Sunday, July 16, 2006

தில்லைத் தீட்சிதர்களின் காலித்தனமும் மேதாவிலாசங்களும்

http://kvraja.blogspot.com/2006/07/blog-post_15.html என்ற பதிவிக்
சீமாச்சு என்பவர் படித்த மற்றும் பெரியபுள்ளத்தனத்தில் எழுதின சீரிய மறுமொழிகளீன்பால் ஒரு பார்வை.
// - இக்குறிக்குள் இருப்பன சீமாச்சு எழுதினது.

//இது என்ன சின்னப்புள்ளத்தன்மாயில்ல இருக்கு. எல்லா சர்ச்சுகளும்.. எல்லா மசூதிகளும்.. அரசு சாராத எல்லாக் கோயில்களும் private property தான் !! படிச்சவங்க மாதிரி புரிங்சுக்குங்கப்பா?
//

எந்த "சர்ச்சிலேயும்" "பைபிளை"ப் படிக்காதே என்று சொல்லமாட்டார்கள். எந்த சர்ச்சிலேயும் திருத்தந்தை அல்லது அவரை ஒப்பார் மட்டுமே பைபிளைப் படிக்க வேண்டும் என்று சட்டமில்லை.
யார் வேண்டுமானாலும் பைபிள் நூலைத்
தூக்கிக் கொண்டு போய் படிக்கலாம்/ஓதலாம்.

எந்த மசூதியிலேயும் குரானை ஓதக் கூடாது
என்று சொல்ல மாட்டார்கள். மசூதியில்
வழிபாட்டு நேரங்களில் எல்லோரும் செல்லலாம் எல்லோரும் கூட்டாகவோ/தனியாகவோப் படிக்கலாம். அங்கே இவர் படிக்கக் கூடாது/பாடக் கூடாது என்று சட்டம்
இல்லை.

திருவாசகம் சைவர்களின் சமயநூல்.
திருவாசகத்தில் நிறைய பகுதிகள்
இதே தில்லையம்பலத்தில்தான் எழுதப்பட்டவை. அங்கேயே அதற்கு
மறுப்பென்றால் அதைவிட அடாவடி
வேறொன்றுமில்லை. அதற்கு வக்காலத்து
வாங்குவது அதைவிட அடாவடிச் செயல்.

//
private property என்றால் அரசாங்கத்தினுடையதோ அல்லது ஒரு பொதுச்சொத்தோ கிடையாது. ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது தனியாரின் பிரத்தியோக உரிமைக்கும் அவர்களின் நிர்வாகத்துக்கும் கட்டுப்பட்டது. அப்பொழுது அவர்கள் போடும் வரையறைகளைக் கேள்வி கேட்க முடியாது.
//

1) முதலில், தீட்சிதர்கள் தில்லைக்
கோயிலைக் கட்டவில்லை. பாண்டிய
சோழ மற்றும் அரசர்கள் பல காலங்களில்
அதை எடுத்தும் விரித்தும் கட்டியிருக்கிறார்கள். இவர்கள் தீட்சிதர்களுக்குக் கொடுத்தது நிர்வாக
உரிமை. அல்லது நாட்டாமை!

கயிலாயத்தில் இருந்து இங்கு வந்ததாக
சொல்லிக்கொள்ளும் இவர்கள், பொருள்
போட்டுக் கட்டவேயில்லை. நரித்தனமாக
நாட்டாமையை பெற்றுக் கொண்டு ஆட்டம்
போடுகிறார்கள்.

கேட்டால் ஆண்டவந்தான் இவர்களை
இங்கு ஆட்டம் போட அனுப்பினான் கயிலையில் இருந்து, என்று கதை விடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு
முன்னாலேயே (கி.மு 3000க்கு முன்னரே)
திருமூலர் கயிலாயத்தில் இருந்து தில்லைக்கு
வந்து விட்டார் என்ற கதையெல்லாம் நிறைய
நம்மிடம் இருக்கிறது என்பதனை இவர்கள்
பார்க்கவும் மறுக்கிறார்கள்.

2) தனியாரால் கட்டப்பட்டு அவர்களின்
வம்சாவளிகள் கோயில்களில் நிர்வாகம்
செய்வது நிறைய கோயில்களில் நடக்கவே
செய்கிறது. தீட்சிதர்கள் கோயிலைக் கட்டவில்லை. அதனால் அவர்களின் வம்சாவளிகளின் private property அல்ல. நரிக்கு நாட்டாமை கொடுத்தால்
கிடைக்கிரண்டு ஆடுகள் கேட்குமாம்
என்று சொல்வது தில்லை தீட்சிதர்களின்
கதையில் மிகவும் பொருந்தும்.

3) இதைக் கட்டியவர்கள் அருளாளர்களின்
ஆலோசனையின் பேரில் அரசர்கள்.
அரசர்கள் என்பவர்கள் அரசினை ஆண்டவர்கள் என்பதனை private property என்ற கோசம் போடும் முன்
உணர்தல் வேண்டும்.

4) ஒரு கோயில் என்பது ஒரு தனியாரால்
கட்டப்பட்டாலும், அது கட்டப்படுவது
பொதுநோக்கத்திற்காக மட்டுமே. பொது
மக்களின் தேவைக்கேற்பவும் நடக்க
வேண்டியது அவசியம் மட்டுமல்ல கடமையும்
கூட.

ஒருவர் கோவிலில் அன்னதானம் செய்கிறார் என்றால், அது அவரின் private property கொண்டுதான். அதில் அவர் போடும் சோறையும் குழம்பையும் கேள்வி கேட்க
முடியாது. ஆனால், சோறுக்கு பதிலாக
பீரும் பிராந்தியும் ஊற்றினார் என்றால்
அதைக் கேட்கக் கூடாது என்றால் அதை விட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. அப்படித்தான் இந்த தீட்சிதர்கள்
செய்யும் அட்டகாசம்.

//
வேற எந்த ஒரு private propertyக் குள்ளும் பொதுமக்கள் செல்வதில்லையா? திமுகவின் அறிவாலயம் கூட private property தான்
//

அறிவாலயத்தையும், தில்லைக் கோவிலையும், ஒப்பிடும் இந்த
பெரியபுள்ளைத்தனம் ஒப்பற்றது :(

//
உங்க வீட்டுலயோ அல்லது அரசாங்க கோவில்லயோ பாடினா.. நடராஜருக்குக் கேட்காதா?

அல்லது.. சிதம்பரம் கோயில்லதான் மனசுக்குள்ள சொல்லிக்கிட்டா.. நடராஜருக்குக் கேட்காதா?

உண்மையான பக்திக்கு ஆண்டவனை எப்படிப் போய்ச்சேரணுன்னு தெரியும்.. இவங்க பண்றது வெறும் வீம்பு..

இது வெறும் அங்கீகாரத்துக்கு அலையும் முயற்சி.. ஆ..ஊ..ன்னு கத்தி.. கடைசியில தமிழ்நாட்டுல தமிழுக்கு இடமில்லையா.. ன்னு மொழி சார்ந்த உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு குளிர்காயும் முயற்சி..


இதுக்கு யாராவது பதில் சொல்லுங்கப்பா...

//

1)சைவர்களின் கோயில் தில்லை.
அங்குதான் திருவாசகத்தின் பெரும்பகுதி
ஆக்கப்பட்டது. திருவாசகத்தின் முதலே
சிவபுராணம்.

அதிலே என்ன சொல்லப்பட்டிருக்கிறது
என்று படித்தால் பல சேதிகள் விளங்கும்.

"நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே, ஓ என்று
சொல்லற்கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவனடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து"

சிவபுராணத்தின் இறுதியில் இப்படித்தான்
முடியும். இறைவனின் நாமத்தைச் "சொல்லி"
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து
"சொல்லுவார்" இறைவனை அடைவர் என்பது சுருக்கமான கருத்து.

"சொல்லுதல்" என்பது இங்கே வலியுறுத்தப்பட்ட கருத்து. அதையும்
பொருள் உணர்ந்து சொல்லல் வேண்டும்
என்பது கட்டளை.

சொல்லுதல் என்றால் வாய் விட்டுப் படித்தல்,
பாடுதல்! இறைவனை வாய்விட்டுப் பேசவேண்டும் பாடவேண்டும் என்பது
கருத்து.

அதைத்தான் அந்த சிவனடியார்கள் செய்தனர். அதில் தவறேதும் இல்லை.

சொல்லுதல் என்றால் நீங்கள் சொல்வது போல வாய்க்குள் முணுமுணுப்பது அல்ல.

அதனால் வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டால் நடராசருக்குக் கேட்காதா
என்பதெல்லாம் வெறும் வெற்றுவாய்க் கூச்சல்
அன்றி, வேறேதும் இல்லை.

அதோடு, அரசாங்கக் கோயிலிலோ
வீட்டிலோ பாடினால் நடராசருக்குக் கேட்காதா என்றால் அது பேத்தல்!

காசிச் சிவனாகட்டும், கயிலாயச் சிவனாகட்டும் எங்கும் திருவாசகம் ஓதலாம்.
இத்தனைக்கும் கயிலாயச் சிவன் நமது
நாட்டிலேயே இல்லை. அங்கேல்லாம்
பாடலாம் ஓதலாம் ஆனால் தில்லையில்
ஓதினால் சிவன் கோவித்துக் கொள்வாரா?

நாணங்கெட்டப் பேச்சு!

2) அப்படி வாய்க்குள்ளேயே பாடலாம்/ஓதலாம் என்றால், ஏன் கோயில்
குருக்கள் அருச்சனையின் போது வாய்விட்டு
மந்திரங்கள் சொல்கிறார்?

ஏன் யாக சாலையில், வாய் கிழிய
பாடுகிறார்கள்?

ஏன் கோயில் குருக்களோ, வேத விற்பன்னர்களோ வாய்க்குள் சொல்லிக்
கொண்டால் போதாதா?

3) சிவனை சாம வேதத்தை உகப்பவன்
என்று சொல்வார்கள் - அது ஏன் என்று
தெரியுமா? சாம வேதம் என்றால் என்ன
என்று தெரியுமா? போய்ப் படியுங்கள்!
அப்பொழுது மேலும் புரியும் - ஏன் வாய்விட்டுத் திருவாசகத்தைச் சொல்ல வேண்டும் என்றும் சொல்கிறார்கள் என்றும்!

4) "தேசுடைய இலங்கையர் கோன் வரையெடுக்க அடர்த்து, திப்பிய கீதம்
பாடத் தேரொடு வாள் கொடுத்தீர்" என்ற
சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவார வரிகளுக்கு அருத்தம் கண்டு பிடியுங்கள்.
அப்பொழுது புரியும் ஏன் வாய்விட்டுச் சொல்லவேண்டும் என்று.

5) "கீதமொடு நீதிபல ஓதிமறவாது பயில்
நாதன் நகர்தான்" என்ற சம்பந்தர் பெருமானின் தேவார வரிகளுக்கு அருத்தம்
கண்டு பிடியுங்கள் - அப்பொழுது புரியும் ஏன் வாய்விட்டுச் சொல்லவேண்டும் என்று.

6) "பண்ணார் இன்தமிழாய் பரமாய பரஞ்சுடரே" என்ற சுந்தரர் வரிக்கும்,
"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்"
என்ற அப்பர் பெருமானின் தேவார வரிகளுக்கும் அருத்தம் கண்டு பிடியுங்கள் - அப்பொழுது புரியும் ஏன் வாய்விட்டுச் சொல்லவேண்டும் என்று.

திருமுறைகளும், திருவாசகமும்தான் சிவம்.
அவைதான் மறை. தீட்சிதர்களின் உளறல்கள் அல்ல. அரசாங்க சிவன் கோயிலில் ஒன்றும், தனியார் சிவன் கோயிலில் ஒன்றும் பாடுவதற்கு மக்கள்
ஒன்றும் பைத்தியக்காரர்கள் அல்ல.

அப்பரும், மாணிக்கவாசகரும், சம்பந்தரும்,
சுந்தரரும் இதர பல நாயன்மார்களும், அரசாங்கத்தின் ஆத்தான கவிஞர்களோ/பாடலாசிரியர்களோ அல்ல.
அவர்கள் சிவன் அடியார்கள்.
அவர்கள் பாடிய பாடல்கள் தில்லையில்
ஒலிக்கக் கூடாது என்று சொல்ல
எந்த நாய்களுக்கும் அருகதையும் உரிமையும் இல்லை.

7) உண்மையான் பக்தி என்று சொல்கிறீர்களே, அதைக் கொஞ்சம்
விவரியுங்களேன் பார்க்கலாம் - பலரும்
அது என்ன என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பா?

8) அங்கீகாரத்திற்கு அலையும் முயற்சி
என்றால் கூட அது அவ்வளவு கேவலமா உங்களுக்கு?

பள்ளிக்கூடத்துச் சான்றிதழைக் கிழித்துப்
போட்டுவிட்டுப் போய்விடுவீர்களா?

9) தமிழ் உணர்ச்சி ஏதோ தமிழ்நாட்டில்
கொழுந்து விட்டு எரிவது போலவும்
அதில் ஏதோ குளிர்காய அலைகிறார்கள்
போலவும் எழுதியிருப்பது பொறுப்பற்றது!
உங்களின் அநாகரிகப் பாணியிலேயேச்
சொல்லப்போனால் பெரியபுள்ளைத்தனமானது.


நாக.இளங்கோவன்

12 comments:

முத்துகுமரன் said...

சிவனை ஆரியத்திற்கு காவு கொடுத்ததற்கு பெற்ற பயன்தான் இவை. அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

Anonymous said...

If you have guts go and try to sing a Tamil song praising Allah
in a mosque.Why muslims are not allowing Tamil in mosques.

nayanan said...

//
If you have guts go and try to sing a Tamil song praising Allah
in a mosque.Why muslims are not allowing Tamil in mosques.
//

You should have had guts first of all to write in your original name!

anonymous என்று பெயர் வைத்துக் கொண்டு
எழுதுபவர்களுக்கும் சரி, பதில் அளிப்பவர்களுக்கும் சரி சற்று வசதிதான்
போலும்! :) சரி விதயத்திற்கு வருவோம்.

ஏன்யா, உங்களுக்கே இது வெட்கமா இல்லை?

தமிழ்ச் சைவக் கோயிலில் ஏன்
தமிழ் மறையைப் பாட விடமாட்டேன்கிறார்கள் என்று கேட்டால், உடனே மசூதியையும் குரானையும், சர்ச்சையும் கிறித்துவையும் இழுக்கிறீர்களே, அறிவு கொஞ்சமாவது இருக்கிறதா?

இப்படியே தன்மானம் இன்றி இன்னும்
எத்தனைக் கேடு செய்யக் காத்திருக்கிறீர்களோ நீங்களும் உங்களைப் போன்றவர்களும்.

தமிழ்க் கோயிலுக்குள் தமிழைப் பாட வேண்டுமானால், ஒருவன் முதலில் ஒரு மசூதிக்குப் போய் தமிழில் குரானை வீரத்தோடு ஓதி விட்டுப் பினன்ர் வந்து
தமிழ்க் கோயிலில் தமிழில் ஓத வேண்டுமாம்.

மசூதியில் ஓதிவிட்டால், தீட்சிதர்கள்
சரி பாடுங்கள் தமிழில் என்று சொல்வார்களா?

நாணத்தக்க மூடக்கருத்து - நாய்களிடம் போய்ச் சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை.

உங்கள் மூடக் கிடங்குகளை சற்று
மூடிக் கொண்டு உங்களுக்குப் பிடித்ததை
உருட்டிக் கொண்டு திரியுங்கள்.

தமிழ்க் கோயிலுக்குள் ஒரு பிரச்சனை என்றால், ஒருவர் சவுதி அரேபியா private
property என்கிறார், ஒருவர் மசூதிக்குள்
சென்று தமிழில் பாடமுடியுமா என்கிறார், இன்னொருவர் கிறித்துவர்களை இழுக்கிறார் :-)))))))))

வெட்கங்கெட்ட வெறிக்கூட்டம்!

நாக.இளங்கோவன்

Anonymous said...

தீட்சிதர்கள் பார்ப்பனர்களா ?

murali said...

உங்கள் உணர்ச்சிகளைத் தள்ளி வைத்துவிட்டு அடுத்தவன் உடைமைகளையும் அதன் மீதான அவர்களின் உரிமைகளையும் சட்டப்படி மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் (சீமாச்சு).

அன்பு இளங்கோ பல தலைமுறைகளாக தங்களை இந்த பணியில் தீட்ஷதர் சமூகம் அர்ப்பனித்துக் கொண்டுள்ளார்கள்.அப்படி இருக்கும் பொழுது தர்மப்படி அது அவர்களின் உரிமையாகிறது.வேறு யாரும் உரிமை கோரும் பட்சத்தில் அதை மறுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

அவர்கள் தமிழ் மறையை நாங்கள் ஓத மாட்டோம் என்று சொல்லியிருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் உரிமையில் பிறத்தியார் தலையிடுவதை நான் அத்துமீறலாகத்தான் நினைக்கிறேன்.

இந்த அத்துமீறலை நான் தமிழக அரசியலில் புரையோடி நாற்றமடிக்கும் பிராமண எதிர்ப்பின் அங்கமாகவே கருதுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Seemachu said...

அன்பு இளங்கோவன்,
உங்கள் பதிவில் உணர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கிறது.. அங்கங்கே உணர்ச்சிவசப்பட்டு எல்லோரையும் சகட்டு மேனிக்குத் திட்டியிருக்கின்றீர்கள். இறையின் பால் ஏற்பட்ட அதீத அன்பெனக் கருதி அவற்றைப் புறம் தள்ளிவிடலாம்..

1. கிறித்துவர்களின் சர்ச்சையும் முஸ்லிம்களின் மசூதியையும் பற்றிக் குறிப்பிட்டது.. அவை அரசு சாராத ஒரு தனிப்பட்டோர் நிர்வாகத்தில் அமைந்த அமைப்பு என்பதை எடுத்துக்காட்டத்தான். மற்றபடி அங்கு என்ன செய்யச் சொல்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள் என்பது நமது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம்.
2. திருவாசகம் மிக அற்புதமான தமிழ் மறை தான்.. அதையும் நான் மறுக்கவில்லை. நாம் நேரில் சந்திக்கும் போது சிவபுராணம் என் மனனத்தில் உங்களுக்குப் உங்கள் ஆசைப்படி பாடியே காட்டுகிறேன்.. அது நான் தினமும் சொல்லும் ஒரு இறை வணக்கமும் தான்.
3. தமிழ் நாட்டில் தமிழுக்கு இடம் வேண்டும் தான்.. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் என் குழந்தைகள் தமிழ் பேசும்படி நான் பழக்கியிருக்கிறேன்... அதனால் தமிழ் மீது எனக்கு அதீத அன்பு உள்ளது. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

மேற்சொன்ன இந்த மூன்றையும் கலக்கும் விதத்தில்தான் நீங்களும் நானும் மாறுபடுகிறோம்.

4. பெரியபுராணம் சொன்ன சேக்கிழார் பெருமான் தான் "தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று பாடி விட்டுப் போனார்.. 'அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்றா என்ன பொருள் என்பது உங்களுக்குத் தெரியும். 'இவர் அவரில்லை என்று வீண் வாதம் வேண்டாம்'
5. உங்கள் வாதங்கள் உணர்ச்சிகளின் பாற்பட்டது. எனது வாதங்கள் உரிமைகள் கடமைகள் இவற்றின் பாற்பட்ட சட்டத்தை மதிக்கும் தன்மையுடையதானது. சட்டங்கள் உணர்ச்சிகளை மதிப்பதில்லை They rely on facts.
6. உதாரணத்துக்கு.. பக்கத்து வீட்டுக்காரர் மனைவியை நீங்கள் தாயைப்போல மதிக்கலாம்.. அதற்கென்று வாயில் விரல் போட்டுக்கொண்டு.. 'தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டுதான் படுப்பேன்' என்று அவர்கள் வீட்டு வாயிலில் நின்று அழிச்சாட்டியம் செய்தீர்களானால்.. என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

7. அரசர்கள் பற்றி நீங்கள் எழுதியது இன்னும் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமானது.. குடியரசில் உள்ள சில உரிமைகளை நீங்கள் முடியரசுக்கும் பொருத்தியுள்ளீர்கள். நான் அதைப் பற்றி வாதாட விரும்பவில்லை.. மைசூர் மகாராஜா அன்பளிப்பாக என் தாய்க்குக் கொடுத்தது என்று கோடிகளைச் சுமந்து கொண்டு ஒரு கூட்டம் அலைகிறது. முடிந்தால் அவையும் மக்கள் பணம்தான் என்று மீட்டுத் தாருங்கள்.

கடைசியாக.. திருவாசகம் தில்லை கோயிலில் பாடப்படவேண்டுமென்பது என் விருப்பமா என்று கேட்டால்.. ஆம் என்று தான் சொல்லுவேன். ஆனால்.. அதற்கான முயற்சிகளை நான் எடுக்க வேண்டுமென்றால் அது சாத்வீகமானதும் பொறுமையானதுமே இருக்கும்.

மீண்டும் மீண்டும் நான் சொல்ல விரும்புவதெல்லாம்..,
"உங்கள் உணர்ச்சிகளைத் தள்ளி வைத்துவிட்டு அடுத்தவன் உடைமைகளையும் அதன் மீதான அவர்களின் உரிமைகளையும் சட்டப்படி மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்"

அன்புடன்,
சீமாச்சு...

nayanan said...

//
அன்பு இளங்கோவன்,
உங்கள் பதிவில் உணர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கிறது.. அங்கங்கே
உணர்ச்சிவசப்பட்டு எல்லோரையும் சகட்டு மேனிக்குத்
திட்டியிருக்கின்றீர்கள்.
//

அன்பிற்குரிய சீமாச்சு,

உண்மைதான். ஆயினும் சிறிய வேறுபாடு; உணர்ச்சி மிகல் என்று
பொதுவாகச் சொல்வதை விட, சினம் என்று சொல்வது சரியாக இருக்கும்.
கேவிஆர் பக்கத்தில், தங்களுடைய மறுமொழியில், அலட்சியமாக
"சின்னப்பிள்ளைத்தனம், படிச்ச....." போன்ற சொற்களை நீங்கள் பயன்
படுத்தியிருந்தது எனக்கு சினத்தைத் தந்தது. சரி - அதை விட்டுவிடுங்கள்.
ஏனெனில், அதை நான் சுட்டிக்காட்டியிருந்தும் நீங்கள் இந்த மறுமொழியிலும்
அப்படித்தான் எழுதியிருக்கிறீர்கள்.

//
1. கிறித்துவர்களின் சர்ச்சையும் முஸ்லிம்களின் மசூதியையும் பற்றிக்
குறிப்பிட்டது.. அவை அரசு சாராத ஒரு தனிப்பட்டோர் நிர்வாகத்தில் அமைந்த
அமைப்பு என்பதை எடுத்துக்காட்டத்தான்.
//

அடிப்படையில் இந்த விவாதத்தில், மசூதி மற்றும் கிறித்துக் கோயில்களை
ஒப்புக்குக் கொண்டு வந்ததே தவறு. எனது பதிவில் ஒரு அன்பர்,
மசூதிக்குள் போய் தமிழில் ஓதமுடியுமா? என்று கேட்டிருந்தார்.
இதுவும் எனக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தி இடக்காக திட்ட வேண்டி
வந்தது. தமிழ்க் கோயிலுக்குள் தமிழ் பற்றிய விவாதத்தில் மசூதிக்குள் போய்
உன்னால் தமிழ் ஓதமுடியுமா? என்பது தேவையற்ற ஒப்புமை மற்றும் திசை
திருப்பல்.

உங்களின் மேற்கண்ட கருத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பினும்
அது தேவையில்லை என்று விட்டு விடுகிறேன்.

//
2. திருவாசகம் மிக அற்புதமான தமிழ் மறை தான்.. அதையும் நான்
மறுக்கவில்லை. நாம் நேரில் சந்திக்கும் போது சிவபுராணம் என் மனனத்தில்
உங்களுக்குப் உங்கள் ஆசைப்படி பாடியே காட்டுகிறேன்.. அது நான் தினமும்
சொல்லும் ஒரு இறை வணக்கமும் தான்.
//

மிக்க மகிழ்ச்சி.

//
3. தமிழ் நாட்டில் தமிழுக்கு இடம் வேண்டும் தான்.. அமெரிக்காவில் பிறந்து
வளர்ந்திருந்தாலும் என் குழந்தைகள் தமிழ் பேசும்படி நான்
பழக்கியிருக்கிறேன்...
அதனால் தமிழ் மீது எனக்கு அதீத அன்பு உள்ளது. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
//

நான் மறுக்க மாட்டேன். முழுமையும் ஒப்புமையே.

//
மேற்சொன்ன இந்த மூன்றையும் கலக்கும் விதத்தில்தான் நீங்களும் நானும் மாறுபடுகிறோம்.

4. பெரியபுராணம் சொன்ன சேக்கிழார் பெருமான் தான் "தில்லை வாழ் அந்தணர்தம்
அடியார்க்கும் அடியேன்" என்று பாடி விட்டுப் போனார்.. 'அந்தணர் தம்
அடியார்க்கும் அடியேன்' என்றா என்ன பொருள் என்பது உங்களுக்குத் தெரியும்.
'இவர் அவரில்லை என்று வீண் வாதம் வேண்டாம்'
//

நண்பரே, இத்தனை அன்பு தமிழ்பால் வைத்துள்ள நீங்கள்,
அந்தணர் என்பதற்கான வாதம்(எல்லா வாதமும் வீண் என்று ஏன் நினைக்க
வேண்டும்) வேண்டாம் என்ற நிலைப்பாடு எடுத்துக் கொள்வதை மறுபரிசீலனை செய்யுங்கள்.

மேற்கண்ட அடியை மேற்கோள் காட்டிய உங்களுக்கு நன்றி.
சிறு திருத்தம்: இது சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய
திருத்தொண்டர்தொகையின் முதல் அடி.

"தில்லைவாழ் அந்தணர்" என்பதை பலரையும் போல,
தில்லைக் கோயிலைச் சுற்றி வதியும் அந்தணர்களைப்
பொருளாகக் கொண்டிருக்கிறீர்கள். நான் வாதம் செய்யப் போவதில்லை.
ஆனால் அதை மறுத்து விளக்கம் சொல்ல முடியும் என்று நம்பிக்கை
எனக்குண்டு.

தில்லை வாழ் அந்தணரை, தில்லைக் கோயிலுக்கு வெளியே தேடாதீர்கள்.
தில்லை வாழ் அந்தணர், அந்த தில்லைக் கோயிலுக்குள் உறையும்
நடராசப் பெருமான்தான்.

வாதம் செய்யும் அளவிற்கு நான் பெரியவனல்ல. ஆயினும், சில நேரிய
விளக்கங்களைச் சொல்லமுடியும்.

ஆனால், நீங்கள் கண்டிப்பாக இருக்கிறீர்கள். கேட்கக் கூடாது என்று :-)
விரும்பினால், விரும்பினோரோடு இதனை விரிக்க நான் விரும்புகிறேன்.

ஐயா, அதனால், வாதம் செய்யாமல், இரு வினாக்களை மட்டும் இடுகிறேன்.

1) அந்தணர் என்றவுடன் ஏன் அக்கிரகாரத்தில் தேடுகிறீர்கள் ?

பார்ப்பனர்களில் பல அந்தணருண்டு. பார்ப்பனர் அல்லாதாரில்
பல அந்தணர் உண்டு. தற்போது கூட, அல்லூரில், திருவள்ளுவர்
தவச்சாலை அமைத்து நடத்தும் இரா.இளங்குமரன் என்பாரை
"செந்தமிழ் அந்தணர்" என்று அனைவரும் அழைப்பர். அவர் பார்ப்பனர்
அல்லாதவர் என்று நான் நன்கறிவேன்.
(சரி - இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை)

2) "தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று
சுந்தரர் சொல்கிறார். அவர் அது மட்டுமா சொல்கிறார்?

"திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்" என்றும் பாடுகிறார்.

தில்லையிலே, உங்களின் கூற்றுப்படி, அங்கு வாழ்கின்ற அந்தணர்க்கு
அடியேன் என்கிறார். (எனக்கு 100% மறுப்பு உண்டு).

ஆனால், திருவாரூரில் பிறந்த எல்லார்க்கும் அடியேன் என்கிறார்.

தில்லைவாழ் அந்தணர் என்பது தீட்சிதர்களைக் குறிக்கிறது என்று
நம்பினால், திருவாரூரில் பிறந்த எல்லோர்க்கும் அடியேன் என்பதனால்,
தி.க கட்சியைச் சேர்ந்த, திருவாரூர் தங்கராசு, திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த கருணாநிதி போன்ற எல்லார்க்கும் அடியேன் என்கிறாரா சுந்தரர்?
:-)))) திருவாரூரில்தாங்க தி.க காரங்க அதிகம் :-)

அய்யா கொஞ்சம் யோசிங்க! :-)))

//
5. உங்கள் வாதங்கள் உணர்ச்சிகளின் பாற்பட்டது. எனது வாதங்கள் உரிமைகள்
கடமைகள் இவற்றின் பாற்பட்ட சட்டத்தை மதிக்கும் தன்மையுடையதானது.
சட்டங்கள் உணர்ச்சிகளை மதிப்பதில்லை They rely on facts.
//

சீமாச்சு, தங்களின் சட்டத்தின்பாற்பட்ட பார்வையை நான் பழுதெனச்
சொல்லவேயில்லை. சாதாரணமாக, சிந்தியுங்களேன்.
இவங்க பாடுறேன் என்று சொல்றாங்க. அவங்க பாடாதே என்கிறார்கள்.
ஆனால், அவங்க சரி-பாடுங்க என்று சொல்றாங்கன்னு வச்சுக்கங்க,
என்ன குறைஞ்சு போயிடப் போறாங்க? என்ன உரிமையை அவர்கள்
இழந்து விடப் போகிறார்கள்? அதுவும் நூற்றுக் கணக்கான, ஆண்டுகளாக
ஆள்பவர்களுக்கு ஏன் உணர்ச்சி பொங்குகிறது??
அவங்களுக்கே உணர்ச்சி பொங்கி எதிர்த்து நிற்கும்போது, பிறருக்கு,
வராதா என்ன? சரி விதயத்துக்கு வருகிறேன்.

சட்டம் என்பது மாறக்கூடியது. தீர்ப்புகள் திருத்தப்படும் மாற்றங்களுக்கு
ஏற்ப. ஒரு காலத்தில் கோயிலுக்குள் நுழையவே கூடாது என்று சட்டம்
இருந்தது. அல்லது சட்டம் அதற்கு சாதகமாக இருந்தது. அது மாறி விட்டது.

ஒரு காலத்தில் பெண்கள் தங்கள் முலைகளை மறைக்கக் கூடாது; அப்படி மறைக்க
விரும்பினால் அதற்கு வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
அதை எதிர்த்து உணர்ச்சி வசப்பட்டதில் அந்த சட்டம் மாறவில்லையா?

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கொள்கைக்குக் கூட
சட்டத்தடை இருந்தது. அது மாறி விடவில்லையா?

அதுபோல, இதுவும் மாறிவிடும். அதற்கு உணர்ச்சிதான் தேவை!
உணர்ச்சியற்று அதுவே கதி என்று இருக்கக் கூடாது.

என்னுடைய உணர்ச்சி நேர்மையானதா என்று எனக்குத் தெரியாது.
அது பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால், ஞாயமான உணர்ச்சிகள்
சட்டத்தை மாற்றிவிடும். அதற்குதான் மேற்சொன்ன சில சான்றுகள்.

//
6. உதாரணத்துக்கு.. பக்கத்து வீட்டுக்காரர் மனைவியை நீங்கள் தாயைப்போல
மதிக்கலாம்.. அதற்கென்று வாயில் விரல் போட்டுக்கொண்டு.. 'தாயின்
கழுத்தைக் கட்டிக்கொண்டுதான் படுப்பேன்' என்று அவர்கள் வீட்டு வாயிலில்
நின்று அழிச்சாட்டியம் செய்தீர்களானால்.. என்ன நடக்கும் என்பது
உங்களுக்கே தெரியும்.
//

வேற உதாரணம் சொல்லக்கூடாதுங்களா? பாவம் பக்கத்து வீட்டு அம்மா :-))

//
7. அரசர்கள் பற்றி நீங்கள் எழுதியது இன்னும் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமானது..
//

There you go Again :---)))

//
டைசியாக.. திருவாசகம் தில்லை கோயிலில் பாடப்படவேண்டுமென்பது என்
விருப்பமா என்று கேட்டால்.. ஆம் என்று தான் சொல்லுவேன். ஆனால்.. அதற்கான
முயற்சிகளை நான் எடுக்க வேண்டுமென்றால் அது சாத்வீகமானதும் பொறுமையானதுமே
இருக்கும்.
//

இப்ப யாருங்க, சண்டைக்குப் போனாங்க? அவங்க
அமைதியாதான் சென்றார்கள். அவங்க என்ன அரிவாள் வேல்கம்பையா
எடுத்துச் சென்றார்கள்? அதில் முக்கால்வாசிப் பேர் முதியோர் இல்லத்தில்
இருந்து வந்தவர்கள் போலல்லவா இருந்தார்கள் ? :-)))
அவங்களைப்போய் ..... :)

//
மீண்டும் மீண்டும் நான் சொல்ல விரும்புவதெல்லாம்..,
"உங்கள் உணர்ச்சிகளைத் தள்ளி வைத்துவிட்டு
//
உணர்ச்சிகளைப் பற்றி நிறைய நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.
மருத்துவர்களே, அழுகை வந்தால் அழுது விடு என்கிறார்கள்.

நீங்கள் சில சொற்களைத்
தவிர்த்திருந்தால் நான் கொஞ்சம் இடக்காக எல்லோரையும் திட்டாமல்
இருந்திருப்பேன் - அது யாரையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.
தங்கள் இடுகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன

nayanan said...

>> அன்பு இளங்கோ பல தலைமுறைகளாக தங்களை இந்த பணியில் தீட்ஷதர் சமூகம்
அர்ப்பனித்துக் கொண்டுள்ளார்கள்.அப்படி இருக்கும் பொழுது த00ர்மப்படி அது
அவர்களின் உரிமையாகிறது.வேறு யாரும் உரிமை கோரும் பட்சத்தில் அதை
மறுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.
<<<

அன்பிற்குரிய முரளிதரன்,
தங்கள் கருத்திடுகைக்கு நன்றி.

தீட்சிதர்களின் நிர்வாகம், வருமானம் போன்றவற்றில்
அடியார்கள் உரிமை கேட்கவில்லை. அவர்களின்
உரிமைகளைக் கேட்டு இவர்கள் செல்லவில்லை.

எல்லாச் சைவர்களையும் கவர்ந்த இடம் அந்தச் சிற்றம்பலம்.
அங்கே யார் வேண்டுமானாலும் நடக்கலாம், அமரலாம், வழிபடலாம்.
ஆனால், பாடக்கூடாது என்று சொன்னால் அது சரியாகப் படவில்லையே.
அதுவும், அந்த இடத்தில் படைக்கப்பட்ட மறையையே பாடக் கூடாது,
அதை நாங்கள் மட்டும்தான் பாடுவோம் என்பது சரியல்லவே?
இறைவனும், இறைப்பாடல்களும் பொதுவல்லவா? சிற்றம்பலம்,
கனகசபைக்கு வெளியே, தள்ளி நல்ல தூரத்திலேயே இருக்கிறது.
வழிபாட்டிற்குச் செல்வோர் யாருக்கும் இடைஞ்சலாகவும் இல்லை.
உள்பிரகாரத்தில், கனகசபையைச் சுற்றிப் பலரும் குழுவாக அமர்ந்து
இன்றைக்கும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படியே இடைஞ்சல் என்று நிர்வாகம் கருதினால், அதற்கான
ஒரு வரைமுறையை ஏற்படுத்துவது ஒன்றும் பெரிய விதயமேயில்லையே.

அடம் பிடிப்பதால்தானே, இது சரவலாகிறது?

இத்தனை நூற்றாண்டுகளாக, அதை ஆளும் தீட்சிதர் நிர்வாகத்திற்குப்
பெருந்தன்மை வேண்டாமா? ஏன் அவர்கள் கட்டுப்பெட்டித்தனமாக
இருக்க வேண்டும்?

>>
அவர்கள் தமிழ் மறையை நாங்கள் ஓத மாட்டோம் என்று சொல்லியிருந்தால் அது
தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள்
உரிமையில் பிறத்தியார் தலையிடுவதை நான் அத்துமீறலாகத்தான் நினைக்கிறேன்.
<<

தில்லைக் கோயில், வேதமுறைப்படியான வழிபாட்டைக் கொண்டது. அங்கே சிவ ஆகம
முறைகள் கடைப்பிடிக்கப் படுவதில்லை. வேதமுறைகளைக் கடைப்பிடிக்கும்
கோயில்களில் திருமுறை இருக்காது அல்லது அப்படியே இருந்தால் ஊறுகாய்
அளவில் இருக்கும். இருப்பினும் அவர்கள்
நெஞ்சார ஓதுகிறார்கள் என்று கொண்டாலும், அவர்களும் ஓதும் தமிழ்
மறையை ஏன் பிறரும் ஓதக்கூடாது என்று தடைவிதிக்கிறார்கள் என்பதுதான்
சரவல். மறைகள் பொதுவானவை. இதிலே உரிமை கொண்டாட என்ன
இருக்கிறது?

>>
இந்த அத்துமீறலை நான் தமிழக அரசியலில் புரையோடி நாற்றமடிக்கும் பிராமண
எதிர்ப்பின் அங்கமாகவே கருதுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
<<

என்னங்க நீங்க :-) அவங்க பாடப்போகிறேன் என்று சொல்லும்
திருமுறைகளில் பலவற்றை எழுதினவர்களே தமிழ்ப் பிராமணர்கள்தானே.
தேவார மூவரில் இருவர் (சம்பந்தப் பெருமானும், சுந்தரரும்) தமிழ்ப்
பிராமணர்கள்தானே. ஒப்பற்ற இவர்கள் இயற்றியதைப் பாட விரும்பும்
அடியார்களுக்கு, ஏன் பிராமண எதிர்ப்பு இருக்கப் போகிறது?

அன்பு கூர்ந்து பிராமணீய எதிர்ப்பு சர்ச்சைகளை
இதில் நுழைக்கவேண்டாம். அது தேவையற்றது.

எளிய விதயத்தை சிக்கலாக்கி, தீட்சிதர்கள்,
எல்லோரையும் வெறுப்படையச் செய்கிறார்கள்.

நான் சற்றுக் கடுமையாக எழுதியது,
சீமாச்சுவின் சில அலட்சியமான மற்றும் தவிர்த்திருக்கக் கூடிய சொற்களுக்காக மட்டுமே.

பிராமண எதிர்ப்பு, மற்றும் தீட்சிதர் உரிமைகளில் ஏன் தலையிட வேண்டும்
என்ற இரண்டு சிந்தனையில் இருந்து சற்றுத் தள்ளி, இந்தத் தீட்சிதர்கள்
தமிழ்மறையை அங்கு பாடவிட்டால் என்ன? என்று துளி நேரம் சிந்தித்துப்
பாருங்கள். நிச்சயம் நீங்கள் தீட்சிதர்கள் இத்தனைப் பிடிவாதம் காட்ட
வேண்டாம் என்றுதான் உங்களுக்குத் தோன்றும்.

பாடுகிறாயா பாடிவிட்டுப்போ! என்றால் முடிந்தது விதயம். அதை விடுத்து,
இவங்க அங்கீகாரத்திற்கு அலைகிறார்கள், தமிழ் உணர்வைக் கிளறிக்
குளிர்காய்கிறார்கள், பிராமணனை ஏதோ பண்ணப் போகிறார்கள், என்றெல்லாம் ஏன்
சிந்தனை செய்ய வேண்டுமோ என்று தெரியவில்லை :-)))

அன்புடன்
நாக.இளங்கோவன

இராம.கி said...

அழுத்தமாக ஓங்கிச் சொல்லுங்கள், இளங்கோ.

திருவாசகத்தைச் சிற்றம்பலத்தில் பாடத் தடையா? பேசாமல் அந்தத் திருக்கோயிலுக்குப் போகாமல் இருந்தாலும் தகும். யார் யாருக்குத் தடை போடுவது?

சிவநெறியாளருக்குக் கோயில் என்றாலே தில்லை தான். (விண்ணெறியாளருக்குக் கோயில் என்றாலே திருவரங்கம் தான்.) அந்தக் கோயிலுக்குள் ஒருவர் திருவாசகம் பாடக் கூடாது என்றால், அப்புறம் தில்லை ஆடவல்லான் தீட்சிதர்களோடு மட்டும் இருந்து கொள்ளட்டுமே? என்ன குறைந்துவிடும்? ஐந்து அவைகளில் ஒன்று குறைந்தது என்று வைத்துக் கொண்டு போகிறோம். மற்ற நாலு அவைகளிலும் நடம் பார்த்து மகிழ்ந்து கொள்ளுகிறோம்.

நாம் ஆடவல்லானைத் தொழுவது சிக்கலே இல்லை; ஆனால், தில்லைக் கோயிலை அடியார்கள் தவிர்த்தால் தீட்சிதர்கள் கதை தொடர்ந்து ஓடுமோ?

யார் யாருக்குச் சட்டத்தை எடுத்துக் காட்டிச் சொல்லுவது? சோழன் கொடுத்த செப்பேடுகளை ஒழுங்காகத் தீட்சிதர்கள் படிக்கட்டும். அந்தச் செப்பேடுகளைத் தூக்கி எறிய இன்றையத் தமிழக அரசு ஒரு ஆணை கொண்டு வந்தால் போதும். ஏன் செய்யாமல் இருக்கிறோம்? முன்னவனை மதிப்பதால்; அந்தச் செப்பேடுகளை இன்றும் இந்தக் காலச் சட்டம் ஏற்பது ஒரு நாகரிகம் கருதியே!

தீட்சிதர்களின் பொருளாதாரச் சீரழிவைக் கண்டு ஒருபக்கம் வருந்தியிருந்தாலும், இது போன்ற திமிர்த்தனம் நம்மைச் சினத்திற்கு உள்ளாக்குகிறது.

ஒரு நந்தன் இறையானது பற்றாதா இவர்களின் முட்டாள் தனத்திற்கு? இன்னுமா முட்டாள்த் தனம் தொடர வேண்டும்? "அடச்சே போங்கடா, நீங்களும் உங்க நடராசாவும். எங்க நடராசா உங்களுக்கு பாடம் கற்பிச்சிட்டுத்தான் இருக்கார். உங்களுக்குத் தான் என்ன நடக்குதுன்னு புரியலை."

அன்புடன்,
இராம.கி.

Seemachu said...

அன்பின் இளங்கோ,
உங்கள் பொறுமைக்கும் புரிதலுக்குன்ம் நன்றி.
உங்கள் பதிலை அனுபவித்துப் படித்தேன்.
இத்துடன்.. இந்த தலைப்புக்கான எனது தரப்புச் செய்திகள் நிறைவுறுகின்றன. என் கருத்துக்கள் இந்த விஷயத்தின் இன்னொரு கோணம். அவ்வளவே. இது குறித்து எனக்கு நேரிலும், பொதுவிலும் வெட்டியும் ஒட்டியும் வாதங்கள் வைத்த அனைத்து நட்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.


சிவனவன் என் சிந்தையுள் நின்றதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்யான்.


என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு

nayanan said...

அன்பின் முனைவர் இராம.கி ஐயா,
வணக்கம். தங்கள் இடுகையும் கனிவும்
கருத்தும் என்னை ஆட்கொண்டது.
மிக்க மகிழ்ச்சி.

நிச்சயம் மிக எளிதாக தில்லை தீட்சிதர்களிடம் இருந்து விடுதலை பெறும்
என்று நம்புகிறேன்.

நாம் போகாமல் இருக்கக் கூடாது.
அவர்களிடம் இருந்து அதனை விடுவித்துவிடவேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

அன்பின் நண்பர் சீமாச்சு,
தங்கள் இடுகை கண்டு நெகிழ்ந்தேன்.
தங்கள் புரிதலுக்கு எனது நன்றிகள்.
நம்மிடையே இருப்பது மிக மெல்லிய
கருத்து வேறுபாடுதான். அதுவும் சரியாகப்
போகுமென்று தங்கள் இடுகை கண்டு மகிழ்ந்தேன்.

எனக்கு இந்த விசயத்தில் சற்று அதிகமாக
சினம் வந்தது உண்மை. அதனால் நான்
காட்டமாக எழுதியவை தங்களைப் புண்படுத்தியிருக்கும். அதற்காக மன்னிக்கவும்.

வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம்
சந்திக்க விழைகிறேன்.
நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்