Pages

Friday, April 25, 2008

ஙோத்தா என்றால்...!

இன்று தமிழ் மின்னகராதிகளைத் தோண்டிக் கொண்டிருந்தபோது
எனது கண்ணில் பட்டது இந்தத் தமிழ்ப் பெயர்க் கையேடு.

http://www.nithiththurai.com/name

என்னை 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாட்டிக் கொண்டிருந்த
ஒரு சொல்லுக்கு ஓரளவு நம்பத்தக்க ஏரண மூலம்
கிடைத்தது என்பதால் இக்கையேடு பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு வாழ்க!

என்னை மட்டுமல்ல சென்னையையே வாட்டும் வாட்டிக்
கொண்டிருக்கும் சொல் திருமிகு ஙோத்தா :-)

யாரிடமிருந்தேனும் இந்தச் சொல்லடி படாமல் அல்லது பேசாமல்
சென்னையில் வாழ்ந்தவர் யாராவது இருந்தால் அவர்கள்
தெய்வப் பிறப்பாக மட்டுமே இருக்க முடியும்.:-)

திருச்சியின் காவிரிக் கரையோரம் நான் கற்றிருந்த கெட்ட
வார்த்தைகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.
பெருவலமான கெட்ட வார்த்தைகள் இலக்கண சுத்தியோடு
தெளிவாக இருக்கின்றன :-)

இடம், பொருள், ஏவல், வினை, பெயர் என்று சொல்லதிகாரமும்
எழுத்ததிகாரமும் பொருளதிகாரமும் பூட்டி வரும் கெட்ட
வார்த்தைகளைக் கண்டு வியந்திருக்கிறேன். திணை, பண்
போன்றவைகளைத்தான் ஆராயவேண்டியிருக்கிறது :-)

சில சொற்களுக்கு மட்டும் தெளிவு கிட்டாவிட்டாலும்
இதற்கு மூலம்/காரணம் கண்டுபிடித்துவிட முடியும் நம்பிக்கை
இருக்கிறது. ஆனால் இந்தச் சென்னைப் புகழ் ஙோத்தா
மட்டும் என்னையும் சரி பலரையும் சரி ஆட்டம்
காண்பித்திருக்கிறது :-)

மேற்சொன்ன பெயர்க்கையேட்டை வாசித்துக் கொண்டிருந்த
போது தமிழ்ப் பெயர்கள் சிந்தையைக் கவர்வதாக இருக்கின்றன.
இத்தகையத் திரட்டு, இத்தரமான திரட்டு வேறெங்கேயும்
இணையத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

பல பெயர்கள் நம்மை ஆட்கொள்கின்றதோடு சிந்தனையையும்
கிளர்த்து விடுகின்றன.

"கோத்தாய்" என்ற பெயரைப் படித்த போது எனக்குப் பொறி
தட்டியது.

http://www.nithiththurai.com/name/female/24.html

கோத்தாய் என்றால் ஒரு உயர்ந்த தலைவி நிலைப் பெண்ணைக்
குறிக்கும் சொல்.

கோ என்றால் அரசன்/அரசி/தலைமை/தெய்வம் என்ற உயர்ந்த
பொருள்களில் வரும். தாய் என்றால் பெண்மையின் மேன்மையைச்
சொல்லும் பொருள்.

ஆக, கோத்தாய் என்றால் நாம் புழங்குகிற சொல்லான
'அரசமாதா' வைக் குறிக்கும்.

அரசமாதா என்ற சொல் நமக்குப் பழக்கமானதால்
அந்தச் சொல் சுட்டுகின்றவரின் பண்புகளை நம்மால் புரிந்து
கொள்ள முடிகிறதல்லவா?

அரசமாதா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரக்கூடியவர்
பொன்னியின் செல்வனில் வரும் செம்பியன் மாதேவியார்.

செம்பியன் மாதேவியார் போன்றோர் கோத்தாய் என
சொல்லப்படக் கூடியவர்கள்.

சிறிய அளவில் ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு கோத்தாய்கள்
அவ்வப்போது காணக் கிடைக்கலாம்.

தற்போது, நாம் பிறரைக் கடிதற்கு பயன் படுத்தும்
சொற்களையும் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆணைக் கடிதற்கும்
பெண்ணைக் கடிதற்கும் பயன்படுத்தப் படும் சொற்களையும்
அது பயன் படுத்தப் படும் தன்மையையும் யோசித்துப்
பார்க்க வேண்டும்.

கடிதலில் பல வகைகள் உண்டு. சினந்து ஏசுவது(scolding),
கிடுக்குவது(criticizing), இளக்காரமாக சிறுமைப் படுத்துவது (belittling)
போன்று பல வகைகளைக் காணலாம்.

சினந்து ஏசும்போது சுடு சொற்களும், கெட்ட சொற்களும்
பயன்படுத்துவார்கள்.

இளக்காரமாக நக்கலோடு சிறுமைப் படுத்தும் போது
சற்று மென்சொற்களோடும் உயர்வு நவிற்சியும் புழங்கும்.

காட்டாக, "இவர் பெரிய சிங்கம்னு நினைப்பு.."!,
"ம்ம்ம்ம்...பாக்தாத் பேரழகின்னு நினைப்பு.."! போன்ற
இளக்காரத்தையும் சூழலையும் எண்ணிப் பார்த்தால்
ஒரு பெண்ணை இளக்காரத்தோடு கிடுக்குதற்காக
"இவ பெரிய கோத்தாய்னு நினைப்பு....புத்தி சொல்ல வந்துட்டா"
என்றவாறு கோத்தாய் என்ற சொல் புழங்கப் பட்டிருக்க வேண்டும்
என்று தோன்றுகிறது,

இந்தக் கோத்தாய் என்ற சொல் புழக்கத்தில் இருந்த காலம்
பழையதாகவும் இருந்திருக்க வேண்டும். (இலக்கியங்களைத் தேடிப்
பார்க்கவேண்டும்..)

ஒரு பெண்ணை மென்மையாகக் கிடுக்குதற்காக அல்லது
இளக்காரம் பண்ணுதற்காக புழங்கப் பட்ட கோத்தாய் என்ற
சொல் மருவி, ஙோத்தா என்று ஆகி, அது ஆண்கள்
பிறரை வன்மையாக ஏசும் மொழியாக மாறியிருக்கிறது
என்று எண்ணுதற்கு முடிகிறது.

கோத்தாய் > கோத்தா >ஙோத்தா என்று ஆகியிருக்க
வாய்ப்புகள் உண்டு.

இச்சொல் வழக்கு சென்னையிலும் அதன் புறங்களிலும்
அதிகமாகப் புழங்குவதை யோசிக்கும் போது கோத்தாய்
என்ற சொல் தமிழகம் முழுவதும் பெருகி வழங்கியிருக்கக் கூடும்
என்று தோண்றவில்லை.

இலக்கியங்களைக் குடையாமல் உறுதி செய்ய முடியாது
எனினும், இப்புழக்கம் ஈழப் பகுதிகள் அல்லது பல்லவ நாட்டுப்
பகுதிகளில் வழங்கப் பெற்று இருக்கக் கூடும்.

கோத்தாய் என்ற சொல்லை சென்னைப் பல்கலை
அகராதி/களஞ்சியத்திலும் கதிரவேல் பிள்ளை அகராதியிலும்
கோனார் அகராதியிலும் காணவில்லை.

கொலோன் அகராதி மட்டும் கோத்தாய் என்பதற்குப்
பொருள் கூறுகிறது.

http://webapps.uni-koeln.de/cgi-bin/tamil/recherche
1427 kOTAy foster-mother

ஆகவே இது ஈழப்பகுதிகளில் புழக்கத்தில் இருந்து
பல்லவர்களுக்கும் ஈழத்துக்கும் அதிகம் தொடர்பிருந்த
காலத்தில் புழக்கத்தில் இருந்து மெல்ல மருவியிருக்க
வாய்ப்பு இருக்கிறது.

இது ஒரு கருதுகோளுடன் கூடிய ஏரணம் மட்டுமே.
கோத்தாய் என்ற சொல் புழக்கத்தில் இருந்திருப்பதற்கும்,
பெயருக்காக உருவாக்கப்படுவதற்கும் வேறுபாடு உண்டு.
பின்னது என்றால் இந்த ஏரணம் பொருந்தாது.

கோட்டம், கோட்டி, கோட்டான் என்ற சொற்களையும்
ஙோத்தா என்ற சொல்லுக்காகத் தேடிப் பார்க்கலாம்.

ஆங்கிலர்கள் சிலர் வார்த்தைக்கு வார்த்தை
f... என்ற சொல்லை பயன்படுத்துவது
போல சென்னையில் நிமிடத்திற்கு/நுணுத்தத்திற்கு ஒரு முறை
ஙோத்தா என்ற சொல்லைப் புழங்குபவர்கள் உண்டு.
அந்த எரிச்சல் கொஞ்சம் இப்பொழுது குறைகிறது :-))

கோத்தாய் என்ற சொல்லின் புழக்கம் அந்தக்
கெட்டவார்த்தை(?)யைக் கொஞ்சம் கட்டி வைக்கும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

9 comments:

Anonymous said...

இந்த விளக்கம் தனித்தமிழ் ஆர்வலர்களுக்கேயுள்ள 'மலையைக் குடைந்து (இல்லாத) எலியைப் பிடிக்கும்' முயற்சி. ங்கோத்தா என்ற சொல்லுக்கு பொருள் கண்டுபிடிக்க இவ்வளவு மெனக்கெடத் தேவையில்லை.

'உங்க ஆத்தா' என்பது தான் உங்கோத்தா (ங்கோத்தா அல்ல) உச்சரிக்கப்படுகிறது. அந்த சொல்லுக்குப் பின் சொல்லாமல் விடப்படும் செய்தியை அவையடக்கம் கருதி விட்டுவிடுகிறேன். அது "ஒரு பெண்ணை இளக்காரத்தோடு கிடுக்குதற்காக" பயன்படுத்துவது அல்ல. ஏசப்படுபவனின் தாய் மீதான ஏசுபவனின் ஆணாதிக்கத் திமிரை வெளிப்படுத்துவது.

இச்சொல் புழங்கும் பகுதியைச் சேர்ந்தவன்.

நா. கணேசன் said...

இச்சொல்லை எளிதில் விளக்கலாம் என்று தோன்றுகிறது.

உங்கள் + அப்பன் = உங்கப்பன் > (உ)ங்கொப்பன் என்பது போல,
உங்கள் + ஆத்தா = உங்காத்தா > ஙோத்தா என்பதாகலாம்.

கோ என்ற சொல் அரசன் மக்களைக் கோத்துக் கட்டுப்பாட்டில் வைப்பவன். கோவலன் (பாவலன், நாவலன், காவலன், ... என்பது போல)
ஆக்களைக் கோத்துப் மேய்த்தும் பாதுகாத்தலாலும் வருவது. go-paala என்னும் இந்தோ-ஆரியச் சொற்கும் கோவலனுக்கும் வேறுபாடுண்டு. கோப்பணன் என்னும் பெயரும் கோவலன் என்பதற்கும் தொடர்புண்டு.

சென்னைச் சொல் பேஜார் என்பது நல்ல தமிழ்ச் சொல்லை அடிக்கொண்டது. வேசரவு/வேசறவு என்னும் இலக்கியச் சொல்லாகும். வேய்-தல் காக்கும் தொழில். வேந்து = வேய் + து (விகுதி). தொந்தறை/தொந்தரவு என்பதுபோல
வேசறை/வேசரவு > bEjAr ஆனது.

இன்னொரு சொல்: ஜோடி, இது சுவடு
என்னும் சொல். சுவடு > சோடு > ஜோடி.

பிற பின்,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com

Anonymous said...

சென்னை தமிழில் புழக்கத்தில் உள்ள பல வார்த்தைகள் மருவியோ அல்லது பிற மொழியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கும்.

நீங்கள் குறிப்பிட்ட வார்த்தை மற்ற மாவட்டங்களில் வேறு உருவில் இருப்பதை கேட்டிருக்கிறேன். இது ஆங்கிலத்தில் சொல்லப்படும் f**k your mother என்ற அளவில் சொல்லபடுகிறது. அந்த வசை முதல் பாதியில் தாயை குறிக்கும் 'ஆத்தா' தான் இவ்வாறாக மருவியிருக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில் இது போல் பரவலாக சொல்லப்படும் இன்னொரு வசைச் சொல் 'தக்காளி' என்பது போல் சொல்லபடும் ஒரு வசைச் சொல். பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தில் பெருமளவு உபயோகபடுத்தியிருப்பார்கள். அதுவும் இதே வகையில் ஆனால் ஒருவரின் தமக்கையை குறிக்கும் வசைசொல் என்று நினைக்கின்றேன்.

nayanan said...

//'உங்க ஆத்தா' என்பது தான் உங்கோத்தா (ங்கோத்தா அல்ல) உச்சரிக்கப்படுகிறது.
//

//உங்கள் + ஆத்தா = உங்காத்தா > ஙோத்தா என்பதாகலாம்.
//

//'ஆத்தா' தான் இவ்வாறாக மருவியிருக்க வேண்டும்.
//


நண்பர்களே, கருத்துகளுக்கு நன்றி.

முதல் அநாநியின் பின்னூட்டு சொல்வதைப்பார்த்தால்
எனது கருத்து சரியாகத்தான் இருக்கும்
போல் இருக்கிறது :)

"உங்க ஆத்தா" என்பதைச் சேர்த்தால்
"உங்காத்தா" என்றுதான் வரும்.

ஆனால் அவர் சொல்லும் "உங்கோத்தா (ங்கோத்தா அல்ல) " என்பதனைப் பிரித்துப் பார்த்தால் உம் + கோத்தா(ய்) என்றுதான் வருகிறது.

நான் கூட "ஙோ" என்பது "கோ"வின்
மருவல் என்று நினைத்தேன். அதுதவறு; முதல் அநாநி அவர்களின்
உச்சரிப்பே சரி என்று படுகிறது.

ஆத்தா என்பதன் மருவல்/திரிபு என்றால் "ஆ"காரம்தான் ஓங்கி வரவேண்டும். ஆனால் இச்சொல்லில்
ஓகாரம் மிகத் தெளிவாக ஒலிக்கிறது.

அதுதான் எனது குடைச்சலும் கூட.

கோத்தாய் என்பதன் நேரடிக் குறுக்கம்
இது என்றே படுகிறது.

சின்னாத்தாள், ஆத்தாள், பெரியாத்தாள், கோத்தாள்(ய்)என்பனவற்றுள் ஆத்தா அப்படி ஆகியிருக்குமா அல்லது கோத்தா அப்படி ஆகியிருக்குமா என்றால்
கோத்தா(ய்) அப்படி ஆகியிருக்கவே
முடியும். ஏறத்தாழ நேரடியாக வருகிறது.

நுண்ணிய உச்சரிப்பை எடுத்துத்
தந்ததற்கு முதல் அநாநிக்கு மிக்க நன்றி :)

அன்புடன்
நாக.இளங்கோவன்

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

இளங்கோவன் ஐயா,

மற்றவர்கள் சொன்னதை தான் நானும் சொல்ல விழைகிறேன்.
ங்கோத்தா என்பது போல் ங்கோம்மாள என்ற சொல்லும் வரும்.
உங்க அம்மாள் .....என்று தான் அதற்கு பொருள் கொள்ள முடியும். (இல்லை ..ஏதாவது 'கோமகள்' என்று சொல்ல போகிறீர்களா? :) )
ஆக எனக்கு தெரிந்து உங்க ஆத்தா, உங்க அம்மாள் என்பது தான் சரியாக படுகிறது.
இதனுடன் வேறு பல கெட்ட வார்த்தைகளும் இணைந்து வரும். அனைத்தும் அம்மாவை இழிவு படுத்தும் சொற்களே!
ஆகாரம் பேச்சு வழக்கில் ஓகாரம் ஆனது. (முதற் போலி ?)

கோத்தாய் என்று புதிய சொல் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. ஆனால் அதற்கும் கெட்ட வார்த்தைக்கும் சம்மந்தம் இருப்பதாக தோன்றவில்லை.

Anonymous said...

'Otha' oru aachariya kuri ..athavathu tamizhil exclamatory mark...yentha ssozhnilayilum payanpaduthalam

nayanan said...

//
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

மற்றவர்கள் சொன்னதை தான் நானும் சொல்ல விழைகிறேன்.
ங்கோத்தா என்பது போல் ங்கோம்மாள என்ற சொல்லும் வரும்.
உங்க அம்மாள் .....என்று தான் அதற்கு பொருள் கொள்ள முடியும். (இல்லை ..ஏதாவது 'கோமகள்' என்று சொல்ல போகிறீர்களா? :) )

//

நண்பரே,

எல்லோரும் ஒரு முடிவோட இருக்கீங்க போலேருக்கு :-)

ஆத்தா வழி வந்திருந்தாலும்
கோத்தா(ய்) வழி வந்திருந்தாலும்
இரண்டுமே தமிழ்தான். அதனால்
நான் சொன்னதையே பிடித்துக் கொண்டு இருக்கப் போவதில்லை :-)

ஆத்தாள் வாழ்க!!

விரும்பாத சொல் என்றாலும்
அதனை விட்டுக் கொடுக்காத
தன்மை எனக்குப் பிடித்தே
இருக்கிறது.

எனக்கென்ன என்று இராத
இதே நிலையை நல்ல சொற்களைப்
பிடித்துக் கொள்வதிலும் காட்டுவார்கள்
என்ற எண்ணம் மேலோங்குகிறது.

மிக்க அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// Anonymous said...
'Otha' oru aachariya kuri ..athavathu tamizhil exclamatory mark...yentha ssozhnilayilum payanpaduthalam
//

அநாநி அவர்களே,

உங்கள் கருத்தையே "ஆத்தா" என்ற சொல்லுக்கும் செ.ப.த.க வில் போட்டிருக்கிறார்கள். ஆத்தாள், ஆத்தா, ஆத்தி என்ற இரண்டையுமே அச்ச வியப்புக் குறியாகச் சொல்கிறார்கள்.

அதேபோல ஆத்தா என்ற சொல்
அன்னையைச் சுட்டுகின்ற இடங்களில்
இலக்கியங்களில் பெருமளவும் காணப்படவில்லை. மொத்தமாக
இல்லையா என்பதைத் தேடித்தான் பார்க்கவேண்டும்; ஆனால் பெருமளவு
இல்லை என்பதைச் சொல்ல முடிகிறது.

அதனால் இது ஒருவரின் தாயை இழிவு படுத்தித் திட்டுவதற்காகத்
தோன்றிய சொல் அல்ல என்றே படுகிறது.

யோசிக்க நிறைய இருப்பதாகவே படுகிறது. தங்கள் பின்னூட்டுக்கு
மிக்க நன்றி.

யாரும் அதிகம் விரும்பாத
சோல்லாகினும் நல்ல கருத்துக்கள்
வந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

முதல் அநாநி ஒரு நல்ல பின்னூட்டுதான் விட்டிருந்தார்.
அதை நான் இரசித்துத்தான் படித்தேன்

அவரின் பின்னூட்டில் இருந்தே
அவர் சொன்ன கருத்தை
என் வழிக்கு நான் திருப்பிக் கொண்டதை அவர் இரசிக்கவில்லை
போலும்.

எழுத்து வாதில் இதெல்லாம்
நடக்கும் ;-)

அதற்கு என்னை நேரடியாக நக்கலடித்து
எழுதியிருந்தால் நானும் சிரித்துக்
கொண்டே அடுத்ததற்குப் போய்விடுவேன்.

ஆனால், என் போன்றோருக்கு ஒரு உருவகம் கொடுத்து, அவர்களையும்
பழிக்குமாறு சில சொற்களை அவர்
பயன்படுத்தியதால் அவரின் இரண்டாவது பின்னூட்டை நான் வெளியிடவில்லை.

எனது கருத்துகளால் என் போன்ற பிறருக்கும் அவம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு.

முதல் அநாநி அவர்களே, இந்தச் சொல்லே பலரும் படிக்கவும், எழுதவும் குமட்டுகிற சொல். இதனை
கூசாமல் எழுதுவதற்கே தேடிப்பிடித்தாலும் சிலர்தான் தேறுவார்கள்.

ஏற்கனவே முடை பிடித்த இந்தச்
சொல் பற்றிய உரையாட்டு மேலும்
முடையாகக் கூடாது அல்லவா.

உங்கள் இரண்டு பின்னூட்டுகளுக்கும் நன்றி. நீங்கள் வைத்த கருத்தின் பேரில் எனக்குத் துளியும் மறுப்பில்லை. ஆயினும் இரண்டாவது
பின்னூட்டை காக்கா தூக்கிட்டு போயிடுச்சி ;-)))))

மன்னிக்கவும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்