மலைசியத்தின் பொங்குதமிழ் மங்கலமே,
... மணிக்கவியே தங்குநறு மல்லிகையே
கலைமகளின் கையாழே கற்கண்டே... கனித்தமிழின் கட்டழகுச் சுடரொளியே
தலைமொழியைத் தடமெங்கும் தழைத்ததுவே
... தனித்தமிழே தகத்தகாய என்தங்கமே
நிலையற்ற ஞாலத்தை நீங்கிடினும்
... நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!
துறைதோறுந் துறைதோறுந் தமிழ்தன்னைத்
... தூர்ப்பாரின் முன்னெழுந்து மார்தூக்கி
இறைக்கின்ற நீரூற்றா யெழுதமிழால்
... இனிமொழியை எப்பரப்பும் ஏத்திவைத்து,
குறைப்பாரைக் குறைப்பாயே கூர்மதியால்
...குற்றமெலாங் குனிந்திடுமே என்சொல்வேன்?
நிறைத்தாலும் நின்வாழ்வை நீநிலத்தில்
... நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!
படிக்குமொழி பலவெனினும் பாரிலுளோர்
... பாங்குடனே பிறப்புமொழி பேணிநிற்க,
பிடித்ததெலாம் புகுத்திடுவார் தமிழரிங்கே
...பொடிப்பொடியாய் எழுத்துவரி நூறிடுவார்
இடிக்குந் துணையாயிருந்து தோள்தருவீர்;
...இங்கவரைத் தடுக்குவகை தானறிவீர்!
நொடிந்தனமே நும்பிரிவால்; பிரிந்திடினும்
...நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!
அருள்பொங்கும் கண்களிலே ஆர்ப்பரித்து
... அன்பொழுகும்; இறையன்பை அஃதொக்கும்!திருநிறைந்த நெஞ்சில் தொல் காப்பியமே
... தேனடையாய்த் திரண்டிருக்கும்! பாடுகின்ற
பொருட்செறிந்த பாட்டிலெலாந் தமிழ்நலமே
... பொதிந்திருக்கும்! பிழைகள்பாற் பீறிட்டு
நெருப்புமிழும்! நெருப்பைப்போல் தூயவரே
... நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!
இல்லார்க்கும் இனிக்கின்ற செங்கரும்பே
... இசுலாமும் இனியதனித் தமிழும்மாய்,
நல்லார்க்கே நல்விளக்காய் நற்றமிழாய்
... நாமலர்ந்த பாவலரே, யாம்வணங்கு
தொல்காப்புப் பெரும்புலவ, ஏச்சறியா
... துய்யதமிழ்ச் சந்தனமே தண்ணொளியே
நில்லாத யாக்கைதனை நீக்கியிங்கே
... நிலைபெற்ற சீனி ஐயா நீர் வாழியவே!
(நானும் சீனி ஐயாவும் - 2009 கோவை செம்மொழி மாநாடு)
நீங்கா நினைவுகளுடன்
நாக.இளங்கோவன்
7/8/2015