Pages

Sunday, March 20, 2011

திராவிடத்துவா: வைகோ மட்டும் வஞ்சிக்கப்படவில்லை!

திராவிடத்துவாவின் ஆதிக்கத்தில் தமிழகத் தேர்தல்கள்
என்றைக்கும் தமிழ், தமிழர் நலனுக்காக நடந்ததேயில்லை.
ஆர்ப்பாட்டம், அநாகரிகம், பச்சைக் குழிபறிப்புகள்,
பேராசை போன்றவையே, பகுத்தறிவு என்ற போர்வையில்
தமிழ்நாட்டுத் தேர்தலின் சின்னங்களாக இருக்கின்றன.

பல்லிளிக்குஞ் சாதிகள், பொய்பேசுந் தமிழ் உலகம்,
உல்லாசந் தரும் நடிகர் நடிகைகள்; இவர்களிடம்
குமுக நலனைத் தேடி மகிழும் மக்கள் கூட்டம்.

தமிழ்நாட்டுத் தேர்தல் என்பது சேவற்சண்டையா?
ஆட்டுக் கிடாய்ச் சண்டையா? அல்ல,
எருமைக்கிடாய்ச் சண்டையா? என்ற பட்டிமன்றம்
வைத்தால் இரண்டும் அல்ல,
"பன்றிகள் சண்டையிடும் பீக்காடுதான் தேர்தல்களம்"
என்பது புலனாகும்.

இந்தப் பீக்களத்தில் வெல்பவர்களே நமது தலைவர்கள்.
அதனை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் அல்லவா?
எப்படியும் 234 தேர்வாகிவிடும். இந்த 234ன் நிறங்கள்
சற்று வேறு வேறு அவ்வளவுதான். இதில் எந்த நிறம்
வென்றாலும் யாருக்கென்ன?

அது கிடக்க. வைகோ மேல் ஒருகாலத்தில் நான்
கடுங்கோபம் கொண்டிருந்தது உண்மை. வரலாறே
திகைத்து நின்ற காலவோட்டத்தில் நானும் திகைத்துப்
போனது பெரிய விதயமில்லை. இன்றைய நிலையில்
அவருக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம், ஒழுக்கமற்ற
அரசியலில், அவர் அடைந்திருக்கும் நிலைக்கு
நான் பெரிதும் வருந்துகிறேன்.

இத்தனைத் தாழ்வு அவருக்கு வந்திருக்கக் கூடாது.
அவர் செய்த தவறுகளை நினைவு கூரும்போது
தமிழ்நாட்டில் நல்லரசியல் வேண்டுவோர் பெறவேண்டிய
பாடங்கள் பல இருக்கின்றன.

திராவிடத்துவாவின் ஒநாய்க்கூட்டத்தின் நடுவே
சிக்கிய ஆடு போன்றாகிவிட்டார் என்பது கண்டு
மனம் கலங்கவே செய்கிறது.

போர்த்தது திராவிடத்துவா என்ற போர்வையாயினும்
தமிழ், தமிழர் உரிமைகளுக்காகவும் உணர்வுகளுக்காகவும்
மட்டுமே குரல் கொடுத்தவர் வைகோ. சொல்லப்போனால்
அவரைத் தவிர வேறு எந்த திராவிடத்துவாத்
தேர்தல் கட்சியும் தமிழருக்காக குரல் கொடுத்ததில்லை;
கதறியது இல்லை. அவருக்கு ஏன் இந்த நிலை?

நன்றாகக் கவனித்துப் பார்த்தால், தமிழ் தமிழருக்காகக்
குரல் ஒலித்த யாவருக்கும் இதே நிலையைத்தான்
திராவிடத்துவா அளித்திருக்கிறது.

தமிழர் நலன் என்றபோது தி.மு.க
கட்சியை விட்டுத் துரத்தியது.

தமிழர் நலன் என்றபோது அ.தி.மு.க
உள்ளே பிடித்துப் போட்டது.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
என்பது போல, இரண்டு திராவிடத்துவ கட்சிகளிடம்
பட்ட இவர், அன்றைக்கே தமிழ் கட்சியாக
தனது கட்சியைக் கண்டிருந்தால் நிலைத்திருக்க
முடியும். இல்லாவிட்டால் கூட, இத்தனை
அவமானங்களும் அல்லல்களும் அவரைச் சேர்ந்திருக்காது.

மீண்டும் மாறி மாறி அவர்களிடம் போய்
மொத்துபட்டுப் போய்விட்டார் எனும்போது
நல்லதோர் வீணை நலங்கெடப் புழுதியில் புரண்டுவிட்டதே
என்று வருந்தி இரங்க வேண்டியிருக்கிறது.

இப்பொழுது கூட, ஏன் அ.தி.மு.க கழுத்தை அறுத்தது
என்று எண்ணிப் பார்த்தால், அது ஒன்றும் இடம் பற்றிய சரவலோ,
அல்லது ம.தி.மு.கவின் பலம் பற்றிய விதயமோ அல்ல.

வைகோவின் கூட்டு, காங்கிரசின் இடங்களைக் குறைக்கும்.
இது திண்ணம். சீமானுடனான அணுக்கத்தில் காங்கிரசின்
இடங்களை ம.தி.மு.க குறைத்து விடும்.
இதனை அ.தி.மு.க விரும்பவில்லை.

இரண்டாவது, தமிழ் தமிழருக்கான விதயங்களில்
தி.மு.க வேடம் கலைந்துவிட்டதால், இனி தமிழ் தமிழர்
என்ற விதயங்கள் என்றைக்கும் தமிழ்நாட்டில்
தலையெடுக்கக் கூடாது என்ற அரசியல் நிலைப்பாடு.

இது இந்துத்துவா என்று யாரும் கருதக் கூடும்.
ஆனால் அதுதான் திராவிடத்துவா.

இந்துத்துவாவுக்கும் திராவிடத்துவாவுக்கும் எள்ளளவும்
வேறில்லை.

சொல்லப்போனால் இந்துத்துவாவை விடப்
பயங்கரமானது திராவிடத்துவா.

தமிழர்களை இந்துத்துவா முண்டிக்கொண்டும்
மருட்டிக் கொண்டும் இருக்கும். ஆனால்
திராவிடத்துவா இந்துத்துவா செய்ய நினைத்ததை
செய்தே காட்டி விடும்.

தேர்தலுக்குப் பின்னாலும் அரசியல் உண்டு.
அ.தி.மு.க செய்து கொண்டிருக்கும் தொகுதி
இழுபறிகள் செயலலிதாவின் ஆணவம், அறியாமை
தன்னிச்சைப் போக்கு என்றெல்லாம் கருதுவோர்
தமிழக அரசியலை மீள ஒரு முறை பார்க்கவேண்டும்.
செயலலிதாவின் தொகுதிப் பட்டியலைப்
பார்த்தால் தேர்தலுக்குப் பின்னரான காலத்தையும்
சேர்த்தே திட்டமிடப்பட்டுள்ளது நன்கு தெரியும்.

அதற்குக் களப்பலி வைகோ. வைகோ மட்டுமல்ல,
தமிழ் தமிழர் நலன் என்று பேசுவோர்க்கு திராவிடத்துவா
தரப்போகும் பரிசுகள் மிகப் பயங்கரமானவையாகவே இருக்கும்.

"தமிழ், தமிழர் என்று பேசு! ஆனால் திராவிடத்துவத்தைப் போற்று!!"
தமிழ், தமிழர் என்று பேசு! திராவிடத்துவத்தை நக்க மறக்காதே!!
தமிழ், தமிழர் என்று பேசு! அது நடிப்பாக மட்டுமே இருக்கட்டும்!!
மீறி "தமிழ், தமிழர்" என்று பேசினால் உனக்குத் தமிழ் துரோகி என்ற
பட்டத்தையே திராவிடத்துவம் தரும். விளங்கிக் கொள். ஆகவே நடி!

தமிழனாய் நடி!! தமிழ் பேசி நடி!! தமிழே பேசினால் அடி!

இதுவே தமிழ்நாட்டில் திராவிடத்துவாவின் நிலைப்பாடு.
ஆகவே வஞ்சிக்கப் பட்டிருப்பது வைகோ மட்டுமல்ல.
தொடர்வஞ்சத்தின் அடுத்த கட்டம்; அவ்வளவுதான்.

ஏமாற்றப்பட்டது வைகோ மட்டும் அல்ல. ஏமாறப்போகும்
தமிழ்நாட்டின் அடுத்த காட்சிகள் ஆரம்பம்.

இந்துத்துவாவும் திராவிடத்துவாவும்
தமிழர்களின் நெற்றிப் பொட்டில் வைக்கப்பட்டிருக்கும்
"இரட்டைக் குழல் துப்பாக்கிகள்".

ஆரியம் தமிழர்களின் முன்னால்
நின்று தொண்டைக் குழியை அரியும்!
திராவிடமோ தமிழர்களின் பின்னால்
நின்று குறுவாள் செருகும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
பி.கு: இதனை எழுதும்வரை வைகோ தேர்தலைப்
புறக்கணிக்கும் நிலைப்பாட்டில்
இருந்து மாறவில்லை. அப்படியே மாறினாலும்
அவருக்கு எம் அன்பு உண்டறிக.

11 comments:

சிவம் அமுதசிவம் said...

\\\அப்படியே மாறினாலும்
அவருக்கு எம் அன்பு உண்டறிக.\\\\

தங்கள் முடிவு மிகமிகச்சரியானதுதான் ஐயா! நிர்வாண உலகத்துக்கு, கோவணத்தைக்கட்டியாவது மானத்தைக்காத்துக்கொள்ள - கற்றுக்கொடுக்கமுனையும் வைகோவை, நம்போன்றவர்களால்மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். இப்படி இங்கு தமிழக அரசியல் சகதியில் சின்னாபின்னப்படும் அவருக்கு - எதிர்காலத்தில் அமையவுள்ள தமிழீழ அரசு, கிரீடம் வைக்கும் என்பது மட்டும் உண்மை.

Anonymous said...

Dear sir
what you said is 100% correct this is continuation of distroying of prabhakaranisum thease forces are having agenda to not allow any movement in tamil nadu to think about "tamil desiam"

nayanan said...

அன்பின் திரு.சிவம் அவர்களுக்கு,
ஆம் - வரலாறு என்று ஒன்று கட்டாயம் உண்டு. அதில் எம்சியாரும், வைகோவும் சிறந்த இடம் பெறுவார்கள் என்பதை உணர்கிறேன்; காலத்தாழ்வாகினும்.

நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

கோ.திருநாவுக்கரசு said...

அன்பு மிகு ஐயா
தமிழ் தேசியம் பேசும் பெ.ம.தியாகு,சீமான் ,புதுக்கோட்டை பாவாணன், நெடுமாறன் ஐயா ..பலர்.
இவர்கல் ஏன் ஒன்றுபட முடியவில்லை.கடந்த 64 ஆண்டுகளாக தமிழன் என்றாலே கொண்டு வா அவன் தலை மிளகாய் அரைக்க என்று நிற்கும் காங்கிரசுக்கு முன்னால் உரிய திட்டம் வைத்து ஏன் இவர்களால் ஒன்றுபட்டு நிற்கமுடியவில்லை.சிக்கல் அங்குதான் உள்ளது.ஒன்றுபடாத தமிழினம் உறுப்படியாக எதையும் ஏந்த முடியாது. அரசு

தமிழ்மலர் said...

அருமையான பதிவு

nayanan said...

//தமிழ் தேசியம் பேசும் பெ.ம.தியாகு,சீமான் ,புதுக்கோட்டை பாவாணன், நெடுமாறன் ஐயா ..பலர்.
இவர்கல் ஏன் ஒன்றுபட முடியவில்லை.
//

அன்பின் அரசு ஐயா,
சரவலின் மையமே இதுவாகத்தான் இருக்கிறது.

நெடுமாறன் ஐயா, சுப.வீ, தியாகு ஒன்றாக இருந்தார்கள். பின்னர் நெடுமாறன் நீங்கலாக இருந்தனர்.
பின்னர் சுப.வீ திராவித்துவாவில் கலந்துவிட தியாகு பெ.ம தனியாக இருக்கிறார்கள்.

இவர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் செயல்களாகவில்லை. இது இடிக்கின்ற இடம்தான். இவ்விடத்தைக் கடக்காமல் தமிழ்நாடும் தமிழியமும் உய்ய வாய்ப்பே இல்லை. நீங்கள் சொல்வது போல உருப்படவே படாது.

குறைந்த பக்கமாக இவர்களிடம் அடுத்த தலைமுறைக்காவது ஒரு தலைமையாக் காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்ளவேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// தமிழ்மலர் said...
அருமையான பதிவு//

நன்றி தமிழ்மலர் அவர்களே.
உங்களது ஒளிவீச்சு புறப்படட்டும்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

THIS IS UTTERLY NONSENCE. DON'T COMPARE D.M.K. WITH A.I.A.D.M.K. M.G.R. AND JAYALALITHA- SYMBOLS OF BRAHMANISM. THIS MAN VAIKO IS A TAMIL TRAITOR. WHEN JAYA SCOTTLED THE 150 YEATS DREAM PROJECT OF TAMIL PEOPLE THE SETHU CANAL PROJECI BY FILING CASE IN THE SUPREMECOURT ON THE GROUND OF RAMAR BRIDGE, VAIKO NEVER RAISED HIS VOICE AGAINST HER. NOW HE GOT THE PRAISE .SOON HE WILLBE THROWN FROM TAMILNADU POLITICAL AREANA BY TRUE TAMIL PEOPLE.

nayanan said...

//
Anonymous said...
THIS IS UTTERLY NONSENCE. DON'T COMPARE D.M.K. WITH A.I.A.D.M.K. M.G.R. AND JAYALALITHA- SYMBOLS OF BRAHMANISM. THIS MAN VAIKO IS A TAMIL TRAITOR. WHEN JAYA SCOTTLED THE 150 YEATS DREAM PROJECT
//

அநாநி, தி.மு.க, அ.தி.மு.க
ஆகிய இரண்டையும் ஒப்பிட்டால்
உங்களுக்கு கட்டமாக இருக்கிறது.
எந்த விதத்தில் இரண்டும் வேறு என்று
வேறுபடுத்திக் காட்டுங்கள் பார்ப்போம்.
நானும் இந்தப் பாட்டைப் பாடிய காலம் உண்டு. ஒரு கோடிக்கு ஒரு தமிழன் என்று திராவிடத்துவா விற்கும்போது
உங்களுக்கும் வலிக்கத்தான் போகிறது.
அதுவரை உங்கள் பாட்டை நீங்கள் பாடிக்கொண்டிருங்கள்.

சேது கால்வாய்த் திட்டம் செயா, பாசக போன்றோர்கள் தடை வாங்கியிருக்காவிட்டாலும் நடந்திருக்காது. மாறாக, அந்தத் திட்டத்திற்குப் போடவிருந்த பணம் யாவுமே கொள்ளை போயிருக்கும்.

குடும்ப மயக்கத்தில் எல்லோரையும்
குறை சொல்லும் காலம் மாறட்டும்.
தமிழ், தமிழர்க்கு துரோகம் செய்பவரை துரோகி என்று கண்டுகொள்ளுங்கள். கோபாலபுரத்தோடு வேறுபட்டாலே துரோகி என்ற எண்ண ஓட்டத்தை மாற்றப்பழகுங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

சீ.பிரபாகரன் said...

வைகோவின் முடிவு மிகச்சரியானது. அதே நேரத்தில் நம் பொது எதிரியான காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வேரறுக்க தமிழினப்போராளிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். 60 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி மற்றவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும்.

nayanan said...

// சீ.பிரபாகரன் said...
60 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி மற்றவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும்.
//

அன்பின் திரு.பிரபாகரன் அவர்களுக்கு,
உண்மை. நன்றி.

காங்கிரசு நமது குல எதிரி. துரோகிகளையும் தண்டிக்கும் வல்லமை தமிழர்க்கு இன்று இல்லை. துரோகிகளால் வீழ்ந்து போனதுதான் தமிழ்க்குலம். காங்கிரசையாவது வேரறுக்க தமிழர்கள் எல்லாரும் ஒன்றுபடவேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்