Pages

Tuesday, January 20, 2015

மாதொருபாகன் - கவுண்டருக்கு எனது கண்டனங்கள்!

பெண்ணியம் ஆணியம் என்று கட்சி கட்டமுடியாமல்
எழுந்த புதினம் என்பதால் ஆண் பெண் சமனைக் குறிக்கும்
சிவவடிவான மாதொருபாகன் என்ற பெயரைச் சூட்டினாரோ
"பெருமாள் முருகன் கவுண்டர்" என்று எண்ணத் தோன்றியது
அப்புதினத்தைப் படித்து முடித்தபோதில்.

மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற ஔவையார்,
அதிலும் கூன் குருடு செவிடு பேடு என்ற நான்கு உடல்
ஊனங்களின்றிப் பிறத்தல் அரிது என்று சொன்ன போது,
மானிட வாழ்க்கைக்கு இந்நான்கு ஊனங்களும் சற்று
கடினமாக, சரவலாக இருந்ததை, இருப்பதைப் புரிந்து
கொள்ளமுடிகிறது. பேடு என்றால் பேடிமை;
அதாவது பால் பேதித்த பெண்மை (திருநங்கை என்ற
 தற்போதைய வழக்கு). ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவான மலடு (வறடு/வறடி/வறடன் என்பார் பெ.மு)
என்ற தன்மையை மானிட வாழ்க்கையின் இன்னலாகச் சான்றோர்
கொண்டதில்லை.

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்குமுகத்தில்,
மணமாகிய ஓரிரு மாதங்களில் இருந்து காலம் முழுவதும்
குமுகத்தின் ஒவ்வொரு மூலையிலும் படும் வேதனைகளை,
சொல்லடிகளை, எதிர்கொள்ளும் ஆணவங்களை,
அவமானங்களை மாதொருபாகன் பதியவைத்திருக்கிறது.
ஆணும் பெண்ணும் (காளி, பொன்னா)  சமமாகப் படும்
துன்பங்களை, ஏச்சுகளை ஆங்காங்கு நடைமுறை
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கேட்டிருந்தாலும்
ஒரே மூச்சில் படிக்கும்போது "குழந்தை குட்டி பெற்ற குமுகம்
இத்தனைக் கொடியதா? என்றெண்ண வைப்பதோடு,

"நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
 ......நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
 பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
 ......புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
 காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
 ......கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
 ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
 ......அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே..."


என்ற பட்டினத்தாரின் பாடலை நினைவுக்குக் கொண்டுவந்து,
"இந்தக் குரங்குகளுக்குத்தான் எத்தனை ஆணவம்!"
என்றும் எண்ண வைத்துவிடுகிறது.

பிள்ளைப்பேறின்றி, பல வருடங்கள், ஆணின் பாதியில்
பெண்ணும், பெண்ணின் பாதியிலே ஆணுமாய்
இனிய காதல் வாழ்க்கை வாழ்ந்த காளியும் பொன்னாவும்
பட்டினத்தார் சொன்ன குரங்குகளின் இறுக்கத்தினால்,
பொன்னா உறுதி தளர்ந்து, கணவனின் பேச்சைக் கேட்காமல்
திருவிழாச் சந்தையில் காணாக்களவு வழி
விந்துதானம் பெறப் போய்விடுகிறாள்.
அவர்களின் காதல் வாழ்க்கை சிதறிவிடுகிறது.
காதல் வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கிறார் பெ.மு. அதை
எண்ணும்போது அவர்களின் சிதறல் வலிக்கவே செய்கிறது.
மணமாகி குழந்தை குட்டிகளோடு வாழ்ந்தாலும்,
 "அன்பிலாப் பெண்டிர் கையில் உண்பதே உலகில்
எல்லாவற்றிலும் கொடியது" என்ற ஔவையாரின்
சொல்லுக்குள் வாழ்பவர் எத்தனையோ பேரிருக்க,
அருமையான காதல் வாழ்க்கையை, குமுகத்தின்
அழுக்குகளால் சிதறடிக்கிறார்கள் பொன்னாவின் தாய்,
தந்தை, அண்ணன், மாமியார் (அதாவது காளியின் அம்மா).
பொன்னாவை காணாக்களவுவழிப் போக சொல்லித்தந்தோடு
மட்டுமன்றி, காளியின் தாயார் ஆசியோடு, பொன்னாவின்
தந்தை வண்டி ஓட்ட, தாய் துணைக்கு வர, அண்ணணோ
மாப்பிள்ளை காளிக்குத் தெரியாமல் அவனைச் சமாளிக்க,
திருவிழா இருட்டுக்குள் மறைந்துவிடுகிறாள்
காளியுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்த பொன்னா.

இதுதான் கதை. இதற்குத்தான் இத்தனை எதிர்ப்பா?  கதையில்
எங்கும் அருத்தநாரீசரை இழுக்கு செய்யவில்லை. பெருமாள் முருகனின்
சொந்த சாதியான கவுண்டர்களை ஏதும் இழுக்கு செய்யவில்லை.

ஊருக்கு இழுக்கு என்று சொல்வதெல்லாம் மறைமுகக்
குற்றச்சாட்டுகளாகவே தெரிகின்றன. ஏனெனில், ஊர், மலை,
மலைக்கோயில், அதன் பிரிவாக இருக்கும் வறடிகல்,
பாவாத்தா என்ற வனதெய்வம், அந்த வனதெய்வம் இட்ட குலசாபம்
போன்றவற்றையெல்லாம் சொல்லவேண்டுமானால்
ஊர்ப்பெயரைச் சொல்லாமல் எந்த எழுத்தாளனாலும்
எழுதவே முடியாது.

காணாக்களவு பற்றிப் பேசிய போதே அவளின் கண்களில்,
திருவிழாவில் பிள்ளை வரம் கொடுக்க அலையும்
எல்லாச் சாதி சாமிகளும் வந்து போகின்றனர்.
எல்லாச் சாதி சாமிகளும் அலைகிறார்கள் என்றால்
எல்லாச் சாதிப் பெண்களும் தேடுகிறார்கள்
என்றுதான் பொருள். அதற்கு ஏன் கவுண்டர் சாதி கோவித்துக்
கொள்ள வேண்டும்?

சாதிப்பெயரைப் போடமலிருந்திருக்கலாம் என்றால்,
கதையில், கவுண்டர் தொடங்கி, பார்ப்பார், செட்டியார்,
பறையர், சாணார், சக்கிலியர், சாயபு, வெள்ளைக்காரன்
என்று பலரும், பல குடும்பங்களும் வந்து போகிறார்கள்.
கதையில் கவுண்டரான காளி, பறையர்களோடு
பறையாட்டம் ஆடுவான். குறிப்பாக கோயிற்பறையாட்டத்தில்
வல்லவனாகச் சொல்லப்படுவான். பறையாட்டம் என்பது தமிழர்களின்
பொதுவான தொன்மையான கலை என்பதற்கு இதுவும் ஒரு காட்டு. காளியின்
சிற்றப்பனாக வருபவர், திருமணம் செய்துகொள்ளாதவர்.
அவருக்குச் சமைத்துப் போடுபவன் சக்கிலிய
வகுப்புப் பையன். அதற்காக சிற்றப்பா பலராலும்
இகழப்பட்டதைக் கதை சொல்கிறது. சாணார் வகுப்பான
மண்டையனின் பிள்ளையைத் தத்துக் கேட்கிறான் காளி.
அவனும் தருகிறேன் என்று சொல்வான்;
ஆனால் மண்டையன் மனைவி மறுத்துவிடுவாள்.

காணாக்களவுக்குப் பொன்னா போனதாக வருவதால்
சாதியம் பற்றிக் கொண்டது என்று சொல்லுமளவுக்குக்
கதையில் ஏதும் சாதி இகழ்ச்சி இல்லவே இல்லை.

திருச்செங்கோட்டு கவுண்டர்கள் மட்டும் கதை
படிக்கத் தெரியாதவர்களா என்ன? அவர்களுக்கும் கதை
புரிந்திருக்கவே கூடும். ஆனால், பெ.முவே ஒரு செவ்வியில்
சொன்னதுபோல வேறு எதற்கோ பெ.மு வைப்
பிடிக்காதவர்கள், இதனை மட்டும் வெளியில் காரணமாக வைத்துத்
தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று எண்ண
இடமிருக்கிறது.

அது, சிலரின் சொந்தப் பகையாக இருக்கலாம்.

மற்றபடி, இக்கதைக்கு ஆதரவும், எதிர்ப்பும்,
ஆதரிப்பது போன்ற எதிர்ப்பும் இணையத்தில்
உலாவியதெல்லாம் ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள்
யாரும் சட்டென களத்திற்கு வராதது
"சாதி வாக்கு வங்கிக்காக மட்டுமே". திரைப்படங்களில்
எல்லாம் முடிந்ததும் காவற்துறை வருவது போல
மு.க.சாலின் வந்தார். சரி அவராவது
வந்தாரே என்று எடுத்துக் கொள்வது தகும்.

எதிர்க்கிறேன் பேர்வழி, என்று எத்தனையோ
பேர் எழுதினார்கள். அவர்கள் கதையை ஆழ்ந்து
படித்தால் அதில் சாதி, மத இகழ்வுகளுக்கு
இடமில்லை என்பதைப் புரிந்து கொள்வர். ஆனால்,
என்னை வியப்படைய வைத்ததெல்லாம்,
சில தமிழ்ப்பற்றாளர்களின் "ஆரிய திராவிட" எதிர்ப்புதான்.
"இது ஆரியக் கொள்கை, அதோடு இது திராவிடர்களின்
சதி - ஆபாசம் " என்று போட்டார்களே போடு;
அவர்களெல்லாம் இந்த நூலை வருணிக்கு முன்
கொஞ்சம் மாந்தவியலையும் படிக்கவேணும்
என்றுதான் சொல்லுவேன்.

ஆரியத்தையும் திராவிடத்தையும் கிடுக்க
ஆயிரம் இருக்கையில் இதெல்லாம்
ஆரியக் கொள்கை அது இது என்றால்
இவர்களின் ஆரிய திராவிட அறிவை
நகைக்க மட்டுமே முடியும்.

தற்காலப் புதினங்கள் என்றாலே எனக்கு  அலுப்பும்
சலிப்பும் இயல்பாகவே அமைந்துவிட்டதால் நான்
இழப்பது சில இருக்கலாம்.  அதற்கு நான் வருந்தியதில்லை.
ஆனால், எப்பவாவது இதுமாதிரி படிக்கும் போதெல்லாம்
வழக்கு மொழியென்ற பெயரில், எழுத்துப் பிழை,
ஒற்றுப்பிழையோடு கெட்டவார்த்தைகளை அப்படி
அப்படியே எழுதியிருப்பதைப் பார்க்கும் போது
அருவெறுப்பே மிகுகிறது. புதினம் என்றால்,
தற்கால இலக்கியப் பதிவு என்றால்,
கீழ்த்தரமான உரையாடல்களையும், ஏசல்களையும்,
கேலிகளையும் அப்படியே
அதே சொற்களால்தான் எழுதவேண்டுமா?
ஆண் எழுத்தாளரும் பெண் எழுத்தாளரும்
இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு
கெட்டவார்த்தைக் களஞ்சியத்தை
எதிர்காலத்திற்குத் தேக்கி வைக்கிறார்கள் போல.

இடக்கரடக்கல் என்பதைக்
கொஞ்சம் கூடவா பின்பற்றக்கூடாது?

எனக்குப் பிடிக்காத இந்த "இழக்கிய" எழுத்து முறையை,
பெருமாள் முருகன் கவுண்டரும் வைத்துள்ளார்.
அதனால் அதற்கு மட்டும் கவுண்டருக்கு எனது கண்டனங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2 comments:

  1. கருத்து சுதந்திரம்Tuesday, January 20, 2015 7:09:00 AM

    சமூகத்தில் உள்ள ஒரு நிகழ்வை புனைவாக தருவதில் தவறு இல்லை அதற்கு பெருமாள் முருகன் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அவர் ஒரு உண்மையான ஊரையும், அவ்வூரின் கோவில் மற்றும் அங்கு உள்ள குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்த மக்களையும் புனைவின் உள்ளே கொண்டு வரும் பொழுது அது ஒரு ஆவணம் அல்லது சரித்திரம் ஆக மாறுகிறது.

    பெருமாள் முருகன் எழுதியது அந்த ஊரிலோ அல்லது நம் இந்திய நாட்டிலோ நடை பெறாத ஒரு நிகழ்வில்லை. அக்காலத்தில் கணவன் மலடாக உள்ளதால் குழந்தை பேரு இல்லாதவர்கள் ஒரு குழந்தையை பெற பின்பற்றியதில் இதுவம் ஒரு முறை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஏன் இக்காலத்திலும் இது நடை பெற்றுக்கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனால் இது குழந்தை இல்லாத எல்லா தம்பதியர்க்கும் ஒரு பொதுவான நிகழ்வாக எக்காலத்திலும் நாம் பொதுமைப்படுத்த முடியாது.

    ஏன் “மனு” என்ற நூலை எரிக்க வேண்டும் என்று பெரியார் வழி வந்த தோழர்கள் சொல்கிறார்கள்? ஏன் மனுவிற்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது ? ஏனென்றால் அதில் உள்ள செய்தி பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவை. சூத்திரன் என்ற சொல்லை பெரியார் ஏன் எதிர்க்க வேண்டும்? புரட்சி பேசும் படித்தவர்கள் இப்பொழுது மஹாபாரதம் மற்றும் வேதங்களை தங்கள் துணைக்கு அழைப்பது நகைமுரண்.

    ஆனால் பெருமாள் முருகனோ இன்றும் ஒரு சமூகமாக வாழும் மக்கள் மற்றும் அவர்கள் நடத்தும் விழாவை பற்றி ஒரு தவறான தகவலை பதிவு செய்துவிட்டு புனைவு என்று நியாயப்படுத்த முயல்கிறார். அவர் தன் நாவலின் முன்னுரையில் தான் பல ஆய்வுகள் செய்து “திருச்செங்கோடு” பற்றி தெரிந்து கொண்டதை அடிப்படை ஆக வைத்து எழுதியதாக சொல்கிறார்.

    “சாமி கொடுத்த குழந்தை” என்று நம் மக்கள் சொல்வதே இப்படி தகாத உறவின் மூலம் பிறந்த குழந்தைகள் என்று தன் கதாபாத்திரங்கள் மூலம் நிறுவிகிறார். மேலும் திருவிழா வரும் அனைத்து பெண்களும் தேவிடியா என்றும் எழுதுகிறார். இது வருடந்தோறும் அக்கோவில் திருவிழா செல்லும் பெண்களை காயப்படுத்ததாதா? மேலும் பல கோவில்கள் சென்று தன் கணவனின் மூலம் காலம் தாழ்த்தி குழந்தை பெற்ற மனைவி மற்றும் கணவனை புண்படுத்தாதா?(குறிப்பாக திருச்செங்கோட்டில் வசிப்பவர்களுக்கு)

    அப்பொழுது கருத்து சுதந்திரம் என்பது ஒரு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்த அளிக்கப்பட்ட ஒரு உரிமமா?

    சரி இதற்கு அவர் வரலாற்று ஆதாரங்களை ஏதும் தருகிறாரா ? திருச்செங்கோடு என்பது அழிந்து போன ஒரு ஊர் அல்லவே, ஊகங்களாக ஒரு கருத்தை சொல்வதற்கு. வாய்மொழியாக கேட்ட தகவல்களை அல்லது வதந்திகளை ஒரு அருமையான கதையாக தரும் உரிமை உள்ளதே தவிர அதற்கு உண்மை சாயம் பூசி தம் மேதாவித்தனத்தை நிரூபிக்க பெருமாள் முருகனுக்கு உரிமை இல்லை.

    அடுத்து பெருமாள் முருகன் தான் ஊரின் பெயரை நீக்க சம்மதித்து விட்டாரே, அப்புறம் என்ன பிரச்சினை ?

    சர்ச்சை எழுந்தவுடன் பெருமாள் முருகன் இந்த முடிவை எடுத்தாரா அல்லது தான் எழுதியது அனைத்தும் கற்பனை என்று சொன்னாரா, இல்லை . இது தான் பல அறிஞர் பெருமக்களிடம் கேட்டும் மற்றும் கள ஆய்வு செய்தும், பல ஆவணங்கள் மூலமாகவும் கண்டறிந்த உண்மை என்றே பேசினார். மேலும் இந்நூல் ரத்தன் டாடா அறக்கட்டளை மூலம் உதவி பெற்று கள ஆய்வு செய்து எழுதியது என்று அவரே முன்னுரையில் சொல்கிறார். எனவே ஒரு தவறான அல்லது ஆதாரமற்ற ஒரு தகவலை தரும் நூலை தடை செய்ய சொல்வது நியாயமே.

    போராட்டம் வலுவடைந்த பின்பு பெருமாள் முருகன் மக்கள் முன் தான் சேகரித்த ஆவணங்களை கொடுத்து தன் கருத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்தாரா? இல்லை. எழுத்தாளனின் கருத்து சுதந்திரத்தை மதவாத மற்றும் சாதிய சக்திகளும் அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டினார் . பெருமாள் முருகனுக்கு ஆதரவு தந்த பெரும்பாலான மக்கள் இது ஒரு புனைவு என்ற விதத்திலயே ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் முன்னுரையிலயே “Its Based On True Story” என்று சொல்வதை போல நான் ஆய்வு செய்து காலத்தில் பின்னால் சென்று அம்மக்களுடன் பயணித்தேன் என்று சொல்கிறார். ஆக உங்கள் வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆவணத்தை கொடுங்கள் அல்லது புத்தகத்தை திரும்பப்பெறுங்கள் என்பது தவறான வாதம் அல்லவே.

    அடுத்து ஒரு பெரும் குற்றசாட்டு, இது மதவாத மற்றும் சாதிய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட போரட்டம். போரட்டம் மதவாத கட்சிகளாலும் சாதிய கட்சிகளாலும் முன்னெடுத்து செல்லப்படுவதால் நாம் கண்ணை மூடிக்கொண்டு பெருமாள் முருகனை ஆதரிக்க தேவயில்லை. போராட்ட வழி முறைகள் தவறு என்பதற்காக அவர்கள் தரப்பு நியாயத்தை நிராகரிக்க தேவை இல்லை. பெருமாள் முருகனுக்கு எதிராக மிரட்டல்களோ வேறு வகையான அடக்குமுறையோ கையாளப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது அல்ல தண்டிக்கத்தக்கது.

    எனவே கருத்து சுதந்திரம், மதவாதம், சாதி, திராவிடம், பெரும்பான்மை, சிறுபான்மை என்று சொல்லி நீங்கள் அந்த மக்களின் உணர்வுகளையும் வலியையும் கொச்சைப்படுத்த முயலாதீர்கள்.

    ReplyDelete
  2. மாதொருபாகன் நாவல் பற்றி பெருமாள் முருகனின் கூற்றுக்களை விமர்சானம் செய்ய தகுதி, ஆய்வு, கள-அனுபவம் உடையவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதை வீடியோ ஆவணப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இதைப்பார்க்கவும். முற்போக்கு மாபியாவின் கூச்சலில் உண்மை இறந்துவிடாது..

    http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html

    ReplyDelete