Pages

Tuesday, March 22, 2011

தோல்வியை நக்கிச் சுகம் காணும் தமிழ் உணர்வாளர்கள்!

தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்களை
ஒருவித தோல்விநோய் பிடித்துள்ளது.

உணர்வில் பழுதில்லை, உழைப்பில் பழுதில்லை
ஆனால் செயலில் ஒருப்படவும் உருப்படவும்
முடியவில்லை.

இதற்கு அவரவர் அல்லல்களும்
எதிரிகளின் பெரும்பணமும் முதற்காரணம்;

ஆயினும் சிறிய முன்னேற்றத்தைக் கூட
இவர்களால் செய்ய முடியாததற்கு இவர்களிடம்
உள்ள சிறு சிறு சித்தாந்த வேறுபாடுகளும்,
நானே தலைவர் என்ற போக்கும், ஒரு 20 ஆண்டு கால
அரசியலில் ஒருவருக்கொருவர் ஏற்பட்டிருக்கும்
சிறு பிணக்குகளும் மட்டுமே காரணமாக
இருக்க முடியும்.

ஒருவரிடம் பொதுவுடைமைப் பார்வை இருக்கும்.

இன்னொருவரிடம் நாத்திகப் பார்வை இருக்கும்.

இன்னொருவரிடம் திராவிட மயக்கம் இருக்கும்.

மற்றொருவரிடம் தமிழியக்கச் சிந்தனை
மட்டுமே இருக்கும்.

சிலர் திரைத்தொழிலில் இருந்து வந்து தமிழுணர்வு
பேசுபவர்களை ஏற்பதில்லை. சிலர் இந்திய தேர்தல்

சனநாயகத்தையே ஒறுத்து வாக்களிக்கவே
விரும்புவதில்லை.

இப்படிப் பல உணர்வுகளால் சிதறிக் கிடக்கிறார்கள்
ஒருபுறம்.

மறுபுறம் குறிக்கோள்களில் ஒன்றிணைவது
இல்லை. திடீரென முளைக்கும் ஒரு
சாதிக்கட்சியிடம் இருக்கின்ற முனைப்பு கூட
இவர்களிடம் இல்லாதது வருந்தத்தக்க ஒன்றாகும்.

ஒவ்வொருவரிடமும் இருக்கும் கனவு
மிகப்பெரிது. அந்தக் கனவிலேயே வாழ்ந்து
கொண்டிருப்பது எவ்வகையில் நாயம்?

திடீரென்று ஒரு சாதிக்கட்சி முளைக்கிறது.
வாக்குகளைச் சிதறடிக்கிறது. அடுத்த தேர்தலில்
ஆளாகிவிடுகிறது.

ஆனால் தமிழ் உணர்வாளர்களோ எங்கிருந்தோ
வந்து தமிழ் தேசியம் இறங்குவதற்காகக்
காத்திருக்கிறார்கள்.

நான் தமிழ் உணர்வாளர்களைக் குறை கூறமாட்டேன்.
அவர்களின் உயர்ந்த உழைப்புகள் மற்றும்
ஈகை நாடறிந்த ஒன்று. அவர்கள் செய்யும் பணிகள்
எல்லாம் வீணாகப் போகிறதே என்று அழுங்குகிறேன்.

காங்கிரசைத் தோற்கடிப்பது மட்டும்தான்
தமிழ்நாட்டின் குறிக்கோளா?

ஈரத்தில் ஊறிய எருமை பட்டுத்துணியில்
புரள்வது போல புரண்டு கொண்டிருக்கும்
பெரிய கட்சிகள் தமிழ்நலம் பேணுபவர்களா?

காங்கிரசு குல எதிரிதான். அவர்களை மட்டும்
செயித்துவிட்டால் தமிழ்நாடு உய்த்துவிடும்
என்று எண்ணுவது பிழையாகும்.

தமிழ்நாட்டு உரிமைகள், உலகவாழ்
தமிழர்களின் நலன் என்று வரும்போது
எழுபவர்கள் யார் யார்?

திரு.பழ.நெடுமாறன், வைகோ, சீமான்,
தியாகு, கொளத்தூர் மணி, பெ.மணியரசன்,
கோவை இராமகிருட்டிணன், புதுவை பாவாணன்
போன்றோர்தானே.

இவர்களெல்லாம் ஏன் ஒன்றுபடக் கூடாது?

அண்மையில் தாளாண்மை இயக்கத் தலைவர்
திரு.திருநாவுக்கரசு அவர்கள் இந்தக் கேள்வியைத்தான்
வலுவாகக் கேட்டிருந்தார்.

ஏன் இவர்கள் அனைவரும் தமிழர் நலைனைக்
கருத்தில் வைத்து ஒன்று சேர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்டப்
பொதுவேட்பாளர்களை நிறுத்தக் கூடாது?

காலமுழுவதும் போராடிக்கொண்டும்
புலம்பிக் கொண்டும் கழித்தால் இவர்கள்
வருங்கால சந்ததியினருக்கு என்ன சொல்கிறார்கள்?

வைகோ தேர்தலைப் புறக்கணித்ததுமே எல்லாமே
முடிந்துவிட்டது போன்ற ஒரு மாயையை
ஏற்றிக்கொள்வது சரியா?

"சொல்லப்போனால், வைகோ அ.தி.மு.க கூட்டில்
இருந்திருந்தால் காங்கிரசையும், தி.மு.கவை
மட்டும்தான் எதிர்க்க முடியும். அதைவிட
நல்லவாய்ப்பாக மூன்று தமிழ்க்கேடர்களையும்
ஒரே நேரத்தில் எதிர்க்கக் கூடியச் சூழல் அமைந்துள்ளது
என்பது கிடைத்தற்கரிய வாய்ப்பாகவே நான் கருதுகிறேன்."

வல்லமை போதாதே என்று கருதலாம்.
எந்த ஒன்றையும் துவங்கும்போதே வலு இல்லை
என்று எண்ணி அமர்ந்திருந்தால்
ஓரடி கூட முன்னே செல்ல முடியாது.

234 தொகுதிகளையும் ஏன் எண்ணிக் கலங்க வேண்டும்?

10-20 தொகுதிகளைப் பொறுக்கி எடுக்க முடியாதா?

தமிழகம் நன்கறிந்த கவிஞர் தாமரையை சீரங்கத்தில்
தமிழ்க் கூட்டமைப்பு நிறுத்தலாமே?

சாகுல் அமீதை ஏன் திருவாரூரில் நிறுத்தக் கூடாது?

கொளத்தூர் மணி க.அன்பழகனை எதிர்க்கலாமே?
வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு காலமுழுதும்
ஆமாஞ்சாமி போட்டே "நல்லவர்" என்ற
பேரெடுத்தவராயிற்றே?

இந்திய அரண வண்டிகளை மறித்த
கோவை இராமகிருட்டிணன் காங்கிரசுக் கட்சி
வேட்பாளர்களைக் குறிவைக்கலாமே?

கொழுப்பெடுத்து, திராவிடத்துவாவையும்
இந்திய தேசியத்தையும் நக்கித் திரியும்
சாதிக்கட்சிகளையும் கூட ஆங்காங்கே எதிர்க்கலாமே?
இன்னார் என்று பார்க்காமல் அவர்கள் செய்யும் பிழையை
உணர்த்தலாமே!

இராமதாசு கட்சியை ஒரு இடத்தில் தமிழ்க் கூட்டமைப்பு
எதிர்க்கிறது என்று வைத்துக் கொள்வோம்; என்ன ஆகிவிடும்?

விடுதலைப் பூனைகளான சிறுத்தைகளை ஒரு
இடத்தில் எதிர்த்தால் என்ன கெட்டுவிடும்?

நாடார் கட்சி (பெயர் கூட வரமாட்டேன்கிறது), கொங்கர் கட்சி
என்று ஒவ்வொரு கட்சிக்கும் பாடம் புகட்டலாமே!

வெற்றி பெறுவது முக்கியமல்ல. ஆனால்
காங்கிரசு ஏகாதிபத்தியம், திராவிடத்துவாவின் நாட்டாமை,
சாதிப்பெருக்கில் தமிழ்த் தொலைப்பு போன்றவைதானே
தமிழ்க்கேடுகளுக்குக் காரணம்?

எல்லோருக்கும் செய்தி சொல்லலாமே!

இந்த அணிதான் செயிக்க வேண்டும் என்று எண்ணாமல்,
எல்லாவற்றையும் எதிர்க்கும் மனப்பான்மை நமக்கு
ஏன் வரமாட்டேன்கிறது?

எங்கே எந்தக் கட்சி வெற்றி முகத்தில் இருக்கிறதோ
அங்கே சென்று அந்தக் கட்சியை கவிழ்க்க வேண்டும்.
அது இன்னொரு கட்சிக்கு வாய்ப்பாகப் போகும்.
பரவாயில்லை. வெற்றிக் களிப்பிற்கு வேட்டு
வைத்தோமல்லவா?

அடுத்த முறை அவர்கள் எண்ணிப்பார்ப்பார்கள்
அல்லவா?

சுற்றினால் தமிழ்நாடு முழுவதையும்தான் சுற்றுவேன்
என்றில்லாமல் 20-30 தொகுதிகளைத் தேர்ந்தடுத்து,
ம.தி.மு.க, நாம்தமிழர் உள்ளிட்ட அனைத்துத்
தமிழ்க் கட்சிகளையும் ஒருங்கிணைத்து
எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகளை
உள்ளிழுத்து ஒரு நல்ல, இனிய காட்சியை தமிழ்நாட்டிற்கு
தமிழுணர்வாளர்கள் காண்பிக்கக் கூடாதா?

தமிழ் உணர்வாளர்களில் மூத்தவரான
நெடுமாறன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக்
கொள்ளலாமே! இல்லை வேறு என்ன
ஆளா இல்லை உணர்வாளர்களில்?

யாரும் இல்லையே - நாங்கள் என்ன செய்வது -
ஏதோ ஒரு எருமையின் மேலேறித்தானே
செல்ல வேண்டியிருக்கிறது என்று புலம்பும்
பல ஆயிரம் தமிழர்களின் குரல் ஏன் இந்தத்
தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் கேட்க
மாட்டேன்கிறது?

20 தொகுதிகளுக்கு ஒன்றும் பெரிய
செலவாகாது. தமிழ்நாட்டிலும் உலகத்திலும்
நேர்மையானவர்கள் நிறையவே உண்டு. அவர்கள்
கட்டாயம் உதவி செய்வார்கள்.

எதுவுமே செய்யமாட்டேன் -
தேர்தல் எனக்குப் பிடிக்காது -
நடப்பதெல்லாம் அட்டூழியம் -
தமிழரெல்லாம் மாறிவிடனும் -
தமிழ்நாட்டானுக்கு உணர்வில்லை,
என்றெல்லாம் பேசிக்கொண்டு
இனிக் காலம் ஓட்டுவதில் புண்ணியமில்லை.

உணர்விருப்பவர்களுக்கு எப்படி நம்பிக்கை
அளிக்கிறீர்கள் என்பதில்தான் எதிர்காலம்
இருக்கிறது என்பதை ஏன் இவர்கள் சிந்தித்துப்
பார்க்கக் கூடாது?

ஊழல் பிடித்த தேர்தல் நாயகம்தான்
இந்தியாவின் தமிழ்நாட்டின் தலை எழுத்து.
கடல்வற்றும்போதுதான் அது மாறும்.
அதுவரை காத்திருக்க வேண்டும் என்று காலம் கழிப்பது
தவறு மட்டுமல்ல - தமிழ்நாட்டின் நலல்
சிந்தனைக் களங்கள் செய்யும் பாவமுமாகும்.

போன பாராளுமன்றத தேர்தலில் தமிழ் உணர்வாளர்கள்
அ.தி.மு.க பக்கம் சாய்ந்து ஒரு "தமிழ்ச் சக்தி" உருவாக்கத்
தவறிவிட்டார்கள். இந்தத் தேர்தலில் இலட்டு மாதிரி
வைகோவை அ.தி.மு.க துரத்தியிருக்கிறது. இதனை
நல்ல மாதிரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு தமிழ்ச் சக்தியை
உருவாக்காமல் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்
என்று தமிழ் உணர்வாளர்கள் கருதுவார்களேயாயின்,
அது "தோல்வியை நக்கிச் சுகம் காணும் போக்காகும்".

நினைத்தவுடன் நெய்க்காரன் குதிரை ஏறவேண்டும்
என்று எண்னாமல், தேர்ந்தெடுத்துப் போட்டியிட்டு
உணர்வாளார்களை ஒருமிக்க வேண்டும்.
அது பெரிய வெற்றியைத் தராவிட்டாலும்
அடுத்த களத்திற்கு அருமையான அடித்தளம் இடும்.

காலம் ஒன்றும் கடந்து விடவில்லை இன்னும்.
இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

17 comments:

அரவிந்தன் said...

அன்பின் இளங்கோவன்,

இதை கடந்த 5 வருடங்களாக பார்ப்பவர் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன்.

தனிப்பட்ட முறையில் சம்பந்தபட்டவர்களிடம் பேசினேன்.

என் உள்ளத்தில் இருந்த பல நாள் ஆசையை நீங்கள் எழுத்தில் தெளிவாக எழுதிவிட்டீர்கள்.

raja said...

அய்யா இளங்கோவன் சற்று முன் தான் இதே கருத்தை வலியுறுத்தி.. பெ.தி.க நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.. மிக அற்புதமாக சிந்தனைகளை வழங்கியிருக்கிறீர்கள். உரைப்பவர்களின் உரைத்தால் நன்று.

பழமைபேசி said...

//இந்திய அரண வண்டிகளை மறித்த
கோவை இராமகிருட்டிணன் காங்கிரசுக் கட்சி
வேட்பாளர்களைக் குறிவைக்கலாமே?//

நல்ல கேள்விதானுங்க ஐயா? தமிழருக்காய் சிறைவாசம் கண்ட அண்ணனை, ஒரு வந்தேறி என்பார் ஒன்று கூட வருவரோ?!

பாலா said...

நன்றாகச்ச சொன்னீர்கள். மற்றோர் குழுவில் ஊழல் பகற்கொள்ளை பற்றி எழுதும் பொழுது, "ஊழல் பற்றி பேசும் பலரும் இதிலுள்ள இதனை ஒரு இழுக்காகப் பார்க்காமல், நமக்கு இந்த வாய்ப்பில்லையே என்றுதான் கொதிக்கிறார்கள்." என்று நறுக்கென்று சொல்லியிருந்தீர்கள்.

நீங்கள் கூறுவதுபோல் ஒரு தமிழர் நலன் பேணும் அணி ஒன்றிணைந்து உருவாகுமாயின், உண்மையிலேயே தமிழருக்காக தமிழர் நலனுக்காக தமிழுக்காக உழைப்போர் சேர்ந்து செயல்படும் ஒன்றாக இருத்தல் வேண்டும். கண்டிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர் பலரும் புலம் பெயர்ந்த தமிழர் பலரும் இதற்கு ஆதரவு தருவார்கள்.

Anonymous said...

/10-20 தொகுதிகளைப் பொறுக்கி எடுக்க முடியாதா/
/உணர்விருப்பவர்களுக்கு எப்படி நம்பிக்கை
அளிக்கிறீர்கள் என்பதில்தான் எதிர்காலம்
இருக்கிறது என்பதை ஏன் இவர்கள் சிந்தித்துப்
பார்க்கக் கூடாது?/

Dear sir
The above two Quistions must be answered by our leaders.

nayanan said...

// அரவிந்தன் said...

என் உள்ளத்தில் இருந்த பல நாள் ஆசையை நீங்கள் எழுத்தில் தெளிவாக எழுதிவிட்டீர்கள்.
//
அன்பின் நண்பர் அரவிந்தன்,
நலமா?

உங்கள் எண்ணமே எனக்கும் பலருக்கும்.
இதில் திராவிடக் கட்சிகளையும் காங்கிரசையும் மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்?

எழுந்து நிற்க நேரம் வாய்க்கும் போதெல்லாம் விட்டு விட்டு
சிறைக்குப் போவதும், தேர்தல்
வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்வதும், நாங்கள் தேர்தல் கட்சியல்ல குமுகக் கட்சி என்று ஒதுங்கிக் கொள்வதும் நாயமற்ற
அணுகுமுறை.

எதைச் செய்ய வேண்டுமோ அதை
விட்டு விட்டு புலம்பிக் கொண்டிருப்பதை தமிழ்நேர்மையாளர்கள் உணர வேண்டும் அல்லவா?

நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// raja said...
சற்று முன் தான் இதே கருத்தை வலியுறுத்தி.. பெ.தி.க நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்..
//

நண்பரே, நன்றாக எடுத்துச் சொல்லுங்கள்.

இவர்கள் இப்படித் தள்ளிப் போவதால்
இவர்களுக்கும் மக்களுக்கும் இருக்கும்
இடைவெளி அதிகமாகிக் கொண்டே போவதை உணர மாட்டேன்கிறார்கள்.

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

//பழமைபேசி said...
தமிழருக்காய் சிறைவாசம் கண்ட அண்ணனை, ஒரு வந்தேறி என்பார் ஒன்று கூட வருவரோ?!
//

இப்படியும் ஒரு சிந்தனைத் தளம்
இருக்கிறது. இவர்களும் செய்வது என்ன என்று அறியாமல் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி திராவிட நாடு என்று பேசிப் பேசியே அண்ணாத்துரை தலைமையில் தி.மு.க தமிழ்நாட்டைக் கவிழ்த்தது.

அப்படித்தான் பேசிப் பேசி இவர்களும்
காலந்தள்ளுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறதுண்மை.

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

//
// பாலா said...
ஒரு தமிழர் நலன் பேணும் அணி ஒன்றிணைந்து உருவாகுமாயின், உண்மையிலேயே தமிழருக்காக தமிழர் நலனுக்காக தமிழுக்காக உழைப்போர் சேர்ந்து செயல்படும் ஒன்றாக இருத்தல் வேண்டும். கண்டிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர் பலரும் புலம் பெயர்ந்த தமிழர் பலரும் இதற்கு ஆதரவு தருவார்கள்.
//

உண்மை ஐயா. இதுதான் இன்றைய தேவை. பச்சைப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோதே பதைக்காத தமிழகத்தில் இவர்கள் தனித்தனியே நின்று எப்படி நமக்கு வழிகாட்ட முடியும்?

மிக்க நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

//Anonymous said...
..two Quistions must be answered by our leaders.
//

Dear Anony, Thanks. yes every one looks at the acts of the bad parties. But the bads of the good parties should be reviewed.

Regards
Naaga Elangovan

இராம.கி said...

தமிழ் உணர்வாளர்களிடம் தான்/தாம் என்ற அகப்பாடு கூடி நிற்கிறது. அதைத் தூக்கியெறிந்து ஒரு 10 தொகுதிகளில் நின்றாற் கூடப் போதும். ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம். ஒருவாரத்தில் இவர்கள் சேருவார்களா என்பது குதிரைக் கொம்பே. ஆனாலும் இந்தச் சிந்தனை பரவ வேண்டும். இவர்கள் ஓரியக்கமாக மாறவேண்டும். தனித் தனியாக இயங்குவதிற் பொருளில்லை.

அன்புடன்,
இராம.கி.

nayanan said...

//
இராம.கி said...
இவர்கள் ஓரியக்கமாக மாறவேண்டும். தனித் தனியாக இயங்குவதிற் பொருளில்லை.
//

அன்பின் ஐயா,
இவர்களால் முடியும். தொகுதிக்கு
5000-10000 வாக்குகளைப் பெறமுடியும்.
ஏன் உணரமாட்டேன்கிறார்கள் தெரியவில்லை. அகப்பாடுகளை நீக்கி
இவர்கள் போட்டியிட வேண்டும்.

மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

சிவம் (பெயர் அற்றது) said...

அய்யா நாக.இளங்கோவன்
மிக தெளிவான பார்வையுடன் உங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். நமது தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டிய சந்தர்ப்பத்தை இந்த தேர்தல் கொடுத்துள்ளது. தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். இருப்பினும் எதிரிகள் மிக மோசமானவர்கள் ஒவ்வொரு தலைவர்களின் தன்னுணர்வை துண்டி விட்டு நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட வாய்ப்பிருக்கிறது. நாம் தேர்தலில் தோற்றாலும் அது அவர்களை பயமுறுத்தும் தோல்வியாக இருக்க வேண்டும்.

நக்கினம் சிவம்

சிவம் (பெயர் அற்றது) said...

அய்யா நாக.இளங்கோவன்
மிக தெளிவான பார்வையுடன் உங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். நமது தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டிய சந்தர்ப்பத்தை இந்த தேர்தல் கொடுத்துள்ளது. தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். இருப்பினும் எதிரிகள் மிக மோசமானவர்கள் ஒவ்வொரு தலைவர்களின் தன்னுணர்வை துண்டி விட்டு நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட வாய்ப்பிருக்கிறது. நாம் தேர்தலில் தோற்றாலும் அது அவர்களை பயமுறுத்தும் தோல்வியாக இருக்க வேண்டும்.

நக்கினம் சிவம்

ரமேஷ் said...

இளங்கோவன்,

நான் கடந்த மூன்று வருடமாக எந்த பதிவிற்கும் பின்னுட்டம் இட வேண்டும்மென்று நினைத்தது இல்லை, ஆனால் இந்த பதிவு என் நெடு நாள் ஏக்கத்தையும் எதிர்ப்பார்பையும் பிரதி பலிக்கிறது.

உங்கள் ( நம்) எண்ணத்தை ஆதரிக்கவே என் முதல் பின்ணோட்டம்

நன்றி
ரமேஷ்

(எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்)

nayanan said...

// சிவம் (பெயர் அற்றது) said...
நமது தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டிய சந்தர்ப்பத்தை இந்த தேர்தல் கொடுத்துள்ளது. தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். இருப்பினும் எதிரிகள் மிக மோசமானவர்கள்
//
திரு.சிவம் அவர்களே,
வருக. உண்மை. மிக ஆழ்ந்து
ஒற்றுமைப்படவேண்டும்.

நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// ரமேஷ் said...
நான் கடந்த மூன்று வருடமாக எந்த பதிவிற்கும் பின்னுட்டம் இட வேண்டும்மென்று நினைத்தது இல்லை, ஆனால் இந்த பதிவு என் நெடு நாள் ஏக்கத்தையும் எதிர்ப்பார்பையும் பிரதி பலிக்கிறது.

உங்கள் ( நம்) எண்ணத்தை ஆதரிக்கவே என் முதல் பின்ணோட்டம்
//

நண்பர் இரமேசு அவர்களே,
வருக. தங்கள் பின்னூட்டம் கண்டு
மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
நமது எண்ணங்களை விதைத்து வைப்போம். உறுதியாக வெற்றி அடைவோம்.

மிக்க நன்றி. தங்களின் பின்னூட்டுகளும் எழுத்துகளும் பெருகட்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்