திரு.திருமாவளவன் அவர்களே,
வணக்கம்.
இடையிலே ஈராண்டுகாலம் தமிழர்க்கு ஆகாத
அரசியல் செய்தீர்கள் என்ற புழுக்கம் தமிழ்
உலகிலே உண்டு என்ற போதிலும்,
தற்போது நீங்கள் இருவரும் திராவிட, காங்கிரசு
கட்சிகளின் கூட்டுக்களில் சேர மாட்டோம் என்கின்றவாறு
பேசி வருவதும், ஈழத்திற்காகப் பதவியையும் துறப்பேன்
என்று திருமா அவர்கள் கூறுவதும் உங்களிடம் மீண்டும்
ஒரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தவே செய்கிறது.
தங்களின் தமிழ்ப்பற்றின் மேல் யாரும் பெரிதாக
ஐயப்படவில்லை என்றபோதிலும், கூடாநட்பில்
குறுகிப் போய்விட்டீர்களோ என்ற ஐயம் பலருக்கும்
எழுந்தது உண்மைதான்.
தற்போது இருக்குஞ் சூழலில், ஈழம் தொடர்பான
பல பணிகளை ஆற்றி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
தொடர்க.
தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி.செயலலிதா
அவர்கள் முதல்வரானவுடனேயே சிங்கள
நாட்டின் மீது பொருளாதாரத் தடை கொண்டு வரவேண்டும்
என்று சொன்னதும், புழுங்கிக் கிடந்த தமிழர் முகத்தின்
சுருக்கங்களில் ஒருசில மறைந்தது உண்மை என்பதைத்
தாங்கள் அறிவீர்கள்.
அது வரவேற்கப் படவேண்டிய ஒன்று. ஆனால், அது
நடைபெறும்வரை காத்துக் கொண்டிருப்பது என்பது
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவேக் கருத முடிகிறது.
காங்கிரசு அரசு இதனை ஏற்றுச் சிங்களத் தேயத்தின் மேல்
தடை கொண்டுவருவதற்கு வெகுதொலைவு
பயணம் செய்ய வேண்டும் என்பதை அரசியல் அறிந்த
நீங்கள் நன்கறிவீர்கள்.
ஆயினும், உடனடிச் செயற்பாடாக வெகு எளிதாகச்
செய்யக் கூடிய ஒன்றை உங்கள் முன் வைக்கிறேன்.
சிங்கள நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு
இறக்குமதியாகி விற்பனை ஆகின்ற
பொருள்களின் பட்டியலை அறிவித்து
அதனைத் தமிழ் மக்கள் வாங்க வேண்டாம்
என்று கேட்டுக் கொண்டால் நமது மக்கள்
அன்போடு ஏற்றுக் கொள்வார்களே!
என்ன பொருள் எங்கிருந்து வருகிறது
என்று அறியாமலேயே வாங்குபவர்கள்தான்
தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மை.
அவர்களுக்கு பட்டியல் சொல்லி அறியத்தரலாமே!
தமிழ் வணிகர்களை அன்போடு அணுகி
இன்னன்ன பொருள்களை விற்காதீர்கள்
என்று கேட்டுக் கொண்டால்
யார் மறுக்கப் போகிறார்கள்?
நீங்கள் இருவரும் கேட்டுக் கொண்டால்
தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை
அரசியற்கட்சிகளுக்கும் இது
முன்னோடியாக அமையும் என்பது உறுதி.
இதனை நீங்கள் முன்னெடுக்காவிடில்
யாரால் முடியும்? கைமேல் வெண்ணெயை
வைத்துக் கொண்டு நெய்யிற்காகக் காத்துக்
கொண்டிராமல் இதனை நீங்கள் செய்ய
வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
இதனைச் செய்யும் பெருவலு உங்களிடம்
உள்ளது.
"பொருளாதாரத் தடை"க்குக் காத்திராமல்
தமிழ்நாட்டளவில் இந்தக் கற்பு நெறியை
நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று அன்போடு
கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
மேலும் பிப்பிரவரி-2-2009 ஆம் ஆண்டு
இது குறித்து மேலும் பலவற்றோடு எழுதிய
வலைப்பதிவினையும் இத்தோடு தாங்கள்
காண வேண்டியும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
0 comments:
Post a Comment