Friday, June 22, 2007

குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்!

காவிரி, பெரியாறு, சிங்களக் கொடுமைகள் இவற்றில் எல்லாம் ஒன்றும் இல்லாவிட்டாலும், கலைஞரின் தில்லி ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. 2004ல் கூட்டணி அமைத்ததற்குஅடுத்தபடியான நல்ல ஆட்டம் இது.

நாடு முழுதும் பெண்ணியமும், ஒரு பெண்மணி குடியரசுத்தலைவர் ஆகும் சூழலையும் மகிழ்ச்சியோடுதான் பார்க்கிறது. (அப்துல்கலாம் குழப்பத்தையும், அரசியல் ஆட்டங்களையும் தவிர்த்துப் பார்க்கையில்) இந்தியாவின் சனநாயகப் பண்பு உயரியதாகவே இருக்கிறது "தத்துவப் பார்வையில்".

தனிப்பட்ட முறையில் பிரதீபா அம்மையார் குடியரசுத் தலைவராக ஆவதில் எனக்கு மகிழ்ச்சியே.

இது ஒரு புறம் இருக்க - இந்தியாவில் உயரிய பதவிகளில் இருந்து பெருமை சேர்த்த/சேர்க்கும் அணிமைக்கால பெண்குலத்தை எண்ணிப் பார்க்கவும் வைக்கிறது.

செயலலிதா - ஊழல் மற்றும் அடாவடித்தனத்தில் இவரை விஞ்ச ஆள்
இல்லை.
மாயாவதி - ஊழலைப் பொறுத்த மட்டில் சின்ன செயலலிதா என்ற
பெருமையை அவர் பெற்று வருடங்களாகிவிட்டன.

உமாபாரதி - என்ன செய்கிறார் என்ன செய்யப் போகிறார் என்று அவருக்கே
தெரியாது.

மமதா பானர்சி - வங்காள இந்திர குமாரி

வசுந்துரா ராசே - மற்ற எல்லாவற்றிலும் எப்படியோ பொதுமேடையிலேயே வாயிடம் வாய் வைத்து ஒரு ஆணுக்கு முத்தமடித்த
கில்லாடி. இவர் செய்த சாதனையை இன்னும் ஆண்களே
செய்யவில்லை. (ஒரு வேளை ஆடவ முதல்வர் ஒரு
பெண்ணுக்கு செய்திருந்தால் அவ்வளவுதான் இந்தப்
பெண்ணியப் பூசாரிகளுக்கு ஆவேசம் வந்து
என்னென்னவோ செய்திருப்பார்கள் :-)) )

பாத்திமா பீவி - மற்றவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள். இந்தம்மா நீதியரசி.
இவரின் நீதி போலவே நிறைய நீதிபதிகள் இருப்பதால்
இந்தியாவின் நீதி சந்தி சிரிக்கிறது என்ற பெருமை
அடிக்கடி ஏடுகளில் அடிபடுகிறது.

எனக்கென்னவோ ஆந்திராவின் பார்வதி அம்மையாரின் சேவையை ஆந்திரம் தவற விட்டுவிட்டதுஎன்றே தோன்றுகிறது.

"இந்தியாவில் ஆண்களுக்குப் பெண்கள் சமமாகவே இருக்கிறார்கள்" என்பதற்கு இவற்றை விடசான்று தேவையில்லை
(குறைந்த பக்கம் அரசியல் பண்புகளில்).

எண்ணிக்கையிலும் சமமாக வந்தபின்னர்தான் காட்சிகள் இன்னும் நன்றாக இருக்கும். ஆகவே விரைவில் 33% இட ஒதுக்கீடு வந்தாகவேண்டும்.

பிரதீபா பாட்டீலை கூடிய விரைவில் அன்னை பிரதீபா என்று கூப்பிடுவார்கள். அந்த அன்னையின் 5 வருடப் பதவிக் காலத்தை மேலே சொன்ன எடுத்துக் காட்டுகளோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

குடியரசுத்தலைவர் - அப்துல்கலாம்!

"வண்டி மையை அப்பிக் கொண்ட வயிரக்கல்" என்று அவர் குடியரசுத் தலைவர்பதவி ஏற்றபோது வருணனை செய்திருந்தேன். அந்தப் பதவிக்கு மிகத் தகுதியானவர்என்பதில் எனக்கு அய்யம் இருந்ததில்லை.

சூழ்ச்சிக் கிடங்கான தில்லி தர்பாரில் ஒரு எளிய, நேர்மையான, அறிவாளி மற்றும் உழைப்பாளிபல தகிடுதத்தங்களுக்கு ஆளாக வேண்டுமே, - பல சனநாயகப் படுகொலைகளை செய்தசிலர் சிறுமை படுத்திய இடமாயிற்றே - இவரின் உழைப்பும் எளிமையும் அங்கே சிறுமைப்பட்டுப் போகுமே என்ற கவலையால் இவர் அதற்குப் போகாமல் இருந்திருக்க வேண்டும்என்று எண்ணினேன். இருந்தபோதும், நேர்மை மற்றும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக,பார் போற்றும் மாமனிதராக தாலடித்தார் அப்துல் கலாம். (டாலடித்தல் = மிளிர்தல் = தாலடித்தல் நன்றி: வளவு)

மாணவர்களின் கண்களில் கனவுகளை மிதக்க விட்ட பெருமைக்கு சொந்தக்காரர்.இந்திய வரலாற்றில் சவகர்லால் நேரு, மற்றும் அப்துல்கலாம் என்ற இருவர் மட்டுமேகுழந்தைகள்/மாணவச் செல்வங்களிடம் இவ்வளவு அன்பு காட்டியவர்கள் என்று சொன்னால்மிகையாகாது. அந்த வகையில் 5 ஆண்டு பதவியை மிகச் செவ்வனே செய்தவர் கலாம் அவர்கள்.
அரசியல் நோக்கில், பா.ச.கவிற்கு மதச்சார்பறு ஒப்பனை தேவைப்பட்டபோது ஆரவாரத்தோடுஅப்துல்கலாமை உயர்த்திப் பிடித்தார்கள்.

அய்ந்தாண்டுகள் தனது குரவத்தை மிக உயரத்தில் வைத்திருந்த அப்துல் கலாம், அய்ந்தாண்டு இறுதியில் தில்லி தர்பாரின் அரசியல் ஆசைகளுக்கு இடையே ஏறத்தாழ சற்று தாழ்த்திக்கொண்டது போல்தான் தெரிகிறது.
அணிமைக்கால உ.பி சட்டமன்ற தேர்தலின் போது, இசுலாமியர் வாக்கு வங்கியை குறிவைத்து பா.ச.க, மீண்டும் அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்குவோம் என்றுஅறிக்கை விட்டது. தேர்தல் முடிந்து முடிவுகள் வரும் முன்பே தனது நிலையை மாற்றிக்கொண்டு தனது அழகைக் காட்டியது.

அப்பொழுதே அரசியலாளரைப் பற்றிக் கலாம் விழித்துக் கொண்டிருக்கவேண்டும்!

ஏனெனில், ஒருவேளை பேராயக்கட்சி கலாமையே குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்திருந்தால், பா.ச.க செகாவத்தை நிறுத்தி இந்துத்துவாவை தூக்கிக் கொண்டிருப்பார்கள்.

பிரதீபா பாட்டீலை பேராயம் அறிவித்தபின்னர், அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு,குழப்பமில்லாமல் தனக்கு ஆர்வமில்லை என்பதனை தெரிவித்திருந்திருக்க வேண்டும்.

அல்லது, உதிரி-அணியினரின் வேண்டுகோளை ஏற்று நான் தேர்தலில் நிற்கிறேன் என்று அறிவித்திருக்க வேண்டும்.

இரண்டையும் செய்யாமல் உதிரிகளையும் சில உதவாக்கரைகளையும் கூட மதிக்கவேண்டிய கட்டாயத்தை தனக்கு அவர் ஏற்படுத்திக் கொண்டதனால், உதிரிகளின் உபயத்தில் இன்று அவர் சொல்லடி பட்டு நிற்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

அப்துல் கலாம் மாதிரியானவர்தான் வேண்டுமா இல்லையா என்பது வேறு கேள்வி!

ஆனால், அவருக்கு வாய்ப்பு இல்லை - மற்றும் பேராயம், பா.ச.க இரண்டு பேருமே அரசியல்ஆடிவிட்டார்கள் - கூடவே உதிரிகளும் ஆடுகிறார்கள் என்ற நிலையில் மிகக் குரவமாகஅவர் ஒதுங்கிப் போயிருக்கவேண்டும்.

இன்று பல அரசியல் வாதிகளும் "ஆட்டம் காலி - படுதா காலி" என்று சொல்லுமளவிற்கு வைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.

இந்த நிலையில் அவர் கட்டாயம் 'வண்டி மையை" அள்ளி தன்மேல் அப்பிக் கொண்டார்என்றே சொல்ல முடிகிறது.

"மாணவர்களையும் எளியவர்களையும் அவர் சென்றடைந்தார்! அது பெரிய சாதனை!அதனை அவர் அந்தப் பதவியை விட்டு வந்து நிறைய நிறையவே செய்யலாம்."

பகவத்கீதையை அவர் நாடு முழுவதும் தூக்கித் திரிந்தது, மற்றும் தகுதியில்லாத மடங்களிலும் தகுதியில்லாதவர்களின் அடியில் அமர்ந்தது போன்ற மிகையான மதநல்லிணக்கச் சேவையைத் தவிர அவர் பால் பெரிய குற்றம் சொல்ல எதுவுமில்லை என்பதே என் கருத்து.

நான் கடந்த சூன் - 2002ல் எழுதிய ஒரு கவிதை/பாட்டு இங்கே எனக்கு மீண்டும்நினவுக்கு வந்தது.

"போய்வா போயிவா என்கலாமே!
நில்லாத சொப்பணம் நானும் கண்டேஎன்!
நில்லாஅத சொப்பணம் நானும் கண்டேன்!

ஊத்தைய் வாய்களும் வாழ்த்தக் கண்டேன்! அய்யா
பார்த்து நீயும் சிரிக்கக் கண்டேன்!
ஊழல் நரிகளும் புகழக் கண்டேன்! அய்யா
பாழும் பரிவாரம் பல்லிளிக்கக் கண்டேன்!

போய்வா போயிவா என்கலாமே!
நில்லாத சொப்பணம் நானும் கண்டேஎன்!

"குறளைக் கேட்டு நிற்பார் கண்டேன்! அங்கே
குழலை ஊதி நீ நிற்கக் கண்டேன்!"
அருளை வேண்டி நீ நிற்கக் கண்டேன்! உன்னை,

மருள வைத்து சுற்றி சிரிப்போர் கண்டேன்!

போய்வா போயிவா என்கலாமே,
நில்லாத சொப்பணம்தான் நானே கண்டேன்!
பொல்லாததில்லை பொன்வடிவே,
தில்லிக்குப்போய்வா போயிவா என்கலாமே! "

அன்புடன்
நாக.இளங்கோவன்
17சூன்2002

அவரின் தில்லிப் பதவி முடிந்து அரிமாவாகவே சென்னை திரும்ப வேண்டும். அதுவே அவரின் குரவத்துக்கு அழகு.

உதிரிகளையும், பரிவாரங்களையும்நம்பி பேதித்து விடக்கூடாது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
22/சூன்/2007

Saturday, June 09, 2007

குருவாயூரப்பன் கோயில் தரும் பாடம்!

குருவாயூரப்பன் கோயிலில் இந்திய நடுவண் அமைச்சருக்கு நிகழ்ந்த
இழிவைப் பற்றி யோசிக்கையில், தமிழகத்தின் தலையாய கோயில்களான
மீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருவரங்கக் கோயிலில் மாற்று
மதத்தினர் ஏன் அனுமதிக்கப் படுவதில்லை என்ற உரையாட்டு ஒரு
குழாத்திலே சிந்திக்கப் பட்டது. அந்தக் கருத்தாட்டு என் மனதில் எழுப்பிய
அலைகளிலே சிறு பகுதியை ஆலய நுழைவு குறித்த தேடலாக இங்கே கட்டுரைத்திருக்கிறேன்.
===================================================================
ஆலய நுழைவு என்பதில் ஆய்வதற்கும் மாற்றங்கள் கொண்டு வருவதற்கும்பல்வேறு கோணங்கள் இருக்கின்றன. தமிழகத்தை விட பரந்த சிந்தனை நாகரிகம்கொண்ட குமுகத்தினை சங்ககாலம் மற்றும் பிற்காலச் சோழர் காலத்தில் உலகின்வேறுபகுதிகளில் காண்டலறிது. இன்றைய கால கட்டத்தில் மத நல்லிணக்கம் என்றசிந்தனை முதிர்ச்சி, பல்வேறு நாடுகளிலும் இருக்குமானால் அது நமது சங்ககாலம் உலகுக்கு அளித்த கொடையாகவோ, அல்லது சோழப்பேரரசின் ஆன்ம, குமுக, அரசியல் பண்பாட்டுக் கூர்மதியின் கொடையாகவோ இருக்க வாய்ப்பிருக்கிறது.

மீனாட்சி அம்மன் கோவிலில் சில ஆடை அணிகள் கட்டுப்பாடும், மாற்று மதக்கட்டுப்பாடும் இருக்கின்றன என்பதனை அறியும்போது, இதன் காரணம் என்னவாகஇருக்கும் என்ற சிந்தனை நமக்கு எழுகிறது. அதுவும் சிவத்தலத்தில் ஏன் இந்தக்கட்டுப்பாடு என்ற சிந்தனை நமக்கு இயல்பாகவே இருக்கிறது. குலமில்லாதவன்,குலமென்று ஒன்றிருக்க முடியாதவன் சிவன். அவன் அம்பலத்துள் சில சாராரைப்புகக் கூடாதென்று சொன்னால் அது சிவனின் இயல்புக்கே, சிவசக்தியின் இயல்புக்கே மாறானதாக இருக்கக்கூடுமே என்ற தத்துவார்த்தமான சிந்தனையும் இயல்பாகவே ஏற்படுகிறது. அதேபோல அரங்கனின் அம்பலத்திலும் ஏனிந்தக் கட்டுப்பாடு? சிவமும்விண்ணவமும் ஆழ்ந்த தத்துவங்களல்லவா? தத்துவம் கீழான சார்புடையதாக எங்கேனும் இருந்ததுண்டா?

தமிழ்நாட்டின் இருண்ட பெருங்காலம் என வரலாற்றாலும், அறிஞராலும் சொல்லப்படும்காலம் களப்பிரர் காலம். சங்கம் மருவிய காலமான கி.பி மூன்றாம் நூற்றாண்டுமுதல் சிவப்பேரொளி கிளர்ந்த ஆறாம்/ஏழாம் நூற்றாண்டு வரையான காலமேஅந்தப் பேரிருள் காலம். அந்தப் பேரிருள் காலத்திற்கான காரணங்கள் பலவாகவும்,அந்த இருளின் தன்மைகள் பலவாறாகவும் இருந்திருக்கக் கூடுமென்றாலும்,அதில் கூர்ப்பாக இரண்டு சங்கதிகள் கண்ணில் படுகின்றன.

பண்படாத முரட்டுக் குடிகளான களப்பிரரின் கொடுங்கோல் என்பதுவும்,அவர் பின்பற்றி, தமிழகமெங்கும் ஆட்சி செலுத்திய சமண மதம் என்பதுவும் அந்த இரண்டு சங்கதிகள்.

ஒவ்வொரு சமயமும் மனிதனை நெறிப்படுத்தி அறப்படுத்தி நல்ல வாழ்வைமண்ணுலகில் கொடுக்கவே தோன்றியதாகவே எல்லோரும் கருதுகிறோம்.ஆனால் மனிதனுக்காக என்று தோன்றி அது கடைசியில் கடவுளைக் காப்பாற்றப்புறப்பட்டதாகச் சொல்லி வெறி கொண்டு திரிவதை எல்லா காலங்களிலும்ஏதோ ஒரு மூலையில் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

அப்படித்தான் மெல்ல மெல்ல சமண மத வெறி அதிகமாகி சமண அரசர்கள் தமிழ்நாட்டின்இயல் நெறிகளான சிவ விண்ணவ நெறிகளின் குரல்வளையை நெரிக்கும்முயற்சியில் ஈடுபட்டனர். அம்முயற்சியில் தமிழ நெறிகளான சிவ விண்ணவ நெறிகள் சொல்லொனாத் துயருக்காயின. அதோடு சிவ விண்ணவ நெறிகளுக்கிடையேயும் ஏற்பட்டபெரும் கலகம் சோழர்கள் காலத்தின் அந்திமக் காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவை இரண்டின் முட்டல் மோதல்களும் இருண்ட காலத்திற்குவழிகாட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது.

மதுரையை ஆண்ட சமண நெறி தழுவிய அரசன் தமிழர் வணங்கும் கோயில்களைஎல்லாம் முடக்கினான். கோயிலில் நடைபெறும் பூசைகளைத் தடைசெய்தான்.கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தான். ஆலவாயன் அம்பலத்திலே தீபம் நின்றது. மலர்வனம் மறைந்தது. மணியோசை இல்லை. இவை ஏதும் இல்லாமல் அவனுக்குநீராட்டு இருக்குமா? முனிவனுக்கும், தேவனுக்கும் காணக்கிடைக்காத கூத்தன் எளியவனைத் தேடிப்போவான் விரும்பி என்று சொல்லப்படுகின்ற அந்த இறைவன்சன்னதிக்கு எளியோரின் வருகையும் இல்லாமல் செய்யப்பட்டது. தடை என்பதுஎல்லை கடந்தது. கோயிலில் பூசைக்குத் தேவையான பொருள்களைக் கூடஅவன் பிற ஊர்கள்/நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கவில்லை.குறிப்பாக சந்தன மரங்கள் மதுரை வருவதற்கு முழுமையான தடையை
ஏற்படுத்தியிருக்கிறான் அந்த சமண மத வெறியில் ஆட்சி செய்த மதுரை அரசன். இதனால் வருந்தி வெகுண்டவர் மூர்த்தி நாயனார் என்று அவரின் வரலாறு கூறுகிறது.

ஏறத்தாழ அதே கால கட்டம்தான் திருஞான சம்பந்தர் பெருமானும் திருநாவுக்கரசர் பெருமானும் தமிழ்ப் பேரொளி அல்லது சிவப்பேரொளியை தாங்கி வந்தனர். அவ்வொளியை சிவப் பேரொளி என்று சொல்வதா அல்லது தமிழ்ப் பேரொளி என்று சொல்வதா என்ற குழப்பமே தேவையில்லை. இரண்டில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனெனில் அவை இரண்டுமே ஒன்றுதான்.

இந்தப் பேரொளி மற்றும் மூர்த்தி நாயனார் போன்ற தமிழ முனிகளின் பின்னால்தமிழகம் மறுமலர்ச்சி அடைந்தது. சிந்தனைத் தளங்கள் சக்தி பெற்றன.அப்போது எழுந்த அந்தக் கனலின் உயரம் மிகப் பெரியது.
அந்தக் கனல் தமிழகம் தாண்டி தென்னகமும் தாண்டி வடக்கேயும் சுடர் விட்டு எரிந்தது. போகும் வழியிலே வாதாபியை பொசுக்கி விட்டுப் போனது.
சமணத்தைத் தூக்கிப் பிடித்து தென்னகத்தை சமணமாக்கி, மதுரைச் சமணத்தின்கொடுங்கோலுக்கும் பக்க பலமாக இருந்த சாளுக்கியப் பேரரசின் தலைநகரந்தான் வாதாபி. அந்த வாதாபியைத்தான் ஒன்றும் இல்லாமல் ஆக்கினான் மாமல்ல பல்லவன்.

அந்த அழிவின் தன்மை எப்படி என்றால், வாதாபியில் 12/13 ஆண்டுகளுக்கு சாளுக்கிய அரசன் என்பவனே இல்லாமல் இருந்தான் என்றும் வாதாபி என்ற ஊரே மக்கள் வாழும் இடமாக இல்லை என்றும் சொல்வார் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார்.

மதுரையை ஆண்ட சமண மத வெறி பிடித்த அரசன் மாண்டு போகிறான்.மூர்த்தி நாயனாரே மதுரையை ஆண்டார் என்றும் தமிழும் சைவமும் மதுரையில் மீண்டன என்று வரலாறு சொல்கிறது.
மதுரையில் ஆலவாயன் கோட்டையையே இருட்டில் போட்ட பின்னர்தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும் நிகழ்ந்தவை இவை.
அந்தப் பரந்த தத்துவத் தமிழ்த்தடப் பெருங்கோயிலிலே, மிகப் பரந்தசிந்தை கொண்ட சிவநெறிக் கடலிலே மாற்று மதத்தினர் நுழையக் கூடாதுஎன்பது மிகக் குறுகிய சிந்தனை. ஏனென்றால் மாற்று மதத்தினர் உள்ளேவந்து வணங்கினால் வாடிப்போகும் அளவுக்கு சிவ விண்ணவ நெறிகள்மழைக்காளான்கள் அல்ல. அவைப் பெருங்கடல் என்ற ஞானம் கொண்டாருக்குஇந்தக் குறுகிய சிந்தனை வருவதேயில்லை.

ஆனால், அந்தச் சிந்தனை அங்கே தோன்ற சமண மத வெறியால் ஏற்பட்டக்கொடுமைகளே காரணமாக இருக்கக் கூடும். இன்றைக்கும் தமிழகத்தில் ஏதாவது மதச்சரவல் என்றால் மீனாட்சியம்மன் கோயில் செய்தித் தலைப்பில் வருவதைக் காண்க.

காலப்போக்கில் இவை சரி செய்யப் படவேண்டும்.
மீனாட்சியம்மன் கோயிலில் இது காரணமாக இருக்கக் கூடும் என்றால்,அவளின் அண்ணன் மாயனது அரங்கத்திலே என்ன காட்சி என்றால்அது மிகவும் அச்சப் படுத்துவதாக இருக்கிறது. அறிதுயில் அரங்கனேஎழுந்து ஓடி விட்டான் சீரங்கத்தை விட்டு!

கி.பி 1336 முதல் கி.பி 1377 வரை ஆப்கானிய மரபினர் மதுரையை ஆண்டார்கள். தில்லியில் இருந்த ஆட்சி மற்றும் பாமினிப் பேரரசிடமும் ஆதரவைப் பெற்றிருந்தார்கள். தமிழகத்திலே அந்த கால கட்டத்தில் மிகையான கலவரங்களும், அரசர்களுக்குள்ளாக ஆளுமைப் போட்டி, வாரிசு போட்டி என்று நிறைந்திருந்து ஒரு நிலையற்ற கொடுங்கோல்ஆட்சி நிலவியதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அதன் நிலையற்ற நிலையினை இந்த 40 ஆண்டுகளில் மட்டும் 12 பேர் மதுரையை ஆண்டிருக்கிறார்கள்.

இந்த கால கட்டத்தில் சீரங்கம் கோயில் குறிவைக்கப் படுகிறது என்ற அய்யத்தில் சீரங்க வைணவர்கள் சீரங்க நாதனை, அறிதுயில் அழகனை,ஆண்டாளின் காதலனை, வேங்கடத்துக்குக் கொண்டு சென்று பாதுகாத்திருக்கின்றனர்.

அரங்கநாதன் கோயிலுக்குச் சென்றிருக்கும் அனைவரையும் வருணிக்க முடியாதஅரங்கனின் துயிலழகு கொள்ளை கொண்டிருக்கும். அந்தச் சன்னதியில் இருந்து, அந்தத் திருமாஉரு சீரங்கத்தில் இருந்து, கொள்ளிடம் கடந்து, தொண்டை நாட்டின்வழியாக வேங்கடம் சென்று சேர எத்தனை அல்லல் பட்டிருக்கும் என்று நம்மால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அப்படிச் சென்ற சீரங்க நாதர், 1371ல் கம்பணான் என்ற விசயநகர அரசனால்அல்லது படைத்தலைவனால் மதுரையில் அமைதி திரும்பிய பின்னர்தான் திருவரங்கத்தைச் சேர்ந்திருக்கிறார். வரும் வழியே, செஞ்சியில்சிலகாலமும், சேந்தமங்கலத்தில் சில காலமும் இருந்திருக்கிறான் என்று கூறுகிறதுவரலாறு. சீரங்கன் போகவும் வரவும் சம்புவராயனும் உதவியிருக்கிறான் என்றும்சொல்கிறது.

அரங்கன் போன பின்னர் உயிருக்குப் பயந்து வைணவாச்சாரியர் மயிலாப்பூருக்கும்மைசூருக்கும் ஓடித் தப்பினர் என்றும் வரலாறு குறித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வு 1340/1350 களில் நடந்திருக்கிறது. இந்த அரசியல் சூழல்மாற்று மதத்தினர் கோயிலுக்குள் வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டைப் போடசீரங்கம் கோயிலைக் பொறுத்தவரை காரணமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
சமணம் 7 ஆம் நூற்றாண்டில் கொண்ட வெறி மதுரையை நடுக்கியது என்றால்,சரியாக 7 நூற்றாண்டுகள் கழித்து அயல் மரபினரால் 14 ஆம் நூற்றாண்டில்சீரங்கம் நடுங்கியிருக்கிறது.

தற்போது மேலும் 7 நூற்றாண்டுகள் கழிந்து 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம்.எல்லாக் கோயில்களிலும் வைதீக வெறி ஆட்டிப் படைத்து வருகிறது.

நம்மது நம்மது என்று நாமே உளறிக் கொண்டு இருக்கும் வைதீகம் செய்திருக்கும் கொடுமைகள் மற்ற மதங்கள் செய்த கொடுமைகளை விடபன் மடங்காகி இருப்பதை எத்தனை பேர் உணருகிறார்?

மூவர் கிளர்த்த அந்த சிவப் பேரொளி பக்தி இயக்கமாகி சுடர் விட்டுப் பரந்ததுநாடு முழுதும். அதனை 10 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே வைதீக இயக்கம்சிற்றம்பலத்தில் ஓரு இருட்டறையில் முடக்கியது. 16/17ஆம் நூற்றாண்டில் மொகலாயப்பேரரசு சரிந்து வெள்ளையர் பேரரசு ஏற்பட்ட போது அதனையே வாய்ப்பாகக்கொண்டு பெருவளர்ச்சி அடைந்த வைதீகம் அப்போதில் இருந்து இப்போது வரைசெய்து வருகிற கொடுமைகள் மிக அதிகம். அந்த நன்றியின் காரணத்தால்வைதீகம் எப்போதும் வெள்ளைக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும்.

மொழி வெறியையும், சாதி வெறியையும், தீண்டாமையையும் கருவிகளாகக் கொண்டுதமிழ்க் குமுகாயத்தையும் ஆட்டி வருகிறது. பக்தி என்பதனை நசுக்கி, கோயிலைவணிகமாக்கிய சிறுமை தமிழக வரலாற்றில் வைதீகத்திற்கு மட்டுமே சொந்தம்.

தாய்மொழி கோயிலுக்குள்ளேயே இல்லை. பக்திமான்கள் கட்டி வைத்தக் கோயிலுக்குள்போகச் சொல்லி, வரச் சொல்லி இந்த மண்ணின் மிகப் பெரும்பான்மை சனத்தைக்கூட்டிச் சென்றவன் பக்தியில்லாத இராமசாமி நாயக்கன்தான்.

அதுமட்டுமா? "அப்பாவி மக்களை ஏமாற்றி அவனை அடித்து உதைத்து குனித்துஅவமதித்து அவன் சீவனைச் சுருட்டி, மெல்ல மெல்ல அயல்நாட்டு மதங்களில் சேர்த்து விடும் கைக்கூலியாக வைதீகம் இருந்து வருவது இன்னும் யாருக்கும் கண்ணுக்குப்புலப்படவில்லை!"

வைதீகம் ஆடும் பேயாட்டம் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அந்த காலத்தில், அயல்நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தீட்சிதர்கள்,நடவரசனை தமிழண்ட விடாமல் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பைத்தியக்காரனும் அவனைப் பார்க்கச் சென்றால் நம்மையும் பைத்தியக் காரனாக்கிஅனுப்பி வைக்கிறானே ஒழிய அங்கேயே கொதிக்க வைக்க மாட்டேன்கிறான். கொதிப்பவர்களுக்கு வைதீகச் சட்டம் தண்டனை தருகிறது. (சிற்றம்பலத்தில் திருமுறைகளுக்கு இழைக்கப் படும் தீங்கினை என் கண்ணால் கண்டுஉறைந்து போய் நின்றேன். அதை நான் எழுதினால் நிச்சயம் யாராவதுஒருவருக்கேனும் கண்கள் குளமாகும்! )

இப்படி, தன் மொழி, தன் நெறி, தன் பண்பு என்று பல சிறப்பும் கொண்டஇந்தத் தமிழ்நாட்டு மக்களை முழுவதுமாக மாற்று மதங்கள் கூறு போட்டிருக்கின்றன.

அதுவும் வைதீகக் கொடுமைகளைக் கண்டு, ஆண்டவனே "இவர்கள் நாய்களைப் போல, தன்மானம் இல்லாமல் இருக்கிறார்களே" "இவர்களுக்கு என்ன செய்து என்ன பயன்" என்று அயர்ந்துபோய் இருப்பான் என்றே படுகிறது. எத்தனை நாயன்மார்களையும், ஆழ்வார்களையும்தான் இவர்களுக்குப் படைத்துக் கொடுப்பதுஎன்று அவன் எண்ணினால் வியப்பதற்கில்லை.

ஆகவே, ஆலயம் நுழையக் கூடாது என்று ஆலவாயனும் சொல்லவில்லை;சொல்லமாட்டான் அவன். நுழையக்கூடாது என்று தடுக்கப் பட்டவனைதோளிலே தூக்கி வரச் செய்த அரங்கனும் சொல்ல மாட்டான்.
7 மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற பயங்கரங்களின் விளைவாகஅரசு அல்லது கோயில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கும்.அது இன்றும் தொடர்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

குருவாயூரப்பன் கோயில் விவகாரம் சொல்லும் கதை மிக ஆபத்தானது. அந்த ஆபத்தை வைதீகம் உணராது. அதன் தலை முழுதும் ஆணவம் குடி கொண்டிருக்கிறது. உணர வேண்டிய நெறியினர் உணர்ந்து செயல் பட வேண்டும். அதற்கு விடை கோயிலுக்கே வர மாட்டேன் என்று சொல்வதல்ல. அதனை மீட்க வேண்டும். காட்டாக, வயலார் இரவியின் குடும்பம் பெரிய குடும்பம். அவரின் மனைவியார் கிறித்துவராக இருந்தாலும் 30 ஆண்டுகளாக ஒரு இந்துக்குடும்பத்தின் அன்னையாக இருக்கிறார். அவரை உள்ளே முடியாது என்றுஅக்கிரமம் பண்ணினால், அந்தக் குடும்பம் அன்னையின் மதவழியே போகவேமுடிவெடுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டால் யாருக்கு நட்டம்?

வைதீகம் இதனை நட்டமாக நினைப்பதாகத் தெரியவில்லை. அப்ப யாருக்கு நட்டம்? என்ற வினாவினை அவரவர் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வைதீகமும், நாத்திகமும் ஒரு முடிவில்லாதஎலி-பூனை (micky-mouse)ஆட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த ஆட்டம் நகைச்சுவையாக மாறிக் கொண்டு வருகிறது. ஒருபுறம் சினம் மட்டும் இருந்தாலும், நெடுங்காலச் சித்தாந்தம் இருபுறமும் இல்லை. இந்த இருவரின் கேளிக்கைப் பொருளாகத் தமிழ் நாட்டு நெறிகள் ஆகிவிட்டன. வைதீகத்தின் கொடுமைகளுக்கு ஓரிரு சாதியினர் பெருங்காரணமாக இருந்தாலும் முழுக்காரணத்தை அவர்கள் தலையிலே மட்டும் கட்டி விட்டு தமிழர்கள் தப்பித்து விடமுடியாது.

"அவர்களையும் வைதீகத்தின் பிடியிலிருந்து மீட்க வேண்டிய பொறுப்பு நமக்குஇருப்பதாகவே நான் கருதுகிறேன்."

பக்தி இயக்கம் வேறு வைதீக இயக்கம் வேறு. வைதீகத்தின் பரப்புரைகளின் பலத்தால்பக்தி இயக்கமே வைதீக இயக்கம் என்று தெளிவாக குழப்பப் பட்டிருக்கிறது.இந்த நுண்ணிய வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் தமிழகத்தில் வாழும்அத்தனை பேரின் வாழ்வும் எண்ணங்களும் சிறக்கும் என்பதில் அய்யம் இல்லை.

தமிழை நேசிப்பவர் யாராயினும், அவர்கள் தமிழ் இயல் நெறிகளைத் தழுவினராகினும் சரி, அவர்கள் வைதீகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அல்லது ஏனையமதங்களை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, "தமிழை நேசித்து சுவாசிக்கும் அனைவரையும் உள்ளிட்ட தமிழ்க் குமுகாயத்தில்", தமிழையும், தமிழ் நெறிகளையும் மீட்டெடுத்த திருஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் **மீண்டும் திரும்பிப் பார்த்து** அந்தப் பெருஞ்சுடர்களின் ஒளியை உள்ளடக்காத தமிழியமோ, தமிழ்த் தேசியமோ, அல்லது திராவிடமோ "உருப்படவே உருப்படாது" மற்றும் நிலைக்காது.

அந்த வரலாற்றுச் சிந்தனை வரும்போதுதான் தமிழகத்தில் உள்ள குமுகப் பிணிகள் அகலும். நேர்மையான மதநல்லிணக்கம் ஏற்படும். அந்த நல்லினக்கத்திற்கு எல்லா நெறிகளின் பங்களிப்பும் இருக்கும்.

ஏனெனில் அவர்கள் செய்தது சமயப்பணி மட்டுமல்ல; அதையும் தாண்டியஅற்புதமான மானிடத்தை அவர்கள் காட்டி இருக்கிறார்கள்.

அவர்கள் எழுப்பிய அந்தத் தமிழ்த் தேசியப் பேரொளி பிற்காலத்தில் இந்தியத் தேசியப்பேரொளிக்கும் அடிநாதமாக அமைந்தது என்று சொன்னால் மிகையன்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Thursday, June 07, 2007

பெறுநர்: அன்புடன் மடற்குழு மற்றும் திரு.சி.செயபாரதன்-கனடா! (மடல்-4)

தரித்திரத் தமிழுக்குப் பரிந்து தமிழ் விடுதலை ஆகட்டும் என்று பூசை போடும் புண்ணியரே,எமது அருமை நண்பர் திரு,செயபாரதன் அவர்களே:

மேலும் பல தளங்களுக்கு இந்தக் கட்டுரையை நீங்கள் எடுத்துக் கொண்டு போகுமுன்,எனது கேள்விகளுக்கு விடை சொல்லி விட்டுப் போங்கள். எனது சில விளக்கங்களையும்படித்து விட்டுப் போங்கள். அது நல்லது.

(நீல வண்ண எழுத்துக்கள் திரு.செயபாரதன் அவர்கள் எழுதினவை)

/// தலைமுறை ஒரு கோடி கண்ட, என் தமிழ் விடுதலை ஆகட்டும்! .... தேனால் செய்த என் செந்தமிழ்தான் திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
*பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்) *
///

தங்களின் உரையில் பாவேந்தரைக் குறித்து அவ்வளவு கேவலமாகப் பேசிவிட்டுகண்டனம் வந்ததும் இந்தக் கட்டுரையில் பாவேந்தரின் நிழலில் ஒதுங்கியிருக்கிறீர்கள்.இது உளமார்ந்த செயலா, நாடகமா அல்லது உங்களது உரிமையா?

//உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! ///

ஐயா, தங்களுக்குத் தெரியவில்லை என்பதனால் இவை உலகில் இல்லாமல் இல்லை.இது குறித்து எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. இந்த மாதிரி தவறான,பிழையான செய்திகளை இடும் முன் கொஞ்சம் யோசித்து எழுதுங்கள்.இது குறித்து சிறியவன் நானே பல கட்டுரைகளை எழுதியுள்ளேன், தமிழ்-உலகம் குழுவில்போய்ப் பாருங்கள்.

/// மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும். அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! ///

இணையத்திலும் வெளியிலும் இதே பம்மாத்துக் கருத்துகளைப் பலரும் கூறி வருகிறார்கள்.அரசியல் கட்சிகளின் "தலைவர் வாழ்க!" என்ற கூச்சலுக்கு ஒத்தது இந்தக் கருத்து.

தமிழ் மொழி வளையனும், தமிழ் மொழியை வளைக்கனும் என்றே குறிக்கோளுடன்சுற்றிக் கொண்டேயிருப்பவர்கள் தூக்கத்திலும் பேசும் பேச்சு இது.

ஏங்க தமிழ் மொழி வளையனும்?
தமிழ் மொழியில் என்ன கரையைக் கண்டிருக்கிறீர்கள்?

பூ, மலர் என்று சொல் இருக்க நான் pushpam என்று எழுத முடியலை அதனால் தமிழை வளைப்பேன் என்று சொல்கிறீர்களா?

சலம் என்ற தமிழ் இருக்க jalam என்று எழுத முடியல அதனால் தமிழை வளைப்பேன் என்கிறீர்களா?

இவற்றையும் எழுதுதற்கு தொல்காப்பியம் எப்படியெல்லாம் வளைந்து கொடுத்திருக்கிறதுஎன்று படித்துப் பாருங்கள் புரியும்.

நமக்குத் தெரிந்ததே தமிழின் அளவு என்று இருந்து கொண்டு நினைத்தமாதிரிஎல்லாம் வளைத்துக் கொண்டே போவதற்கு இது என்ன தெருவோர குப்பைத் தொட்டியா?

பித்தகோரசு தேற்றம் புரியலைன்னா, பித்தகோரசு தேற்றத்தை வளைக்கனும் என்றுசொல்லலாமா?

///
*தூய தமிழரும், தூய தமிழும் *
'தூய தமிழர் ' என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் 'தூய தமிழர் ' என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர்.
///


இப்பொழுது என் கேள்வியெல்லாம் இதுதான்:
அந்த ஒரு அல்லது சில தமிழருக்கு இது முடிகையில் ஏன் மற்ற தமிழர்கள் முயலவில்லை?

நுட்ப அறிவிற் சிறந்த கட்டுரைகள் படைக்கும் நீங்கள் ஏன் வழிகாட்டியாயிருக்கக் கூடாது?

///தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! ///


இந்த வாதமே கையாலாகாத சோம்பேறிகளின் மூளைச் சலவையால் பெருகிவருகிறது.அதற்கு நீங்களும் துணை போயிருப்பது உங்களை அறியாமலே என்றே நான் கருதுகிறேன்,முதலில் தூய்மையாக எழுதுங்கள். அப்புறம் புரியும் தமிழின் வளம் என்ன என்று.

///கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ? ///

தமிழ் வளர்ச்சி அல்லது முன்னேற்றம் என்பதெல்லாம் இது நோக்கித்தான்.மற்ற முறையெல்லாம் தாழ்வுதான். இது முதலில் அவசியமாகப் புரிந்து கொள்ளப் படவேண்டிய ஒன்று.


///ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.///

தடுக்க முயலவில்லை என்பது பொருத்தம். அதை விட அதனை இப்போதும்போல தடுக்க முயல்பவர்களை உங்களைப் போன்றோர் தடுக்கி விடுவதுதான்தமிழகம் கண்டு வருகிற வேதனை. இன்றல்ல நேற்றல்ல - பல நூறாண்டுகளாய்.இந்த வேதனை பொறுக்க முடியாமல்தான் குமுற வேண்டி வருகிறது.தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள்.


///சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! ///

இந்த மாதிரி இடக்கு மடக்கா பிழைகளைச் சொல்வதைப் பார்க்கும்போது உங்களைக் கடிந்து எழுதக் கூடக் கை வர மாட்டேன்கிறது; கொஞ்சம்மொழி அடிப்படைகளையும் மொழி வரலாறு மற்றும் மொழித் தன்மைகளைப் படியுங்கள் ஐயா.

பல நுட்பங்களைப் படிக்கும் உங்களுக்கு இது புரியாமலாப் போய்விடப்போகிறது?

உங்கள் அறியாமை என்று சொல்ல மாட்டேன் - ஆனால் "அறிய மறுப்புமை" நிறையவைத்திருப்பதால் இந்தத் தவறான பாதையில் போகிறீர்கள். போகிற போக்கில்தமிழின் தலை மேல் கை கழுவி விட்டுப் போகிறீர்கள்.
சங்கு என்றால் என்ன என்பதைப் படியுங்கள். படிக்கத் தொடங்கினால்சங்கராச்சாரிக்கும் பொருள் என்ன என்பதைச் சொல்ல உங்களுக்கு வாய்க்கும்.

///பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல! ///

"பொற்கலத்து அமுதூட்டி புறந்தரினும் நாய் தன் எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்"என்ற நாலடியார் சொல் தமிழ்க் குமுகாயத்திற்குப் பொருந்தும்.


///*தூய தமிழில் பெயரை எழுதிய தூய தமிழர்! * ///

இப்பதான் நீங்கள் என்னை/எனக்கு ஏதோ சொல்கிறீர்கள் என்று தெரிகிறது,

///நண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் (Pathivukal.com) என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார்!
என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார்! அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன்! ///


1) திரு.செயபாரதன் அவர்களே, உங்கள் பெயரை சிதைவு செய்வது என் தொழிலல்ல,ஏன் யார் பெயரையும் சிதைவு செய்வது என் தொழிலல்ல.
தூயதமிழில் எழுதினால் அது சிதைவு என்று கருதும் அந்த சிந்தைப் போக்குதான்தமிழரையும் தமிழையும் சிதைத்து சின்ன பின்னமாக்கி வருகிறது.குறைந்தது 2000 ஆண்டு வரலாறு சொல்வதெல்லாம் இதுதான்.

2) நான் கற்ற தமிழுக்கு 247 எழுத்துக்கள்தான். கூடவே காற்புள்ளி, அரைப்புள்ளி,வியப்புக் குறி, கேள்விக்குறி போன்றவை. எனது ஆசான் என் விரலைப் பிடித்துக்கற்றுக் கொடுத்தது இவைதான். இவைதான் தமிழ்; என் மொழி.

இதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தேவை இல்லை. நீங்கள் எதெல்லாம்எழுதமுடியாது என்று கூறுகிறீர்களோ அதைஎல்லாம் தமிழ்ப்பாட்டன் அத்தனைபேரும் எழுதிப் போயிருக்கிறார்கள். அவர்கள் மேல் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கைஇருக்கிறது. பகட்டு எழுத்தாளர்கள் மேலும், பட்டறிவு இல்லாதார் பாலும்,தமிழ் படிக்காமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சவடால் அடிக்கும் தமிழ் மேதாவிகள்மேலும் எனக்குத் துளியும் கவலை இருந்ததும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை.

3) செயம், சயம் என்பன தமிழ்ச் சொற்கள். யாரும் தடுக்க நாதியில்லாமல் போனதால்இச்சொற்கள் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் வைதீகச் சழக்கினால் அதிகம் திரிந்தன. வைதீகம் அதன்கோரமுகங்களைக் காட்டியதும், ஏனைய மதங்கள் மற்றும் இராட்டிரகூடர், சாளுக்கியர்,தெலுங்கர் போன்ற பலவும் தமிழகத்தையும் தென்னகத்தையும் நெருக்கிக் பிடித்ததும் கிட்டத்தட்ட 13/14 ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை.

சகரத் திரிபும் அப்போதுதான் அதிகம் ஆகியது. அப்படி ஆகியதை அலட்டிக் கொள்ளாமல் நாம் எடுத்துக் கொண்டதால்தான், தற்போதும் அவைகளின் அரிப்பின்சுகத்திலேயே தமிழ்ச்சாதி சொறிந்து கொண்டு இருப்பதால்தான் நம்மாலும் நமது மொழியாலும்மேலேற முடியவில்லை.

நான் தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துகிறேன், யார் பேரையும் கெடுக்கவோ அல்லதுசிதைக்கவோ அல்ல. அப்படித் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல என்பதனைமிகத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

நீங்களே "யாரும் தடுக்கவில்லை" என்று சொன்னீர்கள். இப்பொழுது தடுப்பவர்களைத்தடுக்காதீர்கள்.

////வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. ///

வங்காளிகள் மட்டுமல்ல. கன்னடர்களும் அப்படித்தான், வெங்காலூரை பெங்களூரு என்றுஆக்கி விட்டார்கள். வெங்காலூர் நம்மது. ஆனால் இந்தச் சின்னத் திரிபால் அது நம்மிடம்இல்லை. அது ஒரு பெரிய சோகக் கதை.

///வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை 'இளங்கோபன் ' என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ? ///

இளங்கோ கொளங்கோ :-) என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்; எனக்குத்துளியும் உரைக்காது.


///நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள்

காஷ்மீர், === காசுமீர்
ஆஸ்திரேலியா, ==== ஆத்திரேலியா

ஆஸ்டிரியா, === ஆசுடிரியா

ஸ்பெயின், === இசுபெயின்

பிரான்ஸ், === பிரான்சு

ஜெர்மனி, ==== செர்மனி/செருமனி

ரஷ்யா, === உருசியா

யுகோஸ்லாவியா, === யூகோசுலோவியா / ஊகோசுலோவியா

ஹங்கேரி, === அங்கேரி

கிரீஸ், === கிரீசு

ஹாங்ஹாங்,=== ஆங்காங்

மிஸ்ஸிஸிப்பி, === மிசிசிப்பி

மிஸ்ஸெளரி, ==== மிசெளரி

பாகிஸ்தான், ==== பாக்கித்தான்

ஆஃப்கானிஸ்தான், === ஆப்கானித்தான்/ஆப்கான்/ஆப்கானம்

ராஜஸ்தான், === இரசபுதனம்/ இராசத்தான்

ஹிந்துகுஷ், === இந்துகுசு

பலுஜிஸ்தான், ==== பலுசித்தானம்/பலுசித்தான்

ஸ்காட்லாந்து, ==== இசுகாட்லாந்து

ஜப்பான், ==== சப்பான்/யப்பான்

இஸ்லாம், ==== இசலாம் / இசுலாம்

பாஸ்கரன், ==== பாசுகரன்

புஷ்பா, ==== புசுபா

குஷ்பூ, ==== குசுபு

ஷைலஜா, === சைலசா

கஸ்தூரி, === கத்தூரி

சரஸ்வதி === சரசுவதி
போன்ற பெயர்களை எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். ///

அதேபோல,
டியூட்டிக்குரின் = தூத்துக்குடி

டேஞ்சூர் = தஞ்சாவூர்

மடுரா = மதுரை

கேப்காமரின் = கன்னியாகுமரி
என்றவற்றையும் நீங்கள் ஓர்ந்து பார்க்க வேண்டும்.

இப்படி எழுதினதால் அந்த ஊர்க் காரர்கள்

யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள். இதை எழுத நமக்குப் பேரறிவு தேவை இல்லை.எளிய மனம் வேண்டும். சண்டித்தனம் செய்யா சிந்தனை வேண்டும்.
மொழி வளைய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாமும் வளையவேண்டும். நமது தாழ்மை உணர்ச்சி மறைய வேண்டும்,

உலகில் உள்ள நாடுகளுக்கெல்லாம் கவலைப் படும் நீங்களும் பிறரும்

தமிழ்நாட்டுக்கும் கொஞ்சம் கருணையை வையுங்கள்.

///அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். ///

"தூயதமிழர், தூய்மை இல்லாத தமிழர் என்ற சிந்தனைப் போக்கு வளர வேண்டாம்என்பது எனது தாழ்மையான கருத்து.


தமிழர் யாவரும் தமது மொழியில் பிழைகளைக் கொண்டுள்ளார்கள். அதற்கு முழு முதற் பொறுப்பு தற்போதைய தலைமுறைகளைச்சார்ந்தது என்று சொல்ல முடியாது.


ஆனால், பிழைகளை உணரும் வாய்ப்பு முன்னெக்காலமும் இல்லாத அளவிற்குஇன்று நமக்கு இருக்கிறது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்."


இதுதான் இந்த எளியேனின் கருத்தும் சிந்தனைப் போக்கும், செயற்போக்கும் இதில் எனக்குஉறுதி உண்டு, இந்த உறுதியை இறைவன் எனக்குத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.


நான் யாரையும் வற்புறுத்தவில்லை. ஆனால், முயற்சி செய்து பார்த்து மொழியை முன்னிலும் வளமாக்கிக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளை தொடர்ந்து வைத்துவருகிறேன். அவ்வளவுதான்.


///தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! ///


வலுக்கும் என்று தாங்கள் சொல்வதற்கு எந்த ஆதரவும் இல்லை. மாறாக,இது புகுந்து விளையாடி "தமிழ்" என்ற சொல்லைத் தவிர மற்றெல்லாமேசமக்கிருதமானதுதான் வரலாறு. அணிமைக் காலத்திய தவத்திரு மறைமலையடிகளாரின் காலம் வரை அதுதான் நிலைமை. அதற்குப் பிறகு ஏதோ மூச்சைப் பிடித்துக்கொஞ்சம் முன்னுக்கு வந்தது,
"தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது!" என்று சொல்வதெல்லாம் நமது அப்பாவித்தனமானநம்பிக்கை. இதற்கு எந்த அறிவியலும் வரலாறும் சான்றுகள் தரவில்லை.


பொய் நோக்கிப் போவதில்தான் மனிதகுலத்திற்கு எப்போதும் பேரவா. என்ன செய்வது.

///மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. ///

இந்தக் கேள்வியை உங்களைப் போன்ற நுட்பக் கட்டுரைகள் சமைப்போர் முதல்,அரையனா பெறாத துணுக்குகளும் கழிசடைக் கவிதைகளும் எழுதுவோர்களும்கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன் "இருப்பதைஎவ்வளவு கற்றிருக்கிறோம் - பயன்படுத்தியிருக்கிறோம்" என்று பார்த்தால்விடை நகைப்புக்கிடமாகிறது.


/// தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்! ///

இது உங்களுக்கே கொஞ்சம் மிகையென்று தோன்றவில்லை?

எத்தனை பேருங்க தூய தமிழ் எழுதுறாங்க?

இப்ப யாருங்க விலங்கை கையிலதூக்கிக்கிட்டு அலையறாங்க?

எச்சில் தமிழ் எழுதினால் அது இனிக்குது. ஆனால் தூய தமிழ் எழுதினால் அதுவிலங்காகப் படுகிறதா?

யாரிடம் இருந்து தமிழ் விடுபடவேண்டும் என்றால்,

அவுசாரித் தமிழ் எழுதி அதனால் பிழைப்பை ஓட்டுகிறார்களே அவர்களிடம் இருந்துதான்தமிழ் விடுதலை ஆகவேண்டும்.

நல்ல தமிழ் எழுதினால் எங்கே யாராச்சும் தப்பா நினைப்பாங்களோ என்று ஒரு மாயையில் மிதக்கிறார்களே அவர்களிடம் இருந்துதான் தமிழ் விடுதலை ஆகவேண்டும்.


எனது தமிழும் சரி, என்னை விட நல்ல தமிழ் எழுதும் நல்லோர்களின் தமிழும் சரி என்றோ எப்போதோ விடுதலை ஆகிவிட்டது.

விடுபெற வேண்டியவர்கள் நீங்களும் இன்னும் பொறுப்பற்று திரியும் பல்லோரும்தான்.

///அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார்.
ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்! ///


என்னங்க என்னென்னமோ சொல்றீங்க, ஒன்னுமே புரியலை. இளங்கோவடிகள்எழுதினது எல்லாம் சொக்கத்தமிழுங்க. தூய தமிழ் ஒரு விலங்கு என்ற உங்கள்கொள்கையில் பார்த்தால் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளிடம் இருந்தும் தமிழ் விடுதலை ஆகவேண்டும் போல!
ஆமாம் அகத்தியர் எழுதிய இலக்கண நூல் எங்கு கிடைக்கிறது என்று எனக்குஅறியத் தரவும்.


///சலுகை போனால் போகட்டும்! என் அலுவல் போனால் போகட்டும்! தலைமுறை ஒரு கோடி கண்ட, என் தமிழ் விடுதலை ஆகட்டும்! என் உயிர் போனால் போகட்டும்! என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்! தேனால் செய்த என் செந்தமிழ்தான் திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று 'தமிழ் விடுதலை ஆகட்டும்', என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.
///

கடைசியில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி அறிக்கை விட்டிருக்கீங்க,அவ்வளவுதான் சொல்லமுடியும் :-) ஆனால் அதுக்குப் பாரதிதாசனைப் பயன்படுத்தாமல்இருந்திருக்கலாம்.


(மடல்கள் தொடரும்)

அன்புடன்

நாக.இளங்கோவன்

பெறுநர்: அன்புடன் மடற்குழு மற்றும் திரு.சி.செயபாரதன்-கனடா! (மடல்-3)

கீழ்க்கண்ட எதிர்வினைக் கட்டுரையை "செயபாரதன் மற்றும் அன்புடன்"
கூட்டத்தினர் நடத்திய விழாவில் கேளிக்கை போன்று அவர் பேசிய பேச்சுக்கு விளக்கம் சொல்லியும் தவறெனச் சுட்டியும் எழுதினேன் பதிவுகள் தளத்திற்கு.

இவற்றை மீண்டும் நான் எடுத்துப் போடுவதற்குக் காரணம், இந்தக் கூட்டம்
தொடர்ந்து தமிழ் மொழி மழிப்புப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றி
வருவதால், படிப்பவர்களுக்கு பின்புலம் தெரியவேண்டும் என்பதற்காக
என்று அறிக.

கீழே அந்த மடல்.

(மடல்கள் தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

கவிஞர் புகாரியின் நூல் வெளியீட்டு விழாவில், கவிஞர் புகாரியின்நூலையும் புகாரியையும் வாழ்த்தும் சாக்கில், பாரதிதாசனுக்குப் பழிப்புக் காட்டியிருக்கிறார் திரு.செயபாரதன்.

நாகரிகமானசெயல் மற்றும் ஆழந்த தமிழ்ப் பார்வை என்று சொல்லிவிட ஏலாது. தமிழகத்தில் பல ஆயிர இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், அமைப்புகள்உண்டு. அடிப்படை நாகரிகத்தைப் பேணும் கூட்டங்களாக பெரும்பாலும்அவை அமையும். சில மேடைகளில் பேச வந்த கருத்தை விட்டு விட்டுசொந்தப் பிணக்குகளையும் புலம்பல்களையும் கொட்டித் தீர்க்க சிலர்நல்ல மேடைகளைப் பயன்படுத்திக் கொள்வது உண்டு. அந்த மேடைகளும்பேச்சாளார்களும் முகச் சுளிப்பிற்கு உள்ளாவதும் உண்டு.

"பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்' - என்ற வள்ளுவத்தை மெய்ப்பிப்பதாய் அவர்கள் பேச்சும் செயலும் அமையும்.
புகாரி நூல் மேடையில் அமைந்த செயபாரதனின் உரைஅப்படிப்பட்ட முகச்சுளிப்பையே ஏற்படுத்துவதாய் அமைந்திருக்கிறது.இந்தப் பண்பாட்டுக் குறையை அனைத்து மேடைகளும் தவிர்க்க வேண்டும்.
"தாய்மொழி இழந்தவன், தன்முகம் இழந்தவன்!தமிழற்றுப் போனவன், தலையற்றுப் போனவன்!"என்ற புகாரியின் அருமையான கவிதை வரிகளைப் புகழும் செயபாரதனுக்கு,

"சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்" என்ற பாரதிதாசனின் திடமான சிந்தனை மற்றும் எண்ணற்ற தமிழ் வரிகளும்தீண்டத்தகாதனவாகத் தெரிகிறது போலும்.

செயபாரதனின் உரை ஒரு தெளிவற்ற தமிழ்நிலையைக் காட்டுகிறதோஎன்ற அய்யத்தைக் கட்டாயம் ஏற்படுத்துகிறது.

"தமிழைப் பிழையறக் கற்காது பிறமொழிகள் மீது மோகம் கொள்ளும் தமிழ் அன்னியர் தலையில் ஓங்கி அடிக்கிறார்" புகாரி என்று பாராட்டுகிறார்;ஆனால், "கொலைவாளினை எடடா..." என்றவநரைத் தீவிரவாதி என்று சொல்கிறார்.அதேபோல "வில்லினை எடடா..." என்று சொன்னவரையும் தீவிரவாதி என்பாரா? தெரியவில்லை.

சொல்லிப்பார்த்து, பேசிப்பார்த்து, வாளினைக் காட்டியும் சல்லியும் கவலயுறாது,வாலாட்டிய கூட்டம் துப்பாக்கியையும் பீரங்கியையும் உயர்த்திய பின்னரே வாலைச் சுருட்டிக் கொண்டிருக்கிற காட்சிகளை தமிழ் தேசங்களில் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அதேநிலைதான் தமிழ்நாட்டு/தேசத்து சமூகநிலையையும்கண்டு கொதித்த கவிஞர்கள் தங்கள் எழுத்துக்களில் சாணை ஏற்றியதோடுகுண்டுகளையும் அள்ளி வீசியது.

ஆனால், பீரங்கி என்று எழுதியதாலே "தீவிரவாதி" என்ற முத்திரைத்தாள்வியாபாரம் செய்து கொண்டிருக்கிற நிலை நகைப்புக் கிடமானது. பாரதியின் எழுத்துக்களில் குண்டுகளையும் பீரங்கிக் கணைகளையும் கண்டதாலேவெள்ளைக்காரன் பாரதியைத் தீவிரவாதி என்றான். அது நமக்கு ஏற்பான கருத்தா?

அந்த வெள்ளைக்காரனை பாரதிதாசன் "கோட்டான்" என்று கூறி கவிதை எழுதினார். பாரதியின் எழுத்தில் இருந்த உறுதியும் திடமும் பறங்கிக்கு பீரங்கிக் குண்டாக வலித்தது - தீவிரவாதி என்றது பறங்கிக் கூட்டம். பறங்கிக்கு பல்லக்குத் தூக்கியபுண்ணியர்களும் "ஆமாம் ஆமாம்....அரசாங்கத்தை எதிர்க்கலாமா?.." என்றனர்.

பாரதிதாசனின் கவிதைகள் தமிழையும், வீரத்தையும், மறத்தையும், உரிமையையும், உணர்வையும் தட்டி எழுப்பின. "தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டு சமையல் அறையின் முள்ளங்கித் தண்டு"என்று ஏளனமும் செய்தார் பாரதிதாசன்.

பாரதியாரைத் தீவிரவாதி என்றவர்கள் வெள்ளைக்காரர்கள்.ஆனால் பாரதிதாசனைத் தீவிரவாதி என்பவர்கள் தமிழர்கள் அல்லது இந்தியர்கள். இதுதான் தமிழ் போற்றும் நல்லுழகின் நல்லழகு!!

இந்தியப் பகைவர்களை பாரதி சாடினார்.
தமிழ்ப் பகைவர்களை பாரதிதாசன் சாடினார்.
பாரதி போற்றியது இந்திய தேசம்.பாரதிதாசன் போற்றியது தமிழ்த் தேசம்.
பாரதியின் தீர்க்க தரிசனம் இந்தியத் தேசத்தைக் காட்டியது.பாரதிதாசனின் தீர்க்க தரிசனம் தமிழ்த் தேசத்தைக் காட்டியது.

ஆனால் தீர்க்க தரிசனமே பாரதிதாசனுக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்செயபாரதன். பாரதிதாசனின் வரிகள் பலவற்றைச் சொல்லி இதை மறுக்கவேண்டிய அவசியமே எனக்குத் தோன்றவில்லை.

ஏனெனில் பாரதிதாசனைஉணர்ந்த தூய நாத்திகர் முதல் தூய ஆத்திகர் வரை அவரின் அப்பழுக்கற்றதமிழ்த் தொண்டைப் பாராட்டியே இருக்கிறார்கள்.
ஆத்திகர் என்றதால் மட்டுமே கடவுள் மறுப்பு செய்த பாரதிதாசனைபொறுப்புள்ள ஆன்மீகவாதிகள் யாரும் வெறுத்ததில்லை.கடவுளரைச் சாடு சாடு என்று சாடிய பெரியாரையும், பாரதிதாசனையும்தமிழ்க் குமுகாயம் வெறுத்து விடவில்லை. அந்தப் பகுதியை விடுத்துஅவர்கள் செய்த மற்ற தொண்டுகளை தலையால் ஏற்றுக் கொண்டுதான்இருக்கிறது.

பிள்ளையாரையும், பெருமானையும், பெருமாளையும் பிளக்கப் புறப்பட்டபெரியாரையும் பாரதிதாசனையும் விட, அந்தக் கடவுளரையும் அவர்களோடு தமிழையும் குமுகத்தையும் அப்படியே விழுங்கி ஏப்பம் விட முனைந்தவர்கள் முனைந்து
கொண்டிருப்பவர்கள் மிகவும் கேடானவர்கள் என்று எல்லா தூய்மையான ஆன்மீகவாதிகளும் அறிவார்கள்.

தேசம் என்றால் என்ன என்றே புரியாத விளையாட்டுச் சிந்தனையாளர்களுக்குபாரதிதாசனைப் புரியாததில் வியப்பு இருக்க முடியாது.
"தமிழ்" என்பதன் பொருள் புரியாதவர்கள் அக்காலத்திய பாரதிதாசனோடுஇக்காலத்தைய பழ.நெடுமாறனும் புல்லாகத் தெரிவது ஒன்றும் வியப்பில்லைதான்.

இவர்களுக்கு அக்காலத்தைய பாரதிதாசனை புரிந்து கொள்ள இயலாமல் அல்லது விருப்பமில்லாமல் மேதாவியாகத் தமிழ் பேசித் திரிய முற்படுவதுஓரளவு புரிந்து கொள்ள முடிந்ததுதான். ஏனென்றால் பாரதிதாசனைப் புரியவேண்டுமென்றால், அவரைக் கொஞ்சமாவது படிக்க வேண்டும் - அவரை மட்டும் படித்தால்போதாது பலரையும் பல சங்கதிகளையும் படிக்க வேண்டும். அதற்கெல்லாம்உலகப் பொருளாதாரம் ஒருவேளை நேரமளிக்காமல் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் பிடிப்பு இல்லாதவற்றைப் படிக்க வேண்டும் என்றகட்டாயமும் இல்லை. ஆனால் சேற்றை வாரிப் பூசும் முன்பாவது சற்று ஆழ்ந்துபடிக்க முயலவேண்டும்.

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கண் முன் நம்மிடையேவாழ்ந்து கொண்டு தமிழ்த் தொண்டாற்றி வரும் பழ.நெடுமாறனையும் பழித்துப்பேச தமிழ் பேசத் தெரிந்த ஒருவருக்குத் துணிவு வருகிறதென்றால்,அது "அறியாமை" மற்றும் "அறியாமையால் வந்த துணிவு" என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும் ?
ஈசல் கூட்டமா? எது ஈசல் கூட்டம்?உல்லாச வேளைகளில் தமிழ் பேசி, தமிழ் எழுதிசெயல் இல்லா வெற்றுப் பேச்சுக்களில் தமிழ்க் குமுகத் தொண்டாற்றி வருவோர்களுக்குவேண்டுமானால் நெடுமாறனும் பிறரும் ஈசல் கூட்டமாகத் தெரியக்கூடும்.

தமிழின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒன்றும் செய்யாமல் ஏதோ நாடகம்ஆடி வருகிறார்கள் என்று சொல்ல முனைவது, செயபாரதனும் செயபாரதன்போன்றோர்களும் எந்த அளவிற்கு தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைஉணராதவர்கள் என்ற அனுதாபத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
திருமாவளவன் ஒன்றும் வெற்றுப் பிரச்சினைகளைப் பேசிக் கொண்டுத் திரியவில்லை.வெறும் பேச்சு பேசுவதல்ல இவர்கள் நோக்கம். செயல் வீரர்கள் இவர்கள்.திரைத்துறையில் இருக்கக் கூடிய பிரச்சினை வெறும் தமிழ்ப் பெயர்கள்இல்லாத பிரச்சினை மட்டுமல்ல. இருக்கும் பிரச்சினைகளில் அது ஒரு பங்குஅவ்வளவுதான். அதனால் வெளியே மட்டும் கூவிக் கொண்டிருந்தால் போதாதுஎன்று திருமாவளவன் மற்றும் அவரைப் போன்றோரும் திரைப்படங்களில் நடித்துநடிகராகி அந்தத் துறைக்குள் நுழைந்து ஆவன செய்ய முயன்றுவருகிறார்கள்என்று கேள்விப் படும்போது அவர்களின் செயல் திறத்தைப் பாராட்டத்தான் வைக்கிறது.
ஆகையால் மேம்போக்காக எதையும் பார்த்து படித்து விட்டுதமிழ்த் தொண்டு செய்வோர்களை செய்தோர்களை இழிவுரை செய்வதை செயபாரதன் மற்றும் அவரைப் போன்றோர் தவிர்க்க வேண்டும்.

அதே நேரத்தில் தமிழ் பால் பற்றுள்ளவர்கள், பற்று வந்தவர்கள்,தமிழுக்குத் தொண்டாற்றியவர்களைப் பழித்துப் பேசுதலைத் தவிர்க்க வேண்டும்.அதுவே சிறந்த அடிப்படைத் தமிழ் நாகரிகமாக அமையும். அவரவர் துறையில்அவரவர் தமிழ்த் தொண்டாற்றினால் அதுவே போதும்.
தமிழ் மண்ணில் எத்தனையோ நெறிகள் தோன்றியிருக்கின்றன.கடவுள் மறுப்பு என்பது பெரியார் பாரதிதாசனுக்கு மட்டும் சொந்தமாகிதமிழ்நாடும் திராவிடமும் சீரழிந்து விட்டன என்ற பொய்யான மலிவான சிந்தனைகளில்தேங்கி விடாதீர்கள். உலோகயதம் என்ற கடவுள் மறுப்புக் கொள்கை/நெறி தமிழ் மண்ணில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்பதை சற்று ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
பல கொள்கைகளும் நெறிகளும் தோன்றியதால்தான் தமிழ் மண்"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று சொல்லப்படுகிறது.

"ஈசல் கூட்டங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் களத்தில் இறங்கி தங்களால்இயன்றதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஆயாமல் ஒரே சொல்லில்ஈசல் கூட்டம் என்று தமிழ்ப் பணி செய்பவர்களை அதுவும் எளிமையாகஅஞ்சு பைசா பத்து பைசாவுக்கு சரவற்பட்டு பணி செய்பவர்களை இகழ்வது ஒரு பிணிப்போக்கு.

பாரதிதாசன் கடவுளைப் பற்றி, இந்தியத்தைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்றும்அதனால் அவரைப் பிடிக்கவில்லை என்றும் சொல்கிறார் செயபாரதன்.

கடவுளைப் பற்றி, இந்தியத்தைப் பற்றி எழுதியவர்களைப் படியுங்கள். அவற்றைஎழுதாததவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும். பாரதிதாசன் பல கடவுள் பாடல்களைஎழுதியிருக்கிறார்; மற்றும் இந்திய விடுதலை பற்றியும் எழுதியிருக்கிறார். ஆத்திகராக இருந்துபின்னர் நாத்திகராக மாறி அதில் உறுதியாக இருந்தவர் பாரதி தாசன். இந்தியத்துக்குக்கவலைப்பட பலர் இருக்கையில் தமிழத்துக்கும் தமிழ் மண்ணில் விளைந்து செழித்துக் கிடந்தகேடுகளை எதிர்ப்பதற்கும் குரல் கொடுத்தார் பாரதிதாசன். அதனால் மட்டுமே புகழ் பெற்றார் - தமிழக் கவியாக போற்றப்படுகிறார். அவரின் வாழ்வில் தமிழ் மட்டுமே முதலிடத்தைப் பிடித்து தமிழே குறிக்கோளாக இட்டுக் கொண்டவர்.

அப்படிப்பட்டவரிடம் கடவுளையும் இந்தியத்தையும் தேடிக் கொண்டிருப்பது என்பது,(இந்தியத்தைத் தேடினால் அது கிடைக்கவும் கூடும் என்ற போதிலும்) பாரதியார் என்ற மாகவி அணுவிஞ்ஞானத்தைப் பற்றிப் பாடவில்லை, கணினியிலைப் பற்றிப் பாடவில்லை, உயிரியிலைப் பற்றிப் பாடவில்லை, உலகமயமாக்குதலைப் பற்றிப்
பாடவில்லை என்று சொல்லிக் குறை பட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும்.

<மேலும் சில பத்திகளை நீக்கியிருக்கிறேன். தேவைப்படின் போடுவேன்>

அன்புடன்
நாக.இளங்கோவன்
16/அக்/2005

Wednesday, June 06, 2007

பெறுநர்: அன்புடன் மடற்குழு மற்றும் திரு.சி.செயபாரதன்-கனடா! (மடல்-2)

திரு.செயபாரதனின் பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றிய பழிப்புரைகளை
பதிவுகள் மற்றும் திண்ணையில் அவர் வெளியிட்டிருந்த இந்தக்
கட்டுரையில் காணலாம். திரு.புகாரி அவர்கள் ஒட்டக்கூத்தர் மற்றும் பாரதிதாசன் போன்ற கவிஞர்களை விட எவ்வளவு உயர்ந்த கவிஞர்
என்று திரு.செயபாரதன் அவர்கள் எடுத்துக் காட்டும் அழகைக் காணுங்கள்
வண்ணமிட்ட எழுத்துக்களில்.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்


கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்ற வந்த எனது கருத்துரை (அக்டோ பர்: 1, 2005) - சி. ஜெயபாரதன், கனடா -

கவிஞர் திலகம் புகாரியின் புத்தக வெளியீட்டு விழா கனடாவின் பெருநகர் டொரொன்டோ வில் ஸ்கார்பொரோ நகராட்சி அரங்கில் இலக்கியத் தோட்டம் அளித்த பீடத்தில் துவங்கியது. வெளிவரும் நூல்கள் இரண்டு: பச்சை மிளகாய் இளவரசி, சரணமென்றேன். விழாவில் பங்கெடுத்த சுமார் 170 பேரில் பல பெண்டிரும், கவிஞர்களும், எழுத்தாளர்களும் பெரும்பான்மையாக இருந்தனர். பல்கலைக் கழகப் பேராசியர்கள் கவிஞர் டாக்டர் ஆனந்த், டாக்டர் பசுபதி மற்றும் இலங்கைப் புலவர் கந்தவனம் ஆகியோர் வந்திருந்தனர். இந்தியாவிலிருந்து சிறப்புப் பேச்சாளராக இசைக்கவிஞர் ரமணன் [டி.ஏ. வெங்கடேஸ்வரன்] கனடாவுக்கு வந்திருந்தார். விழாத் தலைவர்: சிவதாசன் அவர்கள். இலக்கியத் தோட்டத்தின் பிரதிநிதியாக எனது நண்பர், எழுத்தாளர் அ. முத்துலிங்கம் முன்னமர்ந்து விழாவைச் சிறப்பாக்கினார்.

கவிஞர் புகாரியும், புகாரி குடும்பத்தாரும் விழாப் பணிகளிலும் பங்கேற்று விழாவுக்கு நிறைவை ஊட்டினர். ஆனால் மெய்யாக அரங்குக்கு ஒளியேற்றிய மங்கையர்க்கரசி கவிஞர் புகாரியின் அருந்தவப் புதல்வி, "நூல் தலைப்பு இளவரசி" தந்தையைப் பின்பற்றி இரண்டாம் ஆண்டு மின்கணனி விஞ்ஞானம் படிக்கும் ரிஸ்வானா புகாரி. விழாவில் உரை ஆற்றியோர்: இசைக்கவிஞர் ரமணன், குவியம் இதழ் பொன் குலேந்திரன், சி. ஜெயபாரதன், பொன். கனகசபாபதி, பல்கலைச் செல்வர் ஆர்.எஸ். மணி, உதயம் ஆசிரியர் லோக லிங்கம் ஆகியோர். இக்கட்டுரை நான் பேசத் திட்டமிட்ட என்னுரையை மட்டும் காட்டுகிறது. சொற்பொழிவு நேரம் 15 நிமிடமாக எனக்குக் குறுக்கப் பட்டதால், சில கட்டுரைக் கருத்துக்கள் சுருக்கப்பட்டு நான் முழுவதும் பேச முடியாமல் போயின.

விற்பனர்க்கும் அற்புதமே! முற்றுமுதற் கற்பகமே! சிற்றருவிச் சொற்பதமே! சுற்றுலக முற்றுகையே! வெற்றிநிறைக் கற்றறிவே! நெற்றிவளர் பொற்றழலே! உற்றதுணை பெற்றுயரப் பற்றுகிறேன் நற்றமிழே!

கவிஞர் புகாரி எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை மிக்க இனிமையாகப் பல்கலைச் செல்வர் ஆர்.எஸ். மணி இசை அமைத்துப் பாடி விழாவில் அனைவரையும் மெழுகாக உருக்கினார். தமிழன்னையின் செவிகளில் அந்த இன்னிசைக் கீதம் விழுந்திருந்தால், அவளே உயிரோடு எழுந்து வந்து ஆர். எஸ். மணிக்கு ஒரு மாலையும், புகாரிக்கு ஒரு மாலையும் சூடிப் பூரித்துப் போயிருப்பாள்! அரங்கத்தில் தலைவர் என்னை அறிமுகப் படுத்திய பின்பு, எழுந்து சென்று நான் ஆக்கிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் என்னுரையைத் துவங்கினேன்.

நெஞ்சில் நீ! நிழலில் நீ! நியதி நீ! நினைவெல்லாம் நீயே! தஞ்சம் நீ! தவப்பயன் நீ! தரணியில் நீ! சக்தி எல்லாம் நீயே!

என்னுயிர் நீ! என்னுதிரம் நீ! என்னுடல் நீ! என் ஆத்மாவும் நீயே! கண்கள் நீ! கற்பனையில் நீ! கலையில் நீ! கவினெல்லாம் நீயே!

கவிதை நீ! காவியத்தில் நீ! கதையில் நீ! களஞ்சியம் நீயே! புவியில் நீ இல்லை யெனில் எனக்குப் பூமியே ஒளியற்றுப் போகும் தாயே!

உயர்நிலைப் பள்ளியில் நான் படித்த காலத்தில் எங்கள் தலைமை ஆசிரியர் அனுதினமும் காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்கள் முன்பு ஆங்கிலத்தில் இந்தக் கவிதையை வாசிப்பார். அப்போது எனக்கு அது இரவீந்தநாத் தாகூரின் நோபெல் பரிசு பெற்ற கீதாஞ்சலிப் பாடல் என்று தெரியாது. பிறகு தெரிந்ததும் அதைத் தமிழ்ப்படுத்திப் பாடிப்பாடி பூரித்தேன். அப்பாடல் முதலில் 1980 ஆண்டு இதயம் பேசுகிறது, விஞ்ஞான வெளியீட்டில் வந்தது. பிறகு சிறிது மாறுதலுடன் 'திண்ணை'யிலும் [1], 'பதிவுகளி'லும் வெளியானது. நாட்டு வணக்கமாய்ப் பல்லாண்டுகள் என்னைக் கவர்ந்த "விழித்தெழுக என் தேசம்", என்னும் தாகூரின் கீதாஞ்சலிக் கானத்தை அடுத்து வாசித்தேன். அதனைச் சுருக்கி இங்கே எழுதுகிறேன். முழுக் கீதத்தை கீழ்க் குறிப்பிட்ட [1] தொடுப்பில் காணலாம்.
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, .... அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, .... வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து எழுகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கித் தனது கரங்களை நீட்டுகின்றதோ, .... நோக்கங்கள் விரியவும், ஆக்கப்பணி புரியவும், இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!

தாகூர் கூறும் உன்னத மனிதரின் அரிய பண்புகளை, உயர்ந்த எண்ணங்களை நான் இறுதியில் காட்டப் போகும் கவிஞர் புகாரியின் கவிதைகளில் நீங்கள் காணப் போகிறீர்கள். இப்போது வேறு சில கவிதைகளைக் காட்டிப் புகாரியின் கவிதைகள் இவற்றைப் போன்றவை அல்ல வென்றும் எடுத்துக் காட்டப் போகிறேன்.

பதினொன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற புலமை மிக்க கவிவாணர்கள் வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். ஒருசமயம் அரசவைப் புலவர் கம்பருக்கு இணையான ஒட்டக்கூத்தர் பாட்டுப் போட்டி ஒன்றை வைத்து, நாட்டில் தனக்கு யாரும் நிகரில்லை என்று காட்ட கவி அரங்கைத் திறந்து விட்டார். அவருக்கு அஞ்சி யாருமே வராமல் இறுதியில் ஒரு குயவன் மட்டும் தலை நீட்டினான். ஒட்டக்கூத்தருக்கு மிக்க அவமானமாகப் போய்விட்டது. போயும், போயும் ஒரு குயவன் கூடவா தான் போட்டி போட வேண்டி வந்தது என்று ஆங்காரம் மேலிட்டு, "நீ என்னை மிஞ்சிப் பாட்டு எழுதி விடாலாம் என்று கனவு காணாதே! ஓடிப் போய்விடு! அல்லது பாட்டரங்கில் தோற்றுப் போய் அவமானப்பட்டுக் காயப்படுவாய்," என்று கர்ச்சித்தார். குயவன் சற்று நடுங்கினாலும், தலை நிமிர்ந்து நின்றான். ஒட்டக்கூத்தர் தன் பாடலை முழக்கினார். "நான் எடுத்து விடும் இரண்டடி விருத்தப் பாடலை நீ முடித்திடு பார்க்கலாம்" என்று அதட்டினார். ஒட்டக்கூத்தர் முதல் இரண்டடிகளை ஓதினார்:
மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி யானை முன்வந் தெதிர்த்தவன் யாரடா?
குயவன் அஞ்சினான், விழித்தான், தடுமாறினான். வாயிக்குள் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு சரி பார்த்துக் கொண்டான். ஒட்டக்கூத்தர் பாட்டை சிறிது விநாடியில் முடித்துக் காட்டினான்:
கூனையும், குடமும், குண்டு சட்டியும், பானையும் பண்ணும் அங்குசப் பயல் யான்!
யானை என்று தன்னை உயர்த்திப் பாடிய ஒட்டக்கூத்தருக்கு வெட்கமாய்ப் போனது! குயவன் யானையை அடக்கும் ஓர் அங்குசமாக தன்னைக் காட்டி, ஒட்டக்கூத்தர் அகந்தையை ஒடுக்கினான்.



அடுத்த பாடல் தற்காலத்தைச் சேர்ந்தது! இப்பாட்டைப் பாடியவர் ஒரு சுயமரியாதை வாதி. ஈ.வே.ரா பெரியாரின் சீடர்களில் ஒருவர். ஒரு காலத்தில் பிள்ளையார் சிலைகளை உடைக்கப் பெரியார் கிளம்பிய போது, இந்தச் சீடர் வேறு சில தெய்வச் சிலைகளைத் தகர்க்கத் திட்டமிட்டார். அவரது பாடல் இதுதான்.
சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும், பீரங்கி கொண்டு பிளப்பதுவும் எக்காலம்?
தெய்வீகம் பொருந்திய இந்தச் சிறிய சிலைகளைத் தகர்க்க பீரங்கிகளைத் தயார் செய்தார் இந்த தீவிரவாதி!



சிலைகளைச் சிதைத்து விட்டால், மாந்தரின் கடவுள் நம்பிக்கையை அழித்து விடாலாம் என்பது இந்த சுயமரியாதை வாதியின் நியதி! முதற் பாடல் ஒட்டக்கூத்தரின் அகந்தை விருத்தம். இரண்டாவது பாடல் சுயமரியாதை வாதியின் தெய்வ அவமரியாதை விருத்தம். ஆனால் நமது கனடா கவிஞர் புகாரியின் கவிதைகள் இந்த இரண்டு தரங்களைப் போன்றவை அல்ல! அவரது ஆக்கப் படைப்புகள் எப்படிப் பட்டவை என்பதை உங்களுக்கு விளக்குகிறேன்.

கனடா கவிஞர் புகாரின் தனித்துவப் பண்புகள் என்ன? அவரது கவிதைகள் யாவும் பொரி உருண்டை போல் சிறியவை. கற்கண்டு போல் இனிப்பவை சில! பாகற்காய் போன்று கசப்பவை சில! ஆனால் அவை யாவும் சிறு சிறு கவளத் துண்டுகள். பச்சிளம் குழந்தைகள் கூட தமது பிஞ்சுக் கரங்களில் அள்ளித் தின்ன வசதியானவை! கவிதைகள் எல்லாம் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை! வெறும் வெளி உதடுகளில் பிறந்தவை அல்ல! அவரது கவிதைகள் தெய்வங்களைப் பற்றியோ, வேத விற்பன்னங்களைப் பற்றியோ விளக்குபவை அல்ல! மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளை கவளம், கவளமாகப் பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கிறார்.
தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதாக நமது புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அதுபோல் நமது கனடா கவிஞருக்கு ஆறு அம்சங்கள் உள்ளன:
முதலாவது அம்சம்: ஆக்க உணர்ச்சி, கவிதைகளைப் படைக்க வேண்டும் என்னும் ஆத்மீகத் துடிப்பு. தொடர்ந்து கவிதைகள் ஆக்க வேண்டும் என்னும் உந்தல் உணர்ச்சி. உருவமின்றி உள்ளக் கருவில் களஞ்சியமாகத் தேங்கிப் பின்னால் கவிதையாகப் பிறக்கும் திணிவு சக்தி அது. பூமிக்குள்ளே இப்படி இருக்கும் திணிவுச் சக்திதான் வெடிப்பாக, எரிமலையாகப் பீறிட்டு எழுகிறது!
இரண்டாவது அம்சம்: ஆத்ம உணர்ச்சி அல்லது ஞான உணர்ச்சி. நமது கவிஞருக்கு மூன்றாவது கண்ணான ஞானக்கண் ஒன்று இருக்கிறது. அதன் மூலம் அவருக்குத் தீர்க்க தெரிசனம் கிடைக்கிறது! வரப் போகும் புதுயுகம் அவரது ஞானத் திரையில் தோன்றுகிறது! அவர் தேவையான வேளைகளில் அதை நெற்றிக்கண்ணாகப் பயன்படுத்தி நாட்டுத் துரோகிகளைச் சுட்டெரிக்கிறார். "சுட்ட வீரப்பன் வேண்டுமா, அல்லது சுடாத வீரப்பன் வேண்டுமா," என்ற கேள்வியைக் கேட்டு, இரண்டு பேரும் வேண்டா மென்று தன் நெற்றிக் கண்ணால் துரோகியைச் சுட்டுத் தள்ளுகிறார்.
மூன்றாவது அம்சம்: அன்புணர்ச்சி. கவிஞர் மனித நேயம் உடையவர். அவர் ஒரு மனிதாபிமானி. எல்லாம் அன்புமயம் என்று நினைப்பவர். பெண்மைக்குத் தலை வணங்குபவர். தினமும் பிளாஸ்டிக் வெடிகளில் தற்கொலை புரிந்து மற்றவரைக் கொல்லத் துணியும் மூர்க்க வர்க்கத்தாரை அறவே வெறுப்பவர்.
நான்காவது அம்சம்: அழகுணர்ச்சி. கவிஞனுக்கு அழகுணர்ச்சி இல்லாவிடில் ஒளியற்ற கண்களைக் கொண்டவனாகக் கருதப் படுவான். எல்லாம் வனப்பு மயம்! இயற்கை அழகு அவனை ஈர்க்கிறது! பொங்கி வரும் பெருநிலவு போன்ற பெண்ணின் முகப் பொலிவு, கண்களின் காந்தசக்தி, கொடி உடல் வனப்பு, நடை அழகு, இடை நளினம் ஆகியவைக் கவிஞனைக் கவர்கின்றன. ஓவியம், காவியம், நாட்டியம் அனைத்திலும் கவிஞன் மனதைப் பறிகொடுத்து அங்கே அழகின் நடனத்தைக் காண்கிறான். பிறகு அவற்றைக் கவிதைகளாய் வடிக்கிறான்.
ஐந்தாவது உணர்ச்சி: ஆவல் உணர்ச்சி. படைப்புக்கு வேண்டிய தூண்டுகோல் அல்லது உளவு சக்தி அது. அதாவது தேடல் உணர்ச்சி, ஆக்க உணர்ச்சிக்கு வேண்டிய தாகம், வேட்கை, ஆர்வம் அவை! ஆய்வு உணர்ச்சி, உளவி உண்மை காணும் பண்பு.
ஆறாவது உணர்ச்சி: விடுதலை உணர்ச்சி. நாட்டு வேலிக்குள், இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு அடிமையாய்க் கிடக்கும் மனிதருக்கு விடுவிப்பு! இதைத்தான் பாரதி, "சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே," என்று பாடிப் பாரதத் தாயின் அடிமை விலங்கை உடைக்க வீறுகொண்டு எழுந்தான். ஆனால் பாரதிதாசன் பாரதியின் பெயரில் புகழ் பெற்றாலும், பாரத விடுதலையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று உறுதியாய் நம்பிய பாரதியாருக்கு இருந்த தீர்க்க தெரிசனம் பாரதிதாசனுக்கு இல்லாமல் போனது எனது நெஞ்சில் ஒரு முள்ளாய்க் குத்துகிறது! கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் போது, 1952 ஆண்டுக் கவிதைப் போட்டியில், எனது கவிதை முதற் பரிசு பெற்று, வெகுமதியாக பாரதிதாசனின் "அழகின் சிரிப்பு" நூல் கிடைத்தது. பாரதியாரின் தேசீய, பக்திக் கவிதைகளை ஐந்து வயது முதலே காலைப் பிரார்த்தனையின் போது அனுதினமும் எனக்கு ஊட்டியவர் என்னருமைத் தந்தையார். அழகின் சிரிப்பு நூலை விரித்துக் கவிதைகளை ஊன்றிப் படித்தேன். பாரதிக்குத் தாசர் அல்லவா? பாரதியாரைப் போல் இருக்கிறாரா என்று ஆய்ந்தேன். பாரதியைப் படித்த எனக்குப் பாரதிதாசனின் சில கவிதைகளைப் படித்த பின், அவர் மீது ஏனோ பிடிப்பு ஏற்பட வில்லை! அழகின் சிரிப்பு நூலில் இறைவனைப் பற்றி ஒருவரி கூட இல்லை! அது போகட்டும், அவர் சுயமரியாதைவாதி! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ ம் என்று பாரதியார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொட்டு முழக்கிய விடுதலைக் கீதங்களைப் போல் ஒரு கானத்தைக் கூடக் காணோம்!
எங்கெங்கு காணிணும் சக்தியடா! ஏழுகடல் அவள் வண்ணமடா!
இந்த இரண்டு வரிகளைத் தவிர சக்தியைப் பற்றி பாரதிதாசன் சக்தியின் பக்கமே குளிர்காயக் கூட போகவில்லை.
பாரதம் விடுதலை அடையப் போவதில் சிறிது கூட நம்பிக்கையற்ற பாரதிதாசன், கூண்டுக் கிளியைப் பற்றி ஓரிடத்தில் பாடுகிறார்:
அக்கா! அக்கா! என்றாய், அக்கா வந்து கொடுக்க, சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!
தீர்க்க தெரிசனம் இல்லாத கவிஞர் பாரதிதாசன் மெய்யாக பாரதியாரின் தாசனா என்பது ஒருபுறம் என்னை வருத்தி வருவது உண்டு!
அதுபோல் நாட்டு விடுதலை வீரர்களைப் பற்றியோ அல்லது மகாத்மா காந்தியைப் பற்றியோ பாரதிதாசன் ஒரு கவிதை கூட எழுதியது கிடையாது! பாரதியாரின் கவிதைகளில் பாரத விடுதலைப் போரின் வரலாற்றைக் காணலாம். அதே காலத்தில் வாழ்ந்த பாரதிதாசன் பாரதம் விடுதலை பெற்ற பின்பு கூட ஒரு வரி இந்தியாவைப் பற்றி எழுதியதில்லை. பாரத விடுதலை மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், பாரதிதாசன் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் என்பதில் எனக்கு ஐயமில்லை.
புகாரியின் கவிதைகள் நான்கு கலைத்துவ நயங்கள் படைத்தவை. முதலாவது நயம்: கருத்தழகு. இரண்டாவது நயம்: சொல்லழகு. மூன்றாவது நயம்: நடையழகு. நான்காவது நயம்: அணியழகு. கருத்தழகுதான் கவிதையான உடலுக்கு உயிர்கொடுப்பது. சொற்கள்தான் கவிதை உடலைக் கட்டும் கற்கள், செங்கல் துண்டுகள். இவற்றில் எதுகை, மோனை போன்ற யாப்பிலக்கண அமைப்புகள் உள்ளடக்கம். அடுத்து இச்செங்கற்களை முன்னும், பின்னும், மேலும், கீழும், வளைவாக, நெளிவாக, குழிவாகச், சரிவாக, எழிலாக அமைப்பது நடையழகாகும். கவிதை மாளிகையின் கட்டடக் கலைத்துவமே, நடையழகுதான்! இறுதியில் மாளிகைக்கு பன்னிற வண்ணமும், கற்பனைக் கவினும் தருவது, அணியழகு. இதில் உபமானம், உபமேயம், உதாரணம் போன்றவை உள்ளடக்கம். கவிதைக்கு இடும் பூமாலையும், ஆபரணமும் இது! ஐந்தாவது நயம்: இசையழகு. இது இசைஞானியால் ஆக்கப்பட வேண்டும். கவிதையை இசையுடன் பாடினால், செவிக்கினிமையாக உள்ளது! சிலசமயம் கவிதை நாட்டியக் கலை விருந்தாய், கண்ணுக்கும், காதுக்கும், இதயத்திற்கும் சுவை அளிக்கிறது.
இப்போது நமது கனடா கவிஞர் எப்படித் தன் கவிதைகளைப் படைத்திருக்கிறார் என்பதற்குச் சில மாதிரிகளை உங்கள் முன் பங்கு கொள்ள விழைகிறேன். இதுவரைக் கவிஞர் புகாரி [அக்டோ பர் 2005] நான்கு காவிய நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் என்னைக் கவர்ந்த சில அற்புத வரிகளை மட்டும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
பெண்மையைப் பற்றிச் சொல்லித் தலை வணங்குகிறார், ஒரு கவிதையில்:
கயிறிழுக்கும் போட்டி யுள்ளே நடக்குதடி! - என் கர்வ மெல்லாம் பெண்மையிடம் தோற்குதடி!
பெண்மையின் அழகிலும், கனிவிலும் மனதைப் பறிகொடுக்கிறார் கவிஞர், இங்கே. பெண்மையிடம் தன் மனதை இழக்காத உலகக் கவிஞரைக் காண்பது மிக மிக அபூர்வம். இதைத்தான் பாரதியார்,
காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்! காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே!
என்று ஆனந்தமாகப் பாடினார்.
அகத்தினைப் பற்றி விளக்கும் போது, விண்கோள்களின் கவர்ச்சியைச் சான்றாக எடுத்துக் கொள்கிறார்:
அகங் கண்டு இணைகின்ற உள்ளம், அது அண்டவெளி ஈர்ப்பினையும் வெல்லும்!
மனித இனம் நம்பிக்கை ஒன்றால்தான் உயிர் பிழைத்து வருகிறது என்பதை அழகாக ஓரிடத்தில் இசைக்கிறார்:
உள்ளத்தின் உயர்வின் படி, உண்மையின் உறவைப் படி! நரகத்தை தள்ளிப் பிடி, நம்பிக்கையே வாழ்வின் பிடி!
காதலைப் பற்றிப் பாடாத கவிஞர் எங்காவது உண்டா? காதல் தவிப்புகளில் நெஞ்சுருகாத கவிஞர் எங்காவது உண்டா? மனித வாழ்வுக்குக் காதல் எவ்விதமான நெருக்கத் தொடர்பு கொண்டுள்ளது என்று காட்டுகிறார் ஒரு கவிதையில்.
தாவிடும் ஆசைகள் கூத்தாடும்! இன்பத் தவிப்புகள் சிக்கியே நாளோடும்! மானிடம் பூத்தது, காதலுக்காய்! அந்த மன்மத ராகங்கள் வாழ்வதற்காய்!
அடடா! இந்த வரிகளும், வார்த்தைகளும் நடனமாடி எப்படித் தாளங்கள் போடுகின்றன? இந்த சந்த நடைக் கவிதையை இசையுடன் பாடிச் சுவைக்கலாம்.
பிரிவாற்றாமையில் தனிமையில் தவிக்கும் மனைவிமார் சங்க காலத்தில் மட்டுமல்லர், சந்திரனில் காலவைத்த இந்த யுகத்திலும் உள்ளார்கள். எங்கெங்கு நோக்கினும் "உங்க முகம் உசுப்புது" என்று மங்கை ஒருத்தி மனமுடைந்து போகிறாள், பின்வரும் கவிதையில்!
காலையிலே எழுந்திருச்சா, கண்மூடப் பாய் விரிச்சா, மாலையிட்ட உங்க முகம் மனசை வந்து உசுப்புதுங்க!
மனைவி தாய் நாட்டில் தவிக்க, செல்வம் தேடிப் புலம்பெயர்ந்து சென்று, தனிமையில் வாடும் கணவனைக் காண வேண்டுமா? இதோ!
கண்ணுக்குள் விரியாத, கனவும் ஓர் கனவல்ல! உன்னருகில் இல்லாத உயிரும் ஓர் உயிரல்ல!
விடா முயற்சியைப் பற்றி இவ்வளவு எளிதாகத், தெளிவாக, இனிதாக யாராவது சொல்லி யிருக்கிறாரா?
அடிக்கும் போதெல்லாம், மாங்காய் விழுந்து விட்டால் ஆவல் செத்து விடும்!
நாம் எதிர்பார்த்த பலாபலன்களையும், எதிர்பாராத பலாபலன்களையும் எண்ணிப் பார்ப்பதுண்டா?
நீ விளைத்த பழங்கள் எல்லாம், நீ உண்ண மாட்டாய்! நீ உண்ணும் கனிகளை எல்லாம், நீ விளைவித்திருக்க மாட்டாய்!
இது ஒரு சிறு வேத ஞானம் போல் எனக்குப் பளிச்சிடுகிறது!
முள்ளும், மலரும் இணைந்த இந்த வாழ்க்கை எப்படிப் போற்றப்பட வேண்டியது? நாம் வாழப் பிறந்தோமா அல்லது சாகப் பிறந்தோமா? சாவது உறுதியாயினும், உயிர் உள்ளவரை இக்கணத்தில் வாழ வேண்டும் என்று வழிகாட்டுகிறார் நமக்கு. பிறந்த பின் இங்கு நீடித்து வாழ்வதுதான் நமக்குக் குறிக்கோளாக வேண்டுமா? அல்லது பிறந்த பின் சீக்கிரம் சாவதுதான் நமக்குக் குறிக்கோளாக இருக்க வேண்டுமா? இக்கேள்விக்கு இதோ புகாரியின் பதில்:
இந்த வாழ்க்கைதான் எத்தனை இனிமை யானது! இதை வாழக் கிடைத்த பாக்கியந்தான் என்றும் புனித மானது!
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று எண்ணும் இதயம், எத்தனை கோடி இன்னல் வைத்தாய் இறைவா என்றும் துன்பத்தை எதிர்பார்க்க வேண்டும். ஆனால் வாழ முயல்வது புனித மானது என்று சொல்கிறார் புகாரி. எல்லாம் இன்பமயம் என்று வாழ்வை அணைப்பதும், எல்லாம் துன்பமயம் என்று வாழ்வைத் துறப்பதும் வேறுபட்ட இரு துருவ முனை நியதிகள்! இவற்றுக்கு இடையே வாழக் கிடைத்த பாக்கியத்தைப் புனித மென்று புகாரி கருதுவது ஓர் ஆக்க உணர்ச்சியே. அதைக் கவிஞருடன் நாமும் சேர்ந்து வரவேற்போம். விவேகானந்தர் ஏன் நாம் பிறந்திருக்கிறோம் என்பதற்கு வெகு அழகாக, உன்னத முறையில் காரணத்தை எடுத்துச் சொல்கிறார்: "மனிதா! நீ மகத்தான செயல்களைப் புரிய இங்கே பிறந்திருக்கிறாய்." மகத்தான ஆக்கவினைகள் செய்யும் புகாரி போன்ற மனிதருக்குத்தான் வாழ்வு புனிதமாகத் தெரிகிறது.
தான் பிறந்த மண்ணான தஞ்சாவூரைப் பற்றிப் சந்தமுடன் பாடுகிறார்:
வானூறி மழை பொழியும்! வயலூறிக் கதிர் வளையும்! தேனூறிப் பூவசையும்! தினம்பாடி வண்டாடும்!
சுட்ட வீரப்பன் வேண்டுமா? சுடாத வீரப்பன் வேண்டுமா? என்ற ஒரு கவிதையில் இரண்டு பேருமே நமக்கு வேண்டாம் என்று நெற்றிக் கண்ணால் எரித்து விட்டுத் தீர்க்க தெரிசியாய் எதிர்காலத்தை நோக்கி நட என்று நமக்குக் கட்டளை யிடுகிறார்:
ஐயா அப்துல் கலாமோடு, அவசரக் கதியில் ஈராயிரத்து இருபது நோக்கி, நிறைய நடக்க வேண்டி இருக்கிறது, இந்தியா!
பூகம்பத்தைப் பற்றி எழுதும் போது புகாரி சொல்கிறார்.
அறிந்தவனுக்கு அப்போதுதான் சாவு! அறியாதவனுக்கு எப்போதும் சாவு!
தமிழை மறப்பதோ என்னும் கவிதையில் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் தாய் மொழியாக இருந்து, தமிழைப் பிழையறக் கற்காது பிறமொழிகள் மீது மோகம் கொள்ளும் தமிழ் அன்னியர் தலையில் ஓங்கி அடிக்கிறார்:
தாய்மொழி இழந்தவன், தன்முகம் இழந்தவன்! தமிழற்றுப் போனவன், தலையற்றுப் போனவன்! தமிழை மறந்தவன், தமிழை இழந்தவன், தமிழைப் பேசுதல் தாழ்வானது என்று கருதும் அறிவாளிகள் அனைவரும் தலையில்லா முண்டங்கள் என்று மண்டையில் அடிக்கிறார், புகாரி! விடுதலை இந்தியாவில் தமிழ் நாடு ஒன்றில்தான் தாய்மொழியான தமிழ், கட்டாயக் கல்வியாக இல்லாத முறையில் அன்னிய மொழிபோல் நிலவி வருகிறது! இது முற்றிலும் வருந்தத் தக்கது! தமிழர் அனைவரும் நெறியற்ற இந்நிலைக்குத் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டியது! ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சங்கம் வைத்து அரசாண்ட தமிழ்மொழி, தமிழ் நாட்டில் இப்போது கட்டாயக் கல்வி மொழியன்று! அன்னிய மொழிகளான ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்று தமிழ் வெறும் விருப்ப பாடமாக இருந்து வருவதற்கு, அரசாங்கமும் தமிழர் அனைவரும் பொறுப்பாளிகள்! அடுக்குமொழி அண்ணாக்களும், கலைஞர் போன்ற தூயதமிழ்க் கருணாநிதிகளும் இக்குறையைத் தீர்க்க முடியவில்லை! தமிழிலே திரைப்படம் எல்லாம் பெயர் சூடப்பட வேண்டும் என்று புரட்சி செய்யும் புதிதாக முளைத்துள்ள டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், பழ. நெடுமாறன், டாக்டர் சேதுராமன் போன்ற தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தமிழர்களும் அடிப்படையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்காமல், வெளிப்புற முகத்துக்குத் தமிழ் முலாம் பூசிக் கொண்டு நாடகமாடிக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு இன்று [அக்டோ பர் 2005] நான் சவால் விடுகிறேன்! இந்தப் புது ஈசல் கூட்டத்துக்குத் தமிழ் நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயக் கல்வியாக புகுத்தச் சட்டம் கொண்டு வர ஆற்றல் உள்ளதா என்று நான் கேட்க விரும்புறேன்!
கொலம்பியா விண்கப்பல் விபத்தில் பாரத நாரீமணி கல்பனா சௌலா உள்பட ஏழு அண்டவெளி விமானிகள் மாண்டனர். அவர்களைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக இருவரிகள்:
திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்!
கவிதைகளின் படைப்பைப் பற்றி கற்பனை செய்கிறார் நமது கவிஞர்! எப்படி? கவிதைகள் கருவில் புழுவாகிக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பிறகு பட்டாம் பூச்சிகள் போன்று மாறி வானில் பறக்கின்றனவாம்!
உச்சரிக்கும் ஒவ்வொரு முறையுமே உள்ளக் கிளைகளிலிருந்து, ஆயிரம், ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கின்றன!
நான் முன்பு கூறியது போல் எல்லாம் இன்பமயம் அல்ல! இன்பமும், துன்பமும் பின்னிய இந்த வாழ்வில் நமது ஆணி வேரிலிருந்து நம்மைக் கவ்விப் பிடித்துக் குலுக்குவது எது? இன்பமா? அல்லது இன்னலா?
வாழ்வின் அமுதங்களை, நாம் எல்லாருடனும் பங்கிட்டுக் கொள்ளலாம்! ஆனால் நம் சோகத்தை நாம் மட்டுமே விழுங்க வேண்டும்!
"கோரிக்கை யற்றுக் கிடக்கு தங்கே, வேரிற் பழுத்த பலா" என்று பாரதிதாசன் விதவைப் பெண்களைக் கண்டு கண்ணீர் வடிக்கிறார்! ஆன்மீகம் செழித்து வழியும் பாரத நாட்டில், மனிதத் தன்மை என்னும் பண்பு பல்லாயிரம் ஆண்டு காலமாய் முறிந்து போயுள்ளது. கணவன் இறந்தால், கட்டிய மனைவி வாழக் கூடாது என்று அவன் எரியும் கட்டையிலே அவளைத் தள்ளி உயிரோடு எரித்தார்! மொட்டை அடித்து வெள்ளைப் புடவையைக் கட்டி, பெண்ணழகைக் கெடுத்து விதவைக் கோலமிட்டுச் சமூகத்திலிருந்து தீண்டப் படாமல் மூலையில் நிரந்தரமாய் ஒதுக்கி வைத்தார்! நாமெல்லாம் கீதை ஓதினாலும், ராம கதை தினம் பாடினாலும் ஆடவர், பெண்டிர் இருவருமே விதவைகளைத் தீண்டப் படாத, கண்ணில் காணக் கூடாத தொழுநோய்ப் பிறவிகளாக இன்னமும் நடத்தி வருகிறோம். கவிஞர் புகாரி விதவைகளைப் பற்றி வெகுண்டு சொல்கிறார்:
வெள்ளை வேலிக்குள், வாழ்வை முடக்கிக் கொள்ளச் சாபம் இடப்பட்ட பாபிகள் ......
உலகத்தில் பிளாஸ்டிக் வெடிகளை மார்பில் மறைத்துக் கொண்டு வேட்டு வைத்து பிறரைக் கொன்று மோட்சம் அடையப் போவதாய்க் கனவு காணும், மூர்க்க வர்க்கத்தினரைச் சாடுகிறார்:
கீதை அழுகிறது! குரான் தேம்புகிறது! பைபிள் கண்ணீர் வடிக்கிறது!
என்று கூறி நெஞ்சு பொறுக்குதில்லையே என்று துடிக்கிறார். புனித வேத நூல்களான கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்றையும் இங்கு கூறக் காரணம் என்ன? இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் எவருமே இந்த கோரக் கொலைகளை நிறுத்தவும் முடியவில்லை! தடுக்கவும் முடியாமல் மக்களைப் பலிகொடுத்து வேதனையில் விழிநீரை வடித்துக் கொண்டு நிற்கிறார்கள்!
கடைசியாக விடுதலை நாட்டில் பாமர மக்களைச் சுரண்டியே வாழும் நாட்டுத் துரோகிகளைத் தன் நெற்றிக் கண்ணால் சுட்டுத் தள்ளுகிறார்!
"விடியாத குடியரசு," "வெட்கப்படு இந்தியனே," என்னும் கவிதைகளில் பின்வருமாறு சொல்கிறார்:
சுதந்திர மரத்தின் வேர்களுக்கு நீரூற்ற வந்த, ஒவ்வொரு வருமா, அதன் கிளைகளைத் திருடுவது?
வெட்கப்படு இந்தியனே! வெட்கப்படு! நீ வெட்கப் படாததால் தான், இந்தியா துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது!
இறுதியில் கவிஞர் புகாரியைப் பற்றி நான் எழுதிய இரு பாடல்களைக் கூறிக் கொண்டு, என்னுரையை முடித்துக் கொள்கிறேன்.
கையில் அள்ளி, அள்ளிக் கொடுப்பவர், வள்ளல் பாரி! கவிதையை மழை அருவியாய்ப் பொழிபவர், கனடா புகாரி!
எனது அருமை நண்பர் புகாரிக்கு என் அன்பு வேண்டுகோள் இது:
காவியக் கலைஞர் புகாரியே! காலக் கரையான் தின்னாத ஓவியக் கவிதை தீட்டுவீர்! உன்னத நெறியைக் காட்டுவீர்! மேவிடும் அமைதியை நாட்டி, மேதினி நட்பை ஊட்டுவீர்! பாவிலே தமிழரை மூழ்க்கிப் பாரிலே தமிழை நாட்டுவீர்!
நன்றி, யாவருக்கும் எனது வணக்கம்.
**************************************************** திண்ணை அகிலவலை வார இதழ் வெளியீடு:

பெறுநர்: அன்புடன் மடற்குழு மற்றும் திரு.சி.செயபாரதன்-கனடா! (மடல்-1)

தமிழ் விடுதலை ஆகட்டும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைவைத்துக் கொண்டு ஒன்னே முக்கால் ஆண்டுகளாக இணையமெங்கும் உலாவரும் அருமை நண்பர் திரு.செயபாரதன் அவர்களே, வணக்கம்.

முதலில் இந்தக் கட்டுரையை பதிவுகள் தளத்தில் என்னை நையாண்டிசெய்து எழுதியிருந்தீர்கள். நான் மறுமொழி இடவில்லை.

பின்னர் அதனை திண்ணைக்குத் தூக்கிச் சென்றீர்கள். அங்கும்நான் பதில் இடவில்லை.

இதற்குக் காரணம் தங்கள் கட்டுரைக்கு மறுமொழி இடமுடியாத ஒன்று என்றல்ல. தமிழில் தூய்மை இல்லாவிடிலும், தமிழில் நுட்பக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வரும் தங்களின் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், உங்களையும் என்னையும் அறிந்த அந்த அருமையான நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் நான் மறுமொழி இடவில்லை. (அது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆயினும் இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்.)

ஆனால், தற்போது அன்புடன் என்ற மடற்குழுவில் மீண்டும் அதனைஎழுதி உரையாட்டு நிகழ்த்தி மகிழ்கிறீர்கள் என்று கேள்விப் பட்டு, கீழ்க்கண்ட சுட்டியில் அதனைக் கண்ணுற்று உறுதி செய்து கொண்டேன்.(http://groups.google.com.hk/group/anbudan/msg/a8b3c459426e19c9?&hl=zh-TW)

திரு.செயபாரதன் அவர்களே, நண்பர் புகாரியின் நூல் வெளியீட்டு விழாவில் பல்லோர் முன்னிலையில் பாவேந்தர் பாரதிதாசனை, படு கேவலமாகப்
பேசினீர்கள். அதனை பதிவுகள் தளத்திலும் போட்டீர்கள். அது கண்டு நான் கொதித்து, சற்றே கடுமையாகவே எனது மறுமொழிக் கட்டுரையை எழுதியிருந்தேன்.

பாவேந்தரை ஏன் பழிக்கிறீர்கள் என்று கடிந்த உடன், உடனே அவரின்கவிதை வரியின் நிழலில் ஒதுங்கி மேற்கண்ட கட்டுரையை எழுதி அதனை வைத்துக் கொண்டு விழா எடுத்து வருகிறீர்கள்.

இது எந்த வகையில் நேர்மை என்று தெரியவில்லை.

நையாண்டி செய்யப்படுவது எனக்கு ஒன்றும் பெரிய விதயமேயில்லை. இதை விடப் பல நையாண்டிகளையும், பல வழக்காட்டுகளையும் பார்த்தவன் நான்.

ஆனால், என்னை நையாண்டி செய்யும் சாக்கில், நீங்கள் தூய தமிழ் என்பதனை மிகவும் கேவலப் படுத்தி வருவது தவறு.

பாவேந்தர் பாரதிதாசனைப் பழித்து விட்டு, பின்னர் அவர் கவிதை வரிகளின் நிழலில் நின்று கொண்டு தூய தமிழைப் பழித்துக் கொண்டு, அதனைப் பரப்பியும், பலரைக் குழப்பியும் வருகிறீர்கள். இது ஏற்க முடியாத ஒன்று, ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை நான் அமைதியாகப் போய்விட்டேன்.

மீண்டும் மீண்டும் என்னைச் சீண்டிவருவதாலும், பிழையுரைகளைப் பரப்பிவருவதாலும் இந்த வழக்காட்டை என் பதிவில் நான் துவக்க வேண்டி வந்திருக்கிறது.

உங்கள் கட்டுரையில் நீங்கள் விடுத்துள்ள வினாக்களுக்கும், இட்டிருக்கும் கருத்துகளுக்கும் நான் இங்கு விடையிறுக்கிறேன். அதே போல வரும் மடல்களில் நான் எடுத்து வைக்கும் வினாக்களுக்கு உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் குழுவை நடத்தும் நண்பர் புகாரி அவர்களுக்கு:

உங்கள் மடற்குழுவில் நான் பங்கு கொண்டதில்லை. திரு.செயபாரதனின் கட்டுரையையும் அதன் பின்னணியும் உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்.

"தனிப்பட்ட முறையில்" பங்கு கொள்ளாதவர்களின் பெயர்களிலே வரும் சர்ச்சைக்கிடமான நையாண்டி மேளங்களை அனுமதிப்பது நல்ல மடற்குழுப் பண்பாடு என்றால் அதனை நீங்கள் தொடர்ந்து செய்து
கொள்ளுங்கள்.

1) தமிழ் ஆராய்ச்சி வட்டம் மடற்குழு நினைவு தங்களுக்கு மறந்திருக்கலாம். ஆனால் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது,

2) தமிழ்-உலகம், அகத்தியர், சந்தவசந்த மடற்குழுக்களில் ஆள் இல்லாத அரங்கில் ஆடும் ஆட்டத்தினை அநாகரிகம் என்று சொல்லும் பண்பாட்டைவைத்திருந்தார்கள். அது சரியா தவறா என்று எனக்கு இப்போது தெரியவில்லை.

எனினும், தூய தமிழைப் பழிக்கும் உங்கள் குழுவைப் பற்றி இந்தத் தொடரில் எழுதத் தூண்டிய உங்கள் குழுவிற்கும், திரு.செயபாரதன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்