திராவிட இனத்தை வீழ்த்தவே கங்கணம்
கட்டிக் கொண்டு ஒரு இனம் இருக்கிறதென்று
திராவிட முன்னேற்றம் பேசியிருக்கிறது.
யார் அந்த இனம்?
1971ல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தும்
1976ல் மிசாவில் அடி உதை. அதன் பின்னரும்
திராவிடத்தைக் காப்பாற்ற 1980ல் காங்கிரசுடன்
கூட்டணி வைத்த பின் எழுந்திருக்கவே
10 ஆண்டுகள் ஆயின.
மீண்டும் திராவிடத்தைக் காப்பாற்றத் தோன்றியவுடன்
பா.ச.கவுடன் கூட்டணி. பா.ச.க கழுத்தைப் பிடித்துத்
தள்ளியபோதும் கூட்டணி தருமத்தைக் காப்பாற்றிய
பெருமை திராவிட முன்னேற்றத்தைப் பறைசாற்றும் ஒன்று.
பா.ச.கவை விட்டு வெளியே வந்த உடனேயே
"மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தன்" போல
திராவிடத்தைக் காப்பாற்ற வேண்டி
"2004ல் காங்கிரசுடன் கூட்டணி.
1971ல் கூட்டணி வைத்த பின் "செய்வதையெல்லாம் செய்"
அப்புறம் பார்த்துக்கொள்கிறேன் என்றது போல,
5/6 வருடத்தில் ஊழல் ஊழல் என்று நாடு முழுதும்
காங்கிரசு அலறவிட்டதே, அதைக் கொஞ்சமாவது
நினைவில் வைத்திருந்திருக்க வேண்டாமா?
நினைவில் வைத்திருந்தால் காளையர், எசகு பிசகாக
மீண்டும் கிடுக்கியில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டாமே!
தில்லியையே ஆளுகின்றதாக நினைத்துக் கொண்டு,
காங்கிரசுக்காரருக்கெல்லாம் "புனிதர்", "தூயர்" என்று
பட்டம் கொடுத்தபோது கொஞ்சமாவது "திராவிட இனம்"
நினைப்புக்கு வந்ததா?
காங்கிரசு கூட்டணிக்கு ஏங்கி ஏங்கி, காங்கிரசைக்
குளுமைப் படுத்த, 1965ல் இந்தியை எதிர்த்தத்
தமிழர்களையெல்லாம் குருவியைச்
சுடுவது போல சுட்டுக் கொன்ற பக்தவத்சலத்திற்குச்
சிலை வைத்த போது "திராவிட இனம்"
நினைப்புக்கு வந்ததா?
அணிமையில் கூட இராகுல் காந்தியைக்
குளுமைப் படுத்த அவங்க அப்பா பேரை
அரசு மருத்துவமனைக்குச் சூட்டிய போது,
1987லும் சரி, 2009லும் சரி - மருத்துவமனை
என்று கூடப் பார்க்காமல் "ஒரு இனத்தின்" மேல்
குண்டு பொழியப் பட்டதே அப்போது "திராவிட இனம்"
நினைப்புக்கு வந்ததா?
பொழுது விடிந்ததில் இருந்து
மறுநாள் பொழுது விடியும்வரை
போகப்பொருளாய் "ஒரு இனம்"
ஆக்கப்பட்டிருக்கிறதே
அந்த இனத்துக்கு என்ன பெயர் என்றாவது தெரியுமா?
நாடிழந்து, உண்டிக்கும் உறையுளுக்கும் மண்டியிட
வைக்கப் படுகிறதே "ஒரு இனம்" அந்த இனத்துக்கு
என்ன பெயர் என்று நினைவில் வரவே மாட்டேன்கிறது
இல்லையா?
வராது! வரவே வராது!
தமிழியக்கத்தின் தளபதியாம் புரட்சிக்கவிஞர்
பாவேந்தர் பாரதிதாசன் ஒரு உயர்ந்த பாடல்
ஒன்றைப் பாடுவார்!
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து
நீ இன்பம் சேர்க்கமாட்டாயா!!"
என்று கொஞ்சுவார்.
திராவிட இயக்கத்தின் தளபதிகள்
"துன்பம் நேர்கையில்(மட்டும்) திராவிடத்தை
நீ தோளில் தூக்க மாட்டாயா?!!"
என்று கெஞ்சுவது வாடிக்கை.
பாவேந்தர் அதே பாட்டில் -
"அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி
நீ அல்லல் நீக்க மாட்டாயா" என்பார்.
காதலியிடம் பேசினாலும், குழந்தையிடம்
பேசினாலும் தமிழ் தமிழ் என்றே வாழ்ந்தவர்
பாரதிதாசனார். அவர் பாடிய பாடலின்
பொருள் வேறு. அது இருக்கட்டும்.
எத்தனைக் கோடி பேர் "அன்பிலா நெஞ்சை,
தமிழில் கெஞ்சி, நீ அல்லல் நீக்க வாராயோ" என்று
கதறினர்? அப்பொழுதெல்லாம்
"திராவிட இனத்தை ஏதோ ஒரு இனம்
அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது"
தெரியவில்லையா?
இது ஒரு பருவகாலம்!
எந்தப் பருவத்தில் எந்த இராகத்தில்
எந்தத் திராவிடப் பாட்டு வரும் என்பதெல்லாம்
தமிழர்களுக்கு அத்துபடியாகிப் போச்சே! என்ன செய்ய!
கடைசியில் அலைக்கற்றையில் ஏதுமே
தவறு செய்யாதவரை மாவலிச் சக்கரவர்த்தியாகவே
உயர்த்திக் காட்டிய கைவந்த திராவிடக் கலை இருக்கும்வரை
திராவிட இனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.
(ஏற்கனவே முல்லையாற்றை மறித்து
நிற்கின்ற மலைநாடு மல்லுக்கு வந்துவிடாமல்
பார்த்துக் கொண்டால் சரி.
)
அது சரி இருக்கட்டும். எந்த இனம் அழிக்கப் பார்க்கிறது?
உரோமாபுரியா? பாரசீகமா?
ஒரு வேளை இந்த இனம்தான் என்றால்
உண்மையாகவே இருக்கக் கூடும்!
அவங்க தமிழ் இனத்தை எப்பவோ
அழித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
அதனால், திராவிட இனமே
நீயாவது கவனமாக இருந்துகொள்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
3 comments:
:)
இளங்கோவன்
இப்போ அழுது என்ன பயன்?
சொன்னது எல்லாம் உண்மை.இவை எல்லாம் எருமைமாட்டின் மேல் பெய்த மழைக்குச் சமன், நமது இனிய தமிழ் மக்களுக்கு
Post a Comment