-ஏ-ஏ-ஏ
கானா தெரியும்னா -
உன்க்குச் சீனா நாட்டு மூனா அறிஞர்
தெரியுமா? என்று பாடிச்
சிரிப்பார்கள் கிளியமரபினர்.

அதையும் தாண்டி தெரியும் என்பதை நிறுவினால் -
"நீ தமிழில் முனைவர் பட்டம் வாங்கினியா?"
என்று முறைப்பார்கள். அரசாங்கத் தமிழ் வேலை
பார்த்தியா என்பார்கள்!

அதையும் தாண்டி ஆமாம் தமிழில்
வாங்கியிருக்கின்றேன் என்று
யாருஞ் சொன்னால் ஏற இறங்கக்
கண்ணைப் பார்ப்பார்கள். இதற்கு
நிறைய பட்டறிவும் துய்ப்பறிவும் தேவை.
(இந்தக் கண்பார்க்கும் வித்தையைக்
கற்றுக் கொள்வது கடினம். அரைகுறையாகக்
கற்றுக் கொண்டு அல்லாடும்
கிளியமரபினரைக் கண்டால் புரியும்)

கண்கள் கெஞ்சின என்றால்
ஏற்றுக்கொள்வர். மாறாக கண்களில்
தமிழோ அறிவோ தெரிந்தால்
"சீ போ - நீ பொய்" என்ற கவிதையைப்
பாடி அனுப்பிவிடுவார்கள்.

இஃது தமிழாராய்ச்சி மரபின் மிக முதிர்ந்த
நிலையைக் காட்டுகிறது என்பர் அறிஞர்.

தமிழ்நாட்டிலே தமிழ் முனைவர் பட்டம்
வாங்கியிருந்தாலும், பட்டம்
வாங்கினவருக்குத் தமிழ் தெரிந்தால்
அவரை இந்த ஆராய்ச்சி மரபு
ஏற்றுக் கொள்ளாது என்பதுதான்
இந்நூற்பாவின் உட்கருத்தாகும்.

ஏனென்றால் கிளியமரபினருக்குத் தெரியும்,
தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம்
பெறுதற்குத் தமிழே படிக்க வேண்டியதில்லை என்பது.
அதையும் மீறி தமிழ் கற்று முனைவரானவர்
உளர் என்பதும் அவர்கள் பாடு திண்டாட்டம் என்பதும்
அவரறிவர். இந்த அரிய கருத்து இந்நூற்பாவில்
இறைச்சியாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்த
புலவர்கள் இதனை எல்லாப் பல்கலைக்
கழகங்களின் பாடத்திட்டத்திலும்
சேர்த்திருக்கிறார்கள் என்பது சிறப்புச் செய்தியாம்.

தந்திரம்-5 - கணேசகிளியம்

நூற்பா-7:

கிளி பிடி கிளி பிடித்தக் கிளி

நூற்பா-8:

பிடிகிளிச் சொறிவளர்ச் செறிகிளி
எறியிரு தருமொரு வழி

உரை:

கிட்டற்கரிய இந்த இலக்கண நூலுக்குப்
பெயரைத் தந்த தந்திரம் இஃதென்பது
இத்தந்திரத்தின் சிறப்பு. இதில் தமிழாராய்ச்சி
செய்து எடுக்கும் முடிவுகளைப்
பற்றிய ஒரு முறை விளக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் பல முறைகள் பிற
பாகங்களில் காணப்பெறலாம்.

தமிழரின் தொன்மையான வழக்கங்களில்
ஒன்று கிளியிடம் சீட்டெடுக்கச்
சொல்லுதலாகும். இந்த முறையை ஒரு சொல்
தமிழா அல்லது சமசுக்கிருதமா
என்று கண்டறியப் பயன்படுத்தி
வெற்றி கண்டவர் கிளியமரபினர்.

"கிளி பிடி கிளி பிடித்தக் கிளி" என்றது
கிளியைத் தேர்ந்தேடுக்கும் முறையைப்
பற்றியதாகும். கொஞ்சம் விரைப்பான கிளியைப்
பிடிக்கக் கூடாதென்றும் அஞ்சும் தன்மை
கொண்ட கிளியே தமிழாராய்ச்சிக்கு
உகந்ததாகும் என்பது முக்கியமானதாகும்.

நூ-8ல் பிடிகிளி என்றது பிடித்த கிளியைக்
கூண்டுக்குள் வைத்துப் பேணுவதைச் சொன்னது.

சொறிவளர் என்றது அந்தக் கிளி
சற்று நோய்வாய்ப்பட்டுச் சொறி சிரங்கோடு
இருந்தால் சொல்லுகின்ற வினையாற்றும்
என்ற நம்பிக்கை பற்றியதாகும்.

செறிகிளி என்றது, அப்படியான கிளிக்கு,
சீட்டு எடுக்கும் கல்வியைக் கிளியமரபினர்
கற்றுத்தருவதைச் சொன்னதாகும்.

எறியிரு என்றது, கிளியின் முன்னர்
இரண்டு சீட்டுக்களை எடுத்துப் போடுவதாகும்.

தருமொரு வழி என்றது, அந்தக் கிளி
அந்த இரண்டில் ஒன்றை எடுத்துத்
தருவதைச் சொல்லியதாகும்.

முக்கியச் செயலாக, வடசொல்லா
தமிழ்ச்சொல்லா என்றறியவேண்டுமானால்
அந்தக் கிளிக்கு முன்னால் கிளிய
மரபினர் இரண்டு சீட்டுக்களைப் போடுவார்கள்.

அந்தக் கிளி எடுத்துத் தரும் சீட்டை
அப்படியே தமிழாராய்ச்சி மன்றத்தில்
படிப்பார்கள். இதுவே "கணேசகிளியம்"
எனப்படுவதாகும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய
விதயம் என்னவென்றால் அந்த இரண்டு
சீட்டுகளிலும் "வடசொல்" என்றே
எழுதிப் போட்டிருப்பார்கள்.

மேலும், ஒரு இலக்கியம் முந்தியதா
பிந்தியதா என்று கண்டுபிடிக்கவும்
இம்முறையைக் கையாளுவார்கள்.
அதற்குத் தனியே இரண்டு சீட்டுகள்
வைத்திருப்பார்கள். அந்த இரண்டு
சீட்டுகளிலும் "பிந்தியது" என்றே
எழுதித் தயாராக வைத்திருப்பார்கள்.

கணேச கிளியம் - பாகம்-1 முற்றிற்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்