Pages

Sunday, September 05, 1999

சிலம்பு மடல் 17

சிலம்பு மடல் - 17 காடுகள் கடந்து மதுரை செல்தல்!
மதுரை:
காடுகாண் காதை:

எழில் மிகுந்த புகாரை, இன்பம் வாழ்ந்த புகாரை நீங்கி கோழி சென்று அங்கிருந்து பாண்டி நாட்டை நோக்கிப் பயணம் செய்கின்றனர் கோவலன், கண்ணகி மற்றும் காவுந்தி அய்யை;

பாண்டியன் கடலை வெறுத்து வேலெறிய, அதனால் வெகுண்ட கடல் பொங்கி, தமிழகம் ஓடிய பகறுளி என்ற பேராற்றையும், பல அடுக்குக்களைக் கொண்ட பெரும் குமரி மலையையும் விழுங்கிக் கொடுமை செய்ததால், அதை ஈடு செய்யும் பொருட்டு வடக்கே கங்கையையும், இமயத்தையும் தன்வசப்படுத்தி வாழ்ந்தானாம் பாண்டிய மன்னன்.

"வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பகறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி"

பாண்டியனை சிறப்பு செய்யும் இச் செய்யுள் அடிகள், கடல் கொண்ட தமிழகத்தின் கதை விரிப்பது, நம் கண்களைத் தெற்கு நோக்கித் திரும்பச் செய்கிறது!

நடக்க எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கோவலன் இழந்த சொத்துக்களின் கணக்கைக் கூட்டிச்சொல்கிறது; செல்வக் கோவலன் பயணம் போக ஒரு வண்டிகூட இன்றி மனையுடன் நடக்கிறான்; நல்லது தேடி!

நடந்த வழி, கண்டனர் மறையோன் ஒருவனை! கேட்டனர் அவனிடம் மதுரை மாநகர் சேரும் வழி! மறையோன் சொன்னது பலவழிகள்! அதிலொரு வழியில் நிற்கும் புண்ணிய பொய்கைகள் மூன்று; (சரவணம், இட்டசித்தி,பவகாரணி)

கோவல-கண்ணகி-அய்யை மூவரையும், அப்பொய்கைகளில் மூழ்கி எழுந்தால் பாவம் தொலையும் என்பதோடு அதன் பலன்களை விளக்கி அறிவுரைக்கிறான், அந்த வேதம் கற்ற அந்தண மறையோன்!

இன்றும் குளத்தில் முழுகி எழுந்தால் புண்ணியம் கிடைக்கும், சொர்க்கம் கிடைக்கும் என்ற கதைகள் வில்லுப்பாட்டு முதல் இதிகாசங்கள் வரை இருப்பதையும், அக்குளங்கள் அல்லது பொய்கைகளில் குளித்து மகிழ்வதற்கு அரசு முதல் ஆண்டி வரை அலைபாய்வதையும், அதில் பல பேர் சாவதையும், அதேநேரத்தில் அவ்வாறு குளம் மூழ்குவதை சிறுமை என்று பகுத்துரைப்போரையும், பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்;

அப்படி பகுத்துரைப்போரை எள்ளி நகையாடும் மறையோர்களும் அடியார்களும் சிலப்பதிகாரக்கதையையே மாற்றி விட முயன்று தோற்றதும் உண்டு!

மறையோன் கூறிய அறிவுறுத்தலுக்கு மறுமொழியாக காவுந்தி என்ற அந்தப் பெண்முனிவர்,

"நான்மறை கற்ற நல்லோனே!முற்பிறப்பில் செய்தவற்றின் பயனை எல்லாம் இப்பிறப்பிலே நேரில் நிகழக் கண்டு கொள்கிறோமே! ஆதலால் பவகாரணியில் நீராட வேண்டிய அவசியமில்லை!

அய்ந்திர மொழியை அருகதேவனின் பரமாகமத்தில் காணலாம் எனும்போது சரவணத்தில் நீராட வேண்டிய அவசியமில்லை!

உண்மை நெறியில் இருந்து பிறழாது, பிற உயிர்களைப் பேணி வருவோர்க்கு அடைய முடியாத அரிய பொருள் உண்டா ? ஆதலால் இட்ட சித்தியிலும் இறங்க வேண்டியதில்லை!

உன்செயல் முடிக்க உன்வழி போ! யாம் எம்வழி செல்வோம்! "

என்று பதில்மொழி உரைக்கிறார்!

முற்பிறப்பு போன்ற சில கருத்துக்கள் ஒருபுறமிருக்க, பொய்கையில் மூழ்கி எழுந்தால் புண்ணியம் கிடைக்கும் என்று மூடக் கொள்கை பரப்பிய மறையோனின் கருத்துக்களைக் காதில் கொள்ளாமல் அவனின் கருத்துக்களை முடக்கி வைத்து விட்டு மூவரும் நகர்வது அறிவுசார் பெருமை அல்லவா?

"கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்!

இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பிற் காணாயோ நீ ?

வாய்மையின் வழாது மன்உயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள் ?

காமுறு தெய்வம் கண்டுஅடி பணிய
நீபோ; யாங்களும் நீள்நெறிப் படர்குதும்...... "

மேலும் மூடக்கருத்துக்கள் இந்நாள் வாழ்ந்ததுபோல் அந்நாளும் வாழ்ந்திருக்கின்றன! அதேபோல் அதை அலட்சியப்படுத்தி பீடுநடைபோட்டோ ரும் இந்நாளும் அந்நாளும் நிறைந்தே இருந்து உள்ளனர்:

இதேபோல்தான் கடுமையில் வாழ்ந்த போதும் கண்ணகி, தேவந்தி என்ற அந்தணப் பெண்மணிக்கு பதிலிறுத்ததும்!

அந்நாளும் சரி, 1800 ஆண்டுகள் கழிந்த இந்நாளும் சரி ஆரியக் கொள்கைகள் வாதத்துட்பட்டே வந்துள்ளன!

தொடர்ந்து நடந்தனர் அனைவரும்! மழைவளம் இல்லா பாலை நில வழி மதுரை நோக்கி!

மாரிபொய்த்த பாதை நடப்பவர் பொருள் பறித்து அதனால் வயிறு பிழைத்த கொடிய வேட்டுவர்கள் தாம் கொள்ளையில் பெருவெற்றி பெற்றால் தம் தலையை அரிந்து கொற்றவைக்கு படைக்கும் குணத்தவர்; (கழிபேராண்மைக்கடன்)

அப்பலியிடலை விரும்பும் அந்தக் கொற்றவை, விண்ணாள்பவள்! வானோர் தொழும் நெற்றிக்கண்ணுடைய குமரி!

அக் கொற்றவைக் கோட்டத்தை (கோயிலை) அடைகின்றனர் அம்மூவரும்!

"மாரி வளம்பெறா வில்ஏர் உழவர்
கூற்றுஉறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றம் கொடுத்துக்
காழிபேர் ஆண்மைக் கடன்பார்த்து இருக்கும்
விழிநுதல் குமரி விண்ணோர் பாவை
மைஅறு சிறப்பின் வான நாடி
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்குஎன்."

அன்புடன்
நாக.இளங்கோவன்
05-செப்டம்பர்-1999